புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?

புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? எதற்கு? எப்படி?


மு.சிவகுருநாதன்     புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? எதற்காக வைக்கப்படுகிறது? எப்படி வைக்கப்படுகிறது? என்று தெரிந்து கொள்வோமா! நமக்கு கூட பெயர் இருக்கிறதே! பெயர்கள் இல்லாவிட்டால் என்னாகும்? எப்படி இருக்கும்?

     ஓராண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் உருவாகக்கூடும். அவை உருவான நாள், மாதம் ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் சொல்லும்போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படலாம். வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்வோர், அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இம்முறை உதவுகிறது.  ஒரு புயலை அடையாளம் காணுதல், உருவாகும் விதத்தை அறிவது, எளிதாக நினைவில் கொள்வது, விரைவாக எச்சரிக்கைகளை வழங்குவது என பலவற்றிற்கும் இது உதவிகரமாக உள்ளது.

    பிற்காலச் சோழ அரசர்களில் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் என்ற பெயரில் மூன்று பேர்கள் உண்டு. தாத்தா பெயரை பேரனுக்கு (பெயரன்) வைக்கும் பழக்கம் தமிழகத்தில் உண்டு. எனவே வரலாற்றில் குழப்பம் ஏற்படுமல்லவா! இவர்களை முதலாம், இரண்டாம், மூன்றாம் என வகைப்படுத்தி அழைக்க வேண்டியுள்ளது. ஒரே பெயர் வைக்கும்போது ஏற்படும் சிக்கலைவிட பெயரே இல்லாதபோது பெருங்குழப்பம் ஏற்படுமல்லவா? எனவே புயலுக்குப் பெயரிடுதல் இன்றியமையாதது.

    பொதுவாக வெப்பமண்டலக் கடற்பகுதிகளில் புயல்கள் உருவாகின்றன. அவற்றின் சீற்றம் ஒரே அளவாக இருப்பதில்லை. அவை உருவாகும் இடத்திற்கேற்ப மாறுபடுகின்றன.  தென் பசிபிக், இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றத்திற்கு ‘புயல்’ (Cyclone) என்றும், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக், கிழக்கு வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றம் ‘சூறாவளி’ (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் கடல் சீற்றம் ‘கடும் புயல்’ (Typhoone) என்று உலக வானிலையாளர்களால் சொல்லப்படுகிறது.

      புயல் மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரங்கள், தொழில் நுட்பம், வேகம் போன்றவற்றை   அடிப்படையாகக் கொண்டு அது எந்தமாதிரியான புயல் எனக் குறிப்பிட்டார்கள். இதைக் குறிப்பிடுவதும் ஆவணப்படுத்துவதும்  சிரமமாக இருந்ததால் புயல் தோன்றும் காலத்தை ஒட்டி நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் பெயர்களில் புயல்கள் அழைக்கப்பட்டதும் உண்டு. அதன் பின்னர் புயலுக்குத் தனித்தப் பெயரிடும் வழக்கம் தோன்றியது.


     இப்பழக்கம் உலக அளவில்  பல்லாண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. தொடக்கத்தில், பெண்களின் பெயர்களை புயலுக்குச் சூட்டினர். நீண்டப் போராட்டங்களுக்குப் பின் ஆண்கள் பெயரும் வைக்கப்பட்டன. தெற்கிலிருந்து வீசும் இனிமையான தென்றல் காற்றைப் பெண்ணாக வருணிக்கும் பழக்கம் தமிழில் உண்டு. மேலை நாடுகளில் அக்காலப் பாரம்பரிய பெண் மருத்துவர்களைச் சூனியக்காரிகளாக மாற்றிய வரலாறும் உண்டு. மதவாத மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்த மேலைச் சமூகம் அவர்களின் நோயைக் குணமாக்கும் ஆற்றலை மந்திரசக்தி என்று நம்பியது. அதைப்போல சீற்றம் கொண்டு சேதம் விளைவிக்கும் சூறாவளிகளுக்கு பெண்களின் பெயரிட்டு மகிழ்ந்தது ஆணாதிக்கச் சமூகம்.


     1873 இல் நிறுவப்பட்ட பன்னாட்டு வானிலை அமைப்பு (International Meteorological Organization – IMO) உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) என்ற பெயர் மாற்றத்துடன் சுவிஸ்ட்ர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் 1950 முதல் செயல்பட்டு வருகிறது. 1951 ஐ.நா. அமைப்பு இதை சிறப்பு நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. உலகின் 187 நாடுகள் மற்றும் 6 பிரதேசங்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா – மத்திய அமெரிக்கா – கரீபியன், தென் மேற்கு பசிபிக், ஐரோப்பா ஆகிய 6 வானிலை மண்டலங்களை இவ்வமைப்பு ஒருங்கிணைக்கிறது.


    வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் 13 உள்ளன. அவை: அட்லாண்டிக் மற்றும் கிழக்கு பசிபிக், மத்திய பசிபிக், வடமேற்கு பசிபிக், வடக்கு இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல், தென்மேற்கு பசிபிக் – தென்கிழக்கு இந்தியப் பெருங்கடல் (5 இடங்கள்), தென் பசிபிக் (2 இடங்கள்)

 
    நிலநடுக்கோட்டிற்கு வடக்குப் பகுதியைக் குறிப்பது வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலமாகும். புதுதில்லி, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை மண்டல அளவிலான வானிலை மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இரு பிரிவாக இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு பெயர்களை தொடர்புடைய நாடுகளிடமிருந்து பெற்று அவற்றைப் பரிந்துரைக்கிறது. தொடர்புடைய நாடுகளுக்கான வெப்பமண்டலச் சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இது விளங்குகிறது.


    ஒவ்வொரு மண்டலத்தில் உருவாகும் புயல்களுக்கு அப்பகுதி நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைத்து அதை உலக வானிலை நிறுவனமும் (WMO), ஆசியா-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ESCAP – The United Nations Economic and Social Commission for Asia and the Pacific) ஆகியன அங்கீகாரமளித்து பட்டியலை இறுதி செய்கின்றன.

     1970 இல் ஜெனிவாவில் நடைபெற்ற மாநாட்டில், பசிபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டுக்கொண்டது. அதைப்போல், வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும்படி, 2000 இல் நடைபெற்ற உலக வானிலை அமைப்பு மற்றும் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் மாநாட்டில் இப்பகுதியில் அமைந்துள்ள நாடுகள் பெயரிடக்  கேட்டுக்கொள்ளப்பட்டன.

       அதன்படி 2004 இல் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளும் சேர்ந்து தலா 8 பெயர்களை அளித்து 64 பெயர்கள் கொண்ட பட்டியல் உருவாக்கப்பட்டது. கஜா-Gaja (இலங்கை) புயலுக்குப் பின் பெய்ட்டி-Phethai (தாய்லாந்து), வாயு-Vayu (இந்தியா), ஹிகா-Hikaa (மாலத்தீவு), கயர்-Kyarr (மியான்மர்), மஹா-Maha (ஓமன்), புல்புல்-Bulbul (பாகிஸ்தான்), பவன்-Pawan (இலங்கை), அம்பன்-Amphan (தாய்லாந்து) ஆகிய புயல்கள் பெயரிடப்பட்டன. (அடைப்புக்குறிக்குள் பெயரிட்ட நாடுகள்) இப்பட்டியலில் உள்ள அக்னி (Agni), ஆகாஷ் (Akash), பிஜ்லி (Bijli), ஜல் (Jal), லெகர் (Lahar), மேக் (Megh), சாகர் (Sagar), வாயு (Vayu) ஆகிய பெயர்கள் இந்தியாவால் சூட்டப்பட்டன. செம்மொழித் தமிழைப் பிரதிநிதித்துவப்படும் பெயர்கள் இதில் இல்லை.


     இப்பட்டியல் அம்பன் புயலுடன் முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டமைப்பில் மேலும் 5 நாடுகள் இணைக்கப்பட்டு, ஆங்கில நெடுங்கணக்கின் (Alphabets) அகர வரிசைப்படி பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் என 13 நாடுகள் தலா 13 பெயர்கள் வீதம் 169 பெயர்கள் அளிக்கப்பட்டு 2020 ஏப்ரலில் அங்கீகரிக்கப்பட்டது. இவற்றுள் நிசர்கா-Nisarga (பங்களாதேஷ்), கதி-Gati (இந்தியா), நிவர்-Nivar (ஈரான்), புரெவி-Burevi (மாலத்தீவு), டௌ தே-Tauktae (மியான்மர்), யாஸ்-Yaas (ஓமன்), குலாப்-Gulab (பாகிஸ்தான்)  ஆகிய பெயர்கள் இதுவரையில் சூட்டப்பட்டுள்ளன.

      யாஸ் (Yaas) புயல் மே 26, 2021 இல் ஒரிசா அருகே கரையைக் கடந்தது. செப்டம்பர் 24, 2021 இல் உருவான புயலுக்கு குலாப் (Gulab) என்ற பெயரை பாகிஸ்தான் வைத்துள்ளது. குலாப்- Gulab (Gul-Aab)  என்றால் ரோஜா என்று பொருள். இப்புயல் 26.09.2021 இல் வட ஆந்திரக் கரையைக் கடந்தது. அக்டோபர் 04, 2021 இல் ஓமன் நாட்டில் கரையைக் கடந்தது ஷாகீன் (Shaheen) புயல் ஆகும். இது கத்தார் நாடு வைத்த பெயராகும். இதன் பொருள் கம்பீரக் கழுகு என்பதாகும். 

     இப்புதிய பட்டியலில் இந்தியா அளித்த பெயர்கள் பின்வருமாறு: கதி (Gati), தேஜ் (Tej), முரசு (Murasu), ஆக் (Aag), வயோம் (Vyom), ஜோர் (Jhar), ப்ரோபஹோ (Probaho), நீர் (Neer), பிரபஞ்சன் (Prabhanjan), குர்னி (Ghurni), அம்பட் (Ambud), ஜலதி (Jaladhi), வேகா (Vega). இதில் முரசு, நீர் என்ற இரு தமிழ்ப் பெயர்கள் இடம்பெறுகின்றன. பிரபஞ்சன் தூய தமிழ்ப் பெயரில்லை என்றாலும் மறைந்த தமிழ் எழுத்தாளரின் பெயர்.

     அடுத்தடுத்து வரப்போகும் சில புயல்களின் பெயர்களையும் அவற்றைச் சூட்டிய நாடுகளையும் தெரிந்து கொள்வோமா!

சவுதி அரேபியா – ஜோவட் (Jawad)

இலங்கை – அசனி (Asani)

தாய்லாந்து – சி-ட்ரங்க் (Sitrang)

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – மேன்-டோஸ் (Mandous)

ஏமன் – மோகா (Mocha)

     13 வரிசைகள் கொண்ட பட்டியலில் முதல் வரிசை இத்துடன் நிறைவு வெறுகிறது. இதைப்போன்று இன்னும் 12 வரிசைகள் பாக்கி இருக்கிறது. அடுத்து, இரண்டாம் வரிசையிலுள்ள பட்டியலை மட்டும் பார்ப்போம். (உச்சரிப்பு அடைப்புக்குறிக்குள்…)

இரண்டாம் பட்டியல்:

 1. பங்களாதேஷ் – Biparjoy (Biporjoy) – பிபோர்ஜாய்
 2. இந்தியா – Tej (Tej) – தேஜ்
 3. ஈரான் –  Hamoon (Hamoon) – ஹமூன்
 4. மாலத்தீவு –  Midhili  (Midhili) – மிட்ஹிலி
 5. மியான்மர் –  Michaung (Migjaum) – மிக்ஜாம்
 6. ஓமன் –  Remal  (Re-Mal) ரிமல்
 7. பாகிஸ்தான் – Asna (As-Na) – அஸ்னா
 8. கத்தார் –  Dana (Dana) – டனா
 9. சவுதி அரேபியா –  Fengal (Feinjal) – பெய்ன்ஜல்
 10. இலங்கை –  Sakhthi  (Sakhthi) – சக்தி
 11. தாய்லாந்து –  Montha (Mon-Tha) – மந்தா
 12. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் –  Senyar (Sen-Yaar) – சென்யார்
 13. ஏமன் – Ditwah (Ditwah) – டித்வா

        புயலுக்குப் பெயரிடவும் சில நிபந்தனைகளும் விதிகளும்  உள்ளன. அவற்றில் சில:

    புயல் பெயர்களில் அரசியல், அரசியல்வாதிகள், கலாச்சாரம், மத நம்பிக்கைகள், இனம் ஆகியன இருக்கக் கூடாது. (நல்லவேளை, இந்திய அறிவியல் கழகத்தின் 106 வது மாநாட்டில் புவியீர்ப்பு அலைகளுக்கு நரேந்திர மோடி அலைகள் என்று பெயரிட்டதைப் போல புயலுக்கும் மோடி என்று பெயர் வைத்துவிடுவார்கள்!) உலக அளவில் வாழும் மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும்  புண்படுத்தும்படி இருக்கலாகாது. மிகக் கொடூரமான  பெயர் தவிர்க்கப்பட வேண்டும். பெயர்  சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் இருத்தல் நலம்.

    பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும். (இந்தியாவின் பிரபஞ்சன் (Prabhanjan) இவ்விதியை மீறி 10 எழுத்துகளில் உள்ளது.) அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பெயரிட்ட நாடுகள் குறிப்பிட வேண்டும். (எ.கா. Gulab – Gul-Aab, Jawad – Jowad, Sitrang – Si-Trang, Mandous – Man-Dous, Mocha – Mokha) மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்களை மீண்டும் பயன்படுத்த முடியாது.

     இனி தமிழகத்திற்கு வடகிழக்குப் பருவக்காற்றுகளின் காலம். எனவே அடிக்கடி வங்கக்கடலில் புயல்கள் உருவாகும். இப்பட்டியலின் பெயர்கள் பயன்படுத்தப்படும். இதற்கு அச்சப்படத் தேவையில்லை. மாறாக புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றுக்கான முன்னெச்சரிக்கைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: ‘பொம்மி’ – சிறுவர் மாத இதழ், நவம்பர் 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *