பாடநூல் எழுதுதல் என்பது ஒரு கலை

பாடநூல் எழுதுதல் என்பது ஒரு கலை

அ.மார்க்ஸ்

(பிப். 14, 2021 இல் வெளியான ‘கல்வி அபத்தங்கள்’ நூலுக்கு பேரா. அ.மார்க்ஸ் அவர்களின் முன்னுரை.)

     பாடநூல் எழுதுதல் என்பது ஒரு கலை. புனைவு எழுத்துகள் அல்லது கட்டுரைகள் ஆகியவற்றைக் காட்டிலும் இது சற்றே கடினமான ஒன்று; கவனமாகச் செய்யப்பட வேண்டியதும் கூட. இத்தனைக்கும் பாடநூல்கள் என்பன ஒருவகையில் புதிதாக எதையும் சொல்வன அல்ல. ஏற்கனவே தெரிந்தவை, நிறுவப்பட்டவை ஆகியவற்றைத்தான் எழுதுகிறோம். அந்த வகையில் நம் எல்லைகள் சுருக்கப்படுகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படியானால் நம் படைப்புத் திறனுக்கு இங்கு இடமில்லையா?

    அப்படியல்ல. இங்குதான் நாம் மிகவும் படைப்புத் திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதில்தான் நாம் மிகக் கவனமாக மட்டுமல்ல தமது எழுத்துகளின் வாசக இலக்கு (target audience) குறித்த பிரக்ஞையுடனும் இருக்க வேண்டும். எல்லா எழுத்துக்களிலுமே யாருக்காக எழுதுகிறோம் என்பது ஒரு முக்கிய கேள்வி ஆனாலும் இங்கே அது மேலும் முக்கியமாகிறது. ஒரே கருத்துருவை நாம் ஐந்தாம் வகுப்பிலும் அறிமுகப்படுத்தலாம், பத்தாம் வகுப்பிலும் அதைப் பயன்படுத்தலாம். இரண்டு மட்டங்களிலும் அதன் உள்ளடக்கச் செறிவுகள் வேறுபடும். அந்தவகையில் அது யாருக்காக எழுதப்படுகிறதோ அவர்களின் வயது, அறிதல் மட்டம் என்பன முக்கியமாகின்றன. எழுதப்படும் பாடநூலின் வாசக இலக்காக அமையும் மாணவர்களின் கல்வி மட்டம் (pedagogical level), வயது ஆகியன இங்கு முக்கியமாகின்றன. என்ன மாதிரி மொழியைப் பயன்படுத்துகிறோம் என்பதும் கூட அதைப் பயன்படுத்தப்போகும் பிள்ளைகளின் அறிதல் மட்டத்தைப் பொருத்ததுதான்.

    பொதுவாக நூலாசிரியர்கள் வெளியீட்டாளர்களைத் தேடிப் போவதுதான் வழக்கம். ஆனால் பாடநூல் உருவாக்கத்தில் வெளியீட்டாளர்கள் நூலாசிரியர்களைத் தேடிப் போவதும் இப்படித்தான் அமைந்து விடுகிறது. புதிதாக எதையும் சொல்லப் போவதில்லை, ஏற்கனவே கண்டறிந்தவற்றைத்தான் நாம் நூலாக்கப் போகிறோம். பின் பாடநூலாசிரியருக்கு ஏன் இந்த முக்கியத்துவம்? அவர் என்ன புதிதாகச் செய்யப் போகிறார்? இங்கே புதிது என்பதும் அதற்கான கற்பனைத்திறன் தேவைப்படுவதும் உள்ளடக்கத்தில் (content) அல்ல. மாறாக இங்கே முக்கியத்துவம் பெறுவது சொல்கிற முறை (method) மற்றும் வடிவம். ஒரு கருத்தாக்கத்தை எப்படி, என்ன மொழியில், என்ன வடிவத்தில் சொல்லப் போகிறாம் என்பது வேறு வகைப் படைப்பு எழுத்துக்களைக் (creative writings) காட்டிலும் இங்கு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதே காரணத்தினால்தான் இங்கே எழுதப்பட்ட பிரதியை மதிப்பிடுவதற்குத் தொழில்முறை எழுத்தாசிரியர்கள் (professional editors) தேவைப்படுகின்றனர்.

     பாடநூல் என்பது வாசிப்பவர்கள் அனுபவிப்பதற்கான, ரசிப்பதற்கான அல்லது கண்ணீர் விடுவதற்கான ஒரு படைப்பு அல்ல; மாறாக அது பிள்ளைகள் பற்றிக் கொண்டு மேலெழுவதற்கான ஒரு ஏணி; ஒரு கருவி. மாணவர்கள் மட்டுமின்றி பாட நூல்களில் எல்லோருக்குமே அறிந்து கொள்ளச் செய்திகள் இருந்தாலும், அது மாணவர்களுக்கு, பிஞ்சு நெஞ்சங்களுக்கு எழுதப்படுபவை என்கிற எண்ணமும் பொறுப்பும் எழுதுபவருக்குத் தேவை. எந்த வகுப்புக்கு, என்ன மாதிரி வயதுள்ள மாணவருக்கு அது எழுதப்படுகிறது என்பது குறித்த கூடுதல் பிரக்ஞை இங்கு அவசியம் எனச் சொல்வது இந்தப் பின்னணியில்தான்.

    எழுதி முடித்ததும் சற்று இடைவெளிவிட்டு வாசிக்கும்போதுதான் அதை எழுதிய ஆசிரியருக்கே அதன் பலவீனமும் குறைகளும் தெரியும். அவை சரி செய்யப்பட்டுப் பின் குறைந்த பட்சம் மூன்று முறையேனும் தொழில்முறை மெய்ப்புத் திருத்திகளால் (professional proof readers) திருத்தப்பட வேண்டும். ஆசிரியருடன் கலந்தும், விவாதித்தும் அது செய்யப்படுதல் அவசியம்.

    பாடநூல்களில் அவ்வப் பாடங்களுக்குப் பொருத்தமான உருவங்கள் (figures), அட்டவணைகள் (tables), வரைபடங்கள் (pictures), ஆகியன அவசியம். அவற்றை தொழில்முறை ஓவியர்களைக் கொண்டு செய்யும்போதும் எழுதிய ஆசிரியருடன் அவர் கலந்தாலோசித்து அந்த வரைபடங்களை அவர் உருவாக்குவது அவசியம். அப்படிச் செய்யாததனால் ஏற்பட்டுள்ள தவறுகள் சில இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து பாடநூல்களைக் கவனித்துக் கூர்மையாக விமர்சித்து வரும் நண்பர் சிவகுருநாதனின் இந்த விரிவான நூலை இம்முன்னுரைக்காகப் படிக்கும்போது நெஞ்சில் எழுந்த சிந்தனைகள் இவை.

    2010-2011 இல் சமச்சீர்க்கல்வி முறை அறிமுகமானபோது எழுதப்பட்ட பாடநூல்கள் ஓரளவு நல்லமுறையில் இருந்தன என்கிற கருத்து இருந்தது. சிவகுருநாதனின் இந்நூல் அதன் பின் நீட் தேர்வை ஒட்டி தமிழகத்தில் பெரிய அளவில் பாடத் திட்டம் மாற்றப்பட்டபோது (2018-2019) உருவாக்கப்பட்ட இன்றைய பாட நூல்கள் குறித்துப் பேசுகிறது. அவற்றை மிகக் கூர்மையாக ஆய்வு செய்து விமர்சன நோக்கில் இது எழுதப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட எனது இந்த முன்னுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள எந்த ஒரு முறையியலையும், எச்சரிக்கைகளையும் கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்டவையாக இப்பாடநூல்கள் அமைந்துள்ளன என்பதை ஆதாரப்பூர்வமாகவும், சற்றே கோபத்துடன் சொல்லிச் செல்வதுதான் சிவகுருநாதனின் இந்த நூல்.

    சிவகுருநாதன் சுட்டிக்காட்டும் இந்த ஏராளமான பிழைகளையும் பார்க்கும்போது பாடநூல் எழுதுதல் குறித்த எந்த ஒரு பொறுப்புடனும், புரிதலுடனும் இவை எழுதப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். இந்தப் பிழைகள் பலவகைப் பட்டவையாக இருந்தபோதும் ஒரு மேலோட்டமான பார்வையில் அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. அலட்சியம் மற்றும் அறியாமையால் விளைந்தவை.

2. உள்நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை.

    இரண்டுமே ஆபத்தானவைதான். ஆனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவை மிக மிக ஆபத்தானவை. சுருங்கச் சொல்வதானால் சிறுபான்மை மக்கள் மீது கடும் வெறுப்பைப் பிஞ்சு நெஞ்சங்களில் பதிக்கும் வகையில் இவை அமைந்துள்ளமை நமக்குக் கவலையை அளிக்கிறது.

    இப்படிப் பிழைகளுடனும், பிள்ளைகள் மனத்தில் வெறுப்பை விதைக்கும் நோக்கிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதை நாம் சுட்டிக் காட்டினால் அதைப் பொறுப்பில் உள்ளோர் கண்டு கொள்வதில்லை. ஏதேனும் சாதிச் சங்கங்கள் அல்லது இந்துத்துவ அமைப்புகள் சுட்டிக் காட்டினால் மட்டுமே உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவை நீக்கப்படுகின்றன.

    அதே நேரத்தில் இந்தப் பாட நூல்கள் முதலில் வந்தபோது இடம்பெற்றிருந்த பல நல்ல, நடுநிலையான கருத்துகள் நீக்கப்பட்டுள்ளதை ஏராளமான எடுத்துக் காட்டுகள்  மூலம் இந்நூல் சொல்லிச் செல்கிறது. ஒன்று மட்டும் இங்கு: “அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்கும் உயர்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்கும் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ, கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை”, என்கிற பாட வரிகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன. யாருடைய தலையீட்டால் இது நீக்கப்பட்டிருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

    இதுபோன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகள் இந்நூலில் சுட்டப்படுகின்றன. வைகுண்டசாமி குறித்த பகுதிகள் முழுமையாகவே நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சாணக்கியன் மற்றும் அவனது அர்த்த சாஸ்திரம் குறித்து ஏராளமான புகழுரைகள் பாடநூல்களில் பதிக்கப்பட்டுள்ளதும் இந்நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன. கி.மு. நான்காம் நூற்றாண்டிலேயே, ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அர்த்தசாஸ்திரத்தில் ‘கம்பெனி’, ‘கார்பொரேட்’ முதலான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாம்(!). என்னத்தைச் சொல்லுவது?

    களப்பிரர் காலம் இருண்டகாலம் எனும் கருத்து நீலகண்ட சாஸ்திரியார், மு.அருணாசலம் காலத்தில் மொழியப்பட்ட ஒன்று. மயிலை சீனி.வேங்கடசாமி, பர்டன் ஸ்டெய்ன் முதலானோர் அக்கருத்தில் பொருளில்லை என்பதை நிறுவியுள்ளனர். ஆனால் காலாவதியாகிப்போன இந்த இருண்டகாலக் கதையை இன்றைய இந்தப் பாடநூல்கள் பிஞ்சு நெஞ்சங்களில் பதிக்கின்றன.

     அதேபோல இந்து மன்னர்களை எழுதும் மொழியும், முஸ்லிம் மன்னர்களை எழுதும் மொழியும் இப்பாட நூல்களில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதும் இந்நூலில் சுட்டிக்காட்டப்படுகிறது. சொந்தப் பகை ஒன்றின் பின்னணியில் கொல்லப்பட்ட பைராம்கான் கொலையின் பின்னணிச் சதிக்கு அக்பரைச் சுட்டிக் காட்டும் இவர்களின் பாடநூல் ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலனின் மர்மமான கொலை பற்றி எதுவும் பேசுவதில்லை.

   இந்தியாவில் ஆட்சி மொழி, தேசிய மொழி என ஒன்று கிடையாது. ஆனால் இவர்களின் பாடநூல் இந்தியை தேசிய மொழி என்கிறது. முகமது பின் துக்ளக் தலைநகரை தேவகிரிக்கு மாற்றியது, தங்க – வெள்ளி நாணயங்களுக்குப் பதிலாக அடையாளப் பணத்தை (token currency) அறிமுகப்படுத்தியது முதலியன அக்காலகட்டத்தில் தோல்வியுற்றாலும், அவை ஒன்றும் அபத்தமான முடிவுகள் அல்ல; தவிரவும் அவற்றால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவும் இல்லை என வரலாற்றாசிரியர் சதிஷ் சந்திராவை மேற்கோள் காட்டி சிவகுருநாதன் மறுப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

      கல்வி, பாடத் திட்டம், பாடநூல் எழுதுதல் ஆகியவற்றில் தீவிர கவனம் கொள்பவர்களின் ஆட்சி இப்போது நடந்து கொண்டுள்ளது. ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் இவர்கள் கல்வித்துறையில் கூடுதலான கவனம் செலுத்திச் செயல்படுபவர்கள். ‘சரஸ்வதி சிசு மந்திர்’, ‘வித்யா பாரதி பள்ளிகள்’ என பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை நாடெங்கும் செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அவைகளின் ஊடாகப் பிஞ்சு நெஞ்சுகளில் அவர்கள் நஞ்சை விதைத்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. ஆட்சி அதிகாரம் கைவசமாகும்போது அதனூடாக அவர்கள் கல்வித் துறையை இலக்காக்கிச் செயல்படுவதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுள்ளோம்.

    அந்த வகையில் கடந்த மூன்றாண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அணுகல்முறைகளை, இந்த மூன்றாண்டு காலத்திய அவர்களின் பாட நூல்களின் ஊடாகப் புரிந்து கொள்ள சிவகுருநாதனின் இந்நூல் நமக்குப் பெரிய அளவில் உதவும்.

    இப்படியான அரசியல் உள் நோக்கங்கள் இல்லாமல் அலட்சியத்தின் ஊடாகவும், பாட நூல்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணராமலும் ஏற்பட்டுள்ள பிழைகள் ஏராளம். தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலை 1960களின் பிற்பகுதியில் உருவானபோது தமிழில் உரிய கலைச் சொற்கள் உருவாக்கும் முயற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் இராம.சுந்தரம் போன்றோர் அத்துறையில் முக்கிய பங்காற்றினர். ஆனால் அது தொடரவில்லை. அதன் விளைவாக ஒரே கருத்தாக்கத்திற்கு வெவ்வேறு பாடநூல்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுவதையும், நல்ல தமிழ்ச் சொற்கள் உள்ள நிலையிலும் ஆங்கில மற்றும் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது குறித்தும் இந்நூல் சுட்டிக்காட்டும் பிரச்சினைகளை அரசும் கல்வித்துறையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உரிய திருத்தங்கள் செய்வது அவசியம். ஆண்டுதோறும் துறைசார்ந்த வல்லுநர்களைக் கூட்டி இப்படியான பிரச்சினைகளுக்கு விடிவு காண்பது அவசியம்.

     அணு ஆற்றல் முதலானவை குறித்து இரு எதிரெதிர்க் கருத்துகள் உள்ளதை அறிவோம். அம்மாதிரிச் சூழலில் இப்படி இரண்டு கருத்துகள் உள்ளதைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

    நபர்களின் பெயர்களைச் சொல்லும்போது ஒரு சிலரின் பெயர்களை விரித்து எழுதுவது, மற்றவர்களின் பெயர்களை வி.பி.சிங், சர். சி.வி.இராமன் என்பதுபோலச் சுருக்கி எழுதுவது போன்றவற்றையும் சிவகுருநாதன் சுட்டிக் காட்டுகிறார். அவை பெரிய பிரச்சினை இல்லை. இந்தப் பெயர்களை விஸ்வநாத் பிரதாப் சிங், சந்திர சேகர வெங்கடராமன் என எழுதினால்தான் அது தெளிவாக இருக்காது. வேண்டுமானால் அம்மாதிரி நிலையில் அடைப்புக் குறிக்குள் முழுப் பெயரைச் சொல்லலாம்.

     இந்நூலிலுள்ள கட்டுரைகள் சிவகுருநாதன் கடந்த மூன்றாண்டுகளில் முகநூல் மற்றும் சில ஊடகங்கள், பத்திரிகைகள் முதலியவற்றில் எழுதியவற்றின் தொகுப்பு. முகநூல் முதலானவற்றில் அன்றன்றைக்கு எழுதியவற்றைத் தொகுக்கும்போது ஒரு சிக்கலை நாம் எதிர்கொள்ள நேரிடும். எழுதப்பட்ட காலத்தில் சமகால அனுபவங்களின் ஊடாக எழுதப்படுபவற்றைப் பின்னாளில் வாசிக்கும்போது அக்கால வாசகர்கள் அதைப் புரிந்து கொள்வதில் சில சிக்கல் ஏற்படலாம். எனினும் அது பெரிய குறை அல்ல. முடிந்தால் அப்படியான செய்திகள் குறித்த சிறு விளக்கம் ஒன்றைக் கட்டுரையில் சேர்ப்பது நல்லது.

    தமிழக அரசின் இன்றைய பாடநூல்கள் குறித்த மிக முக்கியமான இந்நூலில் இக்கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

   ஜனவரி 17, 2021                                           அ.மார்க்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *