சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை

சங்க இலக்கியத் தொகுப்பு அரசியல்  மீதான விசாரணை

மு.சிவகுருநாதன்

          ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது. அச்செயலில் ஈடுபட்டோருக்கும் அவர்களது சார்புகளுக்கும் ஏற்றவாறு இவ்வரசியல் தொழிற்படுகிறது.  சங்க இலக்கியப் பனுவல்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க இயலாது. இங்கும் தொகுப்பாசிரியர், உரையாசிரியர் போன்றோரது அரசியலும் பக்கச் சாய்வும்  வெளிப்படவே செய்கின்றன. இத்தகைய விமர்சனங்களை பேரா. வையாபுரிப்பிள்ளை போன்ற சிலர் சுட்டியுள்ளனர். ஆனால் தமிழ் அறிவுலகம் இவற்றை முறையாகச்  செவிமெடுக்கவில்லை.

          அரசு, குடும்பம் போன்று இங்கு மொழியும் கெட்டித்தட்டிப்போன நிறுவனமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வழமையான வரையறைகள், கட்டமைப்புகளைத் தாண்டிய ஆய்வுகள் இன்னும் விரிவடையவில்லை. அறிவியலைப் போலவே புறவயமான ஆய்வுமுறை மொழிக்கும் சாத்தியமே என்பதை மரபுவழி மனங்கள் ஏற்க மறுக்கின்றன. ஆனால் தமிழ் மொழிக்குள்ளும் அதன் இலக்கியப் பனுவல்களுக்குள்ளும் பன்மைத்தன்மை ஊடாடிக் கிடக்கின்றது. வளமான அவைதீக மரபையும் கருத்தியல் செறிவையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. ஆனால் பிற்கால இடையீட்டால் மதத்துடன் தமிழ் வெகுவாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதைத் தகர்ப்பதும் மீளாய்வைப் புகுத்துவதும் அவ்வளவு எளிதான செயலல்ல. இந்தப் போலிக் கட்டமைப்புகள் தமிழைக் காத்திடாது; இவற்றை மாற்றினால் தமிழ் வீழ்ந்தும் விடாது. மத நம்பிக்கையைப் போன்ற இறுக்கமான நம்பிக்கைகள் மொழியிலும் நிலவுவதால் வந்த வினையிது.

       நண்பர் பேரா. தென்னவன் வெற்றிச்செல்வன் தமிழாய்வில் புதிய வெளிச்சங்களை உண்டாக்கிய சில அறிஞர்கள் வழியில் சங்கத் தமிழ் இலக்கியங்களை மீளாய்வு செய்த சில ஆய்வுக் கட்டுரைகள்  இந்நூலில் இடம்பெறுகின்றன. ஆழ்ந்தும் நுணுக்கமாகவும் எழுதப்பட்ட இக்கட்டுரைகளை வாசித்து விமர்சிப்பதும், இவற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதும் தமிழியல் ஆய்வுகளைச் செழுமைப்படுத்தும். அவர் சொல்வதுபோல, தமிழ்ச்செவ்வியல் தொகையாக்கத்தில் காலமும் கருத்தும் சார்ந்த முரண்களிருப்பதால் தர்க்க நியாயத்தோடு மறுவரையறை செய்யப்படுதலும், விமர்சனமற்று விதந்தோதுதல், போலிப்பற்றுறுதிகளில் திளைப்பு ஆகியவற்றிலிருந்து தமிழ்ச்சூழல் மடைமாறி, மீளாய்வுப் பணிகள் மேலும் துலங்கட்டும்.  அந்த வகையில் ஐந்தாவது வெளியீடாக ‘பன்மை’ இந்நூலைக்  கொண்டு வருவதில் பெருமை கொள்கிறது. வாசகர்களின் ஆதரவைக் கோருவதோடு, விமர்சனங்களை எடுத்துரைக்கவும் வேண்டுகிறோம்.

     (‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடான  பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்  எழுதிய  ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூலின் பதிப்புரை.)

நூல் விவரங்கள்:

 தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்

(ஆய்வுக் கட்டுரைகள்)

 பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்

முதல் பதிப்பு: பிப்ரவரி 2022

பக்கங்கள்:  136

விலை: ₹ 125

ISBN:   978-81-951842-9-3

வெளியீடு: 05

 பன்மை,

நிலா வீடு, 

2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், 

தியானபுரம் – விளமல்,

மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல்,

திருவாரூர் – 610004,

தமிழ்நாடு.

அலைபேசி:    9842402010  (G Pay)     9842802010  (Whatsapp)

மின்னஞ்சல்:    panmai2010@gmail.com

                             panmai@live.com

இணையம்: www.panmai.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *