தமிழகக் கல்வியின் அரசியலும் எதிர்காலமும்

தமிழகக் கல்வியின் அரசியலும் எதிர்காலமும்

மு.சிவகுருநாதன்

(பேசும் புதிய சக்தி மாத இதழ் ஜூலை 2021 இல் வெளியான கட்டுரை.)

       கொரோனாப் பெருந்தொற்று ஒட்டுமொத்த மனித வாழ்க்கையைக் குலைத்துப் போட்டுள்ளது. இந்தச் சூழலையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள ஒன்றிய அரசு ‘கார்ப்பரேட்’களுக்கு தொடர் சலுகைகள், தடுப்பூசி தயாரிப்பில் இரு நிறுவனங்களின் ஏகபோகம், குடியுரிமை சட்டங்கள், தேசியக் கல்விக் கொள்கை 2020 அமலாக்கம் போன்றவற்றை சந்தடி சாக்கில் நடைமுறைப்படுத்துகிறது. ஒன்றிய அரசின் கல்வி வாரியத்தின் (CBSE) கீழ் நடைபெறும் +2 தேர்வுகளை ரத்து செய்வதை பிரதமர் மோடி மிகப்பெரியக் கொண்டாட்டமாக அறிவிப்பதன் பின்புலத்தை இப்படித்தான் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பாஜக ஆளும் மாநிலங்கள் குஜராத், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், கர்நாடகம் போன்றவை ரத்து செய்துள்ளன. மகாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதே முடிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவெனச் சொல்லப்பட்டாலும்  இதன் பின்னால் உள்ள  ஒன்றிய அரசின் சதிவலை அவதானிக்கப் படவேண்டியதாகும்.

    ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக்கொள்கை 2020 இன் படி உயர்கல்விச் சேர்க்கைக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்த தேசியத் தேர்வு முகமை (NTA – National Testing Agency) அமைக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ மட்டுமல்லாது பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளையும் மூலம் இதன் பிடிக்குள் கொண்டுவரத் திட்டமிடுகின்றனர். கொரோனாப் பெருந்தொற்று மற்றும் +2 பொதுத்தேர்வு ரத்து ஆகிய காரணங்களைக் கொண்டு இவ்வாண்டே இந்த நுழைவுத்தேர்வுகளை அமல்படுத்த துடிக்கிறது ஒன்றிய அரசு.

      பொதுப்பட்டியலிருக்கும் கல்விக்கு ஒன்றிய அரசு மட்டும் எப்படி கொள்கை வகுக்க இயலும்? நாடெங்கும் விவாதம் நடத்தப்பட்டதாக போலியான கணக்குக் காட்டப்படுகிறது. நாடாளுமன்ற விவாதங்கள் ஏதுமின்றி எல்லாம் கொல்லைப்புறமாக அரங்கேறுகின்றன. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவரப்படுதலும் மாநிலங்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்படுவதும் அவசியம்.

     என்டிஏ நடத்தும் நுழைவுத் தேர்வுகள் எதனடிப்படையில் இருக்கும்? ‘நீட்’டைப் போல சிபிஎஸ்இ கல்வி வாரியத்தை அடிப்படையாகவே அமையும். உயர்தரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையும் கொண்ட தேர்வுகள் என்பதெல்லாம் வெறும் வாய்வீச்சுகளே. ‘நீட்’ அனுபவம் நமக்கு கள நிலவரத்தை உணர்த்துகின்றன. ஒற்றை  இந்தியா, ஒற்றைக் கல்வித்திட்டம் என்பதாக இவர்களது பாசிசம் வளர்த்தெடுக்கப்படுகிறது. 

      சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஒன்றும் உலகத்தரமானது இல்லை. ‘நீட்’ பூச்சாண்டியைக் காட்டி அந்தத் தரத்திற்கேற்ப நமது மாநிலப் பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு  சிபிஎஸ்இ வடிவத்தில் இருக்கின்றபடியால் அதுவே முதன்மைப்படுத்தப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதவியல் ஆகிய பாடங்களில் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும் இயற்பியல், கணிதவியல போன்றபோன்ற பாடங்களில் ஆந்திரக் கல்வி வாரிய மாணவர்களும்  சிபிஎஸ்இ மாணவர்களை விட முதன்மையாக இருப்பது அனில் குமார், டிபாகர் சட்டர்ஜி ஆகிய அறிஞர்களின் ஆய்வு முடிவாகும்.

      தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NCERT) தயாரிக்கும் பாடங்கள் இந்திய மொழிகளில் வெளியிடப்படும் என்று சொல்வது, மாநிலக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SCERT), மாநிலக் கல்வி வாரியங்கள் ஆகியவற்றை முற்றிலும் முடக்கி, கல்வியை ஒன்றிய அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாகும்.

      தமிழ்நாடு அரசு +2 தேர்வுகளை ரத்துசெய்தவுடன் உயர்கல்வியில் நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருப்பது சற்று ஆறுதல் தருவது. ஆனால் ஒன்றிய அரசின் நுழைவுத்தேர்வுகள் (நீட், ஜேஇஇ போன்றவை) தொடரும். தமிழகத்தில ‘நீட்’ தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீண்ட சட்டப்போராட்டம் நடத்தப்பட வேண்டியுள்ளது. உடனே ‘நீட்’ ரத்தாகும் என்று சொல்ல இயலாது. 

    இவ்வாண்டு (2020-2021)  தேர்வு ரத்து செய்யப்பட்ட +2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் இனங்களைக் கண்டறியும் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் 10 மற்றும் +1 வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள், +2 வகுப்பில் அளிக்கப்பட்ட செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், வருகை நாள்கள் ஆகியவற்றைக் கொண்டு மதிப்பெண்களை  நிர்ணயம் செய்யப்போவதாகச் செய்திகள் வருகின்றன. 

      சென்ற கல்வியாண்டில் (2019-2020) 10 வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும் +1 வகுப்பில் இரு பாடங்களுக்கும்  காலாண்டு, அரையாண்டுத்தேர்வு மதிப்பெண்கள் (80%) வருகை நாள்கள் (20%) என்கிற அளவில் மதிப்பெண்கள்  வழங்கப்பட்டன. காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் இல்லாமலும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. இதனால் பள்ளிக்குப் பள்ளி மதிப்பெண் கணக்கீட்டில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாயினர். வருகை நாள்களுக்கு 20% மதிப்பெண்கள் வழங்குவது மிகவும் அபத்தம். உடல்நிலைக் குறைவால் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களை இது பெரிதும்  பாதித்தது. 

       சென்ற ஆட்சியில் இவ்வாண்டு 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்தபின் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளை ஆராயக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் நிலைப்பாடு என்னவென்று இன்றுவரைத் தெரியவில்லை. 

         தற்போது +1 சேர்க்கைக்கு ஒரே பாடப்பிரிவை பலர் கோரினால் அவர்களிடையே தேர்வு நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு, பலத்த எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இனியாவது பள்ளிக் கல்வித்துறை முன்யோசனையின்றி முடிவுகள் எடுப்பதைக் கைவிட வேண்டும். இதனடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு  மதிப்பெண்களின்றி வெறும் தேர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படலாம் என்று உணரமுடிகிறது. உயர்கல்வியில் நுழைவுத்தேர்வு மறுப்பும் பள்ளிக்கல்வியில் நுழைவுத்தேர்வு என இரண்டக நிலையை அரசு கடைப்பிடிப்பது சரியல்ல என்பதால் இதைக் கைவிடுவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. கல்வித்துறைகளில் முந்தைய ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் வேறுபாடு இல்லாத நிலை மாறவேண்டும். இவற்றிலுள்ள  பழமைவாத ஆலோசகர்கள் சற்று ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதே இந்நிலையில் சொல்லத் தோன்றுகிறது.

    ஏற்கனவே +1 சேர்க்கையில் இடஒதுக்கீடு போன்ற அம்சங்களை முறையாகக் கடைபிடிக்காமல் 450க்கு மேல்  பெற்றால் கணிதவியல் பாடப்பிரிவு என்ற நிலை தொடர்ந்து வந்தது. இப்போது அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்ட  நுழைவுத்தேர்வு எப்படி இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் முந்தைய 8,9 வகுப்புகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து திட்டம் வகுக்கப்பட வேண்டும். 9 ஆம் வகுப்பிற்கு இறுதித்தேர்வு நடத்தப்படவில்லை. அவ்வகுப்பின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் பள்ளிகள் முறைகேடுகள் செய்ய வாய்ப்புண்டு. எனவே 8,9 வகுப்புகளையும் இணைத்து மதிப்பெண்கள் வழங்கினால் கொஞ்சமாவது சரியாக இருக்கும்.

     +2 மதிப்பெண்கள் வழங்க  சிபிஎஸ்இ யின் அளவுகோல்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்கிறார்கள். அடிப்படையில் அவர்களது மதிப்பீட்டு முறையும் வடிவங்களும் மாறுபடுகின்றன. நன்கு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு (CCE) முறைகளைப் பின்பற்றாமல்  வெறும் பொதுத்தேர்வுகள் அல்லது எந்திரத்தனமான கொள்குறி வினாக்கள் (Objective types) என்பதாக நமது மதிப்பீட்டு முறைகள் சுருங்கி விடுகின்றன. வெறும் மனப்பாடத்திறனைத் தவிர்த்து மாணவர்களது முழுமை ஆளுமையை வெளிக்கொணர்வதாக இவை இல்லை.

       தமிழ்நாட்டின் சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தில் 1 முதல் 9 வகுப்பு முடிய ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு (CCE) முறைகள் அமலாக்கப்பட்டன. இவற்றிலுள்ள குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக இவற்றை அகற்றுவதிலேயே ஆட்சியாளர்களும் அலுவலர்களும் குறியாக உள்ளனர். 5, 8 வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வும் CCE முறையைக் கிடப்பில் போட வித்திட்டன.  இம்முறை மாணவர்களை விட ஆசிரியர்களுக்குக் கடினமானது என்பதும் ஒரு காரணம். இதற்கான Rubrics கூறுகள் சிறப்பானத் திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்குக் கடின உழைப்பு வேண்டும். நகலெடுக்கும் ‘நோட்ஸ்’ கலாச்சாரத்தில் இதை எப்படி எதிர்பார்க்க இயலும்?

    செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence), DIKSHA (Digital Infrastructure for  Knowledge SHAring), டிஜிட்டல் வகுப்பறைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், திறன்பேசிகள் என்றெல்லாம் பேசும் கல்விக் கொள்கை இன்னும் அடித்தட்டு, தலித் மற்றும் பழங்குடிக் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக இருப்பது பற்றிய எவ்வித அசைவையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      2025க்குள் கற்பவர்களில் 50% பேர் நடுநிலை மற்றும் உயர்நிலைக்கல்வி அளவில் தொழிற்கல்வி பயிற்சி பெறுவார்கள் என ‘நவீனக் குலக்கல்வித் திட்ட’த்தை முன்மொழிகிறது. கொரோனாப் பெருந்தொற்று அவர்களை முன்னதாகவே பள்ளியைவிட்டு வெளியேற்றிக் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது.  

     கொரோனாப் பெருந்தொற்றும் அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு உள்ளிட்டப் பொருளாதாரப் பிரச்சினைகள்  இக்குழந்தைகளை மேலும் இன்னல்களுக்குள் ஆட்படுத்தியுள்ளன. குழந்தைத் திருமணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையும் முன்பைவிட அதிகரித்துள்ளது. இதற்கான ஆய்வுகளோ, புள்ளிவிவரங்களோ அரசிடமும் பள்ளிக் கல்வித்துறையிடமும் இல்லை. வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் சத்துணவு வழஙகப்படாததால் ஏற்பட்ட ஊட்டச்சத்துப் பாதிப்புகள் மிக அதிகம். இவை சமூகத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. முட்டை, உலர்தானியங்களின் விநியோகம் முறையானக் கண்காணிப்புக்கு உள்ளாகவில்லை. 

     சுயநிதிப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓரளவு இணைய வகுப்பு மற்றும் வீடுகளில் சத்துள்ள உணவிற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு முற்றிலும் இணைய வகுப்புகள் இல்லை; ஒரே வாய்ப்பு கல்வித் தொலைக்காட்சி மட்டுமே. இது உரையாடலுக்குச் சாத்தியமில்லாத ஒருவழிப்பாதை. சத்துணவு பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களது  வாழ்வு மற்றும் கல்வியின் எதிர்காலம் ஒருசேர முடங்கியுள்ளது.

    அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு பள்ளி ஒருவகையில் பாதுகாப்பிடமாகவும் இருக்கிறது. பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் சூழலில் அக்குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரிக்கின்றன. உரிய கண்காணிப்பு இல்லாத நிலையில் தவறானப் பழக்கங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பிருக்கிறது.

    பள்ளிகளைத் திறக்க இயலாதப் பெருந்தொற்றுச் சூழலில் குழந்தைகளின் வசிப்பிடங்களில் சில மாணவர்கள் பங்குபெறும் நுண் வகுப்பறைத் திட்டத்தை எழுத்தாளர் விழியன் போன்றோர் பரிந்துரை செய்தனர். திண்டிவனம் பகுதியில் கல்வியாளர் பேரா.பா.கல்யாணி அவர்கள் தமது தோழர்களுடன் சத்தான மதிய உணவுடன் இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளார். ஆங்காங்கு தனிநபர்கள் சார்ந்து இம்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அரசும் கல்வித்துறையும் இந்த நோக்கில் யோசிக்கவே இல்லை. பாடநூல்கள், குறிப்பேடுகள், பயிற்சி ஏடுகள் ஆகியவற்றை அளித்துவிட்டால் போதும் என்ற மனநிலைக்கு அரசும் கல்வித்துறையும் வந்துவிட்டன.  

    அரசின் கரிசனம் முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகளை நோக்கியே உள்ளது. பிற குழந்தைகளின் கல்வி, சமூக மற்றும் உளவியல் அம்சங்களைக் கண்டுகொள்ள நிலை இன்றையக் கல்வியின் பேரவலமாக இருக்கிறது. இதனால் சமூகம் பொதுத்தேர்வுகள், மதிப்பெண்கள் பின்னால் ஓடிக்கொண்டுள்ளது.  

    வசதி படைத்த மற்றும் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் ஆன்லைன் வகுப்பு என்பதும் சாபக்கேடுதான். இது வகுப்பறைக்கான மாற்று அல்ல. மேலும் குழந்தைகளுக்கு அதிக நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்துவது உடல் மற்றும் உளவியல் ரீதியானப் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. இணையவெளிக் கற்றலின் வன்முறைகளுக்கும் அதன் தொடர்ச்சியான பாலியல் கொடுமைகளுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.   

     இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள்தான் சரியான நிர்வாகத்தை வழங்கமுடியும்  என்றொரு கற்பிதம் காலனித்துவ காலத்திலிருந்தே நிலவி வருகிறது. பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பணியிடம்  ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு ஆணையர் பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது. இதுவும் ஒன்றிய அரசின் மையப்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் ஓர் அம்சமே. அதிகாரங்களைக் குவிப்பதன் வாயிலாக நிர்வாகம் சீரடைவதற்கு மாறாகக்  சீர்கேடுகளும் சர்வாதிகார ஆதிக்கமும் மேலோங்கும்.

     பள்ளிக்கல்வி என்பது பிறதுறைகள் போன்றதல்ல. இது பெரும்பாலும் குழந்தைகள் பங்குபெறும் ஒரு துறை. இங்கு எந்தநிலையிலும் சர்வாதிகாரப் போக்கிற்கு இடமில்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர் பள்ளிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் (ஐ.ஏ.எஸ்.) மற்றும் தொடர்புடைய துறைகளின் கட்டுப்பாட்டில்தானே இயங்குகிறது? இப்பள்ளிகள் ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளிகளைவிட மிகமோசமாகவும் சீர்கேட்டுடனும் இயங்கவும், அக்குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நிதியும் பொருள்களும் வழியிலேயே களவாடப் படுவதற்கு யார் காரணம்?  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மட்டும் நம்பியிருப்பது சில நேங்களில் கேடாகவும் முடியும் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. எனவே இப்பள்ளிகள் உரிய அலுவலர்களைக் கொண்டு பள்ளிக்கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும். அடித்தட்டுக் குழந்தைகளின் உரிமைகள் உறுதி செய்யப்படுதல் அவசியம். மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் இச்சூழலில் உரிய கவனம் பெறுவதில்லை.

     பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் நம்பி நமது குழந்தைகளின் உடல், மன நலத்தைப் பெருமளவு பாதிக்க வைத்துள்ளோம். இன்று 10, +1, +2 பொதுத்தேர்வுகள் ரத்து ஆகியவற்றால் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் உருவாகியிருக்கும் உளவியல் சிக்கல்கள், பதற்றங்களுக்கு  இதுவே முதற்காரணமாகும். 

      மதிப்பீட்டு முறைகளைச் சீரமைப்பதும் அதைக் கண்காணிப்பதும் முதன்மைத் தேவையாக உள்ளது. இப்போதுள்ள தேர்வுகளுக்கு மாற்றாக நுழைவுத்தேர்வுகள் அல்லது போட்டித்தேர்வுகள் அடிப்படையில் கொள்குறி வகைத்தேர்வு (Objective types) மட்டுமே சர்வரோக நிவாரணியாகச் சொல்லப்படுவது படு அபத்தம். 

      தற்போதுள்ள முறையில் +1, +2 வகுப்புகளில்  மொழி மற்றும் கலைப்பாடங்களுக்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்பட்டது சற்று முன்னோக்கியச் செயல்பாடு எனலாம். ஆனால் இந்த மதிப்பெண்களை 9, 10 வகுப்புகளுக்கு வழங்க மறுப்பது வியப்பிற்குரியது. 1 முதல் 8 முடிய CCE மதிப்பீட்டு முறை மேம்படுத்தப்பட வேண்டும். இது அனைத்து வகுப்புகளுக்கும் தொடரவேண்டும். இன்றைய 10+2 கல்விமுறை 5+3+3+4 என்ற புதிய முறைக்கும் பொது 3,5,8 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்ற வன்முறையும் கல்வியை எங்குக் கொண்டுச் சேர்க்கும் என்பதை எளிதில் அனுமானிக்கலாம்.

   +2 பொதுத்தேர்வு எளிமையாக இருக்க வேண்டும். இப்போது அவர்கள் எழுதும் 70, 90 மதிப்பெண்களில் 50% அளவில் அமையலாம்.  3:15 மணி நேரத் தேர்வு நேரமும் பாதியாகக் குறையும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டன. பெரும்பான்மையினர் தேர்வு வேண்டும் என்று கோரிய நிலையில் அரசு மருத்துவக்குழுவினரின் பரிந்துரையை ஏற்றுத் தேர்வை ரத்து செய்திருப்பதாகத் தோன்றுகிறது. தொற்றுப்பரவல், குழந்தைகளின் உயிர் சார்ந்த முடிவாக இதை அணுக வேண்டியுள்ளது. இருப்பினும் காலம்தாழ்த்தி தேர்வு நடத்தலாம் என்கிற பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது.   

       அகமதிப்பீடு, செய்முறை மற்றும் பிற திறன்களுக்கு 50%ம் எழுத்துத்தேர்விற்கு 50% இருக்குமளவில் வருங்காலத் தேர்வுகள் அமைவது அவசியம். மனப்படத் தேர்வுகளிலிருந்து ஓரளவு விடுதலையையும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரின் மன உளைச்சலையும் குறைப்பதாக இது அமையும். 3:15 மணி நேரத் தேர்வுகள் என்பவை குழந்தைகளின் மீது ஏவப்படும் வன்முறையன்றி வேறில்லை. இதற்கு எவ்வித சமாதானமும் செல்லுபடியாகாது. மொழி, கலை. அறிவியல் எந்தப் பாடமானாலும் இவ்வாறே அமையலாம். 

    ஆன்லைன் வகுப்புகள், இணைய வசதிகள்  இன்றி சுமார் 4 மாதங்கள் மட்டும் பயின்ற அரசுப்பள்ளி மாணவர்களையும்  தனியார் சுயநிதிப்பள்ளி மாணவர்களையும்  ஒரே தட்டில் வைத்து  அளவிட இயலாது. எனவே மருத்துவப் படிப்புகளுக்கு 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டதைப்போல,  இன்னும் கூடுதலாக  25% அல்லது அரசுப்பள்ளி மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப உயர்கல்வியில் ஒதுக்கீடு செய்வது கோவிட்-19 காலத்தின் கட்டாயமாகும்.

      +1 வகுப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கணினி வழங்கப்பட்டிருப்பினும் இணைய வகுப்புகள் ஏன் சாத்தியமாகவில்லை? அவை உடனே விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் அதன் பின்னாலுள்ள சமூக, பொருளாதாரக் காரணங்களும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் செயல்படுத்துவதன் கூடவே அவற்றை இறுதிவரை கண்காணிப்பதும் அவசியம்.

     மனப்பாடத்திறன்கள் அல்லது எந்திரமயமான கொள்குறி வினாக்களுக்கு மட்டும் பதிலளிக்கும் திறன் என்பதிலிருந்து மாறுபட்டு புதிய மதிப்பீட்டு முறைகள், அளவுகோல்கள் ஏற்படுத்த வேண்டும். ஒப்பீட்டளவில் பிற பெரிய மாநிலங்களைவிட கல்வியில் முன்னேறியுள்ள தமிழ்நாடு கோவிட்-19 சூழலில் மாணவர்களின் பெருமளவிலான இடைநிற்றலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மொத்த சேர்க்கை அளவீடு, கல்வி முடித்து வெளியேறும்  விழுக்காடு  போன்றவற்றில் முன்னணியில் இருக்கும் நாம் வருங்காலத்தில் இவற்றில் பெரும் சரிவைச் சந்திக்க நேரிடும். தேசியக் கல்விக் கொள்கையின் விளைவுகளை கொரோனா பெருந்தொற்று விரைவுப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

    இதற்கென திட்டங்களும் செயல்பாடுகளும் முடுக்கிவிடப்பட வேண்டும். செய்யவேண்டிய பணிகளும் கடக்க வேண்டிய தொலைவும் மிக அதிகம். இப்பாதையில் தேசியக் கல்விக்கொள்கை போன்ற தடைக்கற்களைச் சமாளித்தாக வேண்டும். மொத்தத்தில் தமிழ்நாட்டிற்கென தனிக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதும் அதன் வழியில் பயணிப்பதும் முதன்மையானது.

நன்றிகள்: பேசும் புதிய சக்தி – ஜூலை 2021

ஆசிரியர்: ஜெயகாந்தன்; பொறுப்பாசிரியர்: எஸ்.செந்தில்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *