பாடநூல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்!

பாடநூல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்!

மு.சிவகுருநாதன்

     தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் லியோனியின் கருத்துகளையொட்டி இன்றைய தலையங்கம் (ஜூலை 21, 2021) எழுதப்பட்டுள்ளது.

     முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இக்கழகம் பாடநூல்கள் அச்சாக்கம், விநியோகம் உள்ளிட்ட வேறுசில பணிகளுக்குப் பொறுப்பான அமைப்பாகும். பாடநூல்கள் உருவாக்கம், திருத்தங்கள் போன்றவற்றைச் செய்யும் அதிகாரம் மிக்க அமைப்பு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) ஆகும். எனவே லியோனியின் கருத்துகள் எந்தளவு ஏற்கப்படும என்பது கேள்விக்குரியது.

    முன்பு கருப்பு மை கொண்டு மறைக்கப்பட்டவை அனைத்தும் அரசியல் சார்பு கருத்துகள் அல்ல என்பதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

      மு.கருணாநிதி பற்றிய பாடங்கள் என்றதும் அவருக்கு முன்பும் பின்பும் ஆட்சி செய்த முதல்வர்கள் பற்றிய பாடங்கள் வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இங்கு காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பாடங்கள் இடம் பெற்றதுண்டு. இவை சில நேரங்களில் மாற்றியமைக்கப்படுவதுண்டு.

      அரசியல் தலைவர்களைப் பற்றிய பாடங்கள் இடம் பெறக்கூடாது என்பதைவிட நடுநிலையான பார்வையோடு அவர்கள் அணுகப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தலாம். உயர்கல்விப் புலங்களில் கூட இந்த நிலைமை இல்லாதது நமது அமைப்பின் அவலமாகக் காண வேண்டியுள்ளது.

    இம்மாதிரியான அரசியல் பேச்சுகளை விடுத்து பாடநூல்களின் குறைபாடுகள் குறித்து விவாதிக்க முன்வரவேண்டும். ஆனால் அது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

     இப்போதிருக்கும் பாடநூலில் பல இடங்களில் ஒன்றிய அரசின் பெருமிதங்களும் பிரச்சாரங்களும் நிரம்பியுள்ளன. மாநில அரசின் பாடநூல் ஒன்றிய அரசின் சாதனை விளக்கக் குறிப்பாக இருப்பது கொஞ்சம் வியப்பாகவே உள்ளது.

குழந்தைகளுக்கு ஒவ்வாத மொழிநடை,

மொழியாக்கக் குளறுபடிகள்,

தவறானத் தகவல்கள்,

அறிவியலுக்குப் புறம்பான செய்திகள்,

மூடநம்பிக்கைகள்,

போலிப் பெருமிதங்கள்,

சோழப்பெருமைகள்,

குடவோலை முறையை ஜனநாயகமாக முன்னிறுத்துதல்,

வேதப் பெருமைகள்,

மநு நீதிப் புகழ்ச்சிகள்,

வெறுப்பரசியல்,

பெரும்பான்மைவாதம்,

சிறுபான்மையினருக்கு எதிரான செய்திகள்,

அவைதீக மரபுகள் – சிந்தனைகளைத் திரித்தல்,

வரலாற்றை ஒரு சார்பாக அணுகுதல்

       எனப் பல்வேறுப் பிழைகளுடன் குழந்தைகளிடம் பாடநூல்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்வதற்கோ அல்லது அவற்றிற்கு முகம்கொடுக்கவோ முன்வராமல் லியோனி என்கிற ஒரு அரசியல்வாதியின் பேச்சுகளுக்கு முதன்மை தருவது சரியல்ல.

     புதிய பாடநூல்கள் குறித்தப் போலிப் பெருமிதக் கொண்டாட்டங்களை விடுத்து அவற்றை முறையாக ஆய்வு செய்து, திருத்தி வழங்கிட உங்களைப் போன்ற ஊடகங்கள் குரலெழுப்ப வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கும் கல்விக்குமான பங்களிப்பாகும்.

(ஜூலை 21, 2021 இல் வெளியான “பள்ளிப் பாடநூல்கள் அரசியல் கட்சிகளின் பிரச்சார அறிக்கைகள் அல்ல”, என்ற ‘இந்து தமிழ் திசை’யின் தலையங்கம் குறித்த எதிர்வினை.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *