முழுமையான அரசியல் உரையாடல்

முழுமையான அரசியல் உரையாடல்
செல்வ புவியரசன்
       ( ஜூன் 05, 2021 இந்து தமிழ் திசை நூல்வெளியில் வெளியான விமர்சனம்)

      இளைய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய அரசியல் கட்டுரையாளர்களில் ஒருவர் இரா.மோகன்ராஜன். எழுத்தை ஓர் அரசியல் செயல்பாடாகவே முன்னிலைப்படுத்துபவர். காவிரி கடைமடைப் பகுதியான முத்துப்பேட்டையில் மருத்துவர் ச.மருதுதுரை முன்னெடுத்த ‘நிலவொளி’ இயக்கத்திலிருந்து எழுத்துலகுக்கு அறிமுகமானவர். அடிப்படையில் கவிஞரும் சிறுகதை எழுத்தாளருமான அவர், ‘உயிர் எழுத்து’, ‘காக்கைச் சிறகினிலே’ உள்ளிட்ட இதழ்களில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகளிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இரண்டு தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார் ‘பன்மை’ மு.சிவகுருநாதன். ஒவ்வொரு தொகுப்பிலும் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

     ‘கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்’ என்ற தலைப்பிலான கட்டுரை, சின்னக்குத்தூசி அறக்கட்டளையின் கட்டுரைக்கான சிறப்புப் பரிசைப் பெற்றது. உலகெங்கும் போர்க்களத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைப் போராளிகளைப் பற்றிய அந்தக் கட்டுரையின் சித்தரிப்புகள் கண்களில் நீர் தளும்பச் செய்பவை. பொம்மைகள் வைத்திருக்க வேண்டிய கரங்களில் துப்பாக்கியைத் திணிக்கும் பயங்கரவாதத்தை, அதைப் பின்னின்று இயக்கும் வல்லாதிக்கத்தைச் சாடும் இந்தக் கட்டுரையானது வர்க்க பேதங்களும்கூட அதன் பின்னணிக் காரணமாக இருப்பதைச் சொல்கிறது. போர்ச்சூழலில் பெற்றோரை இழந்து உணவுக்கு அலைவதைக் காட்டிலும் போர்க் குழுக்களிடம் சரணடைவதே அந்தக் குழந்தைகளின் முதல் தேர்வாகிவிடுவது கொடுமையானது. குழந்தைகளைப் போருக்கு அனுப்பிய சங்க இலக்கியங்களின் தமிழ்ப் பெருமிதங்களை நினைவூட்டியவாறே, அரியணை ஏறிய சிறார்களுக்குப் பதிலாக அவர்களது தளபதிகள் போர்க்களம் புகுந்த முரணையும் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுவது முக்கியமானது.

     அரசியல்வெளியில் நிலவும் சகிப்பின்மைக்கு எதிராகவும், பன்மைத்துவத்துக்கு ஆதரவாகவும் ஒலிக்கும் குரலாகவே இரா.மோகன்ராஜனின் எழுத்துகளைப் பார்க்க முடிகிறது. தேசத்துக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவர்கள் என்று முத்திரை குத்துவதும் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வழக்குகள் தொடங்கி உயிர்ப்பலிகள் வரைக்கும் அவற்றின் பட்டியல் நீள்கின்றன. ஆனால், மோகன்ராஜனின் நம்பிக்கையோ ‘சொற்கள் அழிவதில்லை; அழிக்கப்பட்டாலும் தொடர்ந்து உயிர்த்துக்கொண்டேதான் இருக்கும்’ என்று திடம்கொள்கிறது. அவரது எழுத்துகளில் வெடிக்கும் கோபமும் வெளிப்படும் எள்ளலும் அரசியல் எழுத்துகளுக்கான அவசியங்கள் என்பதாக அல்லாமல், அரசியல் அறத்துக்கான வலியுறுத்தல்களாகவே அமைந்துள்ளன.

      இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே உருவான கருத்தியல் மோதல்கள் சுதந்திரம் பெற்ற பிறகு இன்னும் தீவிரமாகி, அதன் கோரநிலையைத் தற்போது எய்தியிருப்பதை வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டுகின்றன இந்தக் கட்டுரைகள். தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னால் அரசியல் வியூகங்கள் மட்டுமின்றி சமூக, பண்பாட்டுக் கூறுகளும் மறைந்து நிற்பதை வெளிச்சமிடுகின்றன. சாதியாகவும் சமயமாகவும் பிளவுபடுத்தும் முயற்சிகள் வாக்குகளை ஒன்றுதிரட்டும் உத்தி மட்டுமல்ல; மக்களை எப்போதும் பதற்றத்தில் வைத்திருக்கும் திட்டமும்கூட என்பதை உணர்த்துகின்றன. அந்தப் பதற்றங்களே அதிகாரத்தை நோக்கிய கேள்விகளை மௌனிக்கச் செய்துவிடுகின்றன.

     மிக முக்கியமாக, தேர்தல் வெற்றிகளை கருத்தியலின் வெற்றியாகப் பொருட்படுத்த தேவையில்லை என்ற புரிதலையும் இந்தக் கட்டுரைகள் உருவாக்க முயல்கின்றன. வயிற்றுப் பசிக்குச் சோறிட வக்கற்று நிற்கும்போது, நமது நம்பிக்கைகளுக்கு என்னதான் அர்த்தமிருக்கிறது என்ற கேள்வியை அழுத்தமாக மீண்டும் மீண்டும் எழுப்புகின்றன. கட்சிகள் தமக்கிடையே வெவ்வேறுபட்ட கருத்தியலை முன்னிறுத்தினாலும், உலக அளவிலான முதலீட்டியத்துக்கு நிபந்தனைகளற்ற ஆதரவளிக்கத் தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

     வரலாற்றைப் பேசாமல், பொருளாதாரத்தைக் கணக்கிலெடுக்காமல், பண்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் எந்தவொரு அரசியல் உரையாடலும் முழுமை பெற முடியாது. இந்த இரண்டு தொகுப்புகளில் அடங்கிய கட்டுரைகளும் அத்தகையதொரு விரிவான உரையாடலையே முன்வைக்கின்றன. தலைவர்களையும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளையும் மட்டும் விமர்சனத்துக்குள்ளாக்காமல் அந்நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கும் இந்திய வரலாற்றின் பக்கங்களையும் நமக்குப் புரட்டிக் காட்டுகின்றன.

கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும்
எழுதுகோலைக் கொல்லும் அரசியல்
இரா.மோகன்ராஜன்,
பன்மை வெளியீடு
மொத்த விலை: ரூ.340; 
தொடர்புக்கு: 98424 02010

நன்றிகள்: செல்வ புவியரசன் & இந்து தமிழ் திசை
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *