தீண்டாமைச் சாதியத்தின் குறுக்குவெட்டு ஆய்வு

தீண்டாமைச் சாதியத்தின் குறுக்குவெட்டு ஆய்வு

மு.சிவகுருநாதன்

(தோழர் நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’ குறித்த அறிமுகப் பதிவு.)

                 பார்ப்பனர்களை  அரசியல், சமூகப் புலத்திலும் (எ.கா. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இட இதுக்கீடு – Economically Weaker Section – EWS) தத்துவ, கல்வியியல் புலங்களிலும் பாதிக்கப்பட்டோராக (victims) மாற்றும் (எ.கா. நண்பர் சீனிவாச ராமநுஜம் அவர்களின் சந்நியாசமும் தீண்டாமையும் (‘புலம்’ மற்றும் ‘மாற்று’ வெளியீடு), இந்து மதம்: ஒரு விசாரணை மற்றும் கோபால் குரு – சுந்தர் சருக்கையின் 8 கட்டுரைகள் – விரிசல் கண்ணாடி (எதிர் வெளியீடு) – மொழிபெயர்ப்பு) சமகாலச் சூழலில் தோழர் நக்கீரன் அவர்களின் இக்குறுநூல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.

     தீண்டாமையைத் தத்துவார்த்த விளக்கங்கள் மூலம் ஏதோ ஒருவகையில் நியாயப்படுத்தும் இவர்கள் சூழல் தீண்டாமை குறித்த என்ன விளக்கங்கள் சொல்வார்கள் என்பது தெரியவில்லை. இந்த இனவெறிக் கருத்தாக்கத்தை சூழல் மீதும் பாய்ச்சி அவற்றை மாசுபடுத்திய விதத்தை மிக நுண்மையாக இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. பார்த்தீனியம் எனும் முற்றுகைத் தாவரத்துடன் பார்ப்பனியத்தை அழகாக ஒப்பிட்டு முன்னுரையில் எழுதுகிறார் (பக்.06).

    தோழர் நக்கீரன் அவர்களின் ‘சூழலியல் சாதியம்’ என்னும் தலைப்பிலமைந்த உரை சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு பலரால் வரவேற்கப்பட்ட ஒன்றாக இருந்தது. அந்த உரையின் விரிவாக்கமே ‘சூழலும் சாதியும்’ ஆக இன்று நம் கைகளில் தவழ்கிறது. வழக்கமான அவரது நூல்களைப்போல காகம் – குருவிக்கதையில் தொடங்கி, பார்ப்பனியத்தால் ஏற்பட்ட சூழல் மாசுக்களைப் பட்டியலிடுகிறது.

     “இப்பல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்று வேற்றுக்கிரகவாசிகள் போல பலர் அடிக்கடி உளறுவதுண்டு. சாதியும் தீண்டாமையும் இங்கு எல்லாமாக இருக்கிறது என்பதே கள நிலவரம். இந்தக் கருத்துருவம் மக்களின் மனதில் அவ்வாறு திணிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு என்பதெல்லாம் வெறும் திசைகள் மட்டுமல்ல; அதற்குள்ளும் சாதியும் தீண்டாமையும் ஒதுக்கலும் உள்ளன என்பதை இந்நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

    இரு பகுதிகளாக 16 சிறு கட்டுரைகளை உள்ளடக்க இந்நூல் மிக எளிமையாக சூழலியலில் படிந்த சாதிக்கறைகளை அம்பலப்படுத்துகிறது. மிகச்சுருக்கமான இந்நூல் விரிவாக வாசிக்கவும் ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டக்கூடியதாக அமைந்துள்ளது.  

     மனித உடல் உறுப்புகளில்கூட இத்தகையத் தீண்டாமைகள் உண்டு. இடது புறமும் வலது புறமும் ஒன்றல்ல; இடங்கை, வலங்கைச் சாதிப் பிரிவினைகளை நாமறிவோம். சிவன் தனது இடப்புறத்தை உமையாளுக்கு அளித்து உமையொருபாகனாவதும் கண்ணகி இடமுலை திருகி மதுரையை எரிப்பதும் இதனை உணரக்கூடியதாக உள்ளது. வலம் வருதல்தான் மரபாம். இடம் வருதல் மரபல்ல; சாதி. இடமுலை திருகி மும்முறை வலம் வருகிறார் கண்ணகி! வலக்கை தூய்மையானதாகவும் இடக்கை அசுத்தமானதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளதையும் அறியலாம்.

     விலங்குகளின் உடல் உறுப்புகளும் இவ்வாறு பாகுபடுத்தப்பட்டு இருக்கின்றன. பசுவின் மூத்திரம் புனிதமாகக் கருதப்பட்டபோதிலும் அதனுடைய வாய் தீட்டானது; மாறாக ஆடு, குதிரை ஆகியவற்றின் வாய் சுத்தமானது என வேத சாத்திரங்கள் வரையறுக்கின்றன.

    உடல் உறுப்புகள், தாவரங்கள், விலங்குகள், இயற்கை, உணவு, திசை, வண்ணங்கள் என எவற்றையும் பார்ப்பனியத்தின் கொடிய கரங்கள் விட்டுவைக்கவில்லை. இவற்றை அறிந்தும் மாறாமலிருப்பது நியாயமா? இருபிறப்பாளர்கள் என்ற மனநோயிலிருந்து விடுபட்டு சாதிநீக்கம் செய்துகொள்ள வேண்டிய அவசியத்தை நூலாசிரியர் தெளிவாக்குகிறார். ஒருபிறப்பாளர்களான தமிழர்களுக்கு இந்தத் தேவையற்ற சுமை எதற்கு?

நூல் விவரங்கள்:

சூழலும் சாதியும் – நக்கீரன்

பக்கங்கள்: 88

விலை: ₹ 80

வெளியீடு:

காடோடி பதிப்பகம்,

6, விகேஎன் நகர்,

நன்னிலம் – 610105,

திருவாரூர் – மாவட்டம்.

நூல்களை வாங்க: வாட்ஸ் அப் – 8072730977

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *