ஏ.ஜி.கேவை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சி
(‘பேசும் புதிய சக்தி’ மார்ச் 2021 இதழில் இடம்பெற்ற ஏ.ஜி.கே. நூல் அறிமுகம்.)
ஏ.ஜி.கே. எனும் போராளி / கட்டுரைகள் / தொகுப்பு: மு.சிவகுருநாதன் / வெளியீடு: பன்மை, நிலா வீடு, 2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், தியானபுரம் – விளமல், மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல், திருவாரூர் – 610004. அலைபேசி: 9842402010 விலை: ₹ 290
சிறுவயதிலிருந்து தந்தை பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வளர்ந்த தோழர் ஏ.ஜி.கே. என்கிற ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் அவர்களைப் பற்றிய 29 கட்டுரைகள் அடங்கிய நூல் இது. நாகப்பட்டினம் அந்தணப்பேட்டையில் பிறந்த ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் இக்கட்டுரைத் தொகுப்பை மு.சிவகுருநாதன் தொகுத்துள்ளார்.
தய்.கந்தசாமி எழுதிய ‘கருப்புச் சட்டையிலிருந்த கம்யூனிஸ்ட்’, பாவெல் சூரியன் எழுதிய ‘மரணமில்லை, மறைவுமில்லை, வரலாற்றில் வாழ்கிறார்’ என்கிற கட்டுரை, தியாகு எழுதிய ‘போராட்டக் கலையின் ஈடில்லா வித்தகர்’ என்கிற கட்டுரை, மற்றும் இரா.மோகன்ராஜன், வ.கீதா, சி.அறிவுறுவோன், துவாரகா சாமிநாதன், சாம்ராஜ், பசு.கவுதமன் ஆகியோரின் கட்டுரை குறிப்பிடத்தகுந்தது.
ஏ.ஜி.கே.அஜிதாவின் கட்டுரை உணர்வுப்பூர்வமானது. ஏ.ஜி.கேவை, அப்பா என்கிற உறவுமுறையைத் தாண்டி கொள்கைப் பற்றுடைய ஆளுமையாகப் புரிந்துகொண்டு எழுதியுள்ளதைப் பாராட்ட வேண்டும். கீழ்தஞ்சைச் சாந்தவர் என்கிற குறுகிய வட்டத்திற்குச் சிக்கிக்கொண்ட ஏ.ஜி.கேவை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்லும் முயற்சியாக இந்நூல் அமைந்துள்ளது.
நன்றி: பேசும் புதிய சக்தி – மார்ச் 2021