ஏஜிகேவை ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்?

ஏஜிகேவை   ஏன் நாம் அறிந்துகொள்ள வேண்டும்?

மு.சிவகுருநாதன்

(ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூலின் முன்னுரை.)

         பெரும்பாலும் இன்றையத் தலைமுறை யாரையெல்லாம் முன்னோடியாகக் கொள்கிறது? நம் சமூகம் எவரையெல்லாம் அவர்களிடம் திணிக்கிறது? அவர்களுக்கு வழிகாட்டியாக அறிமுகப்படுத்தப்படுபவர்களிடம் உள்ள அரசியல் எத்தகையது? இது மிகவும் வெளிப்படையானது; அதை உணரும் ஆற்றல் பல நேரங்களில் மழுங்கடிக்கப்படுகிறது. அப்துல்கலாம் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் திணிக்கும் ஆளும் வர்க்க முயற்சி பெருவெற்றி பெற்றுள்ளதை இங்கு நினைவு கொள்ளலாம். நாடு விடுதலையடைந்த தருணத்தில் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்; 1990களில் அப்துல்கலாம். ஆட்கள் மாறினாலும் ஆளும் வர்க்கக் கருத்தியல் மாறுவதேயில்லை. அரசியல் மற்றும் கருத்தியலற்ற மனப்போக்கை வளர்த்தெடுக்கும் சூழ்ச்சி, இதனுள் ஊடாடும் அரசியல் பார்வைகளும், பாதைகளும் பல்வேறு மறைமுக செயல்திட்டங்களைக் கொண்டது.

      1930 களின் தொடக்கத்தில் பிறந்த ஏஜிகே (1932) போன்றோர் எங்களைக் கவர்ந்த அளவில் சமகாலத்தில் வாழ்ந்த அப்துல்கலாம் (1931) போன்றவர்கள் எங்களை ஈர்த்ததில்லை. இருப்பினும் அந்த மாதிரி ஆட்களை நமது மூளைகளில் நுழைக்க பெரும் முயற்சி நடக்கிறது. இத்தகைய நிலைக்கு பலர் இலக்காக வேண்டியுள்ளது. எனது தந்தையார் (1931) கூட சாதிய ஒடுக்குமுறையால் அருகிலுள்ள உயர்நிலைப்பள்ளிக்குச் சென்று 6-8 வகுப்புகளைப் படிக்க முடியாமல் மூன்றாண்டு காலம் முடங்கியிருந்து, தாம் படித்த தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு  வந்தபிறகு மீண்டும் படிப்பைத் தொடர்ந்தவர். இதன் பாதிப்பை உணர்ந்த அவர் மிகவும் பின்தங்கிய எங்களூரில் (அவரது அக்கா ஊரில்) 1952 இல் தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார். அவர் என்னை ஈர்த்த அளவில் துளியும் அப்துல்கலாம் போன்றவர்களிடம் ஏற்பட்டதில்லை. வீட்டிற்கும் வெளியேயும் ஏஜிகே போன்றவர்களே எங்களுக்கு ஆசான்களாக வெளிப்படுகின்றனர். ஆனால் இன்றைய சமூகத்திற்கு முன்னோடிகள் திரைப்படம், கிரிக்கெட், அரசியல் என வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றனர். அவர்களுக்கும் இந்த சமூகத்திற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை. இந்த திணிப்பிலிருந்து மீண்டு வருவது சாத்தியமில்லை. இத்தகையச் சூழலைத்தான் இன்றைய கல்விமுறை நமக்களித்துள்ளது; சுயகல்வியோ, தேடலோதான் இவற்றை நமக்களிக்கும்.    

     தஞ்சை மற்றும் கீழத்தஞ்சையின் வரலாறு எவற்றை முன்னிறுத்தும்? பிற்காலச் சோழப்பெருமைகள், சைவ – வைணவக் கோயில்கள், காவிரியாறு, நெற்களஞ்சியம், கர்நாடக இசை என விரியும் என நம்பலாம். தாண்டிச்செல்வது நம்மவர்களுக்கு கைவந்த கலை. சங்க காலத்திலிருந்து நேரடியாக பிற்காலச் சோழர்கள் காலத்திற்கும் அதிலிருந்து வசதியாக தற்காலத்திற்குள்ளும் நுழைந்துவிடும் எத்தனங்கள் நிறையவே உண்டு.

     பூம்புகாரின் வரலாறு சங்க இலக்கியத்துடன் நின்று போயுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் (‘சூடாமணி விகாரை’ எனும் சீனக்கோயில்)  தொடங்கி மேற்கில் நீண்ட பவுத்த, சமண, ஆசீவக வரலாற்றின் சுவடுகளே இன்று நம்மிடம் இல்லை. சைவ, வைணவக் கோயில்களின் தல வரலாறுகளே வட்டார வரலாறுகளாக மாறிப்போகியுள்ளது. எங்கும் அத்துமீறி நுழைந்த வைதீகம் அவைதீகப் பாரம்பரியத்தை முற்றாக அழித்தொழித்துள்ளது.

     அடித்தள / விளிம்பு நிலை ஆய்வுகள் (Subaltern Studies) பரவலான பிறகும்கூட மக்கள் சார்ந்த வரலாறுகள் இன்னும் பதிவாகாதது பெருங்குறை. மணலூர் மணியம்மாவின் வரலாறு, ராஜம் கிருஷ்ணனின் ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற களஆய்வு நாவலைத் தாண்டி ஒன்றுமில்லையே! மணலி கந்தசாமி, பி.எஸ்.சீனிவாசராவ் போன்ற அடித்தட்டு மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தப் போராளிகள் இங்கு எந்த அளவிற்கு அறிமுகம் ஆகியுள்ளனர். கட்சி அல்லது இயக்கம் சார்ந்த வட்டத்தைவிட்டு வெளியே எவ்வளவு தூரம் இவர்களுக்கான இடமுள்ளது என்பதையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

  இந்தச் சூழலில் கீழத்தஞ்சையில் உள்ளூர்த் தலைவராகச் சுருக்கப்பட்ட ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் (ஏஜிகே) பற்றிய அறிமுகமும் படிப்பினைகளும் பரந்த அளவில் கொண்டுச் செல்லப்படவேண்டும் என்கிற ஆர்வத்திலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட வேலைகள் நடைபெறாத குற்றவுணர்விலும் அவரது மரணத்திற்குப் பிறகு (2016) இந்தத் தொகுப்பு எண்ணம் உதித்தது. இதற்கு என்னை விடவும் தகுதியான, ஏஜிகேவிடம் நெருங்கிய தொடர்பிலிருந்த பொருத்தமான பலர் உண்டு. அவர்கள் இப்பணியைச் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். மேலும் புதிய கட்டுரைகளைப் பெறுதல், நூலாக்கச் சிக்கல் எனப் பல்வேறு காரணங்களால் முதலாண்டு நினைவில் தொகுப்பு கொண்டுவருவது என்கிற முடிவில்   பெருங்காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.

    வெறும் மலர் என்றளவில் இல்லாமல் விமர்சனத் தொகுப்பாக ஏஜிகே பற்றிய முழுச் சித்திரத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தேன். ஏஜிகே பற்றி இதுவரை அதிகம் எழுதியவரும் இன்னும் அவரைப் பற்றி எழுதவும், பேசவும் புதிய செய்திகளை என்றும் கொண்டுள்ள தோழர் தியாகு அவர்களிடம் புதிய கட்டுரை பெறாமல் இத்தொகுப்பு சாத்தியமில்லை என்று நினைத்தேன். தோழரிடம் நேரடித் தொடர்பில்லாத நிலையில் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஓரண்டிற்கு முன்பே கட்டுரை பெற்றேன். ஏஜிகே பற்றி பேசவும் எழுதவும் அவரிடம் செய்திகள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இக்கட்டுரையும் எடுத்துக்காட்டு. இன்னும் எழுதியும் பேசியும் தீராத பக்கங்களாய் விரிகின்றன ஏஜிகேயின் நினைவலைகள். கோட்பாடுகளுக்கு அப்பால் மக்களை நேசித்தவர். அவர்களது முரண்பாடுகளை இணக்கத் தீர்வு காண்பதில் அக்கறையும் ஆற்றலும் உடையவர். மக்கள்- போராட்டங்களை முதன்மைப்படுத்தியே தன் சிந்தனை, சொல், செயல் யாவற்றையும் அமைத்துக் கொண்டவர் என்றும் பதிவு செய்கிறார். அவரது ‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூலிலிருந்து ஒரு அத்தியாயமும், இன்னும் தொகுக்கப்படாத ‘நந்தன்’ மாதமிருமுறை இதழ் தொடரிலிருந்து ஒரு அத்தியாயமும் பின்னிணைப்பில் இடம் பெறுகின்றன.

      இன்னும் சிலரிடம் கட்டுரை பெறலாம் என்ற ஆசை இறுதியில் தோல்வியால்தான் முடிந்தது. ஏஜிகேயுடன் இயக்கம் சார்ந்து செயல்பட்ட பல பெரியாரிய, தமிழ் தேசிய இயக்கங்களின் தோழர்களது பதிவுகளைப் பெற்று இத்தொகுப்பில் என்னால் இணைக்க இயலவில்லை. இன்றைய சூழல், மிக மோசமான மத்திய, மாநில அரசாளுகையால் அன்றாடம் பல போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இயக்கங்கள் இருக்கின்றன.

       நீட், பணமதிப்பிழப்பு, மாட்டுக்கறிக் கொலைகள், காவிமயமாகும் கல்வி, இந்துத்துவ கல்விக்கொள்கைகள், இந்துத்துவ வெறித்தனங்கள், பொருளாதார நெருக்கடிகள், சீரழியும் இந்தியப் பொருளாதாரம், சரக்கு மற்றும் சேவை வரித் தீவிரவாதம், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமைச் சட்டத் திருத்தம், ஜேஎன்யூ தாக்குதல்  நாள்தோறும் போராட்டங்களே வாழ்வாகிப் போனது. இந்நிலையில் ஏஜிகே வின் வாழ்வும் பணிகளும் இப்போராட்டங்களை நடத்த, புதிய உத்திகளை வகுக்க, நமக்குப் பெரும் படிப்பினையாக அமையக்கூடும். இயக்கத் தலைமைகளுக்கு ஓய்வென்பதே கிடையாது. எனவே இவற்றில் பங்களிக்க நேரமில்லாத சூழல் இன்று பெரிதாக உருவாகியுள்ளது. இவர்களைப் போன்றவர்களிடம் நேர்காணல் வடிவில் கருத்துகளைக் கேட்டுத் தொகுப்பதேச் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். அவற்றிற்கான காலஅவகாசமில்லாமல் இத்தொகுப்பு வெளிவருகிறது. இனி வருங்காலங்களில் அவை சாத்தியப்படுதல் நலம்.

      பேரா. அ.மார்க்ஸ் பற்றி ‘அ,மார்க்ஸ்: சில மதிப்பீடுகள்’ நூலை தோழர் சி.மீனா தொகுத்தார்; மிக நல்ல முயற்சி. இதில் பலரது விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் அவரது குடும்பத்தினரது பதிவுகள் இல்லாதது குறையாக எனக்குப் பட்டது. ஒரு இயக்கவாதியை, செயல்பாட்டாளரை அவரது குடும்பம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதை அறிவதும் அவசியம். அதனால் ஏஜிகே குடும்பத்தினரின் பதிவுகள் இத்தொகுப்பில் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. அந்த வகையில் தோழர் ஏ.ஜி.வி.ரவி, தோழர் ஏ.ஜி.கே.அஜிதா ஆகியோரின் கட்டுரைகள் இதில் இடம்பெறுகின்றன. வழக்கறிஞர் தோழர் ஏ.ஜி.கே.கல்பனா அவர்களிடம் இறுதிவரையில் கட்டுரை பெற முடியாதது வருத்தமே.

     தோழமைப் பகிர்வுகளில் தோழர் மு.இளங்கோவன் அனுபவங்களின் ஊடாக ஏஜிகே வாழ்க்கைச் சித்திரத்தை நமக்களிக்கிறார். தோழர் பசு.கவுதமன் ஏஜிகேவை வெண்மணி நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றது குறித்த   தோழர் பசு.கவுதமனின் வலைப்பூ பதிவும் இடம் பெறுகிறது. இந்த வரிசையில் கூடுதல் பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இடதுசாரித் தோழர்கள் பலரது பங்களிப்புகளும் பதிவுகளும் இல்லாது  போய்விட்டது. பெண்களைத் திரட்டிப் போராடிய, அடித்தட்டுப் பெண்களின் பேரன்பிற்குரிய ஏஜிகே பற்றிய தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகமிருக்கவேண்டும் என்று நினைத்தேன்.  இரு கட்டுரைகள் மட்டுமே இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 

   பாவெல் சூரியனின் நேர்காணல், பசு.கவுதமனின் தொகுப்பை ஆகியவற்றைச் சுற்றியே ஏஜிகேவின் ஆளுமை விவரிக்கப்படும் சூழலில், பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, தலித்திய, தமிழ்த் தேசியப் போக்குகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலரது கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவர்களுக்கிடையே கருத்தியல் முரண்பாடுகளிருப்பினும் அவை நிரந்தரப் பகை முரண்பாடுகள் அல்ல; நட்பு முரண்பாடுகள் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

   திராவிட, மார்க்சிய, தலித்திய, தமிழ்த்தேச இயக்கங்கள் யாவும் ஒவ்வொரு காலகட்டத்தில் சில தவறான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. இவற்றில் பல்வேறு பிளவுகளும் உண்டு. அவற்றை மீளாய்வு செய்து படிப்பினைகளையும் ஏற்று, வருங்காலத்தை செழுமைப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகளே இன்றையத் தேவை. ஏஜிகேயின் வாழ்வும் பணிகளும் நமக்கு சில படிப்பினைகளை தரக்கூடும். அவற்றிலிருந்து நம் எதிர்காலப் பணிகள், இயக்கக் கட்டுமானம், போராட்ட உத்திகள், வழிமுறைகள் போன்றவற்றிற்கு இவற்றைப் பயன்படுத்துவதும் அடுத்த கட்ட நகர்வை சாத்தியப்படுத்துவதும் முதன்மையானதாகும்.    

     ஏஜிகே அஞ்சலிக் குறிப்பாகவும் பசு.கவுதமன் நூல் விமர்சனக் குறிப்புகள் மற்றும் பின்னிணைப்புகள் போக, இதுவரை அச்சில் ஏறாத 17 புதிய கட்டுரைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய கட்டுரைகள்  இதழ்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியானவை. இதிலொன்று தோழர் த.ரெ. தமிழ்மணியின் பிரசுரமாகாத அஞ்சலிக் கட்டுரை. இவரது இரங்கற்பா ஒன்றும் இடம் பெறுகிறது.

    தோழர் தய்.கந்தசாமியின் கட்டுரை புதிய கோணத்தில் ஏஜிகேவை அணுகுகிறது. பெரியாரது பார்ப்பன எதிர்ப்பு அரசியல் வழி மிராசு – கிசான் முரண்பாட்டை புரிந்துகொண்ட காலச்சூழலையும், ஏஜிகே எல்லா இடத்திலும் எல்லா இயக்கத்திலும் கம்யூனிஸ்ட்டின் வேலையைச் செய்து வந்ததையும் பதிவு செய்கிறார்.

     ஏஜிகே தண்ணீரைப்போல இருந்தார். எங்கு இருந்தாலும் பாத்திரத்திற்கேற்ப  தனது வடிவத்தை மாற்றிக் கொண்டாலும் சுயத்தை இழக்காமல் இருந்ததே அவரின் பலமும் பலவீனமும் என தோழர் இரா.மோகன்ராஜன் நினைவு படுத்துகிறார்.      

   இந்தியாவில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் போராட்டங்கள், அமெரிக்காவில் பண்ணையடிமைகளாக்கப்பட்ட ஆப்பிரிக்கக் கருப்பின மக்களின் போராட்டங்கள், இதற்கு கார்ல் மார்க்சின் எதிர்வினை, கருத்துகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் ஏஜிகேவின் வாழ்க்கையும் போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை தோழர் வ.கீதாவின் கட்டுரை எடுத்துரைக்கிறது. மேலும் ஏஜிகேவை ஒத்த எழுச்சிப் போராட்டங்களை முன்னெடுத்த பீகாரின் ஜகதீஷ் மஹாதொ மற்றும் ஆந்திராவில் கிரிஜனங்கள், மகாராஷ்டிரத்தில் பீல் போன்ற ஆதிகுடிப் போராட்டங்களையும் எடுத்துக்காட்டுகிறார்.

    தோழர் பாவெல் சூரியன் அவரது போராட்டங்களை சிறை வாழ்வுப் புரட்சிகளையும் சுருக்கமாக எடுத்துரைக்கிறார். ஏஜிகே பற்றிய இதுவரையிலான வரலாற்றுப் பதிவுகள், அவரது மிக நீண்ட இயக்க வாழ்வை பல கட்டங்களாகப் பிரித்து அணுகுவதன் மூலம் அவரது  கருத்தியல் செயல்பாடுகளையும் வேறுபடும் புள்ளிகளையும் இனங்காண முடியும் என எனது கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

     கருப்பு + நீலம் = சிவப்பு என்ற வண்ணச் சூத்திரங்கள் வழியே ஏஜிகேவை அணுகும் தோழர் தெ.வெற்றிச்செல்வனின் கட்டுரை, பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் போன்றவை இணைந்தியங்க வேண்டிய சூழலையும், காலக்கட்டாயத்தின் தேவையையும் வலியுறுத்துகிறது. தேங்கிவிடாமல் 84 வயது வரை தன்னைச் சார்ந்தவர்களைச் செழிக்கச் செய்த சிவந்த நதியெனவும், இந்தச் சமூகத்தை உந்திச் செலுத்தக்கூடியவராக  ஏஜிகேவை தோழர் துவாரகா சாமிநாதன் மதிப்பிடுகிறார்.

     தமிழ்த் தேசியத்திற்கும் பெரியாரியத்திற்கும் தொடர்பு கிடையாது. எனவே பொதுவுடமையோடு தமிழ்த் தேசியத்தை ஏஜிகே இணைத்தது சரிதான். இதன் மூலம் அவரது காத்திரமான பங்கையும் (தமிழ்த் தேசியம்) காத்திரமற்ற தன்மையையும் (பெரியாரியம்) பிரித்தறிய முடியும், என்கிறார்  தோழர் சி.அறிவுறுவோன்.

    தமிழ்த் தேசியத்துடன் பெரியாரியம், மார்க்சியம் இரண்டிற்கும் ஒட்டோ, உறவோ இருக்க இயலாது என்பதே தமிழ்த் தேசியர்கள் பலரது நிலையாக உள்ளது. இவற்றை இணைக்க இயலும் என்று ஏஜிகே சொல்கிறார்; முயன்றும் பார்த்திருக்கிறார். அவரது பெயரிலுள்ள கிரந்த எழுத்தை உச்சரிக்க விரும்பாதவர்கள் அவரது இக்கருத்துகளை எவ்வளவு தூரம் முன்னெடுப்பார்கள் என்பதில் அய்யம் இருக்கிறது. தமிழ்த் தேசியம் மறைமலையடிகள் வழியில் தனித்தமிழ் இயக்கமாகவோ அல்லது ம.பொ.சி. வழியிலோ பயணிக்குமென்றால் அது பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் எந்தளவிற்கு உள்வாங்கும் என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க இயலாது.  

     இதழ்களில் வெளியான ஏஜிகே அஞ்சலிக் குறிப்புகள், ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்களும்…’ நூல் விமர்சனங்கள் போன்றவை இத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏஜிகேவை பின் – பெரியாரியராக (Post–Periyarist) அணுகும் தோழர் பொதிகைச்சித்தரின் கட்டுரையும் உண்டு. தோழர் மலையூர் ஆறுமுகம் இந்நூல் குறித்து வெளியிட்ட கருவூர் சமூகக் கல்வி மைய விவாதக் குறிப்புகளும் இங்கு முழுமையாக இடம் பெறுகிறது. ஏஜிகே வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவர் சார்ந்த நூல்கள், அவரது நூல்களிலிருந்து சில பகுதிகள், படங்கள், தியாகு தொடரின் இரு அத்தியாயங்கள், வெண்மணிப் படுகொலை குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கைகள் ஆகியன பின்னிணைப்புகளாக உள்ளன. இவ்வறிக்கைகள் கீழவெண்மணிப் படுகொலைக்குப் பெரியார் எதிர்வினையாற்றவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு இவை பதிலாக அமையும்.

    ஏஜிகே பற்றி அறிந்தவர்களுக்கு சில புதிய பார்வைக் கோணங்களையும் புதியவர்களுக்கு அவரைப்பற்றிய சிறு சித்திரத்தையும் இத்தொகுப்பு வழங்குமென நம்புகிறேன். மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட மக்கள் போராளி ஒருவரை மீண்டும் நினைவுகூறும் சிறு முயற்சியே இந்நூல். அவரைப் பற்றி வெளிவரும் முதல் தொகுப்பு என்பதாலும் நூல் விமர்சனங்களை இணைத்ததாலும் சில செய்திகள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை.

     ‘நூல்வெளி’ பகுதியில் ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் அழைக்கிறார்’ என்ற தலைப்பில் தொகுப்பு நூல் (தொடுகறி, மே 06, 2017)  குறித்த குறிப்பை வெளியிட்ட ‘தி இந்து’ நாளிதழுக்கு நன்றி. கட்டுரைகளை அளித்த, இத்தொகுப்பில் பயன்படுத்த ஒப்புதல் தந்த அனைவருக்கும் நன்றிகள். எனக்கு ஏற்பட்ட அய்யங்களை உடனுக்குடன் போக்கிய தோழர்கள் பசு.கவுதமன், த.ரெ.தமிழ்மணி, தட்டச்சு செய்த ‘ஶ்ரீநிதி’ நாகராஜன், இத்தொகுப்பை அழகுற வடிவமைத்த பாரதி புத்தகாலயம், நூல் வெளிவர அனைத்து உதவிகளும் செய்த தோழர்கள் க.நாகராஜன், சிராஜூதீன் உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்.

                                            தோழமையுடன்…

10.01.2020                                   மு.சிவகுருநாதன்

திருவாரூர்                             musivagurunathan@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *