மேனிலை வகுப்பு அறிவியல் பாடங்களின் நிலையும் பாடநூல் அறமும்

மேனிலை வகுப்பு அறிவியல் பாடங்களின் நிலையும் பாடநூல் அறமும்

மு.சிவகுருநாதன்

       ‘நீட்’ தேர்வுக்காக மேனிலை அறிவியல் பாடங்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏதேனும் சில அவ்வாறு இருக்கலாம். பிற வழமையான குளறுபடிகளுடன்தான் இருக்கின்றன.

     ஓசோன் படலம் குறித்த குழப்பம் பாடநூலில் மிகுவதைக் காணலாம். ‘சுற்றுச்சூழலின் மீது ஓசோன்படல சிதைவின் தாக்கம்’ என்னும் தமிழ் மற்றும் ஆங்கில வழி பத்தி கீழ்க்கண்டவாறு இருக்கிறது.

     “ஓசோன் படம் (படமல்ல; படலம்) உருவாதலும், சிதைத்தலும் தொடர்ந்த இயற்கை செயல்முறையாகும், இது ஒருபோதும் அடுக்குமண்டலத்தில் உள்ள ஓசோன் சமநிலையை பாதிப்பதில்லை. வளிமண்டலத்தில் ஓசோன் சமநிலையில் நிகழும் எந்த மாற்றமும், பின்வரும் வழிகளில் உயிர்கோளத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்”. (பக்.293, +1 வேதியியல், தொகுதி 2)

ஆங்கில வழியில்,

   “The formation and destruction of ozone is a regular natural process, which never disturbs the equilibrium level of ozone in the stratosphere. Any change in the equilibrium level of the ozone in the atmosphere will adversely affect life in the biosphere in the following ways”. (page:269)

   இப்பத்தியின் முன், பின் பகுதிகளின் முரணைக் கண்டு களிக்கலாம். இடைப்பட்ட பகுதிகள் வெட்டப்பட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

    பாடநூல்களின் பொது வழக்கமான மொழிபெயர்ப்புக் குளறுபடிகளுக்கு சில எடுத்துக்காட்டுகள். ‘நீர் மாசுபாடு’ என்ற தலைப்பில்,

    “நீர் மாசுபடுத்திகளின் மூலங்களானவை கண்டுணர் மூலங்கள் (Point source)  மற்றும் கண்டுணர இயலா மூலங்கள்  (Non-point source) என வகைப்படுத்தப்படுகின்றன”. (பக்.294, +1 வேதியியல், தொகுதி 2)

  “The water pollutants originate from both natural and human activities. The source of

water pollution is classified as Point and Non-point source”. (page:269)

    பாடச்சுருக்கத்தில், ‘நீர் மாசுபாடு’ தலைப்பின் கீழ் இவை  சுட்டிக்காட்டு மூலங்கள் மற்றும் சுட்டிக்காட்டா மூலங்கள் என மாற்றமடைகின்றன. ஒரே பாடத்தில்கூட ஒத்த மொழியாக்கங்களைப் பயன்படுத்துவதில்லை.

    “நீரானது உயிரின் அமுதம் ஆனால் அது சுட்டிக்காட்டு மூலங்கள் மற்றும் சுட்டிக்காட்டா மூலங்களின் வாயிலாக மாசுபடுத்தப்படுகிறது”. (பக்.301, மேலது)

  “Water is the elixir of life, but it is polluted by point and nonpoint sources. Institutions like World Health Organization (WHO) and Bureau of Indian standards (BIS) and Indian Council of Medical Research (ICMR) have prescribed standards for quality of drinking water”.(page:276)

   +2 விலங்கியல் (பக்.291) மைய மூலாதாரங்கள், மையமற்ற மூலாதாரங்கள் என்கிறது. ஒரே பாடத்தில் அடுத்தடுத்த பத்திகள் முரண்படுகிறபோது வேறு பாடத்துடன் ஒருங்கிணைப்பை எப்படிக் காணமுடியும்?  

‘நீர் மாசுபாடு’ என்ற தலைப்பில்,

  “உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. நீரின்றி அமையாது உலகு. “நீங்கள் நீரை பாதுகாத்தால், நீர் உங்களை பாதுகாக்கும்” எனும் சுலோகம் நீரின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இத்தகைய சுலோகங்கள் நமக்கு நீரைச் சேமிக்க அறிவுறுத்துகின்றன”. (பக்.294, +1 வேதியியல், தொகுதி 2)

    இந்த சுலோகங்கள் (மந்திரங்கள்) எந்த சமஸ்கிருத நூலில் இருக்கின்றன? Slogan என்பதை சுலோகம் என்று மொழிபெயர்ப்பது சரியா?  ‘முழக்கம்’ என்பதே சரியாக இருக்கும்.

   “Water is essential for life. Without water life would have been impossible. The slogan, ‘Save Water, Water will save you’ tell us the importance of water. Such slogans tell us to save water. Apart from saving water, maintaining its quality is also equally important”. (page:269)

   +2 வேதியியல் முதல் தொகுதியில் ஓரிடத்தில் மட்டும் காரியம் (Pb) (பக்.03) ஏனைய இடங்களில் லெட் (lead) ஆக மாறிவிடுகிறது. உண்மையில் காரியம்  அல்லது ஈயம் இவற்றில் எது சரி? பாத்திரங்களுக்கு ஈயம் பூசுதல் என்பது வெண்கலப் பொருள்களில் (தாமிரம், வெள்ளீயம் கலந்த உலோகக் கலவை) தகரம் (Tin) பூசுவதைக் குறிக்கும். 

 லெட்:

    “குடிநீரில் 50ppb (parts per billion) க்கு அதிகமாக லெட் மாசுக்கள் இருப்பின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க மண்டலம் ஆகியவற்றிற்கு பாதிப்பை உண்டாக்குகிறது”. (பக்.297)

Lead :

    “Drinking water containing lead contamination above 50ppb can cause damage to liver, kidney and reproductive systems”. (page:272&273)

    பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போபால் பேரழிவை (Disaster) வெறும் துயரமெனக் கடக்க (The Bhopal Tragedy) இயலுமா? ஆனால் பாடநூலுக்கு இது சாத்தியப்பட்டிருக்கிறது. மேலும் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்பதும் மறைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பாடங்களுக்கான மேற்படிப்புகள், வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை புதியப் பாடநூல்கள் வழங்குகின்றது. இது சிறப்பான முயற்சி என்பதில் அய்யமில்லை. இதிலும் உரிய கவனமும் தெளிவும் இல்லை. எல்லாம் வழக்கமான ‘கடமைக்குச் செய்யும் பணிக்கு’ சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

     மத்திய இந்திய முறை மருத்துவக் கவுன்சில் (CCIM- Central Council of Indian Medicine) கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கல்லூரிகளுக்கு,  ஆயுஷ் துறையின்  (AYUSH –  Department of Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha and Homeopathy) இந்திய மருத்துவக் குழு  ஆய்வு செய்து அனுமதி வழங்குகிறது. சித்தா (BSMS – Bachelor of Siddha  Medicine and Surgery), ஆயுர்வேதம் (BAMS – Bachelor of Ayurvedic Medicine and Surgery), யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ( BYNS-Bachelor of Naturopathy and Yogic Sciences), யுனானி  (BUMS – (Bachelor of Unani Medicine and Surgery), ஹோமியோபதி (BHMS – (Bachelor of Homoeopathic Medicine and Surgery)  ஆகிய 5 பிரிவுகளின் இளங்கலைப் பட்டப் படிப்புகள் மற்றும் முதுகலைப் படிப்புகள் இத்துறையின் கீழ் வருகிறது.

    இப்பட்டியலில் 15 மருத்துவக்கல்லூரிகள் மட்டும் உள்ளன. அரசு மருத்துக்கல்லூரிகளின் எண்ணிக்கையைச் சொல்லி அவற்றில் சிலவற்றை மட்டும் பட்டியலிடுவது நல்லது. ஏனெனில் அனைத்துக் கல்லூரிகளையும் பட்டியலிட இயலாது. இவ்வளவுதான் என்பதைபோல பாடநூலில் இருக்கிறது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை அடையாளங்காண டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழக இணையதளத்திலிருந்து சுட்டிகளைத் தரலாம். (https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions.html) ஆனால் இங்கு தனியார் கல்லூரிகளை முதன்மைப்படுத்தும் பட்டியல்களும் குழப்பங்களும் நிறைந்துள்ளன. (இந்த இணையத்தளத்திலும் சில விவரங்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை. PAGE IS UNDER CONSTRUCTIONஎன்று வருகிறது.) எட்டு நிறுவனங்கள் மட்டும் இப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அட்டவணைப்படுத்துவது மிகக்கொடுமை.

   +2  தாவரவியல் பாடநூலில்

   “BUMS என்பது BAMS பட்டத்திற்குச் சமமான யுனானி மருத்துவத்தில் வழங்கப்படும் பட்டமாகும். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் என்பது ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்து இந்தியாவில் நம்பப்படும் மருத்துவத்துறையாகும்”.

   “BHMS என்பது இந்தியாவில் தேசிய ஹோமியோபதி பயிற்சி நிறுவனம் நெறிமுறைப்படுத்தும் (regulate) ஹோமியோபதி கல்விக்கு வழங்கும் இளங்கலைப் பட்டம்”.

    “BAMS என்பது மருத்தவத் துறையில் ஆயுர்வேத மருத்துவத்தில் வழங்கப்படும் இளங்கலைப் பட்டம் ஆகும். இந்தியாவில் ஆயுர்வேதக்

கல்வியை இந்திய மருத்துவ மையக் கூட்டமைப்பு (CCIM) நெறிமுறைப்படுத்துகிறது”.

    “BUMS என்பது BAMS பட்டத்திற்குச் சமமான யுனானி மருத்துவத்தில் வழங்கப்படும் பட்டமாகும்”. (பக்.04)

       போன்ற ஆயுஷ் (AYUSH) கட்டுப்பாட்டிலுள்ள 4 படிப்புகளை மட்டும் சொல்லிவிட்டு சித்த மருத்துவத்தைப் பாடநூல் புறக்கணிக்கிறது, அதுவும் தாவரவியல் பாடநூல்!

+2 விலங்கியல் பாடத்தில்,  சித்த மருத்துவக் கல்லூரிகள்பட்டியல் உள்ளது.

• அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை .

• அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி.

• தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சென்னை . (பக்.04)

     தமிழ்நாட்டில் உள்ள ஆயுஷ் நிறுவனங்கள் என்ற தலைப்பில் 5 தனியார் ஆயுர்வேதக் கல்லூரிகள் பட்டிலிடப்படுகின்றன. இதன் மூலம் ஆயுர்வேதம் மட்டுமே ஆயுஷ் என்று சொல்ல வருகின்றனர். ஆயுர்வேதக் கல்லூரிகள் அதுவும் தனியார் கல்லூரிகள் மட்டும் ஆயுஷ் நிறுவனங்கள் என்பது படு அபத்தம். மொத்தம் 7 தனியார் ஆயுர்வேதக் கல்லூரிகள் உள்ளன. அரசுக் கல்லூரிகளைச் சொல்லாமல் தனியார் கல்லூரிகளை முழு முகவரியுடன் பட்டியலிட வேண்டிய தேவை என்ன? நாகர்கோயில் கோட்டாரில் அரசுக்கல்லூரி ஒன்று உள்ளது. அதற்குப் பாடநூலில் இடமில்லை. அதைவிடுத்து தனியார் கல்லூரிகளை மட்டும் அறிமுகம் செய்யும் விளம்பரம் அரசுப் பாடநூலுக்குத் தேவையில்லாத ஒன்று.    

   கீழ்க்கண்ட சித்தா (SIDDHA) படிப்புகள் குறித்து பாடநூல் பட்டியலிடுகிறது.

முதுநிலை படிப்புகள்

• மருத்துவம்

• குண பாதம்

• புற மருத்துவம்

• வர்ம மருத்துவம்

• சித்தர் யோக மருத்துவம்

• குழந்தை மருத்துவம்

• நோய் நாடல்

• நஞ்சு மருத்துவம்

முனைவர் படிப்பு

• மருத்துவம்

• குண பாதம்

• சிறப்பு மருத்துவம்

• குழந்தை மருத்துவம்

• நோய் நாடல்

• நஞ்சு மருத்துவம்  (பக்.VII, +1 விலங்கியல்)

   இரண்டு பட்டியலிலும் ‘குணபாடம்’ என்பது ‘குணபாதம்’ ஆகியுள்ளது. நல்லவேளை ‘குண பேதம்’ என்று எழுதாமல் விட்டார்களே!

     குண பாடம், பதார்த்த குணநூல், that branch of medical science which deals with medicinal drugs and their uses – Materia medica. (டி.வி.சாம்பசிவம் பிள்ளை அகராதி) என்று அகராதி பொருளுரைக்கிறது. அதாவது ‘மெட்டிரியா மெடிக்கா’வை சித்த மருத்துவம் குண பாடம் என்கிறது. இதை எப்படி குண பாதம் என்பது? இதுதான் பாடநூலின் உற்பாதமோ? (உற்பாதம் – கொடுமை, இயற்கைச்சீற்றம், துர்க்குறி)

    “டீசல் எஞ்சின்களில் எந்தமாற்றமும் செய்யாமல் பயோ டீசலைப் பயன்படுத்தலாம்”, (பக்.190, 12 விலங்கியல்) என்று சொல்வது சரிதானா? பெட்ரோலிய டீசலுடன் கலந்து பயன்படுத்துதல் அல்லது டீசல் எந்திரத்தில் உரிய மாற்றங்கள் செய்தல் போன்றவற்றை அறிவியல் பாடநூல் கவனிக்க மறுக்கலாமா?

      ஜனவரி 28, 2017 இல் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால், கடலில் கச்சா எண்ணெய் கலந்ததைச் சொல்லிவீட்டு, “இந்த எண்ணெய்க் கசடுகளை சுத்தம் செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தேவைப்பட்டனர்” (பக்.292 +2 விலங்கியல்) என்று சொல்கிறது பாடநூல். கச்சா எண்ணெய்க் கழிவுகளை வாளிகொண்டு அள்ளுவதை அறிவியல் ஏற்கிறதா? பாதாளச் சாக்கடை, எண்ணெய்க் கழிவு எதுவானாலும் மனிதர்களைக் கொண்டு அள்ளுவதுதான் அறிவியல் முறையா?

    “உயிரியல் மற்றும் மருத்துவத்துறை மேம்பாட்டால் தோன்றும் அறம்சார் பிரச்சனையைப் பற்றி படிப்பது உயிர் அறவியல் (Bioethics) எனப்படும்”, பக்.219, +2 விலங்கியல்) என்ற வரையறையும் அறம் சார்ந்த பிரச்சனைகளும் (Ethical issues) பேசப்படுகின்றன. இது முற்றிலும் பாடநூல், கல்வி, அறிவியல் என எதற்கும் அறமற்ற வகையில் இருக்கின்றன.

     “மலிவான மருந்துகள், தரம் மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகள், நோயெதிர்ப்பு திறன் கொண்டபயிர்கள், நோய்களை குணமாக்கும் உள்ளூர்முறை மற்றும் அதிக எண்ணிக்கையிலான முரண்கள் ஆகியவற்றை இச்சமூகத்திற்கு உயிரிய தொழில்நுட்பம் கொடையாக தந்திருக்கிறது.

      இதற்கான முக்கிய காரணம் நவீன உயிரிய தொழில்நுட்பத்தின் பெரும்பகுதி மரபணு கையாளுதலுடன் தொடர்புடையதே ஆகும். இத்தகைய மரபணு மாற்றம் இனம் புரியாதவிளைவுகளை ஏற்படுத்துமோ என மக்கள் அச்சப்படுகின்றனர். டி.என்.ஏ மறுசேர்க்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் தனித்தன்மை கொண்ட நுண்ணுயிரிகள், வைரஸ் போன்றனவற்றை கவனக்குறைவாகவோ அல்லது வேண்டுமென்றோ போர் போன்றவற்றில் பயன்படுத்திட நேர்ந்தால் தொற்று நோய்கள் அல்லது சூழியல் பேரழிவை ஏற்படுத்தும் எனும் பீதி மக்களிடையே நிலவுகின்றது. எப்படியிருப்பினும் இம்முறையில் இடர்கள் குறைவு, பயன்கள் அதிகம்”. (பக்.218, +2 விலங்கியல்)

   மரபணு மாற்றத்தின் தீய விளைவுகளுக்கு முகம் கொடுக்காமல் அதன் பெருமைகளைப் பேசித்திரிவது எத்தகைய அறவியலாக இருக்கும்? இதை மக்களிடம் நிலவும் பீதி என்று சொல்வதைவிட பெரிய வன்முறை இருக்க முடியாது. அறமெனச் சொல்லி அறமற்ற வகையில் எழுதுவது பாடநூல்களின் பொது நோக்கமாக இருப்பது கேள்விகுள்ளாக்கப்பட வேண்டும்.

(இத்துடன் ‘கல்வி அபத்தங்கள்’ தொடர் நிறைவடைகிறது.

நூல் அடுத்த மாதம் வெளியாகும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *