கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்

கவிதாசரண்: இதழாய் ஒர் எழுத்தியக்கம்

(21.10.1935 – 28.11.2021)

மு.சிவகுருநாதன்

என்னைத் தமிழ் அன்னை பெற்றாள்,

ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்;

இன்னுயிரைத் தோற்ற பின்னே

என் குழியில் பூத்திருப்பேன்.

                     என்ற முத்தாய்ப்பு வரிகள் மற்றும் பூக்கள், மயிலிறகு படங்களுடன் ‘தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்’ என்ற அடைமொழியோடு அக்டோபர் 1991இல் தொடங்கியது ‘கவிதாசரண்’ இதழ்.  “மனித நேயம் வளர்க்கும் இலக்கியத் தெளிவின் ஊற்றுக்கண்” என்னும் கூடுதல் வரிகளும் உள்ளே இணைக்கப்பட்டிருக்கும்.  இதழின் பெயர் மட்டுமல்ல; வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் கவிதாசரண்; அச்சிடுபவர் திருமதி கவிதாசரண் என்றும் இருக்கும்.  இந்தத் தம்பதிகளின் உண்மையான பெயர்களையோ வேறு அடையாளங்களையோ இதழ் என்றுமே வெளிப்படுத்தியதில்லை.

            கவிஞர் பிரமிள் இவரையும் முன்றில் மா.அரங்கநாதனையும் மிகக்கடுமையாக விமர்சனம் செய்த நிகழ்வும் நடந்தது. அவற்றிற்குப் பதிலாக, “எனக்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஒன்று சாதியற்றவன்; மற்றொன்று புலால் மறுத்தவன். சாதியற்றவன்+ புலால் மறுத்தவன்=தலித் என்னும் சமன்பாடு முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. ஆகவே சாதிச்சமூகம் அதை ஏற்க மறுக்கிறது”, (ஆக.-பிப்.2008) என்று எழுதினார். அவருக்கான அஞ்சலிக் குறிப்புகளிலிருந்து அவரது இயற்பெயர் சண்முகம் என்று அறிய முடிகிறது. இந்தத் தம்பதிகளைப்போல இதழாய் வாழ்ந்தவர்கள் யாருமில்லை. பிற்காலத்தில்  ‘கவிதாசரண்-இதழாய் ஓர் எழுத்தியக்கம்’ என்றாகிப்போனது.  மாத இதழ், இருமாத இதழ், காலாண்டிதழ், நினைத்தபோது வரும் இதழ் என்ற நிலைகளிலும் சமூகத்திற்காக கவிதாசரண் இயக்கமாய் எழுந்தது.

         பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற திரு கவிதாசரண் அச்சகம் (ஆல்வெல் பிரஸ்), பதிப்பகம் (மூசா இலக்கியம்), இதழ் (கவிதாசரண்) என்கிற வட்டத்திற்குள் தமது இயக்கத்தை வடிவமைத்துக் கொண்டார். தனது ஒரே மகனை 17 வயதில் மூளைக்காய்ச்சலில் பறிகொடுத்தத் துயரத்திற்கு வடிகாலாய் அந்தத் தம்பதிகளுக்கு இதுவே வாய்த்தது. எழுத்து, இலக்கியம், இதழ், பதிப்பகம் இல்லாமல் இவர்களுக்கு இயக்கம் இல்லை என்பதாகிப் போனது. பழைய ராஜ்தூத் வண்டி, வெள்ளைப் பேண்ட், வெள்ளை ஜிப்பா சகிதம் சென்னை இலக்கியக் கூட்டங்கள், புத்தகக்காட்சிகளில் கண்டு உரையாடியிருக்கிறேன். எழுத்தாளர் வாஸந்தி குறித்த விமர்சனக்கட்டுரை ஒன்றை கவிதாசரணில் (பிப்.-மார்ச் 1998) வெளியிட்டார். எங்களுக்குள் கடிதத் தொடர்புகளும் இருந்தன. இன்லேண்ட் லெட்டரில் ஒட்டும் இடம் தவிர்த்து எல்லா இடங்களிலும் எழுதியிருப்பார். அவரது இதழிலும் முன்-பின் குறிப்புகளும் அவ்வாறே இடம்பெறும்.

      கவிதாசரண் மரபுக்கவிஞராய் மிளிர்ந்தவர். கவிதாமணி என்ற பெயரில் நாவல்களை எழுதியவர். புழுதிச்சோகம், சாமியார் மகன், சரண், சங்கர நேர்த்தி, பொற்கனவே போய்வா போன்றவை இவர் எழுதியவை. இதழில் இவற்றை முன்னிலைப்படுத்தியதில்லை. ஒரு உரையாடல் பதிவில் மட்டும் அவற்றை நினைவு கூர்வார்.  அவ்வப்போது சிறுகதைகளை மட்டும் எழுதிவந்தார். தீவிர சமூக, அரசியல், இலக்கிய விமர்சகராக உருமாற்றம் அடைந்தபிறகு தனது படைப்பு முயற்சிகளைக் குறைத்துக் கொண்டார். கறாரான, தயவில்லாத இவரது கூர்மையான எழுத்துகள் பலரது நட்புகளைக்கூட முறித்தன. இருப்பினும் தொடர்ந்து தனது கருத்துகளை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். கட்டுரைகள், விவாதங்கள், எதிர்வினைகளாகவும் அவற்றின் முன்னும் பின்னுமாக அவரது விமர்சனங்கள் குத்தீட்டிகளாக எழுந்து நின்றன.

       ஜெயமோகனது திருட்டை அம்பலத்தியது, வாஸந்தியின் அரசியலுடன் கூடவே அவரது ‘தினவு’ சிறுகதைக்கான எதிர்வினையாற்றியது, அப்துல்கலாமின் அரசியலை அடையாளங்கண்டது போன்ற பணிகள் இதழின் அரசியலை நமக்கு உணர்த்தின.  மொத்தத்தில் ஒடுக்கப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் நலனுக்காவும் பெரியார், அம்பேத்கர் கருத்தியல்களை நோக்கியும் இதழ் பயணித்தது.       

         தென்றல், கண்ணதாசன் இதழ்ப் பாதிப்புகள், சாயல்கள் தொடக்ககால கவிதாசரணில் இருந்தன. பிற்காலத்தில் சமகால அரசியல் உணர்வால் தூண்டப்பட்டு, நுண்ணரசியல் வெளிப்பாடும் நிறப்பிரிகை, நிகழ் போன்ற இதழ்களுக்கு நிகராக மாறியது. அன்றைய காலங்களில் என்.ஆர்.தாசன், ஜெயந்தன், செந்தூரம் ஜெகதீஷ், நெல்லை சு.முத்து, ம.ந.ராமசாமி, வல்லிக்கண்ணன், முன்றில் மா.அரங்கநாதன், ஈரோடு தமிழன்பன், விட்டல்ராவ், புவியரசு, சாந்தா தத் போன்ற பலரது படைப்புகள் இடம்பெற்ற வழக்கமான அரசியல் நிலைப்பாடற்ற சிறுபத்தரிக்கையாகவே இயங்கியது.  

        பின்னாளில்  அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, எஸ்.வி.ராஜதுரை, வீ.அரசு, அ.மங்கை, லதா ராமகிருஷ்ணன், ராமாநுஜம், வளர்மதி, இராசேந்திர சோழன், அ.ராமசாமி, தொ.பரமசிவன், தணிகைச்செல்வன், விக்ரமாதித்யன், ந.முருகேசபாண்டியன், அருணன், சா.தேவதாஸ், எ.எம்.சாலன், அரச முருகுபாண்டியன், ஸ்டாலின் ராஜாங்கம்,  விளாடிமிர், ந.மம்மது, பெருமாள்முருகன், ஹெச்.ஜி.ரசூல், ருத்ரன், பா.செயப்பிரகாசம், ம.மதிவண்ணன், கிடாம்பி, யமுனா ராஜேந்திரன், சுகுணா திவாகர், ராயன், அரங்க மல்லிகா,  மகாராசன், ப.சிவகுமார், மு.இரா.முருகன், கவுதம சக்திவேல், பாரி செழியன், கோவை ஞானி,  யூமா வாசுகி, கரிகாலன், இலக்குமி குமாரன் ஞானதிரவியம், க.அம்சப்பிரியா போன்ற பலரது கட்டுரைகள் கவிதசரணில் இடம்பெற்றன. நீண்ட விவாதங்களுக்கும் தலித் அரசியல் மற்றும் இலக்கியத்திற்கும் காத்திரமான பங்கை இவ்விதழ் வழங்கியது.

         பொ.வேல்சாமியின் கட்டுரைகள் அதிகம் வெளியானது கவிதாசரண் இதழில்தான். கால்டுவெல் ஒப்பிலக்கண நூலின் மூன்றாம் பதிப்பில் நீக்கப்பட்டப் பகுதிகளைக் கண்டறிந்து வெளியிட்டார். இதில் பொ.வேல்சாமியின் பங்கும் இருந்தது. அதில் எழுந்த மோதல் இருவருக்குமான இடைவெளியில் முடிந்தது. அந்நூலின் முழுமையான வடிவத்தை அதாவது இரண்டாம் பதிப்பை கவிதாசரண் மிகுந்த பொருள்செலவில் பதிப்பித்தார். இன்றுள்ள தேவைக்கேற்ற அச்சு (Print On Demand) வசதிகள் இல்லாத அக்காலகட்டத்தில் இவை அதிக பொருட்செலவை எற்படுத்தின. தனது வீட்டை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவரது நெருங்கிய நண்பர்கள் குறிப்பிடுகின்றனர்.  கால்டுவெல் நூற்பதிப்பை முன்வைத்து ‘தமிழ்ச் சமூகமும் தலித்திய கருத்தாடலும்’ என்னும் நூலையும் எழுதி வெளியிட்டார்.

          கவிதாசரண், பாப்லோ அறிவுக்குயில், அபிமானி, விழி.பா.இதயவேந்தன், பாரதி வசந்தன், கீரனூர் ஜாகிர்ராஜா, தமிழ்மகன், சு.தமிழ்ச்செல்வி, அநாமிகா, அ.சந்தோஷ், ஶ்ரீதர கணேசன், த.அரவிந்தன், கண்மணி குணசேகரன், எஸ்.மயில்வேலன், சுப்பு அருணாசலம், அமிர்தம் சூரியா, சாங்கியன் போன்ற பலரது சிறுகதைகளுக்கும் இதழில்  இடம் கிடைத்தன. நிறைய கவிதைகளும் நூல் அறிமுகங்களும் வெளியாயின.

       முன்னட்டையில் தொடங்கி  பின்னட்டை, உள் அட்டைகள் என எல்லாப் பக்கங்களிலும் அவரது குறிப்புகள் நிரம்பி வழியும். கட்டுரை, விமர்சன எதிர்வினைகளுக்கெல்லாம் பக்க வரையறை கிடையாது. இதுகூட ஒரு வகையில் சிறுபத்திரிக்கை குணம்தான். இருப்பினும் சிறுபத்தரிகைகளில் பல போக்குகள் உண்டு.  படிகள், மேலும், மீட்சி, பிரக்ஞை, பரிமாணம், நிறப்பிரிகை, நிகழ், காலக்குறி, கவிதாசரண் போன்றவை சமகால அரசியலை உணர்ந்து கலை, இலக்கிய, அரசியல், சமூக நிலைப்பாடுகளுடன் செயல்பட்டவை. மாறாக உன்னத இலக்கியம் மற்றும் அவை சார்ந்த அரசியலுக்காக   மணிக்கொடி, எழுத்து, கசடதபற, யாத்ரா, கொல்லிப்பாவை, ழ, அஃ, கணையாழி, காலச்சுவடு (சுரா) போன்ற இதழ்கள் இயங்கின.

         இந்தியச்சூழலில் சிறுபத்தரிகைகளின் வளர்ச்சிப்போக்கில் நக்சல்பாரி இயக்கம், நெருக்கடி நிலை, ஈழப்போர், சோவியத் வீழ்ச்சி, பாபர் மசூதி இடிப்பு, மண்டல் குழுவின் அறிக்கையும் அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி எழுந்த தலித் எழுச்சியும் போன்ற நிகழ்வுகள் குறிப்பிட்ட தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன. 1992 பாபர் மசூதி இடிப்பு என்னும் இடத்தில் கவிதாசரண் முக்கியத்துவம் பெறுவதாக அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். அதன்பிறகு இதழின் பாதையில் பெருத்த மாற்றம் ஏற்படுகிறது. இதழ் முழுவீச்சு அதன்பிறகு வெளிப்படுகிறது.  

          விபத்தொன்றில் கைமுறிந்து மீண்டும் முழுவீச்சில் செயல்படத் தொடங்கியவருக்கு 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகள், தொடர்ந்த உடல் நலப்பிரச்சினைகள், திருமதி கவிதாசரண் மரணம் போன்றவை பேரிடியாய் விழுந்தன.  கு.முத்துமார் தீக்குளிப்பிற்குப் பிறகு அவரது இறுதி அறிக்கையும் சில கவிதைகளையும் இதழில் (பிப்.-மார்ச்2009) வெளியிட்டு அஞ்சலி செலுத்தினார். ஒருகட்டத்தில் சென்னையை விட்டு திருச்சி திருவானைக்காவல் பூர்வீக இல்லத்தில் அடைக்கலமானார். இதழ் நின்றுபோனாலும் தனது எழுத்துகளை நூலாக்கி வெளியிட்டார். காலமாற்றத்தின் விளைவாக அது பலரது கண்களில் படவே இல்லை.

       அவர் திருச்சியில் இருக்கிறார் கேள்விப்பட்டபோது ஒருமுறை சென்று அவரைப் பார்த்து வருவோம் என்று நண்பர் பாப்லோ அறிவுக்குயிலிடம் சொல்லியிருந்தேன். அதற்கான வாய்ப்பு அமையவில்லை. கொரோனாப் பெருந்தோற்றும் அதைத் தடுத்துவிட்டது.  

            சாருநிவேதிதா மத்யமம் மலையாள இதழுக்கு அளித்த நேர்காணலில் தமிழ் வடிவமான “ம்யாவ்: விளிம்பிலிருந்து ஒரு குரல்…” அவரது கடிதத்துடன் பிரசுரிக்கிறார். அதில் சாரு, தமிழ்நாட்டில் என் ஆயுள் உள்ளளவும் இப்படி ஒரு பேட்டி வருவதற்கான சாத்தியம் எனக்கு இல்லை. தற்போதைய சூழலில் கவிதாசரணைத் தவிர வேறு எந்தப் பத்தரிக்கைக்கும் அனுப்புவதைப் பற்றிக்கூட யோசிக்க முடியவில்லை, என்கிறார் (ஆக-செப்.2004).  இன்று ஊடகங்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. அன்றைய சிறுபத்தரிக்கைகள் இன்றில்லை. இடைநிலை இதழ்கள் தங்களது சரக்குகளை விற்கும் வண்டிகளாக மாறிப்போயுள்ளன. இந்தச் சூழலில் கவிதாசரண் போன்ற அரசியல்-கருத்தியல் சிற்றேடுகளின் வலிமையையும் திறனையும் நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

        இன்றும் காட்சி மற்றும் அச்சு ஊடகவியலாராக வலம் வரும் வலதுசாரிக் கும்பல்களை கவிதாசரண் அன்றே அம்பலப்படுத்தியது. சுஜாதா, வாஸந்தி, மாலன், ஜெயமோகன் போன்றவர்களும்  காலச்சுவடு,   இந்தியா டுடே போன்ற இதழ்களும் சரியாக அடையாளம் காட்டப்பட்டன. தொல்.திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, அருந்ததியர் இயக்கங்கள் பற்றிய கட்டுரைகளையும் காத்திரமான விமர்சனங்களை வெளியிட்டது. வேறும் புகழ்ச்சி, பாராட்டு என்றில்லாமல் தலித்தியத்தைச் செழுமைப்படுத்த இவை உதவின என்று சொல்லலாம்.  புதிய கோடாங்கி போன்ற தலித் இதழ்களைவிட கூடுதலாக தலித்தியம் பேசும் இதழாக இருந்தது. எதிர்வினைகள் நிரந்தரப் பகைமையை உருவாக்கியது. ராஜ்கௌதமன் நூலுக்கான முன்னுரைக்கான பெண்ணிய நோக்கில் வைக்கப்பட்ட விமர்சனம் வ.கீதா போன்ற பெண்ணியவாதிகளால் மிகக்கடுமையாக எதிர்கொள்ளப்பட்டது. இருப்பினும் அதற்கு விளக்கங்களை அளித்துவிட்டு தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் கவிதாசரண்.

         கூத்தரம்பாக்கம் தலித்கள் மீதான தாக்குதல் (மே-ஜூன்2003), கரடிச்சித்தூரில் அருந்ததியப் பெண்கள் மீது வன்முறை (நவ.-டிச.2003) ஆகிய மனித உரிமைகள் மீறல்களில் அமைக்கப்பட்ட உண்மையறியும் குழுக்களில் பங்குபெற்று அதன் அறிக்கைகளை இதழில் வெளியிட்டார். ராஜபாளையம் கங்காபுரத்தில் தேவேந்தரர்கள் வீடுகள் தீவைக்கப்பட்ட வன்முறையிலும் உண்மையறியும் குழுவில் சென்று வந்தபிறகு புதிய தமிழகம் டாக்டர் க.கிருஷ்ணசாமியைப் பற்றி ‘தென்திசை முளைத்த செஞ்சுடர்’ (அக்.-நவ.1997) என்கிற மதிப்பீட்டை வெளியிட்டார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் தனித்தொகுதியில் அவர் போட்டியிட்டபோது கவிஞர் இன்குலாப்புடன் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். தலித் கருத்தியல்களை மட்டும் பேசிக்கொண்டிராமல் அன்றைய சூழலுக்கேற்ப செயல்பாடுகளையும் முன்னெடுப்பவராகவும் இருந்தார்.

         குமுதம் தீராநதி   (நவ.2004) நேர்காணலில் எழுத்தாளர் பூமணி, “கவிதாசரணிடம் சக்தி வாய்ந்த தர்க்க ரீதியான உரைநடை இருக்கிறது. அதைப் படைப்புகளின் பக்கம் திருப்பவேண்டும்”, என்று சொன்னது பற்றி எழுதிவிட்டு (ஜன.-மார்ச்2005), இறுதியாக “என்னை இந்தப் பத்தரிக்கை தின்னது போக மிச்சம் இருந்தால் முயற்சி பண்ணலாம்” என்று எழுதினார். தனது செல்லப்பூனை நோய்வாய்ப்பட்டதை ‘இதைவிட்டால் வேறு என்ன செய்ய’ என்ற கட்டுரை ஒன்றை (ஜன-பிப்.2006) எழுதியிருப்பார். இது நல்ல சிறுகதையாக வந்திருக்க வேண்டியது. இதைப்போன்று அவரது பதிவுகள் பலவற்றைச் சுட்டமுடியும். உண்மையில் இதழ் அவர் படைப்புகளைத்தான் தின்றுவிட்டது. அதனாலென்ன, கவிதாசரண் இதழின் வீச்சுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார்.

நன்றி: பேசும் புதிய சக்தி – ஜனவரி 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *