கதைகளுக்குப் பின்னால்…

கதைகளுக்குப் பின்னால்…


மு.சிவகுருநாதன்


கதை சொல்வதும் கேட்பதும் தொல்குடி வடிவமாகும். ஆதி மனிதனின் பாறை ஓவியங்கள் அனைத்தும் நமக்கு ஏதோ ஒருவகையில் கதைகள் சொல்பவை. கதைகள் மற்றும் இசை வழியே தீராத நோயைக் குணப்படுத்தும் முறைகூடத் தொல்குடிப் பண்பாட்டில் உண்டு.


கதைகளில் பலவகைகள் உண்டு. அதீத கற்பனைக் கதைகள் (fantasy stories) குழந்தைகளின் கற்பனை வளத்தைப் பறைசாற்றுபவை. லத்தீன் அமெரிக்க புதிய வகையான மாயாஜால யதார்த்த வகை பாணியிலான கதைகளும் இங்கு அறிமுகமாகியுள்ளன. மகாபாரத, ராமாயாணக் கதைகளிலும் இத்தகையக் கூறுகளைக் காணமுடியும்.


குழந்தைகள் எழுத்துகளை ஓவியமாக உணர்வதைப்போல எந்த நிகழ்வுகளையும் கதையாக உணர்கிறார்கள்; நினைவு வைத்துக் கொள்கிறார்கள். எந்தக் கதையைக் கேட்டாலும் வாசித்தாலும் அதனூடாக அவர்களது கதைகளை எழுதிப் பார்க்கிறார்கள். வயது செல்லச்செல்ல கதைகளின் தன்மை மாறுகிறது. ஆனால் கதை கேட்டல், சொல்லல், வாசித்தல், எழுதுதல் என்று செயல்களும் கதைகளும் உருமாறிக்கொண்டே இருக்கின்றன.


சிறுவர்கள் கதை உலகம் இயல்பாகவே fantasy தன்மை மிக்கது. இந்த மாய உலகில் கதைகளின் சிறகுகள் பறவையென விரிகின்றன. இவற்றைப் புரிந்துகொள்ளவும், இணைந்துப் பயணிக்கவும் நமக்கு குழந்தை மனநிலை தேவைப்படுகிறது. இது இல்லாதபோது இந்த fantasy உலகம் நம்மை அந்நியப்படுத்துகிறது. இங்குதான் ‘புரிதல்’ பற்றிய சிக்கல் எழுகிறது. அப்போதுதான் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய யதார்த்த உலகை அவர்களால் கடக்க முடியும்.


வேலு சரவணன், ச. முருகபூபதி, விஜயகுமார் போன்றோர் பல்லாண்டுகளாக குழந்தைகள் நாடக உலகில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். இவர்கள் நாடகங்கள் ‘புரிதல்’ குறித்த கேள்விகள் எழுப்பப்படுவதுண்டு. இவை பெரியவர்களுக்கு வேண்டுமானால் புரியாமற் போகக்கூடும். ஆனால் சிறுவர்களுக்கு எவ்வித புரிதல் சார்ந்த சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை.


குழந்தைகளின் அகமன உலகம் புதிரானது; ஆனால் மிகவும் எளிமையானது. ஆனால் அவற்றை சிக்கலான ஒன்றாக கற்பனை செய்துகொண்டு, நாம் அவற்றை இழந்துவருகிறோம். அதை உணர நாமும் குழந்தைகளாக மாறுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. வயதாக, வயதாக நாம் குழந்தமையை முற்றாக இழந்துவிடுகிறது. அப்போது குழந்தைகளின் உலகம் நமக்கு மிகவும் அந்நியப்பட்டு விடுகிறது. குழந்தமையை தக்கவைக்க முடிந்த கோமாளி மனங்களால் மட்டுமே இதை மீட்டெடுக்க முடிகிறது.


கதைகளின் பயன்களும் விளைவுகளும் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவை. 1001 அரேபிய இரவுகள் கதைகள் மூலம் மரணதண்டனை ஒத்திப்போடப்படுகிறது. இங்கு கதை என்பது மரணத்திற்கு எதிராகவும் செயலாற்றுகிறது. கதை சொல்லல் – கேட்டல் என்பது இங்கு போதனையாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. கதை சொல்ல முதலில் வகுப்பறை உரையாடலுக்கான வெளியாக மாறவேண்டும். ச.முருகபூபதி சொல்வதைப்போல, “சுதந்திரத்தின் பன்முகப்பாதைகளைப் புரியவைக்க, சில நாட்களாக குழந்தைகளின் நண்பனாக, சமவயதுக்காரனாக இருக்க முயலவேண்டியது”, அவசியமானதாகும்.


நீதிக்கதைகள் என்றதும் நமக்கு பல்வேறு கதைகள் நினைவுக்கு வருகின்றன. பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், புராண- இதிகாசக் கதைகள், ராமாயண-மகாபாரதக் கதைகள் ஆகியன அவற்றுள் சில. பாடநூல்களும் இத்தகைய கதைகள் மூலமே நீதிபோதனையையும் நல்லொழுக்கத்தையும் கட்டமைக்க விரும்புகின்றன. இவை அனைத்திற்கும் பின்னால் அரசியல் நோக்கம் உண்டு. இக்கதைகள் போதிக்கும் நீதியும் ஒழுக்க மதிப்பீடுகளும் யாருக்கானது என்பதில் விமர்சனம் உண்டு. இவற்றை அப்படியே படியெடுத்துப் பயன்படுத்துவதுதான் நமது கல்விமுறையாக உள்ளது.


தந்திரம், சூழ்ச்சி என்றெல்லாம் காலம்காலமாகச் சொல்லப்படும் காகம், நரிக் கதைகள் குழந்தைகளிடம் நற்பண்புகளை விடுத்து வேறுவகையான பண்புகளை வளர்ப்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். காக்கை கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாக்கும் பறவை. இதற்காகவே குயில் இதனை ‘out sourcing’ செய்கிறது. நாட்டில் குயிலுக்கு இருக்கும் மதிப்பில் துளிகூட காக்கைகளுக்கு இல்லை. எருமை, காகம் போன்ற கருமை நிறமுடைய ‘விளிம்பு நிலை விலங்குகள்’ பற்றிய கதைகள் எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகின்றன. மனிதனது சாதிய மதிப்பீடுகள் பிற உயிரினங்கள் மீதும் திணிக்கப்படுகின்றன.


அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் சொல்லிய நிர்வாக வழிமுறைகள் அதே உத்திகளுடன் அனைத்துக் களங்களிலும் கோலோச்சுகின்றன. சாம, தான, பேத, தண்ட, மாய, உபேட்ச, இந்திரஜால என்ற இலக்கணப்படியே புராணக்கதைகளும் புனையப்படுகின்றன.


• சாம – அமைதி, உடன்பாடு
• தான – அன்பளிப்பு, கையூட்டு
• பேத – மக்களைப் பிளவுபடுத்தல், உடைத்தல் மற்றும் எதிர்ப்பை உண்டாக்குதல்
• தண்ட – தண்டனை, தாக்குதல்
• மாய – மாயத் தோற்றம், சூழ்ச்சி, தந்திரம்
• உபேட்ச – எதிரியைப் புறக்கணித்தல்
• இந்திரஜால – பொய்களை உருவாக்குதல்

இந்துச் சட்ட மூலங்களில் மநு தர்ம சாஸ்திரமும் (மநு ஸ்மிருதி) ஒன்று. இது ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பலரால் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். கி.மு. 150க்கும் கி.பி.100க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக இருக்குமென ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கணிக்கிறார். இதைப்போல எண்ணற்ற இந்து சட்டத் தொகுப்புப் பிரதிகள் உண்டு.


முதலாம் ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலன் (கி.பி. 969) சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்கிற நான்கு உடன்பிறந்த பார்ப்பனர்களால் கொலை செய்யப்பட்டார். இவர்களது பெயர் மற்றும் பட்டங்களைக் கொண்டு அவர்கள் அரசு உயர்பதவிகளில் இருந்த பார்ப்பனர்கள் என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் கணிக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து இக்கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முதலாம் ராஜராஜனால் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால் அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் வழங்கமுடியவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்க உத்தரவிட்டார். சோழர்கள் அரசாட்சி என்கிற பெயரில் மநு தர்ம ஆட்சியே என்று நடந்தது என்பதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. பிற்காலச் சோழர்கள் தாங்களாக எழுதிக்கொண்ட சுயபுராண மெய்கீர்த்திகளில் வரும் ‘மனுவாறு விளங்க’, ‘மனுநெறி’, ‘மனுவொழுக்கம்’ என்ற சொல்லாட்சி வாயிலாகவும் மநு நீதிச்சோழன் என்பது பிற்காலச் சோழர்களின் பட்டபெயர்களில் ஒன்றாக இருப்பதையும் அறிய முடியும்.


இம்மாதிரியானச் சட்டங்களை மக்களிடம் பதியவைக்க / திணிக்க / மேலாண்மையை நிறுவ உள்ளூர் மொழிகளில் வழக்காறுகளில் நிறைய கதைகள், புராணங்கள் உற்பத்தியாயின. அந்த வகையில் கட்டப்பட்ட புனைவுதான் ‘மநு நீதிச் சோழன்’ என்னும் புராணம். ‘மநு நீதி’யுடன் உள்ளூர் அரச வம்சமான ‘சோழன்’ என்கிற அடைமொழி இணைக்கப்படும்போது இவர்களது நோக்கம் விரைவாக நிறைவேறிவிடுவதைக் காணலாம். இதேவகையில் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை (கி.மு.205 – கி.மு.161) மநுநீதிச் சோழனாக சித்தரிக்கும் வழக்கமும் உண்டு.


பீர்பால் கதைகள் அக்பர் என்ற அறிவார்ந்த, சகிப்புத்தன்மையுடைய முகலாயப் பேரரசரை இழிவுபடுத்துவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இங்கு கட்டமைக்கப்படும் மதம் சார்ந்த முரண் எதிர்வு ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருவதற்கு நமது கல்விமுறையும் இத்தகைய கதைமுறைகளும் காரணமாக அமைந்துவிட்டது. இதைப்போல தெனாலிராமன் கதைகளும் தெலுங்கு, சமஸ்கிருத மொழியறிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்த விஜய நகர அரசரான கிருஷ்ண தேவராயரை இழிவு படுத்தும் நோக்கிலானவை. அடித்தட்டு மக்களுடைய மொழிகளில் அதிகாரத்துவம் கேள்விக்குள்ளாகும். ஆனால் இவற்றை அவ்வாறு அணுகவியலாது. இவை முற்றிலும் எதிர்மறையானவை.


புராண-இதிகாசக் கதைகள் அனைத்துமே ஏமாற்றுதல், சூழ்ச்சி, தந்திரம் ஆகியனவற்றுடன் வருணதர்மம், மநுதர்மம், இந்து மேன்மை, கடவுளர்களின் திருவிளையாடல்கள், போர், கொலைகளை நியாயப்படுத்துதல், பிராமண அல்லது சத்திரியக் குலமேன்மை என குழந்தைகளுக்கு ஒவ்வாத தீயச் சித்தரிப்புகளைக் கொண்டவை. இவைகளை ஆழ்ந்து படிக்கும்போது இதிலுள்ள அபாயங்கள் புரியும். இதன் மூலம் நன்னெறிகளையும் வாழ்க்கை விழுமியங்களையும் உண்டாக்க இயலாது என்பது தெளிவு.


இன்று காட்சி ஊடகங்களில் குழந்தைகள் ஜெய் அனுமான், கிருஷ்ணா, சக்திமான், ஸ்பைடர்மேன், டோரா போன்ற மத மற்றும் சாகச நாயகர்களின் பிடியில் சிக்கிச் சீரழியும் போக்கு உள்ளது. இவை குழந்தைகளின் ஆழமனங்களில் வன்மம், பகை, வெறுப்பு போன்றவற்றை வளர்த்தெடுப்பவை. நீதிபோதனைக் கதைகளும் இவற்றில் மறுபதிப்பாக இருப்பதை ஏற்கவே முடியாது. நீதிபோதனை மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை உருவாக்கும்போது நமது நாட்டின் பன்மைத்துவத்தையும் குழந்தைகளின் மனநிலையையும் சரியான புள்ளியில் இணைப்பது மிகவும் இன்றியமையாதது.


பிள்ளைக்கறி விரும்பிக் கேட்டு, உண்ட சைவ அடியார்களின் கதைகள் போன்ற திருவிளையாடல் நிரம்பியுள்ள சூழலில், பசிப்பிணி போக்கிய மணிமேகலையின் அமுதசுரபியும், அவரது காலத்தில் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்த பஞ்சக் கொடுமைகளும் வள்ளலாரை அன்னச்சத்திரம் அமைக்கத் தூண்டியிருக்க வேண்டும். அறம் மற்றும் தம்மம் (தர்மம் அல்ல.) தழைக்க அவைதீகச் சமயங்கள் ஆற்றிய பணி அளப்பரியது.


புத்த ஜாதகக் கதைகள், ஜென் பவுத்தக் கதைகள், முல்லா நஸ்ருத்தின் கதைகள் போன்றவற்றை மேலே கண்டவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். கோதம புத்தருக்கு முன் ‘எண்ணில் புத்தர்கள்’ தோன்றியதாகக் கருதுவது புத்த மரபு. போதி சத்துவர்களாகப் பல பிறவிகள் எடுத்தவர் புத்தர். இந்த போதி சத்துவர்களின் வாழ்வில் நடந்ததாக பகவான் புத்தர் சொன்ன கதைகளே புத்த ஜாதகக் கதைகள் என்னும் அறத்தை வலியுறுத்தும் கதைகளாகும். 537 கதைகள் பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றை நமது நீதிபோதனை வகுப்புகளில் பயன்படுத்துவது மிகவும் குறைவு. நம் முன்னுரிமை தந்திரம், ஏமாற்றுதல், சூழ்ச்சி, இழிவு செய்தல் ஆகியவற்றில் மட்டுமே இருக்கிறது. பஞ்ச தந்திரக்கதைகளின் உருவாக்கமே குறுக்குவழியில் செயலாற்றுவதாக உள்ளது.


முல்லா கதைகள் வேறொரு பின்புலத்தில் இயங்குபவை. இதிலுள்ள தன்னைத்தானே பகடிச் செய்துகொள்ளும் தன்மை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சுய எள்ளலை, கிண்டலை வேறெந்த கதைகளிலும் காணமுடியாது. இது ஓரு வகையில் தமிழ்க் கோமாளி (விதூஷகன்) மரபுடன் ஒன்றியிருப்பதையும் உணரலாம். இதை ‘அந்நியமாதல்’ உத்தியாகவும் வரையறுக்கலாம்.


முல்லா கதைகள் போன்றவை நமது குழந்தைகள் இழந்துபோன குழந்தமையை மீட்டெடுக்க உதவும். தரம், ஒழுக்கம் என்பது போன்ற ராணுவக் கட்டுப்பாடுகள், நிறுவன விதிகள், பாடப்புத்தகச் சுமை, பயம் உண்டாக்கும் தேர்வுகள், பரிசு, தண்டனை, ரேங்க் வழங்கித் தரம் பிரித்தல், மாணவர்களின் பன்முகங்களை அழித்துப் பள்ளிக்குப் பொருந்தக்கூடிய ஒற்றை முகத்தை பிசைந்து வடித்தல் என்பதான கல்வி அதிகாரங்களை நோக்கி குழந்தைகளால் கேள்வி எழுப்ப இயலாது. மாறாக இவற்றை எளிதாகப் பகடி செய்யும் மனநிலையை உருவாக்க முடியும்.


முல்லா தனது கதைகளில் நீதிபோதனைகள் செய்வதில்லை. இவற்றில் வெளிப்படையான நகைச்சுவை இருக்கிறது. இந்த நகைச்சுவை குழந்தைகளின் விருப்பமாக உள்ளது. பெரியவர்கள் தங்கள் தொலைத்துவிட்ட குழந்தைமையை மீட்டெடுக்க இது உதவி செய்கிறது. இந்தக் கோமாளித்தனத்திற்குள்ளாக தத்துவம் ஒளிந்திருக்கிறது. இவற்றைக் கண்டுணர நமது முகமுடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, குழந்தைத்தனத்தோடு முல்லாவுடன் கழுதைகளில் பயணிக்கவேண்டும்.


வயதும் அறிவும் வளர வளர முல்லாவிற்கும் நமக்குமான இடைவெளி அதிகரித்து விடுகிறது என்கிறார் முல்லா கதைகளை மொழிபெயர்த்த சஃபி. இக்கதைகளை கருத்தூன்றிப் படிக்கும்போது இவற்றில் இழையோடும் ஆழ்ந்த பரிமாணங்களை விளங்கிக் கொள்ளமுடியும் என்றும் சொல்கிறார். நாம் எல்லாருக்குள்ளும் நார்சிசஸ் என்ற கிரேக்க புராணக் கதாபாத்திரம் போன்று சுயமோக ஆசை தளும்புகிறது. அந்த ஆசை மிதமிஞ்சி நோய்க்கூறாக மாறாமல் மட்டுப்படுத்த, எச்சரிக்கை செய்ய உருவாக்கப்பட்டவை முல்லா கதைகள் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும் சஃபி விளக்குகிறார்.


முல்லா நஸ்ருத்தீன் என்பது சூஃபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம். சுய ஆய்வுக்காக, மனதைத் தயார்ப்படுத்தும் பயிற்சிக்காக, சூஃபிகளால் தயாரிக்கப்பட்ட இக்கதைகள், தினசரி வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைத் துண்டித்து எடுத்து நம் முன் போட்டு அதில் நம் கவனத்தைக் குவிய வைத்து நம்மையே கேள்வி கேட்க, சுயவிமர்சனம் செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையாக அமைகின்றன.


முல்லா நிகழ் வாழ்வின் தர்க்கங்களைக் கலைத்துப் போடுகிறார், எந்த நீதி மற்றும் அற போதனைகளையும் அவர் செய்வதில்லை என்று சொல்லும் அ.மார்க்ஸ், முல்லா நமது மரபில் காணமுடியாத ஒரு புத்திசாலித்தனமான முட்டாள் (wise fool) என்றும் சொல்கிறார். வழக்கமாக நாம் உலகைப் பார்க்கும் முறைகளிலிருந்து திசை திருப்பி சிந்தனையை உசுப்புவதே அவரது பணி என்றும் சொல்கிறார். “நகைச்சுவை என்பது ஒருவகை உணர்வோ, அறுசுவைகளில் ஒன்று மட்டுமோ அல்ல. உலகை வழமையான பார்வையிலிருந்து விலகிப் பார்க்கும் முறைமைகளில் ஒன்று. வாழ்வின் தர்க்கங்களிலிருந்தும் வன்முறைகளிடமிருந்தும் தப்புவதற்கு நமக்கு உதவி செய்பவை என்றும் விளக்குகிறார்.


காஞ்சிபுரத்தை ஆண்ட இடைக்கால பல்லவ மன்னர் இரண்டாம் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதிதருமர் மகாயானப் பிரிவுகளில் ஒன்றான ஜென் பவுத்தத்தைத் தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார். குங்ஃபூ தற்காப்புக் கலையை உண்டாக்கியவரும் இவரே. அன்றைய பவுத்த மையமாகத் திகழ்ந்த காஞ்சியில் அரசர்களின் கடைக்குட்டிப்பிள்ளையை பவுத்த மடங்களுக்கு தானமளிப்பதும் தீட்சை பெறுவதும் வழக்கமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த ஜென் பவுத்தம் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவியுள்ளது. தத்துவ விவாதங்களை விட தியான மார்க்கத்தை முன்னெடுத்த இந்த மரபு தத்துவத்தை முற்றாகக் கைவிட்டதாகக் கருத வேண்டிய அவசியமில்லை. பவுத்தக் கருத்துகளை சாமான்யர்களுக்கு புரியும் வடிவில் எளிமையாக கதைவடிவில் நமக்கு அளிக்கின்றன.


பொதுவாகக் கதைகள் நமக்குப் புதிதில்லை; பழக்கமான ஒன்றுதான். ஆனால் ஜென் கதைகள் வழமையான நீதிக்கதைகள் அல்ல; நமக்குள் உள்நுழைந்து கேள்விகளைக் கேட்பவை. நம்மை சிந்திக்கத் தூண்டுபவை. இந்த சிந்தனைகளுடாக நம்மை புதிய வெளிச்சத்தில் பயணிக்கத் தூண்டுபவை.


“நீங்கள் ஒரு புத்தனைச் சந்திக்க நேர்ந்தால் அந்தப் புத்தனைக் கொன்று போடுங்கள். நீங்கள் ஒரு மூதாதையரைச் சந்திக்க நேர்ந்தால், மூதாதையரைக் கொன்றுவிடுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரைச் சந்தித்தால், உங்கள் பெற்றோரைக் கொல்லுங்கள்”, என்று ஜென் குரு சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியடைய வேண்டாம். இறந்தவர்களை மீண்டும் கொல்ல முடியுமா என்ன? இங்கு ‘கொல்லுதல்’ என்பது அவர்களுடைய கருத்துகளையும் கற்பனைகளையும் துறத்தல் என்று பொருளாகும். பற்றுகளைத் துறப்பதுபோல் நம்மையும் நம் அடையாளங்களையும் சுயத்தையும் துறத்தல் சாத்தியமாகும்போது ஒருவருக்கு ஜென் மனநிலை வந்துவிடுகிறது.

பவுத்தம் ஆசைகளை மட்டுமல்ல; அனைத்து வகையானப் பற்றுகளையும் அறவே அகற்றச் சொன்னது. அப்போதுதான் பரிநிப்பாணம் கிடைக்கும். பற்றுகளைத் துறந்து பரிநிர்வாணமடையும் சிந்தனா முறையே புத்தர் நமக்களித்தது. சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை தீக நிகாயத்தில் புத்தர் வலியுறுத்துகிறார். அறிவு மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலும் உள்ள பற்றுகளை நீக்குதல் இங்கு முதன்மையானது. இதைத்தான் பெரியார் நமக்கு வேறு மொழிகளில் சொன்னார்.


எனவே இங்கு கதைகள் வெறுங்கதைகளாக இல்லை. அதன் பின்னால் அரசியல் இருக்கிறது. அதனுடாக மானுட வெறுப்பும் விதைக்கப்படுகிறது. எல்லாக் கதைகள் மூலமாகவும் நன்னெறிகளை அற உணர்வுகளையும் ஏற்படுத்த இயலாது. குழந்தைகளுக்கு எத்தகைய மனப்பான்மையும் சிந்தனைகளும் வேண்டும் என்பதை மேலோட்டமாக முடிவு செய்யக்கூடாது. இதற்கு ஆழ்ந்த சிந்தனைகளும் விரிவான ஆய்வுகளும் தேவை.

நன்றி: பேசும் புதிய சக்தி – பிப்ரவரி 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *