தோழர் ஏஜிகே: பெரியாரிய, மார்க்சியப் போராளி
(நவம்பர் 05, 1932 – ஆகஸ்ட் 10, 2016)
– மு.சிவகுருநாதன்
முதல் பகுதி
ஒரு படைப்பாளியின் பணிகள் மற்றும் படைப்புகளை பல்லாண்டுகள் கழித்துக்கூட மதிப்பிடவோ அல்லது தொகுத்துவிடவோ முடியும். இத்தகைய வாய்ப்பு ஒரு இயக்கச் செயல்பாட்டாளருக்கு கிடைப்பதில்லை. சமகாலப்பதிவுகள், மனிதர்கள், பணிகள், செயல்பாடுகள் ஆகியவற்றைக் கொண்டே இயக்கவாதியை மதிப்பிட முடியும். ஆண்டுகள் செல்லச்செல்ல இருக்கின்ற ஆதாரத் தரவுகள் குறைந்து கொண்டேயிருக்கும்.
தோழர் ஏஜிகேவைப் பொருத்தமட்டில் நமக்குக் கிடைத்திருக்கும் பதிவுகள் சில மட்டுமே. தியாகுவின் சிறைக் குறிப்புகள், பாவெல் சூரியனின் சிறிய நேர்காணல், பசு.கவுதமன் தொகுத்த ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…’ ஆகியன மட்டுமே உள்ளன.
ஏஜிகே பற்றிய மிக விரிவான பதிவுகள் இடம்பெற்றவை தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் (விஜயா பதிப்பகம், கோவை) ஆகிய இரு நூல்களைச் சொல்லலாம். மூன்றாவது நூல் ‘நந்தனில்’ தொடராக வந்த ‘விலங்கிற்குள் மனிதர்கள்’, இன்னும் நூலாக்கம் பெறவில்லை. “வரலாற்று நூல் படைப்பாக்க தகுதி பெற்றதாக”, இவை சொல்லப்படினும் இதில் ஊடாடும் கதை மொழியால் ஒருவித புனைவுத்தன்மை வந்துவிடுவதை மறுப்பதிற்கில்லை.
ஏஜிகேயின் இறுதிக்காலத்தில் தொடங்கிய ‘தமிழர் தன்மானப் பேரவை’ வெளியீடுகளைக் கொண்டு அப்பேரவையின் செயல்பாடுகளை மட்டுமே ஆய்வு செய்யவோ மதிப்பிடவோ இயலும். மடலுரையாடல் (ஜன.2008), தமிழர் தன்மானப் பேரவை கருத்து – செயல் அறிக்கை (ஜன.2008), அறிந்திட… அணுகிட… அய்ம்பது (ஜன.2008), சந்திப்போம்! சாதிப்போம்!! சக்தி பெறுவோம்!!! (2011), தவிர்ப்போம்! தடுப்போம்!! தாக்குவோம்!!! (2011) ஆகிய அய்ந்து வெளியீடுகள் பேரவையால் வெளியானவை. அவரது ஒட்டுமொத்தச் செயல்பாடுகளைத் தொகுத்தறிய இவை போதுமானவை அல்ல. மேலும் இவைகள் அவருக்கு ஒரே வகையான பிம்பத்தைத் தரக்கூடியதாகக்கூட அமையலாம்.
“தமிழர்களுக்கு வரலாற்றுணர்வு இல்லை”, என்கிற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே உண்டு. எதையும் ஆவணப்படுத்துதலில் இருக்கும் சுணக்கம் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். மக்கள் இயக்கம் கட்டும் இயக்கவாதிகள் எவரும் காவல்துறை அடக்குமுறையிலிருந்து தப்ப முடியாது. காவல்துறையின் சூறையாடலுக்குப் பிறகு தனது நினைவு அடுக்குகளிலிருந்து மீட்டெடுத்ததை பசு.கவுதமன் தொகுத்த நூல் நமக்கு வெளிப்படுத்தியுள்ளது. விரைவில் வெளிவர இருக்கும் ‘முக்கொலை வழக்கு’ தொடர்பான நூலில் இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கலாம். வெண்மணி தொடர்பாக பசு.கவுதமன் எழுதும் ‘பச்சைத்தீ’யில் இன்னும் வெளிவராத உண்மைகள் மறைந்திருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது. இவை வெளியான பிறகே ஏஜிகே பற்றிய ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும்.
இதுவரையில் இருக்கின்ற தரவுகளின் அடிப்படையில் ஏஜிகேவை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல; இருப்பினும் அவர் மறைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இனியும் காலம் கடத்துவது சரியாக இருக்காது. எனவே ஏஜிகே என்னும் ஆளுமைச் சித்திரத்தைத் தீட்டிப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சில நூல்களை வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சிகள் அளவில்லாதவை. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் சுயசரிதை (ஜூலை, 2014, அவ்வை இல்ல வெளியீடு) தமிழில் வெளியாகியுள்ளது. தேவதாசி ஒழிப்புச் சட்டமியற்ற பட்டபாடுகளைச் சொல்லும்போதுகூட பெரியார் பெயரை ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை. அதைப்போல தோழர் கோ.வீரையன் எழுதிய ‘நீண்ட பயணம்’ உள்ளிட்ட எந்த நூல்களில் ஏஜிகே என்ற பெயர் வராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
அப்பணசாமி தொகுத்த ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ (டிசம்பர், 2004) என்னும் தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாழ்மொழி வரலாற்றிலும் சோலை சுந்தரபெருமாள் தொகுத்த ‘வெண்மணியிலிருந்து…’ (டிசம்பர், 2010) வாய்மொழி வரலாற்று நூலிலும் ஏஜிகே இல்லை. சோலையின் தொகுப்பில் ஒருவர் மட்டும் அந்தணப்பேட்டை கஸ்தூரிரெங்கன் என்று பெயரைக் குறிப்பிடுவார். (நாகை தேனாமிர்தம், பக்.108)
மூத்த தோழர் கோ.வீரய்யனின் தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் வீர வரலாறு (1998), சங்கம் படைத்த சரித்திரம் (டிசம்பர் 2000), செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் (2010) ஆகிய மூன்று நூல்கள் தஞ்சை விவசாயிகள் போரட்ட வரலாற்றைக் சி.பி.எம். கட்சிக் கண்ணோட்டத்தில் அணுகுபவை. ‘சங்கம் படைத்த சரித்திரம்’, நூலில் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் பற்றி கீழ்க்கண்ட பத்தி உள்ளது.
“தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக நாகை, நன்னிலம் வட்டங்களில் சேரிப்பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களை ஒரே செங்கொடி இயக்கத்தில் இருந்தவர்களையும் செங்கொடி இயக்கம் இல்லாத பகுதிகளிலும் 1953 ஆம் ஆண்டு வாக்கில் திராவிட விவசாயத் தொழிலாளர் இயக்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, திராவிட கழகமும் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தை நடத்தியது. நன்னிலம் வட்டம் கொரடாச்சேரி, குடவாசல், திருக்கண்ணமங்கை பிர்க்காக்களிலும் திருக்கண்ணபுரம் – திருமருகல் பிர்க்காகளின் தென்பகுதியிலும் பல கிராமங்கள் இந்த சங்கத்தில் செயல்பட்டார்கள். குறிப்பாக புதுக்குடி, கண்கொடுத்தவனிதம், வைப்பூர் பகுதிகளில் செங்கொடி விவசாயத் தொழிலாளர்களுடன் மோதுவதில் பிரதான கவனம் செலுத்தினார்கள். அதையும் சமாளித்து செங்கொடி இயக்கம் முன்னேறியது. புதிய நிலைமை ஏற்பட்ட பிறகு மாவட்டங்களில் பல பகுதிகளில் 56 முதல் 60 வரை ஐந்தாண்டுகள் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்தியது. (பக்.27, சங்கம் படைத்த சரித்திரம் – கோ.வீரய்யன்) இந்த வரிகளுக்கிடையே உள்ள இடைவெளிகளை ஏஜிகேவின் நூல்தான் நிரப்பியது.
வெண்மணி தொடர்பான எந்தப்பதிவிலும் தவிர்க்கப்பட்ட ஒரு பெயர் ஏஜிகே உடையதாகவே இருக்கும். கட்சியால் வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள், நடவடிக்கைக்கு உள்ளானோர் கடந்த காலத்தில் செய்த பணிகளை மறந்து விடுவது அல்லது மறக்கடிப்பது அறமாகாது. மேலும் இது வரலாற்றிற்கு செய்கின்ற துரோகமாகவே அமையும். தனிப்பட்ட,அமைப்பு, இயக்கக் காழ்ப்பின் மூலம் உருவாகும் இந்த வரலாறுகள் எதிர்கால ஆவணங்களாக மாறுவதும் வரலாற்று அவலமாகத்தான் இருக்கும்.
விதிவிலக்காக பாரதி கிருஷ்ணகுமார் எடுத்த வெண்மணி குறித்த ஆவணப்படமான ‘ராமய்யாவின் குடிசை’யில் ஏஜிகேயின் செவ்வி இடம்பெறுகிறது. பிரளயன் ஏஜிகேவை நாள் முழுக்க உரையாடிப் பதிவு செய்த காணொளிப்பதிவுகள் இதுவரையில் வெளியாகவில்லை என்பதை பேரா. தெ.வெற்றிச்செல்வன் கூறுவதும் இங்கு அவதானிக்கத்தக்கது.
இருப்பினும் ஏஜிகே மறைவிற்கு பிறகு நாகை மாலி (ஆகஸ்ட், 2016) தினமணியிலும், ஐ.வி. நாகராஜன் (செப். 04, 2016) தீக்கதிரிலும் அஞ்சலி கட்டுரைகள் எழுதினர். திராவிடர் கழகமும் ‘விடுதலை’யும் கண்டுகொள்ளவேயில்லை. எனது பாடநூல் பிழைகள் குறித்த ‘தி இந்து’ (பிப். 05, 2015) கட்டுரையை அதில் பெரியாரைப் பற்றிய ஒரு தகவல் இருப்பதனால் முழுக்கட்டுரையையும் ‘விடுதலை’ மறுபிரசுரம் செய்தது. அப்படி பார்த்தால் சாம்ராஜின், “ஏ.ஜி.கே: மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்தவர்” (ஆகஸ்ட் 12, 2016) என்ற கட்டுரையையும் வெளியிட்டிருக்க வேண்டுமல்லவா!
பெரியார்,அம்பேத்கர், காந்தி போன்ற ஆளுமைகளை ஒரு குறிப்பிட்ட அமைப்பு, இயக்கத்திற்குச் சொந்தமாக்குவது ஏற்புடையதல்ல. இது தோழர் ஏஜிகேவிற்கும் பொருந்தும். இவரையும் ஒரு இயக்கச் சிமிழுக்குள் அடைத்து விடுவது பொருத்தமாக இருக்காது. பெரியாரிய, மார்க்சிய கருத்தியல் அடிப்படையில் வட்டார அளவில் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டி, இயக்கமாக்கிப் போராடிய ஏஜிகே யின் செயல்பாடுகளிலிருந்து நாம் கற்கவேண்டிய படிப்பினைகளும், சமகாலப் போராட்டங்களை முன்னெடுக்கவும் வடிவமைக்கவும் உதவும் எண்ணற்ற காரணிகளும் உண்டு. அவற்றை அறிந்துகொள்வதற்கும் பயணிக்கவும் ஏஜிகேவை திறந்த மனதுடன் அணுகவேண்டியத் தேவையிருக்கிறது. அப்போதுதான் அவரது கருத்தியல், இயக்கப் பணிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் கொள்ளவேண்டியதைக் கொள்ளவும் பெற வேண்டிய படிப்பினைகளை அறியவும் வழியேற்படும்.
60 ஆண்டுகளுக்கு மேலாக பெரியாரிய, மார்க்சிய கருத்தியல் தளத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்ட ஒருவரைப் பருந்துப் பார்வையாக அணுகுவதன் சிக்கல் ஒருபுறமிருக்க, இக்கால கட்டத்தில் மூன்றுக்கு மேற்பட்ட தலைமுறைகள் கடந்தும், நாடும் சமூகமும் எண்ணற்ற மாற்றங்களைக் கண்டுள்ளது. பெரியாரிஸ்ட்டாகத் தொடங்கிய ஏஜிகேயின் வாழ்வு, மார்க்சிஸ்ட்டாக மாறி இரு கருத்தியல்கள் இணைந்த பாதையில் மக்கள் போராட்டத்தை வழிநடத்தி, மிக நீண்டகால சிறைவாழ்வில் மனித உரிமைப் போராளியாகவும் செயல்பட்டு, மீண்டும் திராவிடர் கழகம், சி.பி.எம். ஆகியவற்றில் இணைந்துப் பின்னர் முரண்பட்டு தமிழ் தேசியராக மாறி ‘தமிழர் தன்மானப் பேரவை’ கண்டு தனது இறுதிக்காலம் வரை போராட்டமே வாழ்க்கை என இயங்கிய ஏஜிகே வின் வாழ்வை நம் வசதிக்காக அய்ந்து கட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம்.
(அ) தொடக்கம் முதல் 1963 வரை தி.க., திராவிட விவசாயத் தொழிலாளர்கள் சங்கப் பணிகள் முதற்கட்டம், (ஆ) 1963 முதல் 1969 வரை சி.பி.அய்., சி.பி.எம்., அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தில் செயல்பட்ட இரண்டாம் கட்டம், (இ) 1969 முதல் 1985 முடிய பொய் வழக்கான முக்கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியாக திருச்சி மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் 24 ஆண்டுகள் வாழ்க்கை, சிறைக்கொடுமைகளுக்கு எதிரான போர், சிறைபட்டோர் நலச்சங்கம், கையெழுத்து இதழ்கள் உள்ளிட்ட மூன்றாம் கட்டம், (ஈ) 1985 முதல் 2000 வரை மீண்டும் திராவிடர் கழகம், சி.பி.எம். கட்சியில் செயல்பட்ட நான்காவது கட்டம், (உ) அவற்றிலிருந்து வெளியேறி ‘தமிழர் தன்மானப் பேரவை’ தொடங்கிச் செயல்பட்ட (2000 – 2016) இறுதிக்காலகட்டம் என அய்ந்து நிலைகளாக அணுகுவது ஏஜிகே வையும் அவரது கருத்தியல் செயல்பாட்டையும் ஓரளவு புரிந்துகொள்ள உதவும்.
இரண்டாம் பகுதி
அ
ஏஜிகே தனது இளமைக்காலம் முதற்கொண்டு பெரியாரது எழுத்துகள் வழி தனது ஆளுமையை வளர்த்தெடுத்துள்ளார். பெரியாரே அவருக்கு பள்ளி, ஆசான் எல்லாம். அதனால்தான் என்னவோ பெரியாரியமே அவருக்கு ஊன்றுகோலாக மட்டுமல்ல, எல்லாமாகவும் உள்ளது. “செழுமைப்பட்ட மார்க்சிஸ்டுகளே பெரியாரிஸ்ட்டுகள், தமிழனுக்குச் சாதியில்லை; மதமில்லை; அவனுக்குச் சாதி, மதவெறிகள் இருக்க முடியாது” என்றும் “தமிழினம் ஆண்ட பரம்பரை என்பது முழு உண்மையல்ல”, (பக். 44, கருத்து – செயல் அறிக்கை) என்றும் அவரால் சொல்ல முடிகிறது. இது பெரியாரியத்தின் தாக்கம் என்றே கொள்ளலாம்.
“தமிழர்கள் இந்துக்களல்லர்; இந்தியர் அல்லர்; தமிழர்கள் சாதிமதமற்றவர்கள்; தீண்டாமையின் எதிரிகள்; சாதிவெறி, மதவெறி, சாதி, மத ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிரிகள்”, (பக்.56, மேலது) என்றெல்லாம் விரிவாக விளக்குகிறார். ஆனால் இன்று தமிழ் தேசியர்கள் ஒத்த கருத்தியல் கொண்டவர்களாக இல்லை. அவர்கள் சாதி, மத அடையாளங்களுடன் ஒருங்கிணையும் போக்கு வளர்ந்து வருகிறது. இம்மாதிரியான காரணங்களால் அவர் முன்னெடுத்த தமிழ்த் தேசிய முன்னணி தோல்வியில் முடிந்தது.
தந்தை பெரியாரை முதலாசானாய்க் கொண்டே தனது செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்கிறார். கருத்து முரண்பட்டு பெரியார் இயக்கத்திலிருந்து வெளியேறி மார்க்சிய இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் என கருத்தியல்கள் மாறிய பிறகும்கூட பெரியார் மீதான ஈடுபாடும் அன்பும் துளியும் குறையவில்லை. திராவிட, மார்க்சிய, தலித், தமிழ் தேசிய இயக்கங்களை பல சமயங்களில் மிகக்கடுமையாக விமர்சிக்கும் ஏஜிகே பெரியாரை அவ்வாறு விமர்சிக்காததை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடிகிறது. மு.கருணாநிதி பெரியாரை மிகக்கடுமையாக விமர்சனம் செய்வதைப் பொறுக்காது அவரை அதே வகையில் எதிர்கொள்கிறார். இதன் காரணமாக மு.கருணாநிதியின் பழிதீர்க்கும் படலம் நீதிமன்றங்கள், கருணை மனு நிராகரிப்பு வரை நீள்கிறது. நீண்ட சிறை வாழ்விற்குப்பின் சுமார் 13 ஆண்டுகள் (1987-2000) மீண்டும் திராவிட இயக்கத்தில் பணியாற்றியதையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.
பெரியாரின் பச்சைக்கல் மோதிரம் (கணையாழி) பெரியாராக நடித்த நடிகர் சத்யராஜூக்கு வழங்கப்பட்டதற்கு கி.வீரமணி, மு.கருணாநிதி ஆகியோரை விமர்சனம் செய்து ஏஜிகேவின் மிக நீண்ட பறைஒலி விமர்சனக் கட்டுரையும் இன்னுமோர் எடுத்துக்காட்டாகும்.
“பெரியார் விமர்சனத்துக்குரியவர் – காரணம் அவர் பெரியாரீயத்தின் படைப்பாளி – படைப்பாளிகள் விமர்சனத்திற்குரியவர்கள்”, (பக்.184, மடலுரையாடல்) என்று எழுதினாலும் பெரிய விமர்சனங்கள் ஏதுமின்றி ஏஜிகே பெரியாரைக் கீழ்க்கண்டவாறு பாராட்டவே செய்கிறார்.
“பெரியார் ஒரு வாழ்க்கைப்பள்ளி – அனுபவ ஆசான் – சொந்த அறிவுச் சிந்தனையாளர் – சொல்லாளுமை பெற்ற சொற்பொழிவாளர் – மக்களை வென்றெடுத்தவர் – எடுத்துக்காட்டியாய் வாழ்ந்து காட்டியவர் – படிப்பினைகளால் சிந்தனைக்குச் செழுமையூட்டிய சித்தாந்தவாதி – சமூகத் தலைகீழ் மாற்றம் விரும்பிய புரட்சியாளர் – தமிழ் இன விடுதலைப் போராளி – தமிழ்நாடு தமிழருக்கே என்ற வழிகாட்டி – இந்தியத் துணைக்கண்டத்தில் மார்க்ஸீயத்தைச் செழுமைப்படுத்திய சமூக விஞ்ஞானி.
பார்ப்பனரல்லாத பூர்வீகக் குடிகளைத் திராவிடர் என அடையாளப் படுத்தியவர் – மிட்டா, மிராசுகள், பட்டம் பதவியாளர்களின் நீதிக்கட்சியைப் பாமரர்கள், பஞ்சமர்களின் கட்சியாக்கியவர் – தன்மான அஸ்திவாரத்தில் நம்மானச் சமூகத்தை வடிக்க முனைந்த சிற்பி – தவறுகளை ஒப்புக்கொள்ளும் வலிய சக்தி கொண்டவர் – தவறுகளை திருத்திக் கொள்ளும் துணிவாற்றல் கொண்டவர் – தன்னையே தமிழ்ச் சமூகத்திற்கு ஒப்புவித்துவிட்ட தன்னிழப்பாளர்.
தனது வாரிசுகள், தனது கொள்கையும் – பேச்சும் – எழுத்தும் என வரையறுத்துக் கொண்ட வரலாற்று நாயகன் – தன் கைத்தடியும், தன் வளர்ப்பு நாயுமே தன் வாழ்நாள் துணை என வகுத்துக் கொண்ட துணிச்சல்காரர். தன் வாழ்நாளுக்குப்பின் தனது விருப்பம் நிறைவேற தாம் பயன்படுத்திய, ஆனால் கூர்தீட்டப்படாத ஆயுதமான ஓர் அமைப்பையும், அதற்கு அனுசரணையாக தனது ஆஸ்தி முழுவதையும் அடக்கிக் கொண்ட அறக்கட்டளை ஒன்றையும் விட்டுச் சென்றவர்”. (பக்.184, மேலது)
தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடு எடுத்தபோதும், நமது சித்தாந்தம் பெரியாரியம் என்கிறார். “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியம் பெரியாரியம்”, என்பதோடு, “நாட்டியல், வாழ்வியல், பொருளியல், அரசியல், பண்பியல், அமைப்பியல் ஆகிய துறைகளில் பொதுவாக ஏற்படும் வரலாற்றுப் போக்குகளின் வளர்ச்சி, மாற்றங்களின் பிரத்தியேகத் தன்மைகளை வெளிப்படுத்துவது பெரியாரியம்”, (பக்.37, மேலது) என்று அறுதியிட்டுக் கூறுகிறார். எங்கும் சுயமாரியாதையை (தன்மானம்) முன் நிபந்தனையாக்குகிறார். பெரியாரை அடிப்படையாகக் கொண்டே இந்திய விடுதலை, சமூகம், மதங்கள், தேர்தல்கள் என பலவற்றை விமர்சிக்கிறார். பெரியாரியத்தின் தாக்கம் அவரது வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒன்றாக உள்ளது. பெரியாரியத்தை அவர் விரும்பும் எல்லாவற்றின் மீதும் பொருத்தி அழகு பார்க்கிறார். தமிழ்த் தேசியத்துடன் பெரியாரை இணைப்பது சிலருக்கு உவப்பானதாக இல்லை. இத்தகையப் போக்குகளின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்குமென்பதை கணிப்பது சிரமமான ஒன்றல்ல.
ஆ
பெரியாரியம், மார்க்சியம் ஆகியன தங்களுக்குள் முரண்பட்ட கருத்தியல்கள் என்கிற மனநிலை இருந்த காலகட்டத்தில் அவையிரண்டிற்குமான ஒன்றிப்பைக் களத்தில் நின்று நிருபிக்க கிடைத்த வாய்ப்பை ஏஜிகே மிகச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் என்றே தோன்றுகிறது. இவ்வொன்றிப்பு மேல்மட்டத்தைவிட அடித்தள மட்டத்தில் மிக எளிதாக அமைந்துவிடுவதை ஏஜிகே நடைமுறையில் தெளிவாக உணர்ந்திருந்தார். இதன் மூலம் இவை முரண்பட்ட கருத்தியல்கள் அல்ல; ஒன்றில் ஒன்றை செழுமைப்படுத்தி வளர்த்துச் செல்ல வேண்டிய இணைப்போக்குகள் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும்கூட அம்பேத்கரியமும் இத்துடன் இணைந்தே பயணித்தது.
அடித்தள மக்கள், தலித்கள், பெண்கள், விளிம்பு நிலையினர் ஆகியோரை ஒன்றிணைத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவும் அவற்றை வென்றெடுக்கவும் முடிந்தது. வெறும் கருத்தியலோடு முடங்கிவிடாமல் அதை நடைமுறைப்படுத்தி அதன் வழியே பல்வேறு படிப்பினைகளை அளிக்க முடிந்தது. பெரியாரும் மார்க்சும் வயல்வெளிகளில் கைக்கோர்த்துப் பயணிக்க வாய்ப்பேற்பட்டது.
மிகக்குறுகிய காலமென்றாலும் (1963-1969) இயக்கப்பணிகளில் துலக்கமாக செயல்பட்டதை பசு.கவுதமன் தொகுத்த நூல் வழி இதை மிக விரிவாக அறியவும், அவதானிக்கவும் முடிகிறது. தந்தை பெரியார், பேராசான் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களை நடைமுறைப்படுத்தும் சோதனைச் சாலையாக அன்றைய நாகப்பட்டினம் வட்டம் இருந்துள்ளது. அந்தச் சோதனைச் சாலையில் ஏஜிகே என்கிற சமூக விஞ்ஞானி பணிபுரிந்திருக்கிறார்.
இ
சுயமரியாதை (தன்மானம்) என்பது மனித உரிமைச் செயல்பாடே. மனித உரிமைகள் என்பது சிறைப்பட்டோர், சிறைக்காவலர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோர் என அனைவருக்கும் பொதுவானது. பெண்ணுரிமை என்பது உயர்த்தப்பட்ட பெண்களுக்கானதல்ல; மாறாக தேவதாசிகள், பாலியல் தொழிலாளிகள், விதவைகள், கைவிடப்பட்டோர் என அனைவருக்குமானது என்ற பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி நின்ற ஏஜிகே அதனைப் பல்வேறு நிலைகளிலும் செயல்படுத்தினார்.
இன்றைய சூழலில் மனித உரிமைப் பணிகளை பொதுவெளியில் செய்வதே மிகச் சிரமமான காரியமாக உள்ளது. அதை சிறைக்குள்ளிலிருந்தே செய்வதென்றால்…? ஏஜிகே போன்ற கருத்தியல் மற்றும் அமைப்பியல் சிந்தனைத் தெளிவுடையவர்களால் மட்டுமே சாத்தியப்படும் செயலிது. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம், போலி மோதல்களுக்கு எதிர்ப்பு, சிறைப்பட்டோர் உரிமைகள் போன்றவை இன்றைய ‘பாசிச’ இந்தியாவில் நகைப்பிற்கிடமாக மாறிவிட்டது. மரண தண்டனைகளையும் போலி மோதல் படுகொலைகளையும் கொண்டாடும் பாசிச மனநிலைக்கு இந்தச் சமூகம் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டது. மனித உரிமைப் பணிகளில் முன்னோடியாகக் கொள்ள வேண்டிய பல்வேறு செயல்பாடுகள் ஏஜிகே வினுடையவை. தனது இறுதிக்காலத்தில் தமிழர் தன்மானப் பேரவையிலும் காவல்துறை அடக்குமுறை, பொய் வழக்குகள் போன்றவற்றிற்காகப் போராடிய மனித உரிமைப்பணிகள் எண்ணிலடங்காதவை. இதன் மறுபுறம் அவரை வேறெந்த பணிகளையும் பெரியளவில் செய்யவிடாமல் முடக்கி வைத்தது எனலாம். அரசதிகாரத்துடன் போராடிப் போராடி வீழ்வதுதான் இங்கு போராளிகளுக்கு விதிக்கப்பட்டதாக இருக்கிறது.
தியாகு சொல்வதைப் போல பகைவனின் உள்ளங்கையைப் போன்ற சிறைச்சாலையில் இருந்துகொண்டு சங்கம் கட்டியதும் கையெழுத்து இதழ்கள் நடத்தியதும் அதன் மூலம் சிறைப்பட்டோர் மற்றும் காவலர்கள் உரிமைகளை நிலைநாட்டியதும் இந்திய அளவில் முன்னோடி மனித உரிமைப் பணிகளாகப் பார்க்கப்பட வேண்டியவை. ஏஜிகேயின் மனித உரிமைச் செயல்பாடுகளின் வழி உணரவேண்டிய படிப்பினைகள் பலவுண்டு. மேலும் இன்றைய மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்குப் பாடமாக அமையும் திறன் படைத்தவை. இச்சாதனை பரவலாகச் சென்றடையாதது வருத்தமான ஒன்று. இன்று சிறைவாசிகள் விடுதலைக்கான குரல்களில் மத, இன வேறுபாடுகள் இருப்பது கவலைக்குரியது. மனித உரிமை போன்ற ஜனநாயகச் செயல்பாடுகளில் சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளுக்கு என்றும் இடமிருக்கலாகாது என்பதை பறைசாற்றும் ஏஜிகேயின் பணிகள் மகத்தானவை.
ஈ
திராவிடர் கழகத்தை, “அறக்கட்டளையாகிவிட்ட, உடமை வர்க்க மனோபாவம் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரச்சார அமைப்பு”, என்றும் சி.பி.அய்., சி.பி.எம். ஆகிய கம்யூனிஸ்ட் கட்சிகளை, “பார்ப்பனர்களின் பிடியிலுள்ள உடமை வர்க்க மனோபாவம் ஊடுருவியுள்ள தொழிலாளர்கள் கட்சி”, (பக். 148, மடலுரையாடல்) என்றும் பின்னாளில் விமர்சிக்கும் ஏஜிகே சிறைவாழ்வுக்குப் பிந்தைய காலகட்டத்தின் பாதியை (1985-2000) இவ்விரு இயக்கங்களில் செலவிட்டிருக்கிறார்.
நீண்டகால சிறைவாழ்வு இடைவெளிக்குப் பிறகு (1969-1985) தான் இருந்த கட்சியில் மீண்டும் இணைந்து செயல்படுவது சிரமமான காரியம். புதிய சூழல்கள், புதிய தலைமுறைகள், உருவாகியுள்ள தலைமைகளுக்கு முந்தைய காலச் சூழல்கள் பற்றிய தெளிவு எவ்வாறு இருக்குமென்பதைக் கணிக்க இயலாது. மேலும் தேர்தல் பாதைகள், அரசியல் கூட்டணிகள் என்று அவ்வப்போது மாறும் சூழல்களில் கருத்தியல் பிடிப்புள்ளவர்களுக்கு ஒவ்வாமைப் போக்கு ஏற்படுவதும் உண்டு.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. (எ.கா.: தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வெண்மணி நினைவிடத்தில் அனைவருக்கும் அனுமதி போன்றவை) ஆனால் அன்றைய சூழலில் இருந்த கெட்டித்தட்டிப்போன நிலையும் ஏஜிகே அவ்வியக்கத்திலிருந்து விரைவாக வெளியேறும்படியாகிறது.
எனவே சி.பி.எம். கட்சியிலிருந்து விலகி திராவிட இயக்கம் சென்று சுமார் 13 ஆண்டுகள் செயல்படுகிறார். அவரது இறுதிக்கால வாழ்வில் இது மிகவும் நீண்டகாலம். தி.க. அமைப்பு, அறக்கட்டளை, ஆசிரியர் கி.வீரமணி என அனைத்தையும் காட்டமாக விமர்சிக்கும் பதிவுகள் பேரவை வெளியீடுகள் வழி காணக்கிடைக்கிறது.
இக்காலகட்டத்தில் அவரது இயக்கப்பணிகள் சார்ந்த தரவுகள் இல்லை. அவருடன் உடன் பணியாற்றிய தோழர் மு.இளங்கோவன் போன்றவர்கள்தான் இதுகுறித்து விரிவாக எழுத வேண்டும்.
உ
இறுதியாக, 2000 இல் உருவான புதிய சூழலுக்கேற்ப ‘தமிழ் தேசிய’ அரசியலுக்கு வந்தடைகிறார். ‘தமிழர் தன்மானப் பேரவை’ எனும் அமைப்பைக் கட்டுகிறார். ‘இணைமிகு தோழா!’ என்கிற விளி அவரது தோழமை உணர்வை மட்டுமல்லாமல் கருத்தியல் தெளிவு, அமைப்பாக்கம் போன்றவற்றை நமக்குச் சுட்டி நிற்கிறது.
மார்க்சிய, லெனினிய, மாவோயிய, பெரியாரிய இயக்கங்களின் உடைவுகளுக்குப் பஞ்சமில்லை. இதற்குக் கருத்தியல் முரண்பாட்டைவிட தனிநபர் அல்லது குழுவாதம், செயல்பாடுகள், புரிதல்கள் ஆகியவற்றை காரணமாகக் கூறலாம்.
தமிழ் தேசிய இயக்கங்களின் வளர்ச்சிப் போக்கு, கருத்தியல் உருவாக்கம் ஆகியவற்றில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் ஆகிய கருத்தியல் அடிப்படையிலிருந்து தமிழ் தேசியம் பேசுவோருக்கும் பிறருக்குமான வேறுபாடுகளைத் தெளிவாக அவதானிக்கவும் பிரித்தறியவும் முடியும்.
2009 இறுதிக்கட்ட ஈழப்போருக்குப் பிந்தைய தமிழ் தேசிய இயக்கங்களின் அபரிமித வளர்ச்சி, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டிச் செழிக்கும் ஒற்றை நோக்கம் கொண்டதாக மாறியுள்ளது. ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற கருத்தாக்கம் நீண்ட விவாதத்திற்குட்படுத்தப்பட்ட தமிழ்ச்சூழலில் இன்று தமிழ்த் தேசியம் பேசுவது புதிய பாணி (Style) ஆகியுள்ளது. மேலும் இதில் சாதியமும் பிறரை (Others) வெளியேற்றும் (Exclusive) அம்சங்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) தமிழ் தேசிய வரையறை ஒன்றை ஏஜிகே முன்மொழிகிறார். “அந்நிய, அண்டை இனங்களாயிருந்தால் தவிர எம்மதத்தைச் சேர்ந்தவராயினும் தமிழகத்திலுள்ளோர் தமிழர்களே. இதுவே, வரலாற்றுப் போக்கில் தமிழின அடையாளமாகும்”, (பக். 10, கருத்து – செயல் அறிக்கை) இந்த வரையறையிலிருந்து பார்ப்பனர்களை (ஆரியர்கள்) மட்டும் விலக்குகிறார். தேசியம் கற்பிதம் மட்டுமல்ல; பலவகைகளில் சிக்கலானதும் கூட.
தமிழ்த் தேசிய அரசியலில் பாசிசத் தன்மை நிறைந்த சொல்லாடல்கள், பெரியாரை அந்நியராகவும் தமிழ் விரோதியாகவும் நிறுத்தும் போக்கு, திராவிடக் கருத்தியல் குறித்த தலைகீழ் பார்வை, இந்துத்துவக் குரலை வேறு மொழியில் வெளிப்படுத்துதல் ஆகிய தன்மைகள் துலக்கம் பெறும் நிலையில் இவற்றிலிருந்து ஏஜிகே வேறுபடும் புள்ளிகளை இனங்காணுதல் அவசியம். இன்றைய மதவெறி அரசியலிலிருந்து சமூகத்தைக் காக்க இது தேவை.
ஆனால் இங்கு தமிழ்த் தேசிய அடையாள அரசியல் ஒருபடித்தானதாக இல்லை. மாறுபட்ட தமிழ் தேசியக் கருத்தியல் உள்ளவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசிய முன்னணி ஒன்றையும் கட்டுகிறார்கள். கருத்தியல் முரண்களால் அதுவும் தோல்வியில் முடிகிறது. கருத்தியல் தெளிவு, ஒருங்கிணைவு இல்லாத கொள்கைகளற்ற தமிழ்த் தேசியக் கூட்டிணைவுகள் தோல்வியில் முடிகின்றன. இதிலிருந்து யாரும் பாடங்கற்றதாகத் தெரியவில்லை. வெறும் தன்முனைப்பு உந்தித் தள்ளும் இடமாக இன்று தமிழ்த் தேசியக் களம் கிடக்கிறது.
வட்டார அளவில் உள்ளூர் தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற தமிழ்த் தேசியம் சாதி, வட்டாரம் போன்ற காரணிகளோடு முடங்கிப் போகிற அபாயமும் உண்டு. தன்னிலை அழிப்பு, சாதியழிப்பு போன்றவை தலித்தியச் செயல்பாட்டாளராகவும் ஏஜிகேவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. காலந்தோறும் ஒடுக்கப்பட்டோருக்காக பணி செய்தல், பெண்களுக்கு உரிய இடம் வழங்குதல் போன்றவை ஏஜிகே யின் சிறப்புத் தன்மைகளாக பார்க்க வேண்டியன. “மண்மானம் மீட்போம்! தன்மானம் காப்போம்! தன்மான வாழ்வே தலையாய வாழ்வு!”, என்றும் “பெண்மானம் மீட்போம்! இனமானம் காப்போம்! மனிதமான வாழ்வே மகத்தான வாழ்வு” என்பது வெற்று முழக்கங்களாக இல்லாமல் செயல்பாட்டிலும் இருந்திருக்கிறது. இது இன்றுள்ள பொதுவான தமிழ்த் தேசியப் போக்கிலிருந்து விலகல் தன்மையுடன் இருப்பது அவதானிக்கக் கூடியது.
பேரவை வெளியீடுகளான ‘சந்திப்போம்! சாதிப்போம்!! சக்தி பெறுவோம்!!!’ (2011) பேரவையின் மீதான காவல்துறை தாக்குதல்கள், வழக்குகள், மனுக்கள், அறிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ளது. காவல்துறையின் சட்டவிரோதக் காவல் கொலை, தொடர் தீ வைப்பு தொடர்பான பொய் வழக்குகளை பற்றி இவை பேசுகின்றன. ‘தவிர்ப்போம்! தடுப்போம்!! தாக்குவோம்!!!’ (2011) இயக்கப் பொறுப்பாளர் தடா ரவி மீதான குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் விவரங்களை உள்ளடக்கியிருக்கிறது. ‘துணிவு பெறுவோம்! துன்பம் ஏற்போம்!! துரோகம் களைவோம்!!!’ என்ற அடுத்த நூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேரவையின் பிளவை மையப்படுத்திய அந்நூல் வெளிவரவில்லை என்றே கருதுகிறேன். பொதுப்புத்தியில் படிந்துள்ள முன்முடிவுகள் காரணமாக இதன்மீது யாரும் உடனடியாகத் தீர்ப்பெழுதிவிட முடியும். ஆனால் ஏஜிகே மனித உரிமைச் செயல்பாடுகளின் ஆவணமாக இவை என்றும் நிலைத்து நிற்கக்கூடியவை.
இதன் மறுபுறத்தில் பேரவை தனது முழு ஆற்றலையும் காவல்துறை அத்துமீறல்கள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றில் செலவிட்டுள்ளது. இது ஏஜிகேவின் வாழ்வில் என்றும் மாறாமல் தொடரும் சூழல். பெரியாரியம் தொடங்கி தமிழ்த் தேசியம் ஈறாக இதன் தாக்கம் கிஞ்சித்தும் குறையவில்லை என்பதே வியப்பளிக்கக்கூடியது. அடித்தட்டு மக்களை கருத்தியல் ரீதியாக அணிதிரட்டுவது, போராடுவது ஆகியவற்றை ஆதிக்க சக்திகள் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதற்கும் இவை சான்றாக அமையும்.
இங்குள்ள சாதியச் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதைவிட ஈழப்பிரச்சினைக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதாக பாவனை செய்வது சாதிய, மதவாத சக்திகளுக்கு மிக இலகுவான செயலாக உள்ளது. தமிழ்த் தேசியர்களில் பலரும் இதற்கு விதிவிலக்கல்ல.
இத்தகைய தமிழ்ச் சூழலில் தன்னிலை அழிப்பு, சாதியைக் கடத்தல், ஆண்மை அழிதல், பெண்ணியம், சுயமரியாதை (தன்மானம்) போன்றவற்றைச் செயல்படுத்த, நடைமுறையில் கொண்டுவர நிறைய முன் தயாரிப்புகள் தேவைப்படும். கருத்தியல்கள், தொடர் போராட்டங்கள், இயக்கச் செயல்பாடுகள் வழி ஏஜிகே இவற்றை முன் நிபந்தனையாக்கி தமிழ்த் தேசியக் களத்தில், ஒரு குறுகிய வட்டத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க முனைந்திருக்கிறார். மத, மொழி, இன வெறியூட்டல்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இவரது நிலைப்பாடுகளின் வெற்றி-தோல்வி, சாதக-பாதகம் ஆகியவையும் எவ்விதம் செயலாகும் என்பதையும் காலம்தான் தீர்மானிக்கக் கூடும்.
(நவம்பர் 2020 இல் ‘பன்மை’ வெளியிட்ட ‘ஏ.ஜி.கே. எனும் போராளி’ என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்ற எனது கட்டுரை.)