பாடநூல்களில் தொடரும் குழப்பங்கள்

பாடநூல்களில் தொடரும் குழப்பங்கள்

மு.சிவகுருநாதன்

       சில நாள்களுக்கு முன்புஎனது மகள் கவிநிலாவின் ஆறாம் வகுப்பு இணையவழிக் கல்வியை கொஞ்சம் செவிமெடுத்தேன். ஆங்கிலப்பாடம். ஆங்கிலவழியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களைத் தமிழில் சொல்லிக் கொடுப்பதைப் போலவே  ஆங்கிலத்தையும் தமிழிலேயே சொல்லித்தரும் சிறப்பைப் பெற்றிருக்கிறோம்.

    “நாம் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு அசுத்தமான கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். மரங்கள் அசுத்தமான கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன”, என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு செயல்களும் வெவ்வேறானவை. முன்னது சுவாசம்; பின்னது ஒளிச்சேர்க்கை. இரண்டு வெவ்வேறு செயல்களை ஒன்றாக்கி ஒப்பிடுவதன் வாயிலாக தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கின்றன என்கிற கற்பிதத்தை குழந்தைகளிடம் விதைக்கிறோம். நாமும் குழம்பிக் குழந்தைகளைக் குழப்பவும் செய்கிறோம்.

     சுவாசிக்கும் போது மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கின்றன; கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. சுவாசித்தலில் கழிவாக வெளியான கார்பன் டை ஆக்சைடு மட்டுமல்லாது வளிமண்டலத்தில் உருவான கார்பன் டை ஆக்சைடையும் சேர்த்து தாவரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் உணவு (ஸ்டார்ச்) தயாரித்தலில் பயன்படுத்துகின்றன. அப்போது ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கின்றது. இதை நாம் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறோம்; தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொள்கின்றன என்று சொல்வது எவ்வளவு அபத்தம் பாருங்கள்!

    இச்சிக்கல் குறித்தும் பாடநூல்களும் தடுமாறுவதையும் எனது ‘கல்விக் குழப்பங்கள்’ நூலில் ஒரு கட்டுரை மூலமும் ‘கல்வி அபத்தங்கள்’ நூலில் இரண்டு கட்டுரைகளும் எழுதியிருந்தேன். அவை:

தாவரங்கள் எதைச் சுவாசிக்கும்?

என்றும் தீராத சுவாசக்கோளாறு!

    ஆறாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலப் பாடத்தின் இரண்டாவது அலகில் “When the Trees Walked”  என்ற Ruskin Bond  எழுதிய பாடம் உள்ளது. இதை நடத்தும்போதுதான் ஆசிரியர் அவ்வாறு கூறினார். அப்பாட எழுத்துப் பயிற்சி ஒன்றில் “take in carbon dioxide and give out oxygen”, என்று குறிப்பிடப்படுகிறது (பக்.123). இங்கு ஒளிச்சேர்க்கை (photosynthesis), சுவாசித்தல் (respiration)  பற்றி எதுவுமில்லை. பாடம் சொல்லிக் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பாடநூலை ஒப்பிப்பதுதான் வழக்கம். கூடுதலான சிந்தனைகளுக்கு இங்கு இடமிருப்பதில்லை. எனவே இத்தகைய அபத்தங்கள் நிகழ்கின்றன.

    இப்பாடத்தில் eucalyptus (நீலகிரித் தைல மரம்), jacaranda (ஜகரண்டா – ஊதாப்பூ மரம்)  Persian lilacs (இலையுதிர்க்கும் ஒரு வகையான மலை வேம்பு) ஆகிய மரங்கள் நடுவது பற்றிப் பாடத்தில் சொல்லப்படுகிறது. பயிற்சியிலாவது நம் பகுதிகளில் என்ன (இயல்) மரங்களை நடலாம் எவ்வாறு நடலாம் என்று சொல்லியிருக்கலாம்.

    தாவரங்களை அவை வாழிட அடிப்படையில் இயல் மற்றும் அயல் தாவரங்கள் என்று பிரிக்கிறோம். பல இடங்களில் வெற்றிடங்களிலிருந்து கொண்டு வரப்படும் அயல் தாவரங்கள் ஆக்ரமிப்புத் தாவரங்களாக உள்ளன. “Rain rain go away” என்பதைப்போல இவற்றை அப்படியே சொல்லிக் கொடுக்கக் கூடாது.

   Eucalyptus நம் சூழலைக் கெடுக்கும் நீரை அதிகளவில் உறிஞ்சும் ஆக்ரமிக்கும் அயல் தாவரமாகும். பார்ப்பதற்கு அழகான ஊதா நிறப் பூக்களைத் தரும்  ஜகரண்டாவும் சில இடங்களில் ஆக்ரமிப்புத் தாவரமாக உள்ளது. அதிகளவு நீர் தேவைப்படுவதால் நெல் சாகுபடியை விட்டு மாற்றுப்பயிர்ச் சாகுபடிக்கு ஆலோசனை வழங்கும் நமது அரசுகள் Eucalyptus காடுகள் மூலம் ஏற்படும் சூழல் அழிவைப் பற்றிப் பேசியிருக்கிறதா? நாமும் குழந்தைகளிடம் அதிகாரத்துவச் சொல்லாடல்களையும் அபத்தங்களையும் மட்டுமே பேசுவதைச் சற்று நிறுத்தி வைப்போம். சுயசிந்தனைகளை வளர்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *