ஆச்சரியப்பட வைக்கும் புத்தகங்கள்!

ஆச்சரியப்பட வைக்கும் புத்தகங்கள்!

இனியன்

       சில புத்தகங்கள் அழ வைக்கும், சில புத்தகங்கள் ஆறுதல் தரும், சில புத்தகங்கள் கொண்டாட வைக்கும், சில புத்தகங்கள் சிந்திக்க வைக்கும், வெகுசில புத்தகங்கள் சிரிக்க வைக்கும், அவற்றிலும் வெகுசில புத்தகங்களே வெகுவாக ஆச்சரியப் படவைத்து அதிலிருந்து மீள்வதற்கு காலங்கள் எடுத்துக் கொள்ளும். சமீபத்தில் அப்படியாக ஆச்சரியப்பட வைத்தப் புத்தகங்கள் தான் ஆசிரியர் மு.சிவகுருநாதன் அவர்கள் எழுதிய ‘கல்விக் குழப்பங்கள்’ மற்றும் ‘கல்வி அபத்தங்கள்’.

     கல்வி இங்கு என்னவாக இருக்கிறது என்பதெல்லாம் தொடர் உரையாடல்களின் மூலம் நாம் அனைவரும் தெளிவு பெற வேண்டிய ஒன்று. ஆனால் அத்தெளிவிற்கு முன்பாக அது எவ்வளவு அபத்தங்களும், பிழைகளோடும் இன்றைக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் தெரிந்து, தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

     எனது மூன்றாம் வகுப்பிலோ நான்காம் வகுப்பிலோ எனத் தெரியவில்லை. படத்துடன் கூடியப் பாடம் ஒன்று வரும். ஒரு ஏரியின் படம் வரைந்து அதில் ஒருபுறத்தில் சிலர் குளிப்பர், சிலர் துவைப்பர், சிலர் கால் கழுவிக் கொண்டிருப்பர், சிலர் மாடு குளிப்பாட்டிக் கொண்டிருப்பர், அதே குளத்தில்தான் குடிக்கவும் தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பர். அந்தப் படத்தை வைத்து பாடம் எடுக்கும் போது இப்படியாக அனைத்திற்கும் ஒரே நீர்நிலையை பயன்படுத்தக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்துவதால்தான் பெருநோய்கள் வருகிறது. அதனால் வீட்டிற்குள் வரும் குழாய் நீரைப் பயன்படுத்துவதே நல்ல ஆரோக்கியமான விசயம் என்றெல்லாம் பாடம் எடுத்திருகிறார்கள் ஆசிரியர்கள்.

    ஆனால் இம்மாதிரியானதாகவா நாம் நீர் நிலைகளை பயன்படுத்தி வந்தோம்? நிச்சயம் கிடையாது. இங்கிருந்தக் கட்டமைப்பில் சில பயன்பாட்டுகளுக்கென்று தனித்தனியாகத்தான் நீர்நிலைகள் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக குடிநீர் நிலைகளில் மற்ற எந்தப் பயன்பாடும் பெரும்பாலும் இல்லாமல் இருந்திருக்கிறது என்பதுதான் பல கிராமங்களில் கண்டுணர்ந்த அனுபவம். கூடவே அவற்றில் இருக்கும் சாதியப் பாகுபாடுகளும். குடிநீருக்கான உரிமை மறுக்கப்பட்டச் சாதியக் கொடுமைகளும் இங்கே நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது இன்றைக்கும்.

    அப்படியான நிலையில் நமக்கு பாடமாக எது கற்பிக்கப்பட்டது. இருபது வருடங்களுக்கு முன்பாக குழாய் நீரின் நன்மைகள் என்றெல்லாம் பாடத்திட்டம் எழுதப்பட்ட பிறகு நீர் நிலைகளுடனான மக்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்து, இன்று நீர் நிலைகளை மீட்க வேண்டிப் போராட்டம் செய்துக் கொண்டிருக்கிறோம்.

     அதேபோல் பதின் பருவத்தில் ஹிட்லரையும், பாசிசக் கொள்கைகளையும், இராணுவ ஆட்சியையும் நம்மில் பலரும் விரும்பாதவர்கள் இருந்திருக்கவே முடியாது. உண்மையில் நானெல்லாம் எனது கதாநாயகனாகவே ஹிட்லரை நினைத்து எழுதி வைத்தக் காலங்களெல்லாம் இருக்கவே செய்தது. அதற்கு காரணம் ஹிட்லரை 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடம் மூலம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த விதம்தான்.

     இவற்றையெல்லாம் ஏற்கனவே உணர்ந்திருந்தாலும் இந்தப் புத்தகங்கள் படிக்கிறபொழுது தொடர்ந்து நமது காலத்தின் கல்வி அபத்தங்கள் சிந்தனையில் வந்துகொண்டே இருந்தது. அவற்றின் நீட்சியாக இன்றைக்கும் இம்மாதிரியான பல அபத்தங்களையும், குழப்பங்களையும் பாடநூல்கள் உருவாக்கி கொண்டிருப்பதன் பின்னணி முதல் பாசிச ஆட்சியாளர்களின் தேவைகளும், பாடநூல் வாயிலாக உட்புகுத்தப்படும் அடிப்படைவாதத்தையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது இப்புத்தகம்.

    மிகமிக ஆச்சரியமான விசயங்களில் எப்படி இவ்வளவு தகவல்களை பகுப்பாய்வு செய்திருக்க முடியும். அப்படி செய்வதற்கு எந்தளவிற்குப் பரந்துபட்ட வாசிப்பு ஆசிரியரிடம் இருந்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான். கூடுதலாக அனைத்து ஆசிரியர்களும் ஏன் அப்படியில்லை? அனைவரும் இப்படியாக இருந்தால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படியெல்லாம் கட்டமைக்கப்படும் போன்ற சிந்தனைகளும் வந்துகொண்டே இருக்கிறது. மாறாக இங்கு என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. பிழைகள் என்று தெரியாமலே தொடர் கற்பிதங்களே கற்பித்தலின் மூலம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

      அப்படியான நிலையிலேயே பெருவாரியான ஆசிரியர்கள் சமூகம் இருக்கும் நிலையில் வீட்டில் பெற்றோர்கள் நிலை சொல்ல வேண்டியதேயில்லை. கற்பிக்கப்படுவதும் மனப்பாடம் செய்து கொள்வது அனைத்தையுமே அப்படியே ஏற்றுக்கொண்டு உண்மையென்ற நிலையிலேயே குழந்தைகளையும் அந்தப் பெருவாரியானப் பொய்மைகளுக்குள் நுழைத்து வாழப் பழகிக் கொள்ளத் திணித்துக் கொண்டிருக்கிறோம்.

     இவையெல்லாம் எப்படி உருவாகிறது? யார் உருவாக்குகிறார்கள்?

    2017 ஆம் ஆண்டு ‘கல்விக் குழப்பங்கள்’ என்னும் சிறு புத்தகம் ஒன்றை எழுதி அதில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடங்களில் உள்ளத் தவறானத் தகவல்களையும், பிழைகளையும் சுட்டிக்காட்டி அப்போதைய கல்விச் செயலராக இருந்த திரு. உதயசந்திரன் இ.ஆ.ப. அவர்களிடம் சேர்ப்பிக்கப்படுகிறது. அவரும் இனிமேல் இப்படியான புத்தகம் வராதபடி நாங்கள் புத்தகங்களை உருவாக்குகிறோம் என்று நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் அதன்பிறகு அப்பொறுப்பில் இருந்து அவர் மாற்றப்பட்டு 2018 ஆம் ஆண்டு அவசர அவசரமாக பல அபத்தங்களுடனும் பிழைகளுடனும் பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு அச்சாகி பள்ளிகளில் குழந்தைகள் மத்தியில் சேர்ப்பிக்கப்படுகிறது.

     சிறு புத்தகமாக இருந்த ‘கல்விக் குழப்பங்கள்’ 600 பக்கங்களைக் கொண்ட “கல்வி அபத்தங்கள்” என்னும் புத்தகமாக உருமாற்றம் அடைகிறது. அந்தளவிற்கு ஒன்றாம் வகுப்பு துவங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பக்கத்திற்கு பக்கம் தகவல் பிழைகள், வரலாற்றுப் பிழைகள், பெயர்ப் பிழைகள் என்றெல்லாம் வெளிவந்துதான் தற்போது குழந்தைகளுக்கு பாடமாக கற்பித்துக் கொண்டிருகிறார்கள் என்பதை தரவுகளுடன் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

     உதாரணமாக தலைவர்களின் பெயர்களை அவர்கள் கையெழுத்து பெயர்களில் இருந்தும் மாற்றி அமைத்திருப்பது, அவர்களின் சாதிப் பெயர் அடையாளங்களுடன் பாடநூலில் இடம்பெற வைத்திருப்பது, சமூகச் சீர்த்திருத்த செயல்பாடுகளை மறைத்திருப்பது, அறிவியலை மறுத்து மூடநம்பிக்கைகளை வளர்ப்பது போன்ற கருத்துகளை இடம்பெறச் செய்திருப்பது, வரலாற்றை திரித்திருப்பது, பாசிசத்திற்கு ஆதரவான கருத்துகளைச் சொல்லியிருப்பது என்பதில் துவங்கி அறிவியல் தகவல்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை அறிவியலாளர்கள் எனச் சொல்லியிருப்பது, அறிவியல் பாடங்களில் கூட சரியானச் சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி, பொருளாதாரப் பாடங்களில் செய்யப்பட்டிருக்கும் GDP பித்தலாட்டங்கள் போன்றவற்றையும், Google மொழிபெயர்ப்பில் உள்ளதை அப்படியே வரிகள் மாறாமல் பாடநூலில் சேர்த்திருப்பது என அனைத்தையும் நமக்கு விளக்கியிருகிறது இந்த இரு புத்தங்கங்களும்.

     கூடவே இவையனைத்தும் குழந்தைகள் மனதில் பதிகின்ற பொழுதுகளில் அவை என்னமாதிரியான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதையெல்லாம் உணரவும் வைக்கிறார் ஆசிரியர்.

    இரு புத்தகங்களையும் சேர்த்து மொத்தம் 154 கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் முன்வைக்கும் “பாடநூல்கள் பற்றிய விமர்சனங்களையும், உரையாடல்களையும், கருத்துகளையும் ஏன் பொதுச் சமூகம் செய்வதேயில்லை?” என்னும் கேள்வியை மிக முக்கியமானதாகவே கருதுகிறேன்.

    அவ்வாறு செய்யப்படும் போதுதான் அடிப்படைவாதக் கண்ணோட்டத்தோடும், பாசிச வெறிகொண்டும் உள்நுழைந்து குழந்ததைகளின் எதிர்காலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் அறிவுத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் கூட்டத்தினரிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

    ஒவ்வொரு ஆசிரியர்களும், பெற்றோர்களும், கல்விப் பின்புலத்தில் இயங்கக் கூடிய அத்தனை நபர்களும், ஆய்வுத் தகவல்கள் தேவைபடுவோர் என அனைத்துத் தரப்பினரும் கட்டாயம் வாசிக்க வேண்டியப் புத்தகங்கள்தான் ஆசிரியர் மு.சிவகுருநாதன் அவர்களின் “கல்விக் குழப்பங்கள்” மற்றும் “கல்வி அபத்தங்கள்” புத்தகங்கள்.

புத்தகங்கள் வாங்க:

பன்மை, திருவாரூர்

அலைபேசி: 9842402010

வாட்ஸ் அப்: 9842802010

மின்னஞ்சல்:  panmai2010@gmail.com | panmai@live.com

இணையம்:   www.panmai.in

நன்றி: தோழர் இனியன்

(தோழர் இனியன் ராமமூர்த்தியின் முகநூல் பதிவு ஜூலை 05, 2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *