கற்பித்தலின் நோய்மை

கற்பித்தலின் நோய்மை

 இரா.மோகன்ராஜன்

(‘கல்வி அபத்தங்கள்’ நூலின் மதிப்புரை.)

  பள்ளிக்கூடங்கள் என்பது வன்முறைக்கூடங்கள் என்று ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். நமது கல்வி முறை என்பது தளிர் மனங்களை இளம் வயதிலேயேப் பழுக்கச் செய்யும் ஒன்றாக இருப்பதையே அவர் இப்படிக் குறிப்பிட்டிருப்பார். அதாவது நமது கல்விசார் நிறுவனங்கள், அதன் நடைமுறைகள் அப்படியான மனங்களையே உருவாக்கிச் செல்கிறது என்பதே அதன் பொருளாகும்.

 சிறைச்சாலைக்கும், பள்ளிக்கூடங்களுக்குமாக என்ன வேறுபாடு இருக்கிறது தண்டனை உட்பட என்பது அவரது கூற்று. இதையே கவிஞர் அப்துல் ரகுமான், குழந்தைகளைப் பாடநூற்கள் கிழித்துவிடுகின்றன, என எச்சரிக்கிறார்.

குழந்தைகளை அல்லது பதின்ம வயது மனங்களை வழி நடத்தும் கல்வி, கற்பித்தல் என்பன கற்கும் மனங்களை காயப்படுத்தாத, சீராய்க்காத, சுமையாக மாற்றாத ஒன்றாக இருத்தல் நலம். மேலும் கற்றல் என்பது ஒரு இனிமையான வாழ்வனுபவமாக மாறுதலே கல்வியின் முதன்மையான இலக்காவும், பொருளாகவும் இருக்க முடியும்; இருக்க வேண்டும். பேரன்பைப் பல வழிகளின் சொல்வது, பெறுவது என்பது கல்வி.

     ஆனால் கல்விக்கு இன்றைக்கு விரிந்த அளவில் பொருள் இருக்கிறது; இருக்க வேண்டும். ஆனால் இதுதான் கல்வி என்பதற்கும், எது கல்வி என்பதற்குமான எல்லைகள் விரிந்து செல்கிறது. ஆளும் வர்க்கத்தின் அல்லது வலிமையானவர்களின் வரலாறே வரலாறு என்று மார்க்ஸ் சொல்வது போல நமது சனநாயக அரசியல் குடிமைச் சமூகத்தில் கல்வி என்பது ஆளும், அதிகார வர்க்கத்தின் கல்வியே, கல்வி என்று சொல்லப்படுவதே ஓர் கல்வி அவலமாகவும், கல்வித் துயரமாகவும் இருக்கிறது.

     கல்விசார்  அரசியல் என்பது இன்றைக்கு இளம் மனங்களை நிறுவப்பட்ட கருத்தியலுக்கு  சமூக, அரசியல், பண்பாட்டுப் பொருளியல் வகைமைகளுக்கு அரசு, அதன் நிறுவனங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்தக்கூடியாக மனங்களை தயார் செய்வது, தயாரிப்பது என்பதாகவே இருக்கிறது.

     கல்விச் சூழல் மனித ஆற்றலை, மனிதத்தை, படைப்பாளுமையை வளர்த்தெடுக்கும் இடமாக இன்றில்லை. கல்வி, கற்றல், கற்பித்தல் என்பன ஒரு தொழில் உற்பத்திக் கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது. மனித விழுமியங்களுக்கு அங்கு இடமிருப்பதில்லை. பன்மைத்துவம் என்பது சகிப்புத் தொடர்பானதாக மாற்றப்பட்டிருக்கும் அரசியல் கல்விசார் புலத்தில் பெருந்தொற்றாகவே காணப்படுகிறது. அதாவது பன்மைத்துவத்தை ஏற்றல் என்பது சகித்துக் கொள்ளுதலாகவே இருக்கிறது. பன்மைத்துவம் என்பது வேறுபட்ட நிறங்களைப் போன்றது, இயல்பானது என்பது கல்விச் சூழலில் குறிப்பாக கற்றல், வாசித்தல், கற்பித்தலில் அதன் சகிப்பின்மை சகிக்க இயலாத வகையில் வெளிப்படுகிறது.

     சகிப்பு, சகிப்பின்மை என்ற பொருளே இழிவானது. சனநாயகத்திற்கு எதிரானது. கருத்து சார்ந்தும், கற்றல் சார்ந்தும் கற்பித்தலில் இத்தகையே போக்குகளே காணப்படுகின்றன. இந்தப் போக்குகள் கல்வி அது உருவாக்கித் தரும் மானுட மனங்களுக்கு ஓர் சவாலாகவே இருக்கிறது என்பதை தொடர்ந்து தமது கல்விப்புலம் சார் நூல்களில் ஆய்வு  செய்துவரும்  மு.சிவகுருநாதனின் கல்வி அபத்தங்கள் என்ற அவரது இந்நூலும் மேலும் இவற்றை விரிவுபடுத்திப் பேசுகிறது.

     கற்பித்தல் மட்டுமல்லாது பாடநூல் உருவாக்கக் குழுக்களிலும் பங்கேற்று அதனை செம்மைப்படுத்தும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சிவகுருநாதன் 2018 – 2019 இல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த புதிய பாடநூற்களில் காணப்படும் போதாமை மற்றும் அபத்தங்கள் குறித்து இந்நூலில் பேச முற்படுகிறார்.

     கல்விப்புலம் என்பது வெறுமனே ஆசிரியர், மாணவர் என்ற வட்டத்திற்குள் குறுகிவிடும், குறுக்கிவிடும் ஒன்றல்ல. அது உருவாக்கும் குழுவுடனும் முடிந்துவிடுவதில்லை. அரசு, பெற்றோர், கல்விசார் அறிஞர்கள், படைப்பாளுமைகள், பொதுச் செயற்பாட்டாளர்கள், பொதுவெளி என யாதொருவரும் பங்கேற்கவும், கருத்துகள் சொல்லவும், செம்மைப்படுத்தவுமான ஒன்று.

     ஆசிரியர் குறிப்பிடுவதுபோல ஒரு  திரைப்படம் வெளியாகும்போது அதுகுறித்துப் பல்வேறு தரப்பினர் தமது விமர்சனங்களை முன்வைப்பதைப் போல பாடநூல் தொடர்பான விமர்சனங்கள் என்று எதையும் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ கூட வருதில்லை என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகும்.

     ஒரு இலக்கியப் பிரதியைப் போன்று அணுகி, வாசித்து பாடங்களுக்கு அப்பாலான அதேசமயம் அதனுடன் தொடர்புடைய செய்திகளைத் தேடிக் கண்டடைந்து அல்லது அதனுடன் இணைத்து மேலதிகத் தகவல்களுடன் பாடங்களைப் புரிந்து கொள்ளச் செய்வது கற்பித்தல், கற்றலை மட்டுமல்ல படைப்பாளுமையை வளர்க்கக்கூடிய செயல் என்பதை கல்வி அபத்தங்கள் பாடங்கள் தொடர்பாகத் தேடித்தரும் செய்திகள், தகவல்கள் இருக்கின்றன. இவை வெறும் செய்திகள், தகவல்கள் என்றும் கடந்து சென்றுவிட முடியாது மேலதிகத் தகவல்களின் மெய்மை, அதன் உண்மைத் தன்மை, செய்தியின் நேர்மை, செய்தியின் அறம் என்பன பாடம் தொடர்பான அரசியலை, அறவியலை, அபத்தங்களை மெய்மையை வெளிப்படுத்துபவனவாகவும் அமைந்து விடுகின்றன. அந்த வகையில் கல்வி அபத்தங்கள் நேர்மறையாக கல்விப்புலம் சார் அறங்களை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது, இருக்கும்.

     கல்விப் புலம் என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே அரசின் அல்லது அதிகார வர்க்கத்தின் கருத்து வரம்புகளைக் கடந்து சென்றுவிட முடியாது. பொதுவெளியில் இயங்கும் நூலகங்கள் கூட அரசின், அதிகார வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிற்கு எதிரான ஓர் நூலைக் கூட அங்கு அடுக்கிவிடவோ, வாசித்துவிடவோ முடியாது. ஆக அரசின், அதிகார வர்க்கத்தின் சிந்தனைப் போக்கிற்கு எதிரான வாசித்தல் என்பது முழுமையாகவோ, பகுதியாகவோ கூட நடந்துவிடவில்லை. அதிகாரம் தரும் நூற்களைத்தான் வாசிக்கிறோம். அதிகார வர்க்கத்தின் வெளிச்சத்தில்தான் அவற்றைப் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கிறோம். அதிகாரம் தரும் செய்திகளும், மெய்மைகளும், அறங்களுமே செய்திகளாகவும், மெய்மைகளாகவும், அறங்களாகவுமே இருக்கின்றன.

      அரசின் பாடநூற்களும் புதியன வார்ப்பதில்லை; புதியன உற்பத்தி செய்கின்றன. அதிகாரத்துக்கு உட்பட்ட, அதிகாரத்துக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்பவனவாகவே இருக்கின்றன. முந்தைய சோவியத் யூனியனின் கல்விப்புலச் செயற்பாட்டளரும், எழுத்தாளருமான அம்னஷ்வீலி அவர்கள், ஒருங்கிணைந்த சோவியத் அரசின் பாடத்திட்டங்கள் வழி உருவாக்கப்பட்ட ஆளுமை மிக்க முதல் தலைமுறை மாணவர்கள் பின்னர் வந்த காலங்களில் காலஷ்னிகோவ் துவக்குகளைக் காவிக் கொண்டுத் திரிந்ததை ஒப்பிட்டுப் பேசுவார்.

     இலங்கை அரசின் பாடநூல் திணைக்களத்தில் பணியாற்றிய எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை அவர்கள் அங்கு இனவாதம் என்படி பாடநூல்களில் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது என்பதையும், அதனைக் கடந்து அங்கு அரசின் கீழ் இயங்கும் பாடத் திணைக் களங்கள் பாடங்களை உருவாக்கித் தந்தன என்பதையும் விளக்குவார். எது எப்படி என்றாலும், படைப்பாளுமையை உருவாக்குதில் இலங்கை பாடத்திட்டத் திணைக்களம் சிறப்பாகச் செயற்பட்டது என்பார். இலங்கை கல்விப்புலம் இன்றைக்கும் ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்கவே செய்கிறது. ஆனால் நாம் கல்வி என்கிற பெயரில் மாணவ நகல்களை உருவாக்கித் தரும், பிரதி எடுக்கும் செயலையே கற்றலாக, கற்பித்தலாக கொண்டிருக்கிறோம்.

     ஆசிரியர் என்றால் கேள்வி கேட்பவராகவும், மாணவர் என்றால் பதில் தரவேண்டியவர் என்ற வெகுசுருங்கிய வட்டமாக நமது கற்பித்தல் சூழல் இருக்கிறது. அதற்கு ஏற்பவே நமது கல்விப்புலச் சூழல் செயற்கையாகத், தட்டையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவன், கேள்வி கேட்பதோ, அதற்கு ஆசிரியர் பதில் சொல்வதோ ஓர் கல்விக் குற்றமாக, கற்றல் விரோதமாக அணுகும் போக்கு மாறத்தான், மாற்றத்தான் வேண்டியிருக்கிறது, வேண்டும்.

     பாடநூற்களுக்கு அப்பால் தேடி செல்வது ஆசிரியரின் வேலை, பணி, மாணவர்கள் செய்யக்கூடாத ஒன்று என்பதாகவே கல்வி அபத்தங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் மட்டுப்படுத்தப்பட்ட, தணிக்கைக்கு உட்பட்ட, அதிகார வர்க்கத்தின் கருதியலுக்கு அப்பால் செல்லாத, உட்பட்டவையே கல்வியாக, கல்வி என்ற பெயரில் குடிமக்களின் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது.  நூல் முழுமைக்கும்  சொல்வது இவற்றைதான்.

இன்றைக்கு விரல் நுனியில் கட்டற்ற தகவல்கள் பெருகிக் கிடக்கின்றன. தகவல்களின் உலகம் இது. பாடநூற்களின் பின்குறிப்பாக, அடிக்குறிப்பாக பாடநூல் தொடர்பான விரிவானத் தேடலுக்கு அதிகாரப்பூர்வமான இணையப் பக்கங்களை அறிமுகம் செய்யலாம்.

ஆனால் நமது பாடமெழுதிகள் புத்தகங்களின் பக்கங்களை விட்டு மாணவர்களின் கண்கள் நகர்ந்துவிடுவதை விரும்பவில்லை. அவர்கள் சொல்வது மட்டுமே மெய். அதற்கு அப்பால் சென்று தேடுவது கல்வி சுவற்றுக்கு வெளியே சென்றுவிடுவதற்கு சமம் என்று நினைக்கிறார்கள் போலும்.

இன்றைய பெருந்தொற்றான கொரோனா–கோவிட்-19 பெருமுடக்க காலங்களில் கல்விச் சூழல் கணினிக்கும், கைபேசிக்கும் மாறியிருக்கிறது. பாடம் தொடர்பான தேடலுக்கு, மேலதிகத் தகவல்களுக்கு கைபேசி இணைய வழித் தகவல்களுக்கு  மாணவர்களை ஊக்கப்படுத்துவதே கல்வியின் திறமான ஆளுமைக்கு வளம் சேர்ப்பதாக அமையும்.

மேலும், கொரோனா போன்ற பெருந்தொற்று குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பல்வேறு விதமாகப் பேசி வருகிறார்கள். பசு கோமியம் குடிப்பது தொடங்கி சாணத்தை உடலில் பூசிக் கொள்வது முதல் பல தடுப்பு வழிகளை பொதுவெளியில் பரப்பி வருகிறார்கள். மேலும் ராமநாமத்துடன் கொரோனா பெருந்தொற்றுப் பெயரை உச்சரித்து போ! போ! என்று சொன்னால் தொற்று அணுகாது என்று சொல்வது வரை நமது அதிகாரபூர்வ மக்கள் பிரதிநிதிகள் பிதற்றித் திரிவதை நமது பாடமெழுதிகள் கொரோனாத் தொற்று குறித்த அறிவியல் பாடநூற்களின் சேர்த்துவிடக் கூடும்.

     கல்வி என்பதன் வரலாறு சமூக, அரசியல், அறவியல் இவற்றுடன் தொடர்புடையது மட்டுமல்ல, அவை கடந்த காலங்களில் செல்வாக்கு மிக்க மதங்களிடம் இருந்தன. பள்ளி என்ற சொல்லே சமண மதத்தினரின் கற்றல், கற்பித்தல் இடமாக இருந்ததை அறிகிறோம். அப்படியான கல்வி எப்போதுமே அதிகாரத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருந்து வருவதால் எளிய மக்களின் கருத்துருவாக்கங்களுக்கு அங்கு இடமிருப்பதில்லை. இன்றைக்கு கல்வி என்பது விரிந்த பொருளைக் கொண்டிருந்தாலும் அது இன்றைக்கும் அதிகாரத்துவத்துக்கான, அதிகாரத்தினுடையக் கல்வியாக, அதிகாரத்துக்கானக் கருவியாகவே இருக்கிறது. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் மதம், சாதி, வர்க்கம் இவற்றினுடையதாகவே கல்வி என்பது இருக்கமுடியும், இருக்கிறது.

     இந்தியாவிற்கே உரியத் தனித்தன்மையுடனான மதம், அது உருவாக்கிய சுரண்டல் அடுக்குமுறையிலான சாதி, இவற்றின் மேலிருப்பவர்களே வேத காலந்தொட்டு அரசதிகாரத்தையும், கல்வியையும் கையில் வைத்திருப்பவர்களாக இருந்து வருகிறார்கள். சமூக, பண்பாட்டு, அரசியல் தளங்களில் இவர்களது தாக்கமும், செல்வாக்கும் எப்படியானதாக இருக்கிறதோ அவற்றின் சகல பரிமாணங்களும் கல்வியிலும் இருக்கவே செய்கிறது, இருக்கும். முக்கியமாகக் கருத்துருவாக்கத் தளம் என்பது அவர்கள் உருவாக்குவதாகவே இருக்கிறது. அவர்கள் அழிப்பதாகவே இருக்கிறது.

    அந்த வகையில் அரசதிகாரவர்க்கத்தின் தொடர்ச்சியான பார்ப்பனர்களிடமே கருத்துருவாக்கத்தின் முக்கியத் தளமான கல்வி, கற்றல், கற்பித்தல் தொடர்பான நிறுவனங்கள் இருந்து வருகின்றன. மதம், அரசு, அதிகாரம் இவற்றின் கூட்டிணைவாகவே இங்கு கல்வி, கற்பித்தல், கற்றல் என்ற செயற்பாட்டிற்குப் பொருள் கொள்ள முடியும்.

நவீன தொழிற்நுட்பத்தில் திரைப்படங்கள் வெளியானாலும் சொல்லும் கதையிலும் கருத்திலும் சொத்தையாக இருப்பது போல கற்பித்தலில், உள்ளடக்கம், கருத்தியல், புதிய சிந்தனைகளை ஏற்கும் மனப்பக்குவமின்மை, நிரம்பி வழியும் அறிஞர்கள் போன்ற பல்வேறு காரணிகள் பாடநூல்களின் தரத்தைக் குறைக்கின்றன என ஆசிரியர் சுட்டிக் காட்டுவது கல்விப் புலத்தையும், சூழலையும்  புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

வரலாற்றை அப்படியே சொல்வது என்பது வேறு; அதில் திரிபு செய்வது என்பது வேறு. ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் பிற்கால சோழர்களின் குடவோலை முறை குறித்த செய்திகள் சோழர்களின் சனநாயக அரசியலை நீதிப்படுத்தும் வகையில் பாடமெழுதிகள் வரலாற்றைத் திரிபு செய்திருப்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் குறிப்பிட்டச் சாதிக் குடும்பங்களின் தலைமையை திருவுளச் சீட்டு எடுக்கும் முறையை வாக்களிக்கும் முறை சிறப்பு வாய்ந்த குடவோலை முறை என்று புனைவு எழுத வேண்டிய அவசியம் என்ன? குடவோலை முறையில் எப்படி வாக்களிக்கப்பட்டது என்பதையும் விளக்க வேண்டுமல்லவா? (பக்.52) என்று ஆசிரியரின் கேள்வியே சோழர்கால அரசியலை மட்டுமல்ல தற்காலப் பாடநூலின் அரசியலையும் விளக்கப் போதுமானதாக இருக்கிறது.

பிறிதொரு இடத்தில் குடவோலை முறை குறித்த பாடமெழுதிகளின் அரசியல் குறித்துப் பேசுகையில், ரிப்பன் பிரபு அறிமுகப்படுத்திய உள்ளாட்சி முறைக்கு மாற்றாக இவர்கள் குடவோலை முறையைப் பரிந்துரை செய்கிறார்கள். பொருட்செலவில்லாத எளிமையான தேர்தல் முறை, எனவே இதையே தற்போதும் பயன்படுத்தலாம் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரை செய்ய வேண்டியதுதான் பாக்கி, வேதங்களில் எல்லாம் இருந்ததாகக் கருதும் சங்கிகள் இதையும் ஏற்றுச் சட்டமாக்கவும் வாய்ப்பிருக்கிறது. (பக்.151)

புத்தரின் நான்கு காட்சிகள் (பக்.84)  புத்தர் கதையை எவ்வளவு காலந்தான் சொல்லிக் கொடுப்பது? நதிநீர்ச் சிக்கலைப் பெட்டிச் செய்தியாகவாவது இணைக்கலாமே (பக்.53) என்றும், பிறிதொரு இடத்தில் கோலிய இனக்குழுவினருடனான  ரோகிணி ஆற்று நீரைப் பகிர்வதில் உள்ள சிக்கல், அதில் புத்தரது நிலைப்பாடு, இனக்குழு குடியரசுகள் ஆகியவற்றை அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் (விவாதத்திற்குக் கூட) வேண்டுமென்றே தவிக்கப்படுகின்றன (பக்.99) என்று ஆசிரியர் பாடமெழுதிகள் குறித்து சுட்டிக்காட்டுவது சரியானதே.

புத்தரைக் கடவுளாக, அல்லது வைதீக மதத்தின் உட்செரிக்கப்பட்ட அவதாரமாக காட்டுவதின் பகுதியாகவே அவர் நான்கு காட்சிகளுடன் சித்தரிக்கப்படுகிறார். மெய்யான ஆற்றுச் சிக்கல் குறித்துப் பேசும் போது அவரது அவதார வேடம் கலைக்கப்பட்டு விடுவதில் பாடமெழுதிகளுக்குள்ள கவலையைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஒரு சிலை என்பது சிற்பத்தில் இருப்பதில்லை, அதனைச் செதுக்கும்போது தேவைற்றதாக ஒதுக்கப்படும் துண்டுகளில் இருக்கிறது என்பார்கள். நமது பாடமெழுதிகள் செதுக்கிப்போடும், எழுதிக் கசக்கிப்போடும் சேர்த்தும், வெட்டியும், ஒட்டியும் போடும் தேவையற்ற காகிதத் துண்டுகளிலேயே மெய்யானப் பாடநூற்கள் கசங்கிக் கிடக்கின்றன என்பதைப் பெரியார் பற்றிய நீக்கப்பெற்ற பகுதிகள் குறித்து ஆசிரியர் விளக்குவதன் வழி அறிகிறோம்.

நமது திரைப்படங்கள் கதாநாயகனுக்கு இந்துப் பெருமதக் கடவுள்களின் சாத்வீகப் பெயர்களையும், வில்லனுக்கு கிருஸ்துவ, முஸ்லீம் பெயர்களைச் சூட்டுவதுப் போல பாடத்திட்டங்களில் இருக்கும் அடையாள வெறுப்பரசியல் குறித்து பேசுவது முக்கியமானதாகும். இளம் மனங்களில் அடையாள அரசியல் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவை. விளைவுகள் பல தலைமுறைக்கு தொடரக்கூடியவையாகும். திரைப்படங்கள், அரசியல் இவற்றின் நீட்சியாக கல்விப் புலத்திலும் இத்தகைய அடையாள அரசியல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும். மாணவர்கள் சாதிக் கயிறுகளை கட்டிக் கொண்டு வருவது அப்படியான வெளிப்பாடாகும்.

தலைவர்களுக்கு ஒளிவட்டம் பாய்ச்சுவது, மத அடையாளங்களைச் சேர்ப்பது குறித்து எச்சரிப்பதுடன், இவற்றைப் பாடநூல் தயாரிப்பவர்கள் உணர்வதும்,  பலமுறை ஆய்வு செய்வதும்  முடிந்தவரையில் தவிர்ப்பதும் குழந்தைகளிடம் அடையாள வெறுப்பரசியல் அணுகாமல் தடுப்பதும் கல்வின் கடமையாகும் (பக்.245). நேற்றைய காலங்களில் ஆசிரியர்களுக்கே முண்டாசு, தார்ப்பாய்ச்சிய வேட்டி, பைஜாமா என்றொரு தோற்றமிருந்ததும், அதை திரைப்படங்கள் கட்டிக் கொண்டு அழுததையும் பார்த்திருந்தோம். 1990களின் இறுதிவரையிலும் கூட பாடபுத்தகங்களில் ஆசிரியர்கள் சுமக்கமுடியாத முண்டாசுகளைச் சுமந்தபடிதான் இருந்தார்கள். இதுதான் அடையாள அரசியலின் சுமக்க முடியாதத் துயரமாகும். அடையாள அரசியலின் தவிர்க்க இயலாத மறுபக்கம் வெறுப்பரசியலை வளர்த்தெடுப்பதிலேயே சென்று முடியக்கூடியதாக இருக்கும்.

வெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப் பாடநூல்கள் என்ற தலைப்பில், நமது பாடமெழுதிகளின் வெறுப்பரசியல் குறித்து பேசுகிறது. செங்கிஸ்கான் தொடங்கி ஓளரங்கசீப் வரையிலான முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி குறித்த நமது வரலாறுகள் மட்டுமல்ல பாடநூற்களும் தப்பவில்லை. கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை 17 முறை கொள்ளையடித்தான் என்று சொல்வதிலுள்ள அரசியல் அது இன்றும் இளம் மனங்களின் தங்கியுள்ள நிறம் என்னவாக இருக்கிறது என்பது சொல்லிப் புரியவேண்டியதில்லை. அதுபோல முகமது பின்  துக்ளக் பற்றிய செய்திகள் அவரை ஒரு கேலிச்சித்திரமாகவே இருந்து வருகிறது.

நமது வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகள் இன்னும் முழுமையாக நமது பாடமெழுதிகளுக்கு கிடைக்கவில்லையோ என்று தோன்றுமளவுக்கு துக்ளக் பற்றிய சித்திரம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் பாடம்,’ இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்’ பாடத்தில் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். தேவகிரியை இரண்டாவது தலைநகராக்கும் துக்ளக்கின் முயற்சி தோற்றாலும் பெருந்தொகையோரின் இடப்பெயர்ச்சி எண்ணிக்கையளவில் நீண்ட கால ஆதாயங்களை பெற்றுத் தந்தது. தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதன்  மூலம், வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக கொண்டுவர இது உதவியது (பக்.343)

வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே பண்பாட்டு ஒன்றிணைப்பு போலவே  தென் இந்தியாவுக்குள்ளேயே இத்தகைய ஒன்றிணைப்புக்கு வழிவகுத்தது என துக்ளக்கின் இரண்டாம் தலைநகரின் நன்மைகள் குறித்து நமது பாடமெழுதிகள் வசதியாக கவனிக்கத் தவறிய செய்திகளை பதிவு செய்கிறார் சிவகுருநாதன்.

பழைமைவாத இறையிலாளர்கள் துக்ளக்கை ஒரு பகுத்தறிவாளர் என்று குற்றம் சுமத்திக் கொண்டிருக்க, சோ.ராமசாமி போன்றவர்கள் துக்ளக் என்ற மன்னரின் வரலாற்று அரசியல் மீது தமது வெறுப்பை நவீனப்படுத்தும் வகையில் அவரை ஒரு கேலிப் பொருளாகச் சித்தரித்து நாடகங்கள், திரைப்படங்கள் வழி பொதுப் புத்தியில் உறையச் செய்ததுடன், ‘துக்ளக்’ என்ற இதழைத் தொடங்கி அதைத் தொடர்ந்து முஸ்லீம் வெறுப்பரசியலுக்கும் பயன்படுத்தி வருவதையும் பார்க்கிறோம்.

நாடு பிடிக்கும் மன்னர்களை, மன்னர்களாகப் பார்க்காமல் முஸ்லீம்களாகப் பார்க்கும் வெறுப்பரசியலின் வரலாற்று ‘மதன’ப்பார்வைகள், “வந்தார்கள், வென்றார்கள்; கொள்ளையடித்தார்கள்”, என்றுதான் முடியக்கூடும்.

அதே நேரம் வேதகாலங்கள் பற்றி பாடநூல்களும் புனிதப்படுத்தும் வேலையையே தொடர்வதுதான் நமது கல்வியின் பேரவலமாக இருக்கிறது. குருகுலக் கல்வி குறித்து பொதுப்புத்தியில் இருக்கும் அதே பார்வையுடனே பாடத்திட்டங்களும் நமது மாணவர்களுக்கு சொல்ல விரும்புகின்றன. வைதீகக் கல்விகள் குறித்து திரிப்பதும், அவைதீகக் கல்விகள் குறித்து மறைப்பதுமாக நமது பாடத்திட்டத்தில் ‘அமைதி’ உறைந்திருக்கும் பகுதிகள் பற்றி சிவகுருநாதன் காத்திரமானக் கேள்விகளை எழுப்புவதுடன் அதன் அரசியலையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார். குருகுலக் கல்வியின், கல்வி, ஒழுக்கம், சீலம் குறித்துப் பேசும்போது எவ்வகையானக் கல்வி, ஒழுக்கம் என்று பேசாமல் கடந்து செல்லும் பாடத்திட்டத்தின் ‘திட்டம்’ விளங்கவே செய்கிறது. மனுஸ்மிருதிகள் குறித்து இன்றைக்கு பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வேதகாலம் மற்றும் மனுவின் பெண்கள் குறித்தப் பார்வையை பாடநூற்களுக்குள்ளும் நீதியான விமர்சனங்களுடன் விரிவுபடுத்த வேண்டியிருக்கிறது, வேண்டும்.

‘கல்விப்புல ஆய்வுகளின் அபத்தமும், அவலமும்’ (பக்.144) என்ற கட்டுரை மாங்குரோவ் காடுகள் பற்றிய ஆய்வுகளின் அபத்தத்தைச் சுட்டுகிறது. பாடநூலில் குறிப்பிடப்படும் செய்திகள் பாடமெழுதிகளின் கள ஆய்விலிருந்து பெறப்பட்டதா அல்லது எவ்வாறு இப்படியான செய்திகளின் முடிவுகளுக்கு வரமுடிந்தது என்று விளக்கவில்லை விளக்காதது குறித்து சிவகுருநாதன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

“அலையாத்தியின்  அழிவுக்கான பல காரணங்கள் உள்ளன. ஆனால் இங்கு இவர்களது ஆய்வுக்களம் சுனாமி, நிலவிரிவாக்கம், நகரமயமாதல், கால்நடை மேய்ச்சல் மற்றும் வேளாண்மை என்கிற அளவில் சுருங்கி விடுகிறது. மாங்குரோவ் காடுகளின் அழிவிற்கான உண்மைக் காரணிகள் மறைக்கப்பட்டு, புதைக்கப்பட்டு மேம்போக்காக உள்ளூர் மக்களும், மீனவர்களும் இதற்குக் காரணமானவர்கள் என்று சொல்வது அபத்தமானது மட்டுமல்ல; அறிவுத்துறை பங்கரவாதம்”, (பக்.166) என்று அறச் சீற்றம் கொள்வதை ஆமோதிக்க வேண்டும்.

சிவகுருநாதன் குறிப்பிடுவது போல மாங்குரோவ் காடுகள் அழிவிற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து அந்த பகுதிகளின் வளங்களைச் சுரண்டுவதே மிக முக்கியக் காரணம் என்பதை கள ஆய்வுகள் உறுதிப்படுத்துவதை பாடமெழுதிகள் ஒரு போதும் சொல்லப் போவதில்லை.

ஆதிக்கச் சாதியினருடன் இணைந்த உள்ளூர் கும்பல்களே மாங்குரோவ் காடுகளைத் தின்றுத் தீர்க்கின்றன. குறிப்பாக இறால் பண்ணைக் கழிவுகள் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரப் பகுதியை உவராக்குவதன் வழி நன்னீர் உயிரினங்கள் அழிந்து போவதுடன் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களின் உடலிலும் ஆபத்தான வகையில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக முகத்துவாரப் பகுதியில் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக நாள் முழுவதும் நீரில் அமிழ்ந்தபடியே நன்னீர் மீன்களைப் பிடிக்கும் சிறு மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கழிவு மற்றும் உவர் நீரானது வேர்களால் சுவாசிக்கும் அலையாத்தி மரங்களின் வேர்களை அழுகச் செய்வதுடன் மரங்கள் விரைவில் பட்டுப் போய்விடுவதையும் நேரில் பார்க்க முடியும்.

ஒருமுறை சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் மேதா பட்கருடன் இறால் பண்ணைகளுக்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. அப்போது அங்குள்ள உழவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அன்றைக்கு அவர்கள் சொன்னதைத் தொகுத்து நமது பாடமெழுதிகளின் புனைவுடன் இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம். கடற்கரை ஒட்டிய உழவு நிலங்கள் பெரும்பாலும் மீனவர்களுடையதாகவே இருக்கின்றன. அவர்கள் உழவர்களாகவும், மீனவர்களாகவும் இருக்கிறார்கள். இரவில் கடலிலும், பகலில் நிலத்திலும் பாடுபடுகிறார்கள். இறால் பண்ணைகளின் விரிவாக்கத்தால் அவர்களது நிலங்கள் விரைந்து உவர் நிலமாவதாலும், அதில் பயிர் செய்ய இயலாதக் காரணங்களாலும் அவர்கள் இறால் பண்ணை முதலாளிகளிடம் தமது நிலங்களை குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். கடலிலிருந்து திரும்பிய பிறகு, பண்ணைக் குட்டைகளாகிவிட்டத் தமது இழந்துவிட்ட நிலங்களில் கூலி வேலை செய்வதைத்தான் நமது பாடமெழுதிகள் மாற்று ஏற்பாடு என்று சொல்கிறார்கள் போலும்.

இறால் பண்ணைகளுக்கு அரசு வழங்கும் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியேனும் உழவுத் தொழிலை இழந்துவிட்ட மீனவர்களுக்கு நமது மக்கள் குடியரசு வழங்குவதில்லை என்பதையும் பாடமெழுதிகள் பதிவு செய்தால் அரசுப் பள்ளியில் பயிலும் அந்த மீனவக் குழந்தைகளுக்கு உதவியாகவாவது இருக்கும்.

கடலையும், வனத்தையும், நிலத்தையும் அவ்வப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளே சீரழிக்கிறார்கள் என்ற பொதுப்புத்தியில் கலக்கப்பட்ட கடல், வன, நில பழங்குடிகள் பற்றிய உள்நோக்கமுடைய திட்டமிட்ட கார்ப்பரேட் அரசியல் பார்வையுடனே நமது பாடமெழுதிகளும் இருப்பது, அணுகுவது கல்வி அபத்தம் மட்டுமல்ல கல்வி ஆபத்து, கல்வி அவலம், கல்வி பயங்கரவாதமும்கூட.

“பாடநூலில் அறிமுகமாகும் தமிழறிஞர்கள் ஒரு சிலரைத் தவிர அனைவரும், சைவ, வைணவக் கருத்தியலுக்கு ஆட்பட்டவர்கள். இதுவே பாடநூலில் கருத்தியலாக மாற்றப்படுவது வன்முறையன்றி வேறில்லை. தனித்துவப் பார்வையோடுச் செயற்பட்ட அறிஞர்களைப் புறக்கணிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். (…) சாதி, மதங்களை நிறுவுவதற்கு தமிழ்ப் பாடநூல்களைப் பலியிட வேண்டாம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லி வைப்போம்”, (பக்.301) எனும் நூலாசிரியர் கல்விப் புலத்தை நோக்கி கோரிக்கை வைப்பதை ஏற்கத்தான் வேண்டும்.

கல்வி அபத்தங்கள் வழி நாம் அறியக் கூடியது என்னவென்றால், முக்கியமாக ஒரு நன்கு திட்டமிட்ட, அவதானமான அரசியல், கற்பித்தலை வழி நடத்துகிறது. அது சனாதன வைதீகப் பெருமதத்திற்கு நோகாமல் நொங்கெடுக்க விரும்புகிறது. அது தவிர இந்தக் கற்பித்தலின் இலக்கானது எதையும் கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை. மநு எவ்வாறு ஸ்மிருதிகள் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்று கற்றலுக்கு முன்நிபந்தனை விதித்தானோ அதுவே நவீன பாடநூற்களின் முன் நிபந்தனையாக இருக்கிறது. கற்றலை, கற்பித்தலை வேதமாக்குகிறது. ‘பாடங்கள் வேதநூல்களாகும் அவலம்’ என்ற தலைப்பில் இந்நூலில் ஒரு கட்டுரையே இருக்கிறது. அது போல ‘வெறுப்பரசியலுக்கு இரையாகும் பள்ளிப்பாடநூல்கள்’ என்ற கட்டுரையையும் அத்துடன் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கேள்வி கேட்க முடியாத வேதம், கல்வி என்பன தேங்கியக் குட்டையாகவே நாற்றமெடுக்கும். கற்றல் என்பது சுருங்குவதல்ல; விரிவது. வெறுப்பை வளர்ப்பதல்ல; பன்மைத்துவத்தை, நேசிப்பை ஆழப்படுத்துவது.

பெருந்தொகுப்பாக இருப்பதாலும், ஏராளமானத் தகவல்கள் நிரம்பிக் கிடப்பதாலும்  வாசிப்பில் ஓர் அயர்ச்சி ஏற்படச் செய்தாலும் தேடல் மிகுந்த ஆசிரியர், ஆசிரியர்கள் அல்லாதோருக்குக் கல்வி அபத்தங்களையும், அவசியத்தையும் ஒரு சேர புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது, உதவும்.

இனிய தோழர், சிவகுருநாதனின் ஆழ்ந்த வாசிப்பும், நேசிப்பும், கல்விப் புலத்தின் மீதான ஆழ் கரிசனமும் கல்வி அபத்தங்களை ஆசிரியர்களுக்கான ஓர் கையேடாக மாற்றித் தருகிறது. அபத்தங்களுக்கு அப்பால் சென்று தெளிவான விளக்கங்களை, வழிகாட்டுதலைப் பெற்றுத் தருகிறது, தரும்.

முத்துப்பேட்டை                        இரா.மோகன்ராஜன்

      09/01/2021                             mohanrajan.r@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *