அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்

 அறிவியலையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் பாடல்கள்

ஜெ.கிருஷ்ணமூர்த்தி,

செயலர்,

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்,      தமிழ்நாடு-புதுச்சேரி

        கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டும்தான் கல்வி என்ற நிலை மாற வேண்டும். சிறந்த  கேள்விகளைக் கேட்கும் திறனை வளர்ப்பதே    தலைசிறந்த கல்வி என்ற நிலை வர வேண்டும்.

          தகவல்கள் தரும் புத்தகங்கள் ஏராளமாய் உள்ளன. தகவல்களைத் தேடி அறிந்து கொள்ளத் தூண்டும் புத்தகங்களே இன்றைய தேவை. ஒவ்வொரு பாடத்திற்குள்ளும் ஒருங்கிணைந்த கல்வி அவசியம். சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் தேடல் நிறைந்த கல்வி இன்றைய காலத்தின் தேவை.

      ‘பாட்டும் பாடமும்’ புத்தகத்திலுள்ள 75 பாடல்களையும் ஒன்று விடாமல் வாசித்தேன். சில பாடல்கள் என்னை அதற்குள் வசிக்க வைத்துவிட்டன.

       அறிவியல் கருத்துள்ள பாடல்கள், தமிழ் மொழி/தமிழன் பெருமை உணர்த்தும் பாடல்கள், சூழலியல் பாடல்கள், திருக்குறளைப் போற்றும் பாடல்கள், மரங்களின் அவசியம் குறித்த பாடல்கள், வரலாற்று முக்கியத்துவத்தைப் பறைசாற்றும் பாடல்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் போற்றும் பாடல்கள், குழந்தை/பறவை/விலங்கு குறித்த பாடல்கள்… இன்னும் ஏராளமான பாடல்களை வாசித்து, வாசித்த பரவசம் பெற்றேன்.

       அகில இந்திய அறிவியல் கலைப்பயணத்தின் தென்னிந்தியப் பொறுப்பாளாராக கடந்த 1987 அக்டோபர் 2 முதல் நவம்பர் 7 வரை பயணம் செய்த அந்த நாட்களை இந்தப் பாடல்கள் நினைவுக்கு கொண்டு வந்தன. அன்று நாங்கள் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பாடிய பாடல்கள் அறிவியல் கண்ணோட்டமும்  சமூகப் பொறுப்பும் மிக்கவை. புத்தக ஆசிரியர் திருமிகு முத்து ராஜா அவர்களின் பாடல்கள் முழுவதிலும் இதைக் கண்டேன்.

            என்னைக் கவர்ந்த/சிந்திக்க வைத்த பாடல் வரிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன். வாசகர்களை, குறிப்பாக மாணவர்களை இந்த வரிகள் ஈர்க்கும் என நம்புகிறேன்.

‘சோறு’ என்ற பாடலில்,

“உண்ணும் முன்னே உழவருக்கு நன்றி சொல்லுவோம்!

உணவளிக்கும் உழவுத் தொழிலைத் தொழுதுப் போற்றுவோம்!”

‘நகை பூட்டு’ என்ற பாடலில்,

“வாய்மையும் நகையும் வாய்க்கழகு!”

‘மத நல்லிணக்கம்’ என்ற பாடலில்,

“தேடி நடக்கும் வழிகள் பல பிரிந்து கிடக்கலாம்

சேருமிடம் ஒன்றேதான் புரிந்து கொள்ளுவோம்!”

‘வானவில்’ என்ற பாடலில்,

“நீர்த்திவலை மறித்திடவே கதிரொளியும் சிதறுது

நிறப்பிரிகை விரிவதாலே வானவில்லும் தெரியுது!”

‘பாடு பாப்பா விளையாடு பாப்பா’ என்ற பாடலில்,

“வீடு நாடு எல்லை கடந்து உலகம் தொடுவது விளையாட்டு”

‘பாட்டி’ என்ற பாடலில்,

“பாட்டியின் முறுக்குப் பக்குவமும்

பாக்கெட் சிப்சில் வந்திடுமோ?”

 ‘கொடி காத்த குமரன்’ என்ற பாடலில்,

“கொடிக்கு செய்யும் வணக்கமது நம்

குமரனுக்கும் போய்ச் சேரும்!”

‘உப்பு! உப்பு! உப்பு’ என்ற பாடலில்,

“பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை

காந்தி உலுக்கிடச் சரித்திரமானது உப்பு!”

‘தண்ணீர்’ என்ற பாடலில்,

“இங்கே மூணு சதம் மட்டுந்தானே நல்லத் தண்ணி சாமி!

இரண்டு சதம் உறைஞ்சுக் கிடக்கு பனிமலையாக

கைக்கெட்டும் குடிநீரோ அரைச் சதம் தாங்க!”

 ‘ரயில்’ என்ற பாடலில்

“தெற்கும் வடக்கும் தொடுகின்ற சிக்கு புக்கு ரயில் இது!

ஒன்று சேர்ந்த இந்தியாவின் ஒற்றுமையைக் காட்டுது!”

‘கிரக தோஷம்’ என்ற பாடலில்,

“உயிர்களில்லா கிரகங்களை சுத்தி வணங்குற – நீ

உயிர்வாழும் கிரகத்தையே சுரண்டி அழிக்கிற!”

‘உண்டி வில்’ என்ற பாடலில்,

“பழந்தின்னும் பறவைகளை அடிக்கக் கூடாது – தம்பி

பறவை தின்னும் பழங்களையே அடிச்சு தின்னுங்க!”

 ‘அப்பாவின் ஆசை’ என்ற பாடலில்,

“உழைக்கும் மக்கள் வாழ நல்ல வழி வகுக்கணும்  – இது

உன்னோட அப்பன் ஆசை தீர்த்து வைக்கணும்!”

‘மரங்களை வெட்டாதே’ என்ற பாடலில்,

“ஒற்றை மரமென எண்ணாதே – அது

ஓராயிரம் உயிர்களின் வாழிடமே!”

 ‘இணைத்துக் கொள்வோம்’ என்ற பாடலில்,

“இரக்கப்படவே  வேண்டாமே! (மாற்றுத் திறனாளியைப் பார்த்து)

இணைத்துச் செல்வோம் அவர்களையும்!”

‘சதுரங்கம்’ என்ற பாடலில்,

“ஊராளும் மன்னன் – மக்கள்  ஒன்னுகூடி இருக்கணும்!

ஒத்துமையா இல்லேன்னா ஒத்தையில சாகணும்!”

‘கெஜார்லி படுகொலை’  என்ற பாடலில்,

“வீழும் மரத்தைக் காட்டிலுமே

விலை உயர்ந்தது எனதுயிரோ?

வெட்டடா எனையே என்றவளும்

கட்டிப்பிடித்தாள் மரத்தினையே!”

 ‘சிக்கனம்’ என்ற பாடலில்,

“நாலு பேரும் கூடி உழைச்சி நடுவில் வைக்கணும்

நம்மத் தேவைக்கு அளவோட பார்த்து எடுக்கணும்!

தேவைக்கு மேல் திரட்டுவதும் திருட்டுதானடா!

சிக்கனமும் பொதுவுடைமைச் சின்னம் பாரடா!”

‘இயற்கை வளங்கள் காப்போம்’ என்ற பாடலில்,

“இருக்கும் வரையில் வாழ்ந்திடுவோம்!

இனி வருவோரிடமும் ஒப்படைப்போம்!”

‘தூய தமிழில் பேசுவோம்’ என்ற பாடலில்,

“இரவல் உடையில் ஊர்வலமாய்

இடையில் எதற்கு வேற்றுமொழி?”

‘கிராமத்துக் குழந்தைகள்’ என்ற பாடலில்,

“காட்டுப்பழம் போல

உங்க கடை மிட்டாய் இனிக்குமா?”

‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா’ என்ற பாடலில்,

“பொதுவுடைமைப் போற்றுவாய் வா வா வா!”

‘மணல்’ என்ற பாடலில்,

“அற்புதத் துகள் நீ வடிவெடுக்க

ஆயிரம் கோடி ஆண்டுகளாம்!

அருமை அறியா அறிவிலிகள்

அலட்சியப்படுத்தி அள்ளுகிறார்!”

                   கிட்டத்தட்ட 25 பாடல்களைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு பாடலிலும் ஆசிரியரின் அழகுணர்வு, அறிவியல்/சமூகப் பார்வை வெளிப்படுகிறது. முக்கியமாக இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்கள், குறிப்பாக மாணவர்களிடம் சமூகப் பொறுப்பை ஏற்படுத்துவதில் கவனமாக இருந்திருக்கிறார்.

      மூடநம்பிக்கையை எதிர்த்து உறுதியாகக் கேள்வி கேட்பதில் இவரைவிட சாதுர்யமாக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே! பொருளாதாரச் சமத்துவம், சமூகச் சமத்துவம் பற்றிய பாடல்கள் வலுவானவை. பாலினச் சமத்துவப் பாடல்களும், சாதியச் சமத்துவப் பாடல்களும் இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

         அன்புத் தோழர் முத்து ராஜா அவர்களின் மாணவர்கள் பெரும் வாய்ப்பு பெற்றவர்கள். ஆசிரியச் சமூகம், மாணவர் சமூகம் அவசியம் வாங்கிப் படித்துப் பயன்படுத்த வேண்டிய நூல் ‘பாட்டும் பாடமும்’.

       எளிய/தரமான மொழி வளம், கருத்துச் செறிவு, அறிவியல்/சமூகக் கண்ணோட்டம் இந்த நூல் ஆசிரியரின் சிறப்பு. ‘பன்மை’ வெளியீடாக இப்புத்தகம் வருவதில் பெரு மகிழ்ச்சி.

          இன்றைய கல்விச் சமூகம் போற்றிக் கொண்டாடும் நூலாக வரவேற்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நூலாசிரியர் தோழர் முத்து ராஜா மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துகிறேன்.

 (பாட்டும் பாடமும் நூலின் அணிந்துரை.)

நூல் விவரங்கள்:

பாட்டும் பாடமும்  (சிறுவர் பாடல்கள்)

 குருங்குளம் முத்து ராஜா

முதல் பதிப்பு: ஏப்ரல் 2022

பக்கங்கள்:  108

விலை: ₹ 100

ISBN:   978-81-951842-8-6

வெளியீடு:

பன்மை,  நிலா வீடு,  2/396, பி, புரட்டாசி வீதி,

கூட்டுறவு நகர்,  தியானபுரம் – விளமல், 

மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல், திருவாரூர் – 610004.

 அலைபேசி:    9842402010  (G Pay)   9842802010 (Whatsapp)

 மின்னஞ்சல் :       panmai2010@gmail.com

                                 panmai@live.com

  இணையம்:     https://panmai.in .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *