தமிழ் தேசியத்தைக் கைக்கொண்டாலும் அதில் வலதுசாரித் தன்மையை முற்றிலும் விலக்கியவர்

தமிழ் தேசியத்தைக் கைக்கொண்டாலும் அதில் வலதுசாரித் தன்மையை முற்றிலும் விலக்கியவர்

எழுத்தாளர் நக்கீரன்

(‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ நூல் விமர்சனம்)

     பெரியாரின் தீவிரத் தொண்டர் ஒருவர் பெரியாராலேயே இயக்கத்தில் இருந்து நீக்கப்படுகிறார். பின்னர், அவர் பொதுவுடைமை இயக்கத்தில் இருந்தபோது ‘நாகை தாலுகா சிபிஎம் கட்சியானது ’செக்டரியஸ்’ போக்கில் செல்கிறது’ என்று பி.ராமமூர்த்தியால் குற்றம் சாட்டப்படுகிறார். அத்துடன், அண்ணாதுரையும் ‘நாகை கம்யூனிஸ்ட்கள் பகலில் மார்க்சிஸ்ட்களாகவும் இரவில் நக்சலைட்டுகளாகவும் செய்ல்படுவதாக’ குற்றம் சாட்டினார். ‘அவரைத் தூக்கில் போட கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை நான் நழுவவிடத் தயாராக இல்லை’ என்று கருணாநிதியும் சொன்னதாகத் தெரிகிறது. இப்படி அனைத்து தரப்புக்கும் தொல்லையாகக் கருதப்பட்ட அந்த நபரே ஏஜிகே. ஆனால், நாகைப் பகுதி ஏழை எளிய மக்களுக்கு அவர் என்றுமே போராளிதான். .

     பலரையும் போலவே எனக்கும் தியாகுவின், ‘கம்பிக்குள் வெளிச்சங்கள்’ தொடரின் மூலமாகத்தான் ஏஜிகே எனும் பெயர் அறிமுகமானது. பின்னர்த் திருவாரூரின் பேருந்து நிலையச் சுவர்களில் கருப்புச் சிவப்பு கலந்த எழுத்துக்களில் ’தமிழர் தன்மானப் பேரவை’ அமைப்பின் வாசகங்களைப் பார்த்துள்ளேன். அதில் ‘அகோக’ என்ற பெயரும் இருக்கும். ஆனால், அந்த ‘அகோக’தான் ‘ஏஜிகே’ என்பதையும் அப்போது அறிந்திருக்கவில்லை.

     ஒரு நிலபிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளுக்க்ககவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் போரடியவர். அதற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்டு அது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைந்து 24 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அவர் குழந்தையாக இருந்தபோதே கண்ணம்மாள் எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் ஐந்து வயது வரை பால்குடித்து வளர்ந்தவர். அப்பெண்ணைத் தன் தாயாகவே கருதியவர். தன் பேச்சிலும்கூட முழுமையும் சேரியில் புழங்கும் சொற்களையே பயன்படுத்தியவர். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வந்த பிறகும் இறுதிகாலம் வரை தன் இயக்க செயற்பாட்டுக் களமாகத் திருவாரூரின் மிகப்பெரிய ஆதிதிராவிடக் குடிருப்பான அழகிரி நகரை அமைத்துக்கொண்டவர்.

     போராட்டங்களை வெறும் கூலிஉயர்வு போராட்டமாகச் சுருக்கிக் கொள்ளாமல் சுயமரியாதை மீட்புப் போராட்டமாகவும் மாற்றியதே ஏஜிகேயின் சிறப்பு. அதுவே ஆண்டைகளை எரிச்சல்படுத்தியது. கூலிவேலை செய்யும் பெண்களைப் பண்ணை அடியாட்கள் தொட்டுத் தூக்கிச் சென்றால், ‘தொட்டக் கையை வெட்டு’ என்றார். வடவூர் ராஜமாணிக்கம் என்பவர் அவ்வாறு வெட்டுப்பட்ட பின்னர் அது முடிவுக்கு வந்தது. பண்ணை வீட்டுச் சிறுசுகள் உழவுக் குடிகளை ‘வாடா, போடா, வாடி, போடி’ என்று அழைத்தால் பண்ணை வீட்டினரையும் அதேபோல அழைக்க வைத்தவர்

    பண்ணையார்களின் பண்பாட்டுப் பலவீனத்தைக் கண்டறிந்து அதை நோக்கி தன் தாக்குதல் முறையை வடிவமைத்தார். அவருக்குப் பாடைக் கட்டி ஒப்பாரி வைத்தல், கொடும்பாவிக் கொளுத்துதல் போன்ற அவரது போராட்டங்கள் அகிம்சாமுறையில் பலன்களைத் தந்துள்ளன. மலம் அள்ளும் பெண்களைக் கேவலப் படுத்திய நாகை தொழிலதிபரின் வீட்டில் அப்பெண்களைக் கொண்டே மலச்சட்டியைப் போட்டுடைக்கும் போராட்டம் நடத்தியதால் அவமானத்தால் அவர் ஊரைவிட்டே ஓடும்படி நேர்ந்தது.

    அவரது பொது வாழ்க்கை நுழைவே கலகத்தில்தான் தொடங்கியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கின்றபோது அதன் துணைவேந்தரான சர்.சி.பி ராமசாமி அய்யரின் உயர்சாதித் திமிரைக் கண்டிக்கும் விதத்தில் பட்டமளிப்பு விழாவிலேயே அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் முன்னிலையில் .சி.பி ராமசாமி அய்யரை செருப்பால் அடித்துள்ளார். கல்வியை இழந்தும் தன் தீவிரவாத போக்கை இறுதிவரை அவர் விட்டதில்லை.

    நாகை மாவட்டத்தில் உங்கள் ஏஜிகேவைக் கட்டுப்படுத்திவிட்டால் பிரச்சினையே இல்லை என்று அன்றைய முதல்வர் அண்ணாதுரையால் விமர்சிக்கப்பட்டவர். பெரியாரைக் கொச்சையாக விமர்சனம் செய்த காரணத்தால் கருணாநிதியை, திமுகப் பிரமுகரான தன் அண்ணனைக் கருணாநிதி வீடுதேடிப் பார்க்க வந்தபோது அவரைத் துரத்தியடித்துள்ளார். இறுதிவரை தன் தீவிரப் போக்கை மாற்றிக்கொள்ளாத காரணத்தால் 200 வழக்குகளோடு வாரத்தின் ஆறு நாட்களையும் நீதிமன்றத்திலேயே கழித்துள்ளார்.

    ஓர் இயக்கத்தில் மேலிடத்தில் எடுக்கப்படும் முடிவுகள் என்னதான் நியாயமாக இருந்தபோதிலும் அது கீழ்மட்டத் தொண்டர்களிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள் இன்றுவரை தொடரவே செய்கின்றன. அதற்கு அன்றைய எடுத்துக்காட்டு ஏஜிகே. ஆனால், அவர் பெரியாரால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் இறுதிவரை பெரியாரியக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. .

    கீழத்தஞ்சையின் வயல் வரப்புகளில் மார்க்சையும் பெரியாரையும் இணைந்து நடக்க வைத்தவர் என்று புகழப்பட்டவர். ‘செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம்’ என்று முழங்கியவர். இறுதியில் தமிழ் தேசியத்தைக் கைக்கொண்டாலும் அதில் வலதுசாரித் தன்மையை முற்றிலும் விலக்கியவர்.  

   படிக்கப் படிக்க வியக்க வைக்கும் செய்திகளைக் கொண்ட பலரது கட்டுரைத் தொகுப்புகளாகத் தோழர் மு.சிவகுருநாதன் தொகுத்து வெளிவந்துள்ள நூலே ’ஏஜிகே எனும் போராளி’. இதுபோன்ற வட்டாரத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்களாகத் தொகுக்கப்படவேண்டியது காலத்தின் அவசியமாகும். இந்தச் சிறப்பான பணியைத் தோழர் மு.சிவகுருநாதன் செய்துள்ளார். இந்நூலுடன் ஏற்கனவே வெளிவந்துள்ள பசு. கவுதமனின், ‘ஏ.ஜி.கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ பாவெல் சூரியனின், ‘வெண்மணிச் சூழல் நேர்காணல்’ ஆகியவற்றையும் இணைத்துப் படித்தால்தான் ஏஜிகேயின் முழுமையான வரைப்படம் நமக்குக் கிடைக்கும்.

    நூலைப் படித்து முடித்ததும் ஏஜிகேயின் தீவிரப் போக்கு ஏற்புடையதா இல்லையா என்ற கேள்வியைக் காட்டிலும், பாசிசம் பெருகிவரும் நடப்புக் காலத்தில் இப்படியொரு புரட்சியாளர் இப்போது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஏக்கம் பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை அதுதான் ஏஜிகேவின் ஆளுமையோ!

ஏ.ஜி.கே. எனும் போராளி, மு.சிவகுருநாதன் (தொகுப்பாசிரியர்), பன்மை வெளியீடு, விலை: 290, நூல் வாங்க: 9842402010  

இணைப்பு: http://www.writernakkeeran.com/%e0%ae%8f%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%95%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf/

நன்றி: நக்கீரன்    பிப். 09 / 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *