ஆனந்த விகடன் ‘படிப்பறை’யில் சுகுணா திவாகர்
‘இப்படி ஒரு போராளி நம்மிடையே வாழ்ந்தாரா?’ என்று ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு சாகசங்களும் தியாகங்களும் கொண்ட வாழ்க்கை, ஏ.ஜி.கே. என்று அழைக்கப்படும் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் வாழ்க்கை. திராவிடர் கழகத்தில் இணைந்து காவிரி டெல்டாவில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைத்தவர். விவசாயத் தொழிலாளர்களைப் புழுக்களுக்கும் கீழாக நடத்தி, உரிய கூலி தராமல் ஏமாற்றி, பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட நிலப்பிரபுக்களுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி, உரிமைகளை வென்றெடுத்தவர் ஏ.ஜி.கே.
காமராஜர் ஆதரவு – காங்கிரஸ் ஆதரவு என்ற பெரியாரின் நிலைப்பாடு ஏற்படுத்திய நெருக்கடியால் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மக்களுக்கான போராட்டங்களைத் தொடர்ந்தார். கீழ்வெண்மணிக் கொடூரத்தின்போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஏ.ஜி.கே., நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டார் என்ற வதந்தி பரவியதால், மக்கள் மூவரைக் கொன்றனர். ‘அந்தணப்பேட்டை முக்கொலை வழக்கு’ என்றழைக்கப்பட்ட இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின் ஆயுள் தண்டனைக் கைதியானார் ஏ.ஜி.கே.
24 ஆண்டுகள் சிறையில் கழித்த ஏ.ஜி.கே. அங்கும் சும்மா இருக்கவில்லை. சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காக ‘சிறைப்பட்டோர் நலச்சங்கம்’ என்னும் ரகசிய அமைப்பை ஏற்படுத்தியதுடன் அதற்கான கையெழுத்து இதழையும் நடத்தினார். வாழ்வின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்து விடுதலையாகி 52 வயதில்தான் திருமணம், குழந்தைகள் என இல்லற வாழ்க்கைக்குத் திரும்பிய ஏ.ஜி.கே, மீண்டும் திராவிடர் கழகத்தில் இணைந்தும் ‘தமிழர் தன்மானப் பேரவை’ என்னும் அமைப்பை நடத்தியும் செயற்பட்டு நிறைவாழ்வு வாழ்ந்து 84 வது வயதில் மறைந்தார்.
ஏ.ஜி.கே என்னும் இந்த சமரசமற்ற போராளியின் வாழ்க்கை கீழத்தஞ்சையைத் தாண்டி அறியப்படாமலிருந்தபோது பசு.கவுதமன், பாவெல் சூரியன் ஆகியோர் அவர் குறித்த பதிவுகளைக் கொண்டு வந்திருந்தனர். அவர் மறைந்த பிறகு ஏ.ஜி.கே. குறித்த விரிவான பதிவுகளைக் கொண்டு வந்திருக்கிறார் மு.சிவகுருநாதன்.
பெரியாரியமும் பெரியாரியக்கமும் தவறவிட்ட, தவறிழைத்த புள்ளிகளை விமர்சனப் பார்வையுடன் சுட்டிக்காட்டும் தய்.கந்தசாமியின் கட்டுரை. அமெரிக்கத் தொழிலாளர் இயக்கங்களுக்குள் நிலவிய இனப் போராட்டங்களை விவரித்து உலகளாவிய பார்வையுடன் ஏ.ஜி.கே.வின் பணிகளை அணுகும் வ.கீதாவின் கட்டுரை. சிறையில் ஒரு வழிகாட்டிக்கான முன்னுதாரணமாக ஏ.ஜி.கே. விளங்கியதைச் சுவைபடக் கூறும் தியாகுவின் கட்டுரை, இயக்கச் செயல்பாடுகளை அருகிருந்து பார்த்த சாக்கோட்டை இளங்கோவனின் கட்டுரை ஆகியன அவரை மதிப்பிட உதவும்.
கறுப்பு – சிவப்பு – நீலம் என்னும் மூன்று நிறங்களும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசப்பட்டு வரும் சமகாலச் சூழலில், அப்படியொரு மனிதர் வாழ்ந்தார் என்பதற்கான ஆவணம் இந்தப் புத்தகம்.
இணைப்பு:
நன்றிகள்: சுகுணா திவாகர் & ஆனந்த விகடன் (13/01/2021)