குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள்


மு.சிவகுருநாதன்

உணவே மருந்து என்பார்கள். உணவுதான் நம்மை இயங்கவும் வாழவும் வைக்கிறது. எனவே இது முதன்மையானதாகவும் சிறப்பானதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. சரிவிகித உணவு, சீருணவு, சத்துணவு என்பதெல்லாம் வெறும் சொற்களல்ல; இதன் பின்னணியில் நீண்ட மரபு இருக்கிறது. இன்றைய வணிக உலகில் அம்மரபு தொலைக்கப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு உணவூட்டத்தில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குழந்தை பிறந்தவுடன் சற்றுக் குறைந்துவிடுவது இயல்பாக காணப்படுகிறது. இதற்குப் பல்வேறு புறக்காரணிகள் உள்ளன. 3 வயதுக்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும் இன்று சந்தையில் நிறைந்துள்ள வேதிச் சுவையூட்டிகளின் பயன்பாடும் குழந்தைகளின் உணவுப்பழக்கத்தைப் பெருமளவு பாதிக்கின்றன.

மழலையர் கல்வி தொடங்கி கல்லூரிக்கல்வி முடிய நன்றாக ஊட்டம் பெறவேண்டிய குழந்தைப்பருவம், வளரிளம் பருவம் ஆகிய நிலைகளில் தேவையான ஊட்டம் இல்லாத அல்லது குறைந்த உணவை உட்கொள்வதால் அவர்களது உடல், மனநிலை சிறப்பாக அமைவதில்லை. இது அவர்களை மட்டுமல்லாது வருங்கால சந்ததியைப் பாதிக்கும் நிலைக்கும் இட்டுச் செல்கிறது.

அடித்தட்டுக் குழந்தைகளுக்கு எப்போதும் சரிவிகித உணவுப்பற்றாக்குறை எப்போதும் நீடிக்கிறது. அரசுப்பள்ளி சத்துணவுத்திட்டம், அங்கன்வாடி ஊட்டச்சத்துத் திட்டங்கள், உண்டு-உறைவிடப்பள்ளிகள், மாணவர் விடுதிகள் அனைத்தும் ஊழல் முறைகேடுகளால் குழந்தைகளிடம் முறையாகச் சென்றடைவதில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் யாரும் விரும்புவதில்லை.

நடுத்தர/ உயர் வர்க்கம் கல்விக்காகச் செலவிடும் பெருந்தொகையில் குழந்தைகளின் சத்தான உணவிற்காகச் செயல்படும் நிலை இல்லாதது விந்தையான ஒன்றுதான். இன்று பொருளியல் நிபுணர்களைப் போல உணவியல் வல்லுநர்களின் கூட்டமும் பெருகிவிட்டது. இவர்கள் இருவருக்கும் பணி ஒன்றுதான். பன்னாட்டு மூலதனத்தையும் சந்தைகளுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளைப் பொதுப்புத்தியில் ஏற்றுவதுதான் இவர்களது வேலை. இயற்கை உணவுகள், பல்வேறு உணவுக்கட்டுப்பாட்டு முறைகள் இங்கு அறிமுகம் செய்யப்படுகின்றன. நமது உடலுக்குத் தேவையான கலோரிகளை அளவிட்டுச் சாப்பிடவும் வலியுறுத்தப்படுகிறது. இது நடைமுறையில் அவ்வளவு எளிதான காரியமல்ல.

சில தனியார் சுயநிதிப்பள்ளிகள் இதைத்தான் மதிய உணவு மற்றும் நொறுக்குத் தீனியாகக் கொண்டுவரவேண்டும் என்று கட்டுப்பாடுகள் கூட விதிக்கின்றன. மேலும் காலை, மதிய உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தாங்களே அளிப்பதாகச் சொல்லி கல்வி வணிகத்துடன் உணவு வணிகத்தையும் ஒருசேர நடத்தும் பள்ளிகள் இன்று பெருகியுள்ளன. இன்றைய அவசரகால உலகில் பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு இது வசதியாகவும் உள்ளது.

வயதான பிறகும் நீரிழிவு, உடல் பருமன் போன்ற குறைபாடுகளுக்குப் பின்புதான் இங்கு உணவுக்கட்டுப்பாடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வருமுன் காக்கும் வழிமுறைகள் புழக்கத்தில் இல்லை. குழந்தைப்பருவம் முதல் ஒரு குறிப்பிட்ட வயதுவரை அவர்கள் பெறும் ஊட்டமே அவர்களின் உடல்நலம், வளர்ச்சி, வாழ்நாள் போன்றவற்றைத் தீர்மானிப்பதாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்குச் சத்தான உணவூட்டம் இன்றியமையாதது.

இன்று சந்தையில் நிறைந்துள்ள உணவுப்பொருள்களில் சேர்க்கப்படும் செயற்கையான வேதிச் சுவையூட்டிகள் நமது குழந்தைகளின் சுவையுணர்வை மழுங்கடித்திருக்கின்றன. இவற்றை மீட்டு இயற்கையான உணவு மற்றும் சுவைகளில் நாட்டம் கொள்ளச் செய்வதே நம்முன் உள்ள பெரும் சவாலாகும்.

உணவு தானியங்கள் (பெரு/சிறு), பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், காய்கறிகள், கிழங்குகள், கீரை வகைகள், கனிகள், உலர் கனிகள், மீன், இறைச்சி, முட்டை, பால், சுத்தமான குடிநீர் என அனைத்து வகையான் உணவுகளையும் உரிய வகையில் எடுத்துக் கொள்வது அவசியம். மாவுப்பொருள், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் என அனைத்துச் சத்துகள் நிறைந்ததாக இருப்பதே சரிவிகித உணவாகும்.

பொதுவாக ஒரு உணவுப்பொருள் தயாரிக்கப்படும் விதம் மற்றும் அது சமைக்கப்படும் பக்குவம் போன்றவற்றைப் பொறுத்து அதில் சத்துகள் நிறைவதும் குறைவதும் நடக்கிறது. எடுத்துக்காட்டாக அரிசியில் பச்சரிசி, புழுங்கலரிசி ஆகியவற்றில் ஒரே மாதிரியான சத்துகள் இருப்பதில்லை. கைக்குத்தல் அரிசியில் இருக்கும் சத்துகள் சாதாரண புழுங்கலரிசியில் இருக்காது. இட்லி-தோசை மாவில் அரிசியுடன் உளுந்து சேர்க்கப்படுகிறது. இவற்றில் உள்ள சத்துக்களைவிட உளுந்தங்களி போன்ற நேரடி உணவுகளில் நமக்கு மிகையான சத்துகிடைக்க வாய்ப்புள்ளது. எனவேதான் உணவை உருவாக்கும் முறைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு மரபுரீதியான முறைகள் நமக்குக் கைகொடுக்கலாம்.

தானியங்களில் சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, சோளம் போன்றவற்றை வயதான கால உணவு வகைகளாகப் பரிந்துரைக்கும் போக்கே இங்கு மிகுதியாக உள்ளது. அரிசி, கோதுமை போன்றவற்றைவிட குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்தே இந்த சிறுதானிய உணவுகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சந்தையில் தயாரிக்கப்பட்டு விற்கும் பொருள்களைவிட மசாலாவைப் போன்று சத்துமாவையும் சுயமாகத் தயாரித்து உணவில் சேர்க்க வேண்டிய அவசியமாகும். செர்லாக், நெஸ்டம், ஹார்லிக்ஸ், பூஸ்ட், விவா, காம்ப்ளான் போன்ற சந்தைப் பொருள்களைத் தவிர்ப்பது நமது குழந்தைகளின் உடலநலத்தை மட்டுமல்லாது நமது பணமும் விரையமாகாமல் தடுக்கும்.

உள்ளூர் வளங்களுக்கு என்றும் மதிப்பு இருப்பதில்லை. இன்றுள்ள வணிகமய கார்ப்பரேட் சந்தை காட்சியூடக விளம்பரங்கள் மூலம் நம்மையும் குழந்தைகளையும் மூளைச் சலவை செய்து விடுகின்றன. இங்கு பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். வேற்றிட வளங்களுக்கு முக்கியத்துவம் தருவதும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதும் சமச்சீர் உணவு சரிவர கிடைக்காமல் போக வழி ஏற்படுத்தி விடுகிறது.

முக்கனிகள் என அழைக்கப்படும் மா, பலா, வாழை ஆகியன நமது உள்ளூர் கனிவகைகளாகும். இவற்றை நாம் எந்தளவிற்குப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குறி. வாழைப்பழத்தை வெறும் வழிபாட்டுப் பொருளாக மாற்றிவிட்டோம். பழமையான வாழை ரகங்களை இழந்து மோரிஸ் போன்ற மரபணு மாற்றப் பயிர்களிடம் சரணடைந்துவிட்டோம். மரபணு மாற்றப்பட்ட பயிர் வகைகள் குறித்த எச்சரிக்கையுணர்வும் விழிப்பும் நம்மிடம் போதுமானதாக இல்லை. சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துகள், கலப்பட எண்ணெய்கள் போன்றவை நமது உடல்நலத்தைக் கடுமையாகப் பதிப்பதோடு மருத்துவச் செலவீனங்களை உயர்த்துகின்றன. இதில் உரிய கவனமும் செயல்முறைகளும் பின்பற்றப்படல் வேன்டும்.

பொதுவாக எந்தப் பழங்களும் இயற்கையாக பழுக்க வைக்கப்படுவதில்லை. எத்திலீன், கார்பைடு போன்ற வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது மாம்பழக் காலத்தில் மட்டுமே நமது அரசுகளுக்குப் பிரச்சினையாகப்படுகிறது. வாழைப்பழம் கூட வேதிப்பொருள்களைக் கொண்டே பழுக்க வைக்கப்படுகிறது. நாள்தோறும் நடக்கும் இத்தகைய செய்கைகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

முக்கனிகளைப் போன்றே கொய்யா, பப்பாளி, அன்னாசி, சப்போட்டா போன்ற எளிதில் கிடைக்கும் விலைகுறைந்த பழவகைகளையும் நாம் தவறவிட வேண்டியதில்லை. இதைப்போலவே காய்கறிகளில் பூசணிக்காய் போன்ற விலக்கப்பட்ட உணவுகளையும் மீட்டெடுத்து நம் உணவில் இணைக்க வேண்டிய தேவையிருக்கிறது. பழங்களைவிட அதிக சத்துகள் நிறைந்த உலர்கனிகளும் உணவில் குறிப்பிட்ட பங்கை வகிக்க முடியும்.

பதப்படுத்தப்பட்ட, புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது இன்றைய முதன்மைத் தேவையாகிறது. பதப்படுத்துதல் செயலுடன் பூச்சிக்கொல்லிகளைச் சேர்க்கும் அபாயம் நேர்கிறது. இதற்கான அளவு மற்றும் தரக்கட்டுப்பாடுகளை யாரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. அரசும் உரிய அமைப்புகளும் இவற்றைக் கண்காணிப்பதும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்களில் உலகத் தரக்கட்டுப்பாடுப் பரிந்துரைகள் முற்றாக புறக்கணிக்கப்படும் நிலையில் அவற்றைப் பயன்படுத்தாமலிருப்பது சாலச்சிறந்ததாகும். குடிநீருக்கும் உடல்நலத்தில் முதன்மைப்பங்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது.

கடல்நீரைக் குடிநீராக்கும் எதிர்சவ்வூடு பரவல் முறையில் தயாரிக்கப்படும் குடிநீரில் உப்புகள் மட்டுமல்லாமல் நமக்குத் தேவையான கனிமங்களும் நீக்கப்படுகின்றன. இம்மாதிரிதான் அளவுக்கதிகமான பூச்சிக்கொல்லிப் பயன்பாடு நமக்கு நன்மை செய்யும் உயிர்களை அழித்துள்ளது. இத்தகைய குடிநீரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்களும் நமது உடலுக்கு ஏற்றவையல்ல. இயற்கையான முறைகளில் தயாரிக்கப்பட்ட மென்பானங்கள், பழச்சாறுகள், இளநீர் போன்றவை இவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படலாம்.

இறைச்சி, முட்டை, பால், மீன்கள் போன்றவை நமது உணவில் முக்கியப் பங்காற்றுகின்றன. பிராய்லர் கோழி இறைச்சி, முட்டை, வளர்ப்பு மீன்கள், வளர்ப்பு இறால்கள் போன்ற நமது உடலுக்குத் தீங்கு செய்பவை. காரணம் இவற்றின் மீது செலுத்தப்படும் வளர் ஊக்கிகள் இவற்றை உண்ணும் நம்மைப் பெரிதும் பாதிக்கின்றன. இவற்றிற்கு மாற்றாக இயற்கையான முறைகளில் குளம், ஆறு, கடல்களில் வளர்ந்த மீனினங்களையும் நாட்டுக்கோழி, ஆட்டிறைச்சி, முட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது குறித்த சிந்தனை நமக்கு வேண்டும்.

இன்றைய சூழல் மிகக்கொடியதாக உள்ளது. அரசே மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்கிறது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இவற்றைப் பெறுவதில் நடைமுறையில் எவ்விதத் தடையுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே ஒரு டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வாங்கிக்கொண்டு சைக்கிளில் செல்லும்போது பாட்டில் உடைந்து 9 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். மதுவைத் தாண்டி கஞ்சா போன்ற போதைப்பொருள்கள், போதைப் பாக்குகள், குட்கா, சிகரெட் போன்றவை குழந்தைகளில் கையெட்டும் தூரத்தில் இருக்கின்றன. அடித்தட்டு குழந்தைகளில் சிலர் இவற்றைப் பயன்படுத்தவும் செய்கின்றனர். இவற்றிலிருந்து மீட்பதும் வளமான வருங்கால சமுதாயத்தைப் பலப்படுத்தவும் நல்ல உணவுமுறைகளில் ஈடுபாடு கொள்ளவும் செய்ய வேண்டும்.

புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்களைப் போல பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்கள் நமக்குத் தீங்கானவையே. ஆவின் பால் உள்ளிட்ட பொருள்களில் கலப்படம் இருப்பதை அறிந்து நெஞ்சு பதைக்க வைத்தது. அவற்றை அரசு எந்திரம் மிகத் தந்திரமாக மூடிமறைத்துவிட்டது. தனியார் பால் நிறுவனங்கள் எத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை. இங்கு எவ்வளவு கால்நடைகள் இருக்கின்றன என்கிற கணக்கும் இங்கு உற்பத்தியாகின்ற பால் உற்பத்தியும் நம்மைத் திகைக்க வைப்பன. இவை உண்மையில் பாலே அல்ல; பால் போன்ற வெள்ளை நிறப் பானம், அவ்வளவுதான். தேன் சந்தைகளில் டன்கணக்கில் விற்கப்படுகிறதே! உண்மையான தேன் எவ்வளவு? இம்மாதிரியான கலப்படப் பொருள்கள் நிறைந்த சந்தையில் உணவுச்சத்தைத் தீர்மானிப்பது மிகக்கடினமான ஒன்றாகும்.

இயற்கை உணவுகள் என்று சொல்வதுகூட பன்னாட்டு உணவுச் சந்தையின் ஒரு அங்கமாகியுள்ளது. இதற்கான வணிக அங்காடிகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. இவற்றில் உணவுகளைத் தேடுவதைத் தவிர்த்து நம்மால் முடிந்த அளவில் உணவை இயற்கையான முறையில் பெறவும், சமைத்து உண்ணவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். செயற்கைச் சுவையூட்டிகளுக்கு மாற்றான இயற்கை முறைகள், நமது சமையல் கைப்பக்குவம் வழியே சுவையூட்டவும் அவற்றை நம் குழந்தைகளுக்குப் பழக்கவும் வேண்டும். இது மிகக் கடினமான மற்றும் சவாலான பணி என்பதில் எவ்வித அய்யமுமில்லை. நமது குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு இதற்கான முன் தயாரிப்புகள் அவசியமானவை.


நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மார்ச் 2022


இத்துடன் வெளியான குருங்குளம் முத்து ராஜாவின் குழந்தைப்பாடல்….


ஒரு குழந்தைப்பாடல்

குருங்குளம் முத்துராஜா


கொல்லைக் காட்டில்….


சப்பாத்தி கொண்டையில பழுத்திருக்கு
உள்ளிருக்கும் முள் நீக்கி உச்சுக் கொட்டித்தின்னலாம்!
காரைக்காட்டு மூலையில கருநாவல் பழுத்திருக்கு
உதிரு முன்னே பறிச்சு வந்து உப்புப் போட்டுத் தின்னலாம்!
எல்லையம்மன் கோயில் பக்கம் எலந்தைப் பழம் பழுத்திருக்கு!
செங்காயா பறிச்சு வந்து சேர்ந்துக்கிட்டு தின்னலாம்!
ஈசான மூலையில ஈச்சங்குலைப் பழுத்திருக்கு
குச்சிக்கட்டி பறிச்சு வந்து குந்திக்கிட்டு தின்னலாம்
கொண்டித் தோப்புக்குள்ளாற கொடுக்காப்புளி பழுத்திருக்கு
கொம்பெடுத்து பறிச்சு வந்து கூடிக்கிட்டுத் தின்னலாம்!
காட்டுப்பழம் போல உங்க கடை மிட்டாய் இனிக்குமா?
கூட்டாளிக் கும்மாளம், கொண்டாட்டம் இருக்குமா?


(பன்னாட்டு பப்ஸ் பாக்கெட்டுகளுக்குள் விழுந்து கிடக்கும் பரிதாபத்துக்குரிய நம் குழந்தைகளுக்காக ஒரு பாட்டனின் பாட்டு.)


நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மார்ச் 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *