அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!

அரசுப் பள்ளிகளில் தனிப்பட்ட செயல்களுக்கு இடமில்லை!

மு.சிவகுருநாதன்

      கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய ஆசிரியரும் தலைமையாசிரியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவரும் மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். இம்மாதிரியான நிகழ்வுகள் ஏன் பள்ளிகளில், வகுப்பறைகளில் நடைபெறுகின்றன? இத்தகைய செயல்களைச் செய்கின்ற ஆசிரியர்களது மனநிலை என்னவாக இருக்கிறது என்பது விரிவான ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

      பள்ளிகள் அனைவருக்கும் பொதுவான இடம். அரசு சாராத, தனிப்பட்ட, சாதி, மத விவகாரங்களுக்கும் அவை சார்ந்த நிகழ்வுகளுக்கும் பள்ளிகளில் இடம்தர இயலாது. ஆயுதபூசை, சரஸ்வதி பூசை போன்ற மதப் பண்டிகைகள் பள்ளிகளில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்ததால் அவை கூடாது என அரசாணைகளும் சுற்றறிக்கைகளும்  வெளியிட்ட நிகழ்வுகளும் உண்டு. 

       அரசுப்பள்ளிகளில் அரசு மதிய உணவு வழங்குகிறது. ஆசிரியர்கள் தங்களது சொந்தச் செலவிலோ, நன்கொடைகள் மூலமோ மாணவர்களுக்கு உணவு அளிக்க வேண்டிய தேவை என்ன?  வேண்டுமானால் நூல்கள், எழுதுபொருள்கள் என பரிசளிக்கலாம்.  உணவு விருந்து அளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? கோயில்களில் நடக்கும் அன்னதானங்களைப்போல பள்ளியை மாற்றலாமா? இதில் ஆசிரியர் புரவலர் மற்றும் வள்ளலாக மேனிலையாக்கம் பெறுகிறார். இங்கு கொடுப்பவர், பெறுபவர் என்ற உணர்வுடன் ஆதிக்கமும், அதிகாரமும் நிலைநாட்டப்படுகிறது. இவற்றைப் படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிரும் அவலமும் நடக்கிறது.

      இதுபோன்ற நிகழ்வுகளை அவர்கள் விடுமுறை நாள்களிலோ, பள்ளி நேரத்திற்குப் பின்பு பள்ளி வளாகம் தவிர்த்த தனியார் வாடகை இடங்கள், கூட்ட அரங்குகளில் யாரை வேண்டுமானாலும் அழைத்து நடத்தத் தடையேதும் இல்லை. பள்ளியில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆசிரியர்களின்  மனப்பான்மை  மிக மோசமானதாகும். குழந்தைகளுக்கும் இவ்வாறு செய்கிறோம் என்று சொன்னாலும் அது கண்டிக்கத்தக்கது. வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தால் அங்கு கற்றல்-கற்பித்தல் எப்போது நிகழும்? பொதுத்தேர்வு நேரங்களில் மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபடும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. வீட்டில் பெற்றோர்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஆசிரியர்கள் செய்யத் தொடங்கினால் ஆசிரியர்களின் பணியை யார் செய்வது என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

     மதச்சார்பற்ற நாட்டில் மதச்சார்பற்ற பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றே சொல்லவேண்டும். கல்வித்துறை என்றில்லாமல் அனைத்துத் துறைகளும் மதம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்டே இயங்குகின்றன. அடிக்கல் நாட்டுதல்,  பூமி பூசை, புதிய கட்டிடம் திறப்பு, யாகங்கள் செய்தல், அணைத்திறப்பு என அனைத்தும் மதச்சடங்காக நடத்தி முடிக்கப்படுகின்றன. மழைவேண்டி யாகம் நடத்த உத்திரவிட்ட துறையும் தமிழகத்தில் இருக்கிறது. 

       தனிப்பட்ட நிகழ்வுகளும் மதம் சார்ந்தவைதான். பொது நிகழ்வுகளை மதம் சாராத வகையில் அனைவருக்கும் பொதுவானதாக நடத்தும் செயல்திட்டங்கள எங்கும் இல்லை. இதற்கான தெளிவான வரைமுறைகள்  வகுக்கப்பட வேண்டும். 

     பள்ளிகளில் அரசின் ‘கல்வி வளர்ச்சி நாள்’ போன்ற விழாக்கள் மட்டுமே கொண்டாடப்பட வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் மதிய, மாலை விருந்துகளும் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். பள்ளிகள் என்பவை பிற அலுவலகங்கள் போலில்லை. இங்கு குழந்தைகள் கல்வி பயில்கிறார்கள். எனவே, அவர்கள் பார்வையில் ஆசிரியர்கள் விருந்துண்ணும் கேளிக்கைகளில் ஈடுபடுவதும் குழந்தைகளை அதற்கு ஏவலாளாகப் பயன்படுத்துவதும் வன்மையான கண்டனத்திற்குரியவை. பிற விழாக்களும் தனிப்பட்ட விருந்துகளும் தடை செய்யப்பட வேண்டும். பள்ளி வளாகத்தை இதரப் பணிகளுக்கு தனியார் மற்றும் பிற அமைப்புகள் பயன்படுத்துவதை முற்றாகத் தடுக்க வேண்டும்.

           கல்விப்பணியில் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த இவ்வாறு விருதுகள் வழங்குகிறோம் என்ற கருத்தும் ஏற்புடையதல்ல. உண்மையில்  ஊக்கப்படுத்தப்பட வேண்டியது மாணவர்களான குழந்தைகள் மட்டுமே. ஊதியம் பெறும் ஆசிரியர்களைவிட பல்வேறு கடினச் சூழல்களில் கல்விபெறும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு உணவு விருந்துகளைவிட பரிசுகள், பாராட்டுகள் அவர்களது கல்வியை மேம்படுத்தும். தூய்மைப் பணியாளர், செவிலியர், அஞ்சல்காரர், இரவுக்காவலர் என பல்வேறு வகையான சமூகச் சேவகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. கொரோனாவிற்கு முன்பு தூய்மைப் பணியாளர்கள் எவ்வாறு பலரால் கண்டுகொள்ளப்பட்டனர்? அதன்பிறகும் வெறும் பாதபூசை செய்வதும் மாலைபோடுவதும் என்றாகிப் போன நிலையையும்  நாம் கண்டு வருகிறோம்.  

       தங்களது முகத்தை வெளிக்காட்டாமல் பல ஆசிரியர்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர். மறுபுறத்தில் விருதுகள், புகழ், ஊடக வெளிச்சம் படவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுப் பணியாற்றும் பலர் ஊடுருவி இருக்கின்றார்கள். இவர்கள் கல்வியில் களைகளைப் போன்றவர்கள். ஒன்றிய – மாநில நல்லாசிரியர் விருதுகள், ரோட்டரி – லயன்ஸ் கிளப் விருதுகள், அச்சு – காட்சியூடக விருதுகள் மற்றும் இதர அமைப்புகளில் அளிக்கும் விருதுகளுக்கான செயல்படும் பல்வேறு விளம்பரப் பிரியர்கள் நிரம்பியதாக இன்றைய கல்வித்துறை இருக்கிறது. இது கல்விக்கு  வளம் சேர்க்காது; மாறாக கல்வியை கேலிக்கூத்தாக்கும்.

      இவர்கள் எதையும் விருதுகளுக்கும் சுய விளம்பரத்திற்கான கச்சாப்பொருளாக மற்றும் நுட்பம் கைவரப்பெற்றவர்கள். வலதுகரம் கொடுப்பதை இடதுகரம் அறியாது என்பது பழங்கதை! இவர்கள் எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர்கள். அந்த விளம்பர போதை ஒருபுறமும் விருதுக்கான பின்னணி வேலைகளிலும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இது கல்விச்சூழலுக்கு ஏற்புடையதல்ல.

       கல்வியை ‘அவுட் சோர்சிங்காக’ மாற்ற விரும்பும் அரசுகள் இவற்றை மறைமுகமாக ஆதரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு கட்டடம் கட்டி சில ஆண்டுகளில் பழுதடைகிறது. இதற்குக் காரணம் தரமற்ற கட்டுமானம், ஊழல்.  இதுகுறித்து யாரும் புகார் செய்வதில்லை. அங்குப் பணியாற்றும் சில ஆசிரியர்கள் நன்கொடைகள் அல்லது சொந்தப் பணத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு விளம்பர வெளிச்சம் கிடைக்கிறது. கூடவே ஊழலும் மூடி மறுக்கப்படுகிறது. 

       நல்லாசிரியர் விருதுகளுக்குப் பின்னாலுள்ள திரைமறைவு பேரங்கள், ஊழல்கள் மற்றும் அரசியல் யாவரும் அறிந்த ஒன்று. இவ்விருதுகளை விண்ணப்பித்துப் பெறும் முறையே வழக்கில் உள்ளது. இதுவும் மிகவும் மோசமான நிலையாகும்.  எனவே அரசுகள் இவற்றை நிறுத்திவிடுவது சாலச்சிறந்ததாகும். தனியார் அமைப்புகள் சார்ந்த விருதுகளையும் பெறுவதற்கு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தடைவிதிக்க வேண்டும். அவர்கள் வேண்டுமானல் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கட்டும். அவர்கள்தான் மிகக்குறைவான ஊதியத்தில் பணிபுரிகிறார்கள். ஆகவே, விருதுகளாவது அவர்களை எட்டட்டுமே!

     அரசுப்பள்ளிக் குழந்தைகளை ஏதிலிகளாக நடத்துவதை  அரசும் ஆசிரியர்களும் கைவிட வேண்டும். கல்வி சார்ந்த உதவிகளை பெருமளவு அரசு செய்கிறது. பிற உதவிகளை ஆசிரியர்கள் செய்ய நினைத்தால் விளம்பரம், ஒளிப்படங்கள் இன்றி செய்யலாம். ஆனால் பெரும்பாலும் விழாக்கள், விருந்துகள், இணைய ஊடகங்களில் குழந்தைகளின் படங்கள், காணொளிகளை வெளியிட்டு இவர்களது வள்ளல்தன்மையை நிருபிக்கும் நிலை கொடூரமானதாகும்.

              பொதுத்தேர்வுகள் குழந்தைகளை மனதை வெகுவாகப் பாதிக்கின்றன. இதனால் தேர்வு முடிவுகள் வரும்போது தற்கொலைகள் நடக்கின்றன. இக்குழந்தைகளுக்குள்ள குடும்ப, சமூக, பள்ளி நெருக்கடிகளுக்கு இணையாக காட்சி மற்றும் அச்சு ஊடகங்கங்களும் ஆலோசனை என்று தம் பங்கிற்கு கிளம்பிவிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளும் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிகளில் நடைபெற வேண்டிய நிகழ்வுகள் குறித்த வரையறைகளும் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டு அவற்றைப் பின்பற்றக்கூடிய சூழலும் உருவாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *