இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…

இன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம்…

மு.சிவகுருநாதன்

      இன்று (15/04/2022) (புனித) வெள்ளியன்று நிலாக்களுடன் தீபங்குடி ஸ்ரீ தீபநாயக ஸ்வாமி ஜினாலயம் (திகம்பர சமணப் பள்ளி) சென்று வந்தோம். ஏற்கனவே ஐந்துமுறை அங்கு சென்றுள்ளேன். இன்று முதன்முறையாக கவி நிலா மற்றும் கயல் நிலா உடன்…

      திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிந்து 10 கி.மீ. தொலைவில் அரசவனங்காடு என்னும் ஊருக்கு உள்ளேயுள்ள அழகான சிற்றூர் தீபங்குடி ஆகும். கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் பிறந்த மண் இது. இங்கு இன்றும் சில சமணக் குடும்பங்கள் வசிக்கின்றன.

       அவைதீக சமயங்களில ஒன்றான சமண சமயத்தில் 24 தீர்த்தங்கரர்களை வழிபடுகின்றனர். முதலாவது தீர்த்தங்கரர் ரிஷபதேவர் எனப்படும் தீபநாயக ஸ்வாமிகள் ஆவார். ஆதிபகவன் என்றழைக்கப்படுபவரும் இவரே. திகம்பரச் சமணர் பிரிவைச் சேர்ந்த கோவிலாகும் இது.

     இறை (கடவுள்), வேதம் (மறை), சாதி (வருணம்), சடங்குகள் (மந்திரங்கள்) போன்றவற்றை மறுத்து உருவானவையே இந்த அவைதீக சமயங்கள். ஆனாலும் இவை இன்று வைதீக சமயங்களின் தாக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளன.

         திருவாரூர் மாவட்டத்தில் இரு சமணர் ஆலயங்கள் (ஜினாலயம்) இருக்கின்றன. ஒன்று தீபங்குடி; மற்றொன்று மன்னார்குடி. அங்குள்ளது ஸ்ரீ மல்லிநாதர் ஸ்வாமி ஜினாலயம். மல்லிநாதர் சமண மரபில் 19 வது தீர்த்தங்கரர் ஆவார். மகாவீரர் சமணத்தின் 24 வது இறுதித் தீர்த்தங்கராக வணங்கப்படுகிறார்.

       குழந்தைகளுக்கு விடுமுறையில் வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. எங்காவது செல்லவேண்டும் என்று துடிக்கின்றனர். கயல்நிலா சண்டை போடத் தொடங்கி விட்டார். எனவே திடீர் முடிவாகத் தீபங்குடி செல்ல முடிவாயிற்று.

        அங்கு முன்பு சென்று சுமார் நான்காண்டு இருக்கலாம். பூசகர் பார்வசநாதன் (அர்ச்சகர்) அவர்களைச் சந்தித்து, ஆலயத்தைத் திறந்து, ஆதிபகவனை வழிபட்டோம். பார்சவநாதர் சமண மரபில் வந்த 23 வது தீர்த்தங்கரர் ஆவார். எனவே அவருக்கு இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள். முன்பு அவரது சித்தப்பாவும் உடனிருந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லை. வருத்தமாக இருந்தது. நான்காண்டுகளுக்கு முன்பு அவர்கள் இருவரையும் பார்த்து உரையாடிச் சென்றது நினைவில் நிற்கிறது.

        சமணர் ஆலயமாக இருந்தபோதிலும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் (எண்கண் செயல் அலுவலரின் நிர்வாகத்தில்) இந்த கோயில் உள்ளது. ஆனால் வழிபாட்டு முறைகள் வேறாகும்.

      அர்ச்சகருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் இல்லை. இக்கோயிலுக்கு சொல்லும்படியான வருவாய் இல்லை. இருப்பினும் குறைவான ஊதியத்தில் தனது கடமையைத் தொடர்ந்து செய்துவருகிறார். அவருக்கும் நன்றி சொல்லிக் கிளம்பினோம்.

      திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலா இடங்களாக பல்வேறு இடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் பட்டியலிடப்படுகின்றன. இவ்விரண்டு சமணக் கோயில்களும் அப்பட்டியலில் இருப்பதில்லை.

        2010 இல் எழுதப்பட்ட தீபங்குடி சமணப் பள்ளி குறித்த எழுதப்பட்ட கட்டுரையின் இணைப்பு:

https://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *