என்ன நடக்கிறது தமிழகக் கல்வித்துறையில்…?

என்ன நடக்கிறது  தமிழகக் கல்வித்துறையில்…?

மு.சிவகுருநாதன்

     புதிய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென தனித்த கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இக்கோரிக்கை பன்னெடுங்காலமாக தமிழ்ச் சூழலில் முன்வைக்கக்கூடிய ஒன்று. கல்வி மாநிலப் பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டப் பிறகு இது எந்தளவிற்கு சாத்தியம் என்பதும் கேள்விக்குரியது. அப்படியே கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டாலும் அதற்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல் தேவை. இது எளிதில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. மிக நீண்ட ஜனநாயக மற்றும் சட்டப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிருக்கும். இட ஒதுக்கீடு, காவிரிப் பிரச்சினை, எழுவர் விடுதலை போல நெடிய போராட்டங்கள் இதற்கும் நடைபெற வேண்டும். அதற்கு நமது அரசு எந்தளவிற்கு தயாராக உள்ளது என்பது முதன்மையானது.

    புதிய அரசு எடுத்துவரும், தொடரும் பல்வேறு நடவடிக்கைகள் நமக்கு பெரிய அய்யத்தைக் கொடுக்கின்றன. புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை மறைமுகத் திணிக்கும் செயல்திட்டங்களாக இவை உள்ளன. குறிப்பாக சிலவற்றை இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

காட்சி: 01

      முந்தைய அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. திமுக அரசு பதவியேற்றவுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு அப்பதவி ஆணையரின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. ஆணையராக கே.நந்தகுமார் இ.ஆ.ப. நியமிக்கப்பட்டார்.

காட்சி: 02

       சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஆர்.வேல்ராஜ் பொறியியல் பாடத்திட்டம் 20% மாணவர்களுக்கு மட்டும் புரிகிறது. 80% மாணவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. எனவே இவர்களுக்கு தனித்தனி பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்றார். மேலும் Blended Learning எனப்படும் கலவைக்கற்றல் முறையும் அமலாகும் என்றார். இக்கருத்துகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் ஆமோதித்தார்.

காட்சி: 03

     பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒன்றியக் கல்விக்குழுவின் உறுப்பினர் ராம்ஜி ராகவனின் Agastya International Foundation என்ற NGO விற்கு அரசுப்பள்ளிகளில் 6 முதல் முடிய உள்ள மாணவர்களுக்கு WhatsApp, Google meet மூலம் கணிதம், அறிவியல் பாடங்களைக் கற்பிக்க 12 மாவட்டங்களுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில் மேலும் 18 மாவட்டங்களுக்கு அந்த அனுமதியை விரிவுபடுத்தி ஆணையர் கே.நந்தகுமார் ஆணையிட்டுள்ளார். (ந.க.எண்: 01424/எம்/இ2/2019 நாள்: 22/07/2021)

காட்சி: 04

      பெங்களூரூரில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய இந்து அமைப்பான ISKCON (International Society Krishna Consciousness) என்ற தொண்டு நிறுவனத்தின் துணையமைப்பு ‘அட்சய பாத்ரா’ 32,000 சென்னை மாநகராட்சிப் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவளிக்கும் திட்டத்திற்கென புரிந்துணர்வு ஒப்பந்தம் (பிப்.2020) ஏற்படுத்திக் கொண்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 5 கோடியை இந்நிறுவனத்திற்கு வழங்கினார். சமையலறை அமைப்பதற்கான இரு இடங்களை சென்னை மாகராட்சி இவர்களுக்கு ஒதுக்கியது.  

      மேலே உள்ள சில உதாரண நிகழ்வுகள் அனைத்தும் தேசிய கல்விக் கொள்கை 2020 இல் ஏதோ ஒருவகையில் சொல்லப்பட்டவையே. இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது? உண்மையில் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா? தனியே கல்விக்கொள்கை உருவாக்கப் போகிறதா? அல்லது மக்களை ஏமாற்ற எதிர்ப்பதுபோல் நாடகம் ஆடுகிறதா? தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன? ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறதா? எனப் பல கேள்விகள் கிளைக்கின்றன.

          முந்தைய அதிமுக அரசு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் துறைச்செயலாளர் ஆகியோருக்கு இடையில் ஆணையர் என்கிற பணியிடத்தை ஏற்படுத்தியது. திமுக அரசு இயக்குநர் பணியிடத்தை நீக்கி பள்ளிக்கல்வித்துறையை ஆணையரின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள்தான் நல்ல நிர்வாகத்தைத் தர இயலும் என்கிற கற்பிதமும் இதில் உண்டு. அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நலத்துறைப்பள்ளிகள் முதலிடத்தில் இருக்க வேண்டுமல்லவா! அவை தரத்தில் மிகவும் சீர்கெட்டு அங்கும் பயிலும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளதே!

    ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள கே.நந்தகுமார் திறமையானவர், சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால் ஆணையர் நியமனத்தை எதிர்க்க வேண்டாம் என்று தேசிய கல்விக்கொள்கையை மிகக்கடுமையாக எதிர்க்கக்கூடிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்றோர் அறிக்கை விடுத்ததும் இங்கு நடந்தது. தனிநபர் செயல்பாடுகளுக்கு ஓர் எல்லை உண்டு. அரசின் கொள்கை என்ன என்பதே முதன்மையாக இருக்க முடியும். மேலும் ஒருவர் வாழ்நாள் முழுதும் இப்பதவியில் இருக்க முடியுமா? மூன்றாண்டுகளில் பிற மாநில அலுவலர்களைகூட இப்பதவிக்கு அமர்த்த முடியும். பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் மாநில அரசுகளைத் தாண்டி தனது கொள்கைகளைத் திணிக்க ஒன்றிய அரசு இதன்மூலம் விரும்புகிறது.

   அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுவது தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP-2020) இன் ஒரு கூறாகும்.  இளநிலைப் பட்டப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகள் எனவும், ஓராண்டில் படிப்பைவிட்டு வெளியேறினால் சான்றிதழும், இரண்டாமாண்டில் பட்டயமும் மூன்றாமாண்டில் பட்டமும் வழங்கப்படும். ஆராய்ச்சித் திட்டத்துடன் நான்காமாண்டும்  படிக்கலாம். இவர்கள் முதுகலைப் படிப்பை ஓராண்டு படித்தால் போதுமானது என்கிறது ஒன்றிய அரசின் கொள்கை. தகுதி, தரம் என்று சொல்லி மாணவர்களைக் கல்விப் புலத்திலிருந்து அகற்றும் வேலையை கல்விக்கொள்கைத் தெளிவாக வரையறுக்கிறது. இதைத்தான் தமிழக அரசு வேறு மொழியில் சொல்கிறதா? 

      அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் (இதை அகஸ்தியா பன்னாட்டு நிறுவனம் என்கின்றனர்.) இந்தியாவில் 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு இந்நிறுவனம் பணியாற்றுவதாகச் சொல்கிறார்கள். அவர்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 21 மாநிலங்களில் செயல்படுவதாக குறிப்பு உள்ளது.   

      இவ்வமைப்பிற்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களுக்கு சென்றக் கல்வியாண்டில் (2020-2021) Science Centre, Mobile Science Lab, i Mobile Lab, Lab on a Bike and Young Instructor Leader (YIL) programs போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியதையும் அவ்வனுமதியை இவ்வாண்டு (2021-2022) மேலும் 18 மாவட்டங்களுக்கு நீட்டித்தும் இம்மாவட்டங்களில் அரசுப்பள்ளிகளிலுள்ள 6 முதல் 9 முடியுள்ள வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறையில் Google Meet, Whatsapp வழியாக இணைய வழிக்கல்வியை அளிக்க அனுமதி தருவதாகவும் ஆணையரின் ஆணையில் கூறப்பட்டுள்ளது. இவர்களது அறிவியல் சார்பான செயல்பாடுகளை (Science Based Activities) கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் அனுமதி வழங்கியுள்ளார்கள்.

     திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், இராமநாதபுரம், விருதுநகர், தேனி, கடலூர், திருநெல்வேலி தென்காசி, கரூர் ஆகிய 18 மாவட்டங்கள் உள்ளன. இதில் முதல் 4 மாவட்டங்கள் முந்தைய பட்டியலில் உள்ளவையே. அவை ஏன் மீண்டும் இடம்பெறுகின்றன என்பது தெரியவில்லை.

   தமிழகத்தில் இன்னும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்கள் மட்டுமே இந்த அனுமதிப் பட்டியலில் இல்லை. அடுத்த கல்வியாண்டில் முழுத் தமிழகமும் இந்த அமைப்பிடம் அளிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

    இத்திட்டம் அமலான 12 மாவட்டங்களின் ஆசிரியர்களிடம் இதைப்பற்றிய தகவல் சேகரிக்கும்போது இந்த அமைப்பு சில ஆசிரியர்களுக்கு ஆந்திர மாநிலம் குப்பத்தில் பயிற்சி வழங்கியதும் நடமாடும் ஆய்வகங்கள் மூலம் மாணவர்களுக்கு சொல்லித்தருவதும் தெரியவருகிறது. ஆனால் இவை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது. மாவட்டம் முழுமையும் நடைபெறவில்லை. இதில் கூடுதலாக 14 மாவட்டங்களைச் (18 என்று பொய்யாக)  சேர்ப்பது ஏன்? தமிழ்நாடு முழுமையும் நாங்கள் கல்விப் பணியாற்றுகிறோம் என்று சொல்லி கோடிக்கணக்கில் நன்கொடை திரட்டுவது அவர்களது செயல்திட்டமாக இருக்கக்கூடும். லாபநோக்கமற்றத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உள்நோக்கங்கள் ஆய்வுக்குரியவை.

    அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சிலரிடம் அலைபேசி இருப்பதில்லை. திறன்பேசிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை மிக்குறைவு. அப்படி இருந்தாலும் இணைய வசதி கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அரசுப்பள்ளிகளில் 25% மாணவர்களைக்கூட  Whatsapp வழியே இணைப்பது சிரமமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனம் இணைய வழிக்கல்வியை எப்படி வழங்கும் என்பதை கல்வித்துறை விளக்க வேண்டுமல்லவா!  வாய்ப்புள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இணையவழிக் கல்வி வழங்குவது பாரபட்சம் ஆகாதா?   

    இன்னும் சில கல்வி அலுவலர்கள் TNTP, DIKSHA, Teachmint App, Zoom App. Whatsapp, Google Meet, MS Teams, Youtube என அனைத்து மின்னணுத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக் கற்றல் – கற்பித்தல் செம்மையாக நடைபெறுவதாக சுற்றறிக்கைகள் அனுப்பிப்  போலியான கனவுலகக் கல்விமுறைகளைக் கட்டமைக்கின்றனர். (எ.கா. கிருஷ்ணகிரி மாவட்டம்) இதைப்போன்று தமிழகத்தின் 26 மாவட்டங்களின் அரசுப்பள்ளிகளில் இணைவழிக்கல்வித் திட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றதாக ஆண்டிறுதியில் பெருமைபட்டுக் கொள்ள வேண்டியதுதான்!

     லாபநோக்கமில்லை, சேவை என்று இவர்கள் சொல்லிக்கொண்டாலும் பின்னணியில் மறைமுக செயல்திட்டங்கள் இருக்கின்றன. சிறுபான்மை நிறுவனங்களை சந்தேகத்துடன் அணுகி அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ ஆதரவுப் பின்னணியில் செயல்படும் இவைகளுக்கு சிவப்புக்கம்பளம் விரிக்கிறது. சமூக நீதி, சமத்துவக் கொள்கைகளுக்கு முன்னோடியாகத் திகழும் தமிழகம் இவை குறித்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மாணவர்கள் நலன் என்ற நோக்கத்தைத் தவிர்த்து இவர்கள் எத்தகைய மாற்றங்களை குழந்தைகளிடம் விதைக்கப்போகிறார்கள் என்பதையும் கவனிக்க மறக்கக்கூடாது.

    ‘அட்சய பாத்ரா’ என்ற சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவளிக்கும் அமைப்பு வெங்காயம், பூண்டு இல்லாத ‘சாத்வீக’ உணவை அளிப்பதாக பெருமை கொள்கிறது. அசைவ உணவு உண்பவர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் போக்கு இருப்பதையும் நாம் இங்கு அவதானிக்கலாம். உயிருள்ளவைகளை உண்பது அசைவ உணவென்றால் காய்கறி, கீரைகளும் அசைவ உணவுகளே. இது போகட்டும். இந்த வைதீக அறிவிலிகள் மாட்டின் பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை சைவ உணவாக மாற்றிருப்பதிலிருந்து இவர்களது அறிவின் ஆழத்தை அறியலாம். இம்மாதிரியான கொள்கையுடையவர்களையும் அவற்றைப் பிறர்மீது திணிக்கும் தீவிரப் போக்காளர்களை கல்வியில் அனுமதிக்கும் போக்கு நல்லதல்ல. இவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எத்தகைய பயிற்சிகளை மதிப்பீடுகளை உருவாக்குவர் என்பதை உணர பெரிய ஆய்வெல்லாம் தேவையில்லை.

     ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல், நன்னெறிக்கல்வி வழங்குதல் என்ற பல இந்துத்துவ அமைப்புகள் மறைமுக செயல்திட்டங்களுடன் களமிறங்கியிருக்கின்றன. தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அவை நன்னெறிக்கல்விக்கான பயிற்சியை அளித்தன. (தமிழ், சமூக அறிவியல் பாடத்தின் வழியே மட்டும் நன்னெறிக்கல்வியை அளிக்க முடியுமா, என்ன?)  முந்தைய அரசின் முழுமையான ஒத்துழைப்புகள் இவ்வமைப்புகளுக்கு இருந்தன.

    1999 இல் பெங்களூருவில் அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் ராம்ஜி ராகவன் ஒன்றிய அரசின் கல்வி ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றவர். ஆந்திர மாநிலம் குப்பத்தில் 172 ஏக்கர் பரப்பில் Creativity Campus Lab. ஐ உருவாக்கியிருக்கிறார்கள். கிழக்கு மலைக்குன்றுகள் இவ்வாறு அரசு அனுமதியுடன் இவர்களால் கல்வியின் பெயரால் வளைக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுச்சூழலை மேம்படுத்தியதற்கான ஆந்திர அரசு இவர்களுக்கு 2019 இல் பசுமை விருது அளித்துள்ளது. மலைப்பகுதிகளை வளைத்து கட்டுமானங்களை உருவாக்குவது சூழலை மேம்படுத்துவதாக அரசுகள் கருதுவது வியப்பன்று. இந்திய அரசுகளின் பார்வையில் பழங்குடிகள், மீனவர்கள், விவசாயிகள் போன்றோர் சூழலைக் கெடுப்பவர்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளையும் யானை வழித்தடங்களையும் அழித்த ஈஷா யோகா மையத்திற்கும் இவர்களுக்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. அங்கு ஆன்மீகம்; இங்கு கல்வி. இருவருக்கும் ஒன்றிய அரசு, பிரதமர் மோடி, பாஜக, சங் பரிவாரங்களின் ஆதரவு நிறைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஜக்கி என்றால் கிழக்குக் குன்றுகளுக்கு அகஸ்தியா. பொள்ளாச்சி வால்பாறையிலுள்ள வேதாத்ரி மகரிஷியின் ‘வாழ்க வளமுடன்’ அமைப்பிலும் இதே நிலைதான்.  

     பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இந்திய அறிவியல் கழகத்தின் 106 வது மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மின்னணுவியல் பொறியாளர் கண்ணன் ஜகத்தல கிருஷ்ணன் என்பவர் நியூட்டன், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ்  ஆகியோரது இயற்பியல் கோட்பாடுகள் தவறானவை என்றும் புவியீர்ப்பு அலைகளுக்கு நரேந்திர மோடி அலைகள் எனப் பெயரிடப்படும் என்றார்.  அப்போதைய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனைவிட  சிறந்த அறிவியலாளர் யாருமில்லை என்பதால்  புவியீர்ப்பு ஒளி விளைவுகளுக்கு  ஹர்ஷ்வர்தன் விளைவு என்றும் பெயரிடப்படும் என்றும் சொன்ன இவர் ஆய்வு செய்யும் இடம் வேதாத்ரி மகரிஷியின் ஆய்வு மையம். இதற்கான நன்றிக்கடனாக ஒன்றிய அரசு பெருந்தொகையை ஆய்வுக்கென ஒதுக்கியுள்ளது.

  அறிவியல் குறித்த இவர்களது பார்வைகளை வெளிப்படுத்த மோடியின் ஆட்சிக்காலத்தில் நடக்கும் அறிவியல் மாநாடுகளே சான்று. அறிவியல் பெயரில் இங்கு நடக்கும் பித்தலாட்டங்கள், கோமாளித்தனங்களைக் கண்டு மனம் வெதும்பி, இந்த சர்க்கஸ் நிகழ்வுகளில் இனி பங்கேற்கமாட்டேன் (2015, பெங்களூரு) என்று நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (வெங்கி) வெளிப்படையாக அறிவித்தது நினைவிருக்கலாம்.

    அரசுப்பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்றக் குழந்தைகளுக்குக் கல்விச் சேவை செய்பவர்களை விமர்சிக்கலாமா என்று யாரும் வருந்த வேண்டாம். இவர்களது உண்மை முகத்தை வெளிப்படுத்த ஒரு எடுத்துக்காட்டு மட்டும்.

     “Agastya: the great sage and scientist, with a foothold in ancient Indian science, could not provide a more auspicious name for the organization dedicated to sparking curiosity and creativity in India’s children through science”, என்று அவர்களது இணையதளம் உரைக்கிறது. மேலும் “Short of stature and with the dark complexion characteristic of southern India, Agastya is revered for his knowledge”, என்று சொல்வது எங்கேயோ கேட்ட குரலாக ஒலிக்கிறதா? “கருப்பாக இருக்கும் தென்னிந்தியர்களை நாங்கள் சகித்துக் கொள்ளவில்லையா?”, வைரமுத்துவின் நண்பரும் ஆர்.எஸ்.எஸ். தருண் விஜயின் குரல்தான் இது.   

      அகத்திய முனிவர் குறித்த புராணங்களை அறிவியலாக நம்பி அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல்படுவர்கள் குழந்தைகளிடம் எத்தகைய அறிவியல் மனப்பான்மையை விதைப்பார்கள்?   தட்சசீலா, நாளந்தா இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை, நமது மரபு என ஒற்றை சமஸ்கிருத வேத மரபை உயர்த்திப்பிடித்தல், பஞ்ச தந்திரம் போன்றவற்றின் மூலம் நன்னெறிகளை உருவாக்குதல் எனறு ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.

     மேலும் கல்வியை முற்றாக வணிகமயமாக்கி இடஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றை ஒழிக்கவும் அவற்றில் இடமுண்டு. அதை விரைவுபடுத்தவே தனியார் பங்கேற்பு என்கிற ஆயுதம். அவர்களை நேரடியாக கற்பித்தலில் நுழைப்பதும் குழந்தைகளிடம் கருத்தியல் பரப்புரை செய்வதுமே இதன் முதன்மை நோக்கமாக இருக்கிறது. எனவே விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது. கல்விக்காக இத்தகைய சிறப்பு முயற்சிகளை அரசே மேற்கொள்ளவேண்டுமே தவிர தொண்டு நிறுவனங்களிடம் கல்வியை அடமானம் வைக்கக்கூடாது.

2 comments

  1. சரியான உரையாடலை முன்னெடுத்துள்ளீர்கள் தோழர் மேலும் கவனப்படுத்தப்பட வேண்டிய விசயம் இது நீங்கள் சொன்னது போல் கல்வியாளர்கள் என்போரும் ஆதரிப்பது என்பதை எப்படிப்பார்ப்பது அவர்களுக்கு ஏன் வாக்கு வங்கி அரசியல் வேலை ஆசிரியர்கள் நிலைமை அதி மோசம் தோழர் அரசுக்கு அல்ல அடிப்படை நிலை அதிகாரிகளுக்கு ஆமாம் சாமி பாடுவதிலும் போற்றுவதிலுமே பொழுது போகிறது கொடுமை தொடர்ந்து பேசுவோம் தோழர்

    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்…
      வேறுசில எழுத்துப் பிழைகளையும் சரிசெய்துள்ளேன்.
      நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *