புறக்கணிக்கப்பட்ட எழுத்துகளுக்கான களம்
மு.சிவகுருநாதன்
(‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் பதிப்புரை – 01)
மின்னணு சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் இன்று அச்சு ஊடகங்கள் கொஞ்சம் தடுமாறுகின்றன. ‘கொரோனா’ பேரிடரும் அச்சு ஊடகத்தை பெருமளவு வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில் புதிய பதிப்பகம் என்ன சாதித்துவிட முடியும்?
அச்சிட்ட நூல்களை குழந்தைகள் போலப் பாவித்து அதனுடன் நெருக்கம் கொள்ளும் ஒரு தலைமுறை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அரசு நூலகங்களை அல்லாமல் இவர்களை நம்பியே பதிப்புத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது.
எவ்வளவோ வாய்ப்பு, வசதிகள் இருப்பினும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட எழுத்துகள், வரலாறுகள், இலக்கியங்கள் போன்றவை பொதுவெளிக்கு வர பல்வேறு தடைகள் நீடிக்கத்தான் செய்கின்றன.
அவ்வாறான எழுத்துகளை முதன்மைப்படுத்தவே ‘பன்மை’ விரும்புகிறது. அந்தவகையில் எமது முதல் வெளியீடாக ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ என்னும் விமர்சனத் தொகுப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.
தொடரும் இம்முயற்சிகளுக்கு வாசகர்களின் நல்லாதரவைப் பெரிதும் வேண்டுகிறோம். உங்களது விமர்சனங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.
பன்மை
திருவாரூர்