கீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவர் ஏஜிகே.

கீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவர் ஏஜிகே.

இராமமூர்த்தி நாகராஜன்

(தோழர் இராமமூர்த்தி நாகராஜன் அவர்களின் நூல் அறிமுகம் முகநூல் பக்கத்திலிருந்து…)

    நாகை மாவட்டம் அந்தணப்பேட்டையைச் சேர்ந்த கே.கஸ்தூரிரெங்கன் அவர்களை உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வரை எனக்கும் தெரியாது.

கீழத்தஞ்சை….

    சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ்நில வரலாற்றில் கீழத்தஞ்சையின் வரலாறு சிறப்பானது. பெருநில உடைமையாளர்களை எதிர்த்து உழைக்கும் ஏழை, ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் நிகழ்த்திய வீரம் செறிந்த போராட்டங்கள் வரலாற்றில் அழிக்க முடியாதது.

      பி.சீனிவாசராவ் முன்னெடுத்த இடதுசாரிகள் தலைமையிலான போராட்டங்களும், பெரியாரின் திராவிட விவசாயத் தொழிற்சங்கம் முன்னெடுத்த போராட்டங்களும் கீழத்தஞ்சையை சுதந்திரத்துக்குப் பிறகான ஆண்டுகளில் கீழத்தஞ்சையைத் தகிக்க வைத்தது வரலாறு.

ஆண்டைகள் எனப்படும் பெரும் நில உடைமையாளர்களிடம் பண்ணை அடிமைகளாய் சாணிப்பால் சவுக்கடிக்கு அஞ்சிக் கிடந்த ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் விழிப்புணர்வு பெறச் செய்து, வெறும் கூலி உயர்வுக்கான போராட்டமாக மட்டுமல்லாமல், ஒடுங்கிக் கிடந்த மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் போராட்டமாகவும் கீழத்தஞ்சை உழைக்கும் விவசாயத்தொழிலாளர்களின் போராட்டம் அமைந்தது.

    சுதந்திரத்திற்குப் பிறகான ஆண்டுகளில் மெல்ல மெல்ல மேலெழுந்த போராட்டங்கள் 1960களில் தனது கொதிநிலையை எட்டுகிறது. 1968 டிசம்பர் 25 இல் நிகழ்ந்த கீழவெண்மணி எரிப்புச் சம்பவம் கீழத்தஞ்சைப் போராட்டங்களின் உச்சம்.

   சமீபத்தில் இலங்கை இன எழுச்சிப் போராட்டத்தில் கொதிநிலையாக எவ்வாறு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நிகழ்ந்ததோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இத்தமிழ்மண்ணில் நிகழ்த்தப்பட்டது கீழவெண்மணி படுகொலைகள்.

    கீழவெண்மணி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், சோலை சுந்தர பெருமாளின் செந்நெல், பாட்டாளியின் கீழைத்தீ, மீனா கந்தசாமியின் Gypsy goddess (தமிழில் குறத்தியம்மன்) என்ற பெயரில் பல புனைவுகளும், பல அல்புனைவுகளும் வெளியாகி உள்ளன. இன்னும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

    தற்போது ஏஜிகே என்னும் அசல் கலகவாதியை, போராட்டக்காரரை, துணிச்சல்காரரைப் பற்றிய நூல் ‘ஏஜிகே எனும் போராளி’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.

யார் இந்த ஏஜிகே?

     இளம் வயதில் தனது தந்தைக்கு பெரியாரின் விடுதலை இதழை வாசித்துக் காட்டுவதின் வழியே பெரியாரியம் பயின்றவர். 1950களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதவர் பிரச்சினையில் பல்கலை. துணைவேந்தர் ராமசாமி அய்யரை அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் செருப்பால் அடித்த மாணவர் குழுவில் இருந்தவர். இதனால் பல்கலையில் இருந்து நீக்கப்பட்டவர்.

      சுதந்திரத்திற்குப் பிறகான ஆண்டுகளில் பெரியாரின் திராவிட விவசாயத் தொழிற்சங்கத்தில் இணைந்து கீழத்தஞ்சையில் பண்ணை அடிமைத்தனத்துக்கு எதிராகவும், கூலி உயர்வு போராட்டத்துக்கு ஆதரவாகவும் பல போராட்டங்களை முன்னெடுக்கிறார். கீழ்த்தஞ்சையின் அசல் மக்கள் தலைவராக களமாடியவர் ஏஜிகே எனும் அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரெங்கன்.

பெரியாரோடு முரண்…

     ஒருகாலத்தில் ஆங்கிலேயரோடு இணக்கமாக இருந்த கீழத்தஞ்சை நில உடைமையாளர்கள் (கபிஸ்தலம் மூப்பனார்கள், பூண்டி வாண்டையார்கள்) சுதந்திரத்திற்குப் பிறகான ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் அடைக்கலமாகின்றனர். ஒரு கட்டத்தில் கீழத்தஞ்சையில் நிலப் பண்ணையார்கள் என்றாலே காங்கிரஸ்காரர்கள் என்னும் நிலை இருக்கிறது. இவர்களை எதிர்த்தே ஏஜிகே போன்றோர்கள் கீழத்தஞ்சையில் களமாடி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸில் ராஜாஜி- காமராஜ் பிரச்சினையில் பெரியார் பச்சைத்தமிழர் காமராஜருக்கு ஆதரவு என்று காங்கிரஸ் ஆதரவு நிலை எடுக்கிறார். பெரியாரின் இந்த முடிவு கீழத்தஞ்சையில் பண்ணையார்களை எதிர்த்துக் களமாடும் ஏஜிகே போன்றோருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அப்போதைய சூழலில் கீழத்தஞ்சையில் காங்கிரஸ் ஆதரவு என்பது பண்ணையார்களை ஆதரிப்பதே…

    இச்சூழலில் ஏஜிகே போன்ற இயல்பான போராளிகளால் என்ன செய்ய முடியும்? 1969களில் ஏஜிகே பெரியாரிடம் இருந்து விலகி செங்கொடி இயக்கத்தில் இணைந்து பணியாற்றுகிறார்.

    இச்சூழலில் கீழத்தஞ்சை போராட்டங்கள் உச்ச நிலை எட்டுகிறது. பண்ணையாளர்களின் நெல் உற்பத்தியாளர் சங்கம் முரட்டுத்தனமாக செயல்படுகிறது. ஒரு பேச்சு வார்த்தையின்போது நெல் உற்பத்தியாளர் சங்க அடியாட்களால் ஏஜிகே தாக்கப்பட, ஏஜிகே இறந்து போனார் என்ற தவறான தகவல் கிடைக்கப்பெற்ற விவசாயத் தொழிலாளர்கள் வீடு புகுந்து தாக்கியதில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுகின்றனர்.

    இதில் ஏஜிகே தவறுதலாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்படுகிறார். பின் இது ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்குப் பின் 1980களில் வெளியே வருகிறார். சிறைக்கு உள்ளேயும் ஒரு இயல்பான போராட்டக்காரரால் எவ்வாறு சும்மா இருக்க முடியும். சிறைக் கைதிகளின் இயல்பான உரிமைகளுக்காகவும், சிறைக் காவலர்களின் உரிமைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெறுகிறார். சிறைக்குள்ளேயே கையெழுத்துப் பிரதி பத்திரிகை நடத்துவது என எங்குமே ஒரு அசல் போராட்டக்காராக வாழ்கிறார்.

   1980களில் சிறையிலிருந்து வெளிவந்ததும் தமது 50 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். பிறகு கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்படுகிறார். பின் அதிலிருந்து வெளியேறி 2000 ஆண்டுகளில் தமிழ் தேசியம் மீது பற்று கொண்டு தமிழர் தன்மானப் பேரவை என்ற அமைப்பை நிறுவி திருவாரூரில் இருந்து செய்யப்பட்டவர்.

     எந்த அமைப்பில் இருந்தாலும்‌ தனது இயல்பு மாறாத சுயம்புவாக இருந்த ஏஜிகே 2016 ஆம் ஆண்டில் தமது 84 வது வயதில் மறைந்தார்.

கீழத்தஞ்சைப் போராட்டங்களை பொதுஉடைமைக் கட்சிகள் பொருளாதார ரீதியாக வர்க்கப் போராட்டமாக கூலிப் பிரச்சினையாக மட்டுமே பார்த்த சூழலில், அதை சாதி ரீதியாக இது வரை அழுத்தப்பட்ட சமுதாய மக்கள் சுயமரியாதை பெறுவதற்கான வர்ணப் போராட்டமாகவும் பார்த்ததில் பொது உடைமைவாதிகளுக்கு தோழர் ஏஜிகே முன்னோடி.

    அச்சு அசல் போராட்டக்காரராய், கலகவாதியாய் வாழ்ந்து மறைந்த ஏஜிகே பற்றி நினைவுக் கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள், புத்தக அறிமுகங்கள் என‌ 300 பக்கங்களில் தொகுத்துள்ளார் ஆசிரியர் மு.சிவகுருநாதன்.

    திரை நடிகர்களில் தலைவனைத் தேடும் இளைஞர்களுக்கு சமரசமில்லா ஒரு அசல் போராட்டக்காரரை, கலகவாதியை, மக்கள் தலைவரை நூலாசிரியர் இந்நூல் வழியே தந்துள்ளார்.

மூத்தவர்கள் வாசியுங்கள்…

இளைஞர்களுக்கு இந்நூலைப் பரிசளியுங்கள். நிச்சயமாக இதை ஒரு சமூகக் கடமையாக நிறைவேற்றுங்கள்.

ஏ.ஜி.கே எனும் போராளி  தொகுப்பு: மு.சிவகுருநாதன்

பன்மை வெளியீடு (9842402010) பக்கங்கள்: 296 விலை: 290/-

(முகநூல் பதிவு: ஜனவரி 15, 2021)

https://www.facebook.com/ramamurthy.ramamurthy.35325074

நன்றி: இராமமூர்த்தி நாகராஜன்