குழந்தைகளை ஆக்ரமிக்கும் பாடநூல்களை கவனிக்க மறுக்கலாமா?
மு.சிவகுருநாதன்
(‘கல்வி அபத்தங்கள்’ – பதிப்புரை – 02)
வருங்கால குடிமக்களின் வாழ்வும் பணிகளும் சிறக்க வேண்டும் என்பதே அனைவரின் கனவாக இருக்க முடியும். எனவே கல்வியின் மீது குழந்தைகள் மீது உரிய கவனமும் அக்கறையும் கொள்வது அவசியமாகிறது.
கல்வியைப் பெருமளவு ஆக்ரமித்துள்ளவை பாடநூல்கள் என்றால் மிகையாகாது. எனவே குழந்தைகளின் வாழ்விற்காகவும் அவர்களது உரிமைகளுக்காவும் பாடநூல்களை உரிய முறையில் ஆய்வு செய்வது முதன்மையானது.
மிகுந்த ஆரவாரத்துடன் தமிழ்நாட்டில் அறிமுகமாகியுள்ள புதிய பாடநூல்களின் அபத்தங்களை இந்நூல் மிக விரிவாக எடுத்துரைக்கிறது. பாடநூல் இப்படியும் எழுதப்படுமா என்று வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
பாடநூல்கள் எழுதும்போது கைக்கொள்ள வேண்டிய அம்சங்களையும், களையப்பட வேண்டியவற்றையும் ஆங்காங்கு கோடிட்டுக் காட்டுவது இந்நூலின் சிறப்பாகும்.
‘பன்மை’யின் முதல் வெளியீடாக ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ என்ற விமர்சனத் தொகுப்பு நூல் நவம்பர் 2020 இல் வெளியானது. 2021 பிப்ரவரியில் இரண்டாவது வெளியீடாக ‘கல்வி அபத்தங்கள்’ என்னும் பாடநூலாய்வுக் கட்டுரைகள் வெளியாகிறது.
‘பன்மை’ தொடர்ந்து பொதுப்புலத்திற்கு வராமலிருக்கும் இருள் வெளிகளின் மீது உரிய கவனம் என்பதில் உறுதியேற்கிறோம்.
வாசகர்கள் எங்களுக்கு ஆதரவளித்து, செழுமைப்படுத்த உரிய விமர்சனங்களை அளிக்கவும் வேண்டுகிறோம்.
பன்மை
திருவாரூர்