தலித் மக்களின் துயர வாழ்வியல் வரலாற்று ஆவணம்

ஏ.ஜி.கே எனும் போராளி: மு. சிவகுருநாதன்

(நூல் விமர்சனம்)

பேரா. சு. இராமசுப்பிரமணியன்

       இன்றைய அரசியல் சூழலில், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களும் இணைந்து செயல்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, கீழத்தஞ்சையில் இந்த மூன்றையும் இணைத்து களத்தில் செயல்பட்ட மாமனிதராக ஏ.ஜி.கே. என்று அழைக்கப்பட்ட அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரெங்கன் வரலாறு படைத்திருக்கிறார் என்பது இந்நூலை வாசிக்கும் எவருக்கும் புரியும்.

     ஆசிரியர் மு.சிவகுருநாதன் தொகுத்து, ஆவணமாக்கியுள்ள ‘ஏ.ஜி.கே எனும் போராளி’ என்னும் இந்நூல், ஒரு தனிமனிதரைப் பற்றிய வரலாறு அல்ல. மாறாக அன்றைய கீழத்தஞ்சையில், நிலவுடைமைப் பண்ணையார்களிடம், கொத்தடிமைகளாகப் பணியாற்றிய அடித்தட்டுத் தலித் மக்களின் துயரம் நிறைந்த வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வரலாற்று ஆவணமாகவேப் பார்க்க முடிகிறது.

      தனது சிறு வயதில், தந்தைக்கு ‘விடுதலை’ இதழ் வாங்கிக் கொடுப்பதிலிருந்தே அவரது பெரியார் ஈடுபாடு துவங்கி விடுகிறது. அவர் பெரியாரைப் பின்பற்றியவர் என்பதை விடவும் பெரியாரியத்தைப் பின்பற்றினார் என்று சொல்வதே பொருத்தமுடையதாக இருக்கும். காரணம், பெரியாரோடு முரண்பட்டு பெரியாரைப் பிரிந்து சென்ற பிறகும் பெரியாரியத்தை நடைமுறைப் படுத்துபவராகவே ஏ.ஜி.கே. இருந்திருக்கிறார். கருப்புச் சட்டை போட்டுவிட்டாலே, பகுத்தறிவாளராகவும், பெரியாரிஸ்ட்டாகவும் தங்களை எண்ணிக் கொள்ளும் பலருக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் கூடப் போகலாம்.

      பத்து கட்டுரைகள், அஞ்சலிக்குறிப்புகள், நூல் விமர்சனக் குறிப்புகள், தோழமைப் பகிர்வுகள், உறவுப் பகிர்வுகள், பின்னிணைப்புகள் என்று, 296 பக்கங்களுக்கு இந்நூல் விரிகிறது. வெறும் கட்டுரைத் தொகுப்பு என்னும் அளவில் நின்று விடாமல், ஏ,ஜி.கே. பற்றிய முழு ஆவணமாக இருக்கும் விதத்தில் இந்நூலை வடிவமைக்க ஆசிரியர் மு.சிவகுருநாதன் உழைத்திருகிறார் என்பது, நூலை வாசிக்கும் போது புரிகிறது.

    பெரியாரோடு, ஏ.ஜி.கே. முரண்பட்டதற்கான காரணங்கள் அனைத்துக் கட்டுரைகளிலுமே பரவலாகக் காணப்படுகின்றன. தய்.கந்தசாமியின் முதல் கட்டுரையில், “செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டில் தொழிலாளர்கள் சுகமாக வாழ்வதற்குரிய  கூலி மட்டுமின்றி இலாபத்தில்  நியாயமானப் பங்கையும் கோரி தீர்மானம் இயற்றிய பெரியார் ஜீவானந்தம், சிங்காரவேலர் போன்றோருடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்குப் பிறகு, தனது கொள்கையை மாற்றிக் கொள்கிறார்” என்கிறார்

      “சமுதாய சீர்திருத்த விவகாரத்தில் ஈடுபடாமல், தொழிலாளி, முதலாளி விவகாரத்தில் ஈடுபடுவதானது, உடனடி வீரப்பட்டம் வேண்டி செய்யப்படும் அற்பச் செயலென வர்க்க அரசியலை ஏகடியம் செய்தார்”

      “அன்று தொழிலாளர் இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலரின் பார்ப்பனப் பிறப்பை முன்நிறுத்தி, தொழில் தகராறுகளைப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தூண்டிவிடுவதாக வசைபாடிய பெரியார், கூலி அளக்கும் மரக்காலில்கூட கள்ளத்தனம் செய்த பண்ணைகளின் கயமையைக் கண்டிக்காமல், போராடும் தொழிலாளர்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றார், பெரியார்.”

       “வெண்மணிக் கொடூரத்தின்போதுகூட,  சூத்திரர் ஆட்சியைக் கவிழ்க்க பார்ப்பனக்  கம்யூனிஸ்டுகள் செய்யும் சூழ்ச்சி என்றார்,”

        “தொழிலாளி, முதலாளி உறவு குறித்து, காந்தியின் தர்மகர்த்தா அணுகுமுறைக்கு மிக நெருக்கமான பார்வையைக் கொண்டிருந்த பெரியாருக்கு, ஏ,ஜி.கே-யின் போராட்ட முறைகள் நிச்சயம் உவப்பானதாக இருந்திருக்காது. உளவியல் யுத்திகளையே போராட்ட வழிமுறைகளாகக் கொண்டிருந்த ஏ.ஜி.கே-யை வெளியேற்ற, அவரது போராட்ட முறைகளே போதுமானதாக இருந்திருக்கிறது. என்றாலும், சி.பி.எம். கட்சியையும், போக்கையும் விமர்சிக்கும் ஏ.ஜி.கே. பெரியார் குறித்து எவ்வித முணுமுணுப்பும் செய்யாதது வியப்பாகவே உள்ளது” என்றும் தய்.கந்தசாமி அவதானிக்கிறார்.

          மாணவப்பருவத்திலேயே, ஏ.ஜி.கே. ஒரு போராளியாக உருவெடுத்துவிட்டார் என்பதற்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது, அன்றைய இந்திய குடியரசுத்தலைவர் ராஜேந்திரபிரசாத் முன்னிலையில், பார்ப்பனச் சார்போடு நடந்துகொண்டதற்காக, அன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழக வேந்தராக இருந்த சர்.சி.பி. இராமசாமி ஐயரை செருப்பால் அடித்தது சான்றாகும்.

      பாவெல் சூரியனின் கட்டுரையிலிருந்து, ஏ.ஜி.கே. முன்னெடுத்த சில போராட்ட வழிமுறைகளை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. விவசாயிகளுக்குக் கூலி கொடுப்பதற்குக் கட்டை மரக்காலும், பண்ணைகளுக்கு அளப்பதற்கு நெட்டை மரக்காலும் இருந்திருக்கிறது. ஏ.ஜி.கே. போராடி, விவசாயிக்கும், பண்ணைக்கும் ஒரே மரக்கால் வைத்துத்தான் அளக்க வேண்டும் என்று நடைமுறைப் படுத்தியிருக்கிறார்.

    ஒரே மரக்கால் என்றாலும், பண்ணைக்கு மரக்காலைக் கட்டி அளந்து நெல் கூடுதலாகக் கிடைக்க வழி செய்திருக்கின்றனர். அப்படி அளக்கக் கூடாது என்று அதற்கும் முடிவு கட்டியிருக்கிறார், ஏ.ஜி.கே. எனும் போராளி.

    சரியான காலத்தில் கூலி கொடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு போராட்டம், இரவு எட்டு மணிக்கு பண்ணையார் வீட்டில், அவர் முன்பு அளக்கப்பட்டு வந்த கூலியை, அறுவடைக் களத்திலேயே கொடுப்பதற்காக ஒரு போராட்டம், சூரியன் உதிப்பதற்கு முன்பே தொடங்கி, சூரியன் மறைந்த பின்பும் நடைபெற்று வந்த உழைப்பை, எட்டு மணி நேரமாக மாற்றுவதற்கென்று ஒரு போராட்டம், நடவு வயலிலும், களையெடுப்பிலும், பெண்களுக்குப் பின்னால் காரியக்காரர் நிற்கக்கூடாது, முன்னால்தான் நிற்கவேண்டும் என்று போராட்டம், பெண்களைப் பாலியல் இழி சொற்களால் கேலி பேசுபவர்களுக்கு எதிராக, அதே பாணியில் பதிலடி கொடுக்க பெண்களைத் தயார் செய்த போராட்டம் என்று போராட்ட களமாகவும், போராட்ட காலமாகவும் இருந்திருக்கிறது, ஏ.ஜி.கே. யின் வாழ்க்கை. ஏ.ஜி.கே. யின் வாழ்க்கை என்பது அன்றைய கீழத்தஞ்சை விவசாய தலித் மக்களின் போராட்ட வாழ்க்கையும்தான்.

     பலவந்தமாகப் பெண்ணைத் தொட்டுத் தூக்கிக் கொண்டுப் போகிறப் பண்ணைக் காரியக்காரனின் ‘தொட்ட கையை வெட்டு’ என்று சொல்லி, வடவூர் ராஜமாணிக்கம் வெட்டப்பட்ட பிறகு அது முடிவுக்கு வந்திருக்கிறது. பெண்களைப் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்ததோடு, அவர்களை முன்னணிப் படையாகவும் நகர்த்தியவர் ஏ.ஜி.கே.

    வெண்மணிச் சம்பவம் பற்றிய வேறுபட்ட கருத்துடையவர் ஏ.ஜி.கே. “அது வெறும் கூலி உயர்வு கேட்டதற்காக நடத்தப்பெற்ற படுகொலை அல்ல. மாறாக, இனி நாம் போராடக்கூடாது என்று எச்சரிக்கவும், அச்சப்படுத்தவுமான  ஒரு கொடுமையான நிகழ்வு” என்பது ஏ.ஜி.கே யின் கருத்து. அதற்குக் காரணம் இருந்தது. பண்ணைகளால் ஏமாற்றப்பட்டு வந்த வேலைமுறை, கூலிமுறை விவசாயப் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது, கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட  விவசாயத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டார்கள், தன்மானம் நிலைநாட்டப்பட்டது, வாழ்வுரிமை உறுதி செய்யப்பட்டது,. நெருக்கடிக்குள்ளான எதிரி கலக்கமடைந்தான். எனவே தொழிலாளரை மீண்டும் அடக்கி ஒடுக்கிப் பயங்காட்டவே எதிரியால் வெண்மணி அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது என்பது ஏ.ஜி.கே. யின் கருத்தாகும். வெண்மணி படுகொலையின்போது, ஒரு முக்கொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட ஏ.ஜி.கே. தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார்.

     ஏ.ஜி.கே. “போராட்ட கலையின் ஈடில்லா வித்தகர்’ என்கிறார் தியாகு. சிறைக் கொட்டடியிலும், அவரது போராட்டங்கள் தொடர்ந்திருக்கின்றன. சிறைக் கைதிகளை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார். ‘உரிமைக்குரல்’ என்னும் கைப்பிரதியைத் துவக்கி பல்வேறு சிறைக் கைதிகளுக்கும்  இரகசிய சுற்றுக்கு விட்டிருக்கிறார். சிறைக்காவலர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ‘சிறைக் காவலர் நல உரிமைச் சங்கம்’  வைப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்ட பிறகு, அங்கு ‘செவ்வொளி’ என்னும் கைப்பிரதியைத் துவங்கியிருக்கிறார்.

      சிறைக் கைதிகளுக்கு மனுக்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார். சிறைக் காவலர்களுக்கும், அவர்களது மேலதிகாரிகள் தரும் குறிப்பாணைகளுக்குப் பதில்கள் எழுதிக் கொடுத்திருக்கிறார். தூக்குத் தண்டனைக் கைதியான, தியாகுவுக்கும், கருணை மனு போடுவது ஒன்றும் அவமானமில்லை, அது உரிமை என்று உணர்த்தி, அவரைக் கருணை மனு போட வைத்திருக்கிறார்.

     ஏ.ஜி.கே. தான் பெரும்பாலும் தூக்கிலிடப்படுவோம் என்று உணர்ந்தே அத்தனை காரியங்களையும் செய்துகொண்டிருந்தார் என்று தியாகு பதிவு செய்கிறார். காரணம், அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அவரைத் தூக்கில் இடுவதில் உறுதியாக இருந்ததே ஆகும்.

       “ஆளுநர் வழியாகத் தண்டனையைக் குறைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது. தண்டனையை நிறைவேற்ற அதிகாரம் இருந்தால், நிறைவேற்றவே விரும்புகிறோம். எனவே தூக்கிலிட ஆணை பிறப்பிக்குமாறு டில்லிக்குக் குறிப்பெழுதி அனுப்பிவிடுகிறோம்” என்று அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் தன்னைச் சந்தித்தத் தி.மு.க. தொழிற்சங்கத் தலைவரும், தனது பால்யகால நண்பருமான ஏ.ஜி.வேங்கடகிருஷ்ணனிடம் தெளிவுபடக் கூறியிருக்கிறார். ஏ.ஜி.வேங்கடகிருஷ்ணன் ஏஜி.கே-யின் உடன்பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. “A very dangerous communist minded person” என்று குறிப்பெழுதி, ஏ.ஜி.கே-யின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற  அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் குறிப்பெழுதி அனுப்பியிருக்கிறார்.

     வழக்கு நடைபெற்றபோது அக்கறை காட்டாத கட்சித் தலைமை, இப்போது இந்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் அணுகி அவரது உயிரைக் காப்பாற்ற முழுமூச்சாகப் போராடியது.  குறிப்பாகத் தோழர் பி.ராமமூர்த்தி, தமது செல்வாக்கு முழுமையும் பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. பெரியார், ஈ,வி.கே.சம்பத், நாஞ்சில் மனோகரன் போன்றோரும், ஏ.ஜி.கே-யின் தூக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர். அதன் விளைவாக, அவரது தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

    பெரியார், காமராசரை ஆதரிப்பது என்று முடிவெடுத்த உடன், திராவிடர் கழகத்தில் இருந்த இடைநிலைச் சாதியினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் என்கிறார், இரா.மோகன்ராஜன். “ கடவுள் மறுப்பை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் தலித்துகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஒருவகையில் பெரியார், ஏ.ஜி.கே-வைப் புறக்கணித்ததற்கு நடுத்தர வர்க்கத்திடம் இருந்த தலித் எதிர்ப்புணர்வு ஒரு காரணமாகும்” என்று அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார்.

        “பின்னாட்களில், தி.க.விலிருந்து பிரிந்துவந்த திமுக-வும் பிராமணர் அல்லாத நடுத்தர சாதி ஏழை எளியவர்களின் கட்சியாக இருந்து பதவிக்கு வந்த பின்னர்,  நடுத்தர சாதிப் பண்ணைகளுக்கும், முதலாளிகளுக்குமானதாக மாறிப்போனது.  எனவே ஏ.ஜி.கே. போன்றவர்கள் தொடர்ந்து அவர்களை அடையாளம் காட்ட வேண்டியவர்களாக இருந்தனர்” என்றும் கருத்துரைக்கிறார், இரா.மோகன்ராஜன்.

      “நேற்றுவரை தனது கண்ணெதிரே பண்ணையாரை எதிர்த்துப் போராடியவர்கள் எல்லாம் பச்சைத் தமிழர் காமராசருக்காக  அவர்களது தோள்களில் கைபோட்டுச் செல்வதை ஏ.ஜி.கே-வால் இறுதிவரை ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருந்தது” என்றும் மோகன்ராஜன் பதிவுசெய்கிறார்.

     இந்தியாவிற்கேயுரிய தனித்த சீழ்பிடித்து நாறும் சாதியாதிக்க வரலாற்றுப் பின்னணி பற்றிய தெளிவான புரிதல்களை வந்தடையாமல்,  சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. வர்க்கமா? வர்ணமா? எது வலிமையானது? என்னும் கேள்விகளுக்கு ஆரம்பகால  மார்க்சியர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கூலியாள் இடைநிலைச் சாதியினராகவும் இருக்க முடியும். ஆனால், பண்ணையாள் தலித்தாகத்தான் இருக்க முடியும் என்னும் எதார்த்தம் புரிந்திருந்தது.  அதன் பருண்மையான அடையாளம்தான், சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடுமைகளுக்குக் கம்யூனிஸ்டுகள் கீழத்தஞ்சையில் முடிவு கட்டியதாகும். பண்ணையாட்களின் திருமண முதலிரவு உரிமை பண்ணையாருக்கு என்று எழுதப்படாத சட்டத்தையும் கம்யூனிஸ்டுகளே தகர்த்தார்கள்.

       கருப்பு +  நீலம் = சிவப்பு என்னும் கட்டுரையில் மேற்கண்ட அவதானிப்பைச் செய்யும்  தென்னவன் வெற்றிச்செல்வன், அந்தப் பின்னணியில் ஏ.ஜி.கே. யைப்பற்றி, ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம், பண்பாட்டு மார்க்சியம், செயல் தந்திரம், போர்த் தந்திரம், திரிபுவாதம்,  பொருள் உற்பத்திமுறை, உற்பத்தி உறவுகள், வெகுசன அமைப்பு போன்ற எந்தத் தத்துவச் சொல்லாடல்களும், இன்றி நடைமுறை எளிமையோடும் , பகுத்தறிவோடும், பட்டறிவோடும், பயிற்றுவிக்கும் சிறந்த ஆசானாக விளங்கினார். கூட்டு முயற்சியாலும், சனநாயகப் பண்போடும், தலைமை தாங்கும் ஆற்றலோடும் அவர் வழிநடத்திய போராட்டங்களும், அவர் சாதித்த வெற்றிகளும், இயக்கங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அழுத்தமான முத்திரைகளை, தடயங்களை அவர்  பதித்துச் சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.” என்று கூறுகிறார்.

     அவர் இறந்த அன்று, அவரது புகழஞ்சலிக் கூட்டத்தில் பேசிய தென்னவன், “அவரை நாம் எல்லோரும் இன்று இழந்திருக்கிறோம். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் அவரை முன்பே இழந்து விட்டன” என்று கூறியதில் மிகுந்த பொருளுண்டு என்பது இந்நூலை முழுமையாக வாசிப்பவர்களுக்குப் புரியும்.

       “கோ.வீரையன் எழுதிய ‘நீண்ட பயணம்’ என்னும் நூலில், ஏ.ஜி.கே. பெயர் வராமல் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அப்பண்ணசாமி தொகுத்த ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ என்னும் தஞ்சை மாவட்ட தலித்  விவசாயத் தொழிலாளிகளின் போராட்டங்களின் வாய்மொழி வரலாற்றிலும், சோலைசுந்தரப்பெருமாள் தொகுத்த ‘வெண்மணியிலிருந்து’ வாய்மொழி வரலாற்று நூலிலும் ஏ.ஜி.கே. பெயர் இடம் பெறவில்லை. வெண்மணி தொடர்பான எந்தப் பதிவிலும் தவிர்க்கப்பட்ட பெயராக ஏ.ஜி.கே. பெயரே இருக்கும்” என்று வருந்துகிறார், நூல் தொகுப்பாசிரியர் மு.சிவகுருநாதன்.

     இந்த வரலாற்றை வாசிக்கும் எவர் ஒருவருக்கும், இன்று ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில், இந்திய வரலாற்றை மாற்றியமைக்கும் ஆளும் மத்திய பி.ஜே.பி.  அரசைக் கண்டிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு அதற்கானத் தார்மீக உரிமை இருக்கிறதா? என்னும் கேள்வி தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

       “இவ்வளவுப் போராட்டங்களை முன்னெடுத்த, வெண்மணி சம்பவத்திற்குப் பிறகு இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவை சிறையிலேயே அழிக்கத் திட்டம் போட்ட ஏ.ஜி.கே-யைக் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு வெண்மணி நினைவிடத்திற்கு வரக்கூடாது எனத் தடுத்ததைக் கேள்விப்படும்போது மனம் வேதனை கொள்கிறது” என்னும் துவாரகா சாமிநாதனின் பதிவையும் இதனோடுப் பொருத்திப் பார்க்கலாம்.

      ஏ.ஜி.கே. விவசாயத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கும் செய்தியை நிலபிரபுக்கள், பெரியாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இது குறித்து, ஏ.ஜி.கே-யை நேரில் அழைத்து எதுவும் பேசாமல், “மிராசுகளுக்கும், கஸ்தூரிரெங்கனுக்கும் இடையில் நடக்கும் சண்டையில்  திரவிடர் கழகத்திற்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது” என்று பெரியார் அறிக்கை விட்டிருக்கிறார்.

     அந்த அறிக்கை வெளியான பிறகு, கஸ்தூரிரெங்கன் மீது பண்ணைகளின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. தன்னையும், திராவிட விவசாயத் தொழிலாளர்களையும்  பண்ணைகளிடமிருந்து காப்பாற்ற 1963 இல் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.  அந்த காலகட்டம் என்பது, நாகைப் பகுதியில், கம்யூனிஸ்டுகளையும், செங்கொடியையும் அழிப்பதற்காகவே, பண்ணைகள் ஒன்று கூடி, ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்பதை நிறுவிய காலமாகும். நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு, சிவாஜிகணேசன் அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் நமக்குப் புதிய செய்தியாக உள்ளது.

    ஏ.ஜி.கே. முன்னெடுத்த உளவியல் அடிப்படையிலான பல போராட்டங்கள் வெற்றியைத் தந்திருக்கின்றன. வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்டத் தொழிலாளர்களை ஊர்வலமாகக் கூட்டிச் சென்று இரயிலேற்றி விடுவது, கோரிக்கைகளை ஏற்காதப் பண்ணை வீடுகளுக்கு பாடை கட்டிக்கொண்டு போய், பண்ணை வாயில்களில் வைத்து ஒப்பாரி வைப்பது, ஆண்டைகளைப் பலபேர் பார்க்க செருப்பால் அடிப்பது,  முகத்தில் காறி உமிழ்வது,  போன்ற போராட்ட உத்திகளும், அதில் பெண் தொழிலாளர்களை முன்னிலைப்படுத்தியதும், பல சமயங்களில் உடனடிப் பலனைத் தந்திருக்கின்றன.

     “சாதியையும், வர்க்கத்தையும், மேட்டுக்குடி மனப்பான்மையையும் கடந்து செல்ல விரும்பாத இயக்கங்களே தமிழர் நடுவில் ஒரு சாபமாகக் கவிழ்ந்துகொண்டுள்ளன. ஏ.ஜி.கே. போன்ற அர்ப்பணிப்பு மிகுந்த தொண்டர்களுக்கு கட்சிகளில் இடம் இருப்பதில்லை என்பதை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.” இரா.மோகன்ராஜனின் இந்த கூற்று திராவிடர் கழகத்திலிருந்து பொது உடைமைக் கட்சிக்கும்,  பின்னர் கி.வீரமணியின் திராவிடர் கழகத்திற்கும் அலைபாய்ந்த ஏ.ஜி.கே. கடைசியில், ‘தமிழர் தன்மானப் பேரவையை’ தொடங்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது.

கருத்து – செயல் –  அறிக்கை,

அறிந்திட…  அணுகிட…  ஐம்பது

மடலுரையாடல்

தவிர்ப்போம்!  தடுப்போம்!   தாக்குவோம்!

சந்திப்போம்!    சாதிப்போம்!    சக்திபெறுவோம்!

           இவையெல்லாம் ஏ.ஜி.கே. எழுதிய நூல்கள்.

      வறட்டு சித்தாந்தங்களை மட்டுமே கொண்டிருந்த கட்சிகளில், நிஜத்தில் அந்த சித்தாந்தங்களை நடைமுறைபடுத்திய கஸ்தூரிரெங்கனைக் கண்டு பதட்டப்பட்டதில் வியப்பேதும் இல்லை. அதனால்தான், தோழர் தியாகு, “கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்கள் எல்லாமே கம்யூனிஸ்டுகள் அல்ல; கம்யூனிஸ்டுகள் எல்லாரும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இல்லை” என்று தன்னலமற்ற மக்கட் போராளி ஏ.ஜி.கே-யின் போராட்ட வாழ்வை மனதிற் கொண்டே அப்படி கூறியிருக்க முடியும்.

        “1925-களில் பொது உடைமை இயக்கங்களும், திராவிட இயக்கத்தின் தோற்றுவாயான சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்படுகின்றன. இந்த இரண்டு இயக்கங்களின் வரலாற்றினை நேர்மையாக, நாணயமாகப் பதிவுசெய்தால்  அதில் ஏ.ஜி.கே. என்ற ஆளுமையின் வகிபாத்திரத்திற்கு சில பக்கங்கள் இருக்கும். ஆனால், திராவிடர் இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் ஏனோ மிகக் கவனமாக அவரை இருட்டடிப்பு செய்தன, செய்கின்றன.  ஏ.ஜி.கே-யின் மறைவுக்குப் பின்னும் அது தொடர்கிறது. அது ஏன் தோழர்களே? உங்களுக்குத் தெரியுமா? என்று ‘ஏ.ஜி.கே. எனும் மானுடம்’ என்னும் தனது கட்டுரையில் கேள்வி எழுப்புகிறார், பசு.கவுதமன்.( காலச்சுவடு – செப்டம்பர் 2016 )

     வர்ணம் சார்ந்தும், வர்க்கம் சார்ந்தும் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான வலி மிகுந்த போராட்ட வாழ்க்கையை விரும்பி ஏற்று, எவ்விதப் பாசாங்குமற்று, வெளிப்படையாக நேர்மையுடன் செயல்பட்ட ஒரு தன்னலமற்றப் போராளியின் வாழ்க்கை வரலாறு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது, தவிர்க்கப்படுகிறது என்பதை அறியும்போது உண்மையாகவே மனம் கவலை கொள்கிறது.

       அதே வேளையில், இந்நூல் ஓரளவிற்கேனும் அதனை ஈடுசெய்து, மாபெரும் மனிதப் போராளி ஏ.ஜி.கே-யின் போராட்ட வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்பது ஆறுதலானதும், பாராட்டுக்குரியதும் ஆகும்.

இணைப்பு: http://puthiyaparimaanam.in/?p=1713

 நன்றிகள்:

பேரா. சு. இராமசுப்பிரமணியன்,

செ.சண்முகசுந்தரம்,

இரா.மோகன்ராஜன்,

புதிய பரிணாமம் – இணைய இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *