மாஃபியாக்கள் – காவிகள் பிடியில் தமிழகக் கல்வி

மாஃபியாக்கள் – காவிகள் பிடியில் தமிழகக் கல்வி  

மு.சிவகுருநாதன்

          பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களை ஒப்பிட்டு தமிழ்நாடு கல்வியில் முன்னணியில் இருப்பதாக புகழ்வதும் பெரியார் மண் எனப் பெருமிதம் கொள்வதும் நமது வாடிக்கையாகிவிட்டது. ‘திராவிட மாடல்’ அரசு என்கிற தற்புகழ்ச்சியும் இதில் சேர்ந்துகொண்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நிராகரித்து நமக்கான கல்விக்கொள்கையை உருவாக்க ஒரு குழுவை அமைத்த முதலும் கடைசியுமான மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டுக் கல்வியின் நிலை எவ்வாறு உள்ளது? எதிர்காலத்தில் இது எப்படி இருக்கும் என்று தொலைநோக்கில் சிந்தித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

       சென்னை பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி மாணவி தற்கொலை, கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி இன்டர்நேஷனல் பள்ளி விடுதியில் தங்கி +2 படித்த மாணவியின் மர்ம மரணம் என நிறுவனக் கொலைகள் (Institutional Murder) தொடர்கின்றன. தமிழக அரசுக்குச் சொந்தமான 31 ஏக்கர் நிலத்தை ஆக்ரமித்து 35 ஆண்டுகளாகச் செயல்படும் தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திடமிருந்து அரசு நிலத்தை நீதிமன்றம் உத்திரவிட்டும் மீட்க முடியவில்லை. அந்த இடத்திற்குப் பதிலாக வேறிடம் தருவதாக அவர்கள் நீதிமன்றம் செல்கின்றனர். ஆனால் சென்னையில் பூர்வகுடி மக்களின் குடிசை வீடுகள்  ஒரே நாளில் தரைமட்டமாகின்றன. தமிழகப் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியின் நிலையைக் காட்டும் அண்மைக்கால எடுத்துக்காட்டுகள் இவை. திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள் நலத்தைப் பேணவேண்டிய அரசும் காவல்துறையும் போன்றவை பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்கவில்லை. மாறாக இந்த கல்வி மாஃபியாக்களுக்கும் காவிகளுக்கும் சேவையாற்றும் பணியில் தங்களை  மும்முரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த  அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. அதன் பரிந்துரைகள் கசிந்ததே தவிர அதன் பரிந்துரைகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை. இவையெல்லாம் தமிழக அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.

      கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இன்னும் வன்முறை பற்றிப் பேசி திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கலவரக்காரர்கள் சொல்லியவற்றுக்கு ஈடாக அரசின் அமைச்சர்கள் 3000 மாணவர்களது எதிர்காலம் பாழாகிவிட்டதாகக் கூறி மக்களை திசைதிருப்பினர். அப்பள்ளி மாணவர்களில் சிலநூறு பேரின்  10, +1 மதிப்பெண் பட்டியல்களை பள்ளிக்கல்வித்துறையே மீட்டெடுக்கும் நிலை இருந்தும் தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு பெரிய இயக்கமே நடத்தியது.

      அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. நல்லதுதான். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சொற்பொழிவுகள் என்கிற பேரில் பணம் பார்க்கின்றனர். இது எந்தக் கணக்கிலும் வராது. தற்போது பணியிலிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் தனியார் சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  இம்மாதிரியான சொற்பொழிவுகள், தன்னம்பிக்கையூட்டல்கள் செய்து லட்சக்கணக்கில் பணம் சேர்க்கின்றன. இவர்கள் தொடர்புடைய நிறுவனம் சர்ச்சையில் சிக்கும்போது எப்படி முறையான விசாரணை நடைபெறும்? இதை கள்ளக்குறிச்சி நிகழ்வில் கண்டோம்.

          சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சிறார்களுக்குக் கட்டாயப்படுத்திப் போதைப்பொருள் அளித்தல் என்ற பிரிவும் பின்னாளில் சேர்க்கப்பட்டது. விடுதியில் தங்கியிருந்த குழந்தைக்கு போதைப்பொருள் யாரால் வழங்கப்பட்டது? சமபவத்தன்று அங்கு நடந்ததாகச் சொல்லப்படும் பிறந்த நாள் மது விருந்து, அதில் பங்கேற்ற பிறர் பற்றியெல்லாம் விசாரணை இன்னும் நீளவே இல்லை. ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐவரைத்தவிர (நிறுவனர், தாளாளர், முதல்வர், இரு ஆசிரியைகள்) பிறர் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அப்படியென்றால் இவர்கள் ஐவர் மட்டுமே மது விருந்து கொண்டாடினார்களா? ஆனால் மறுபுறம் வன்முறையாளர்கள் என்று பலர் தேடித்தேடிக் கைது செய்யப்படுகின்றனர். இப்பள்ளியின் உரிமையாளரின் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஆதிக்கச்சாதிச் சார்புகள் உண்மைகளைக் குழிதோண்டி புதைக்கப் போதுமானதாக இருக்கின்றன.

        பள்ளி, தங்கும் விடுதி, தாளாளர் இல்லம், அலுவலகம் அனைத்தும் ஒரே இடத்தில் செயல்பட பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதித்தது? இதற்குச் சட்டத்தில் இடமுண்டா? இந்த விடுதியும் அனுமதியின்றிச் செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது? இதன் பின்னரும் தமிழகமெங்கும் செயல்பாடும் ஆயிரக்கணக்கிலான ‘கோழிப்பண்ணைப் பள்ளி’களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லையே, ஏன்? கல்வி என்பது கோடிகள் புரளும் மாஃபியா தொழில். எனவே பணத்தால் அவர்கள் எல்லாவற்றையும் வளைத்துவிடுகிறார்கள். மேலும் அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் இத்தொழில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடமுடியும் என்றால் ஏன் பள்ளிகளை மூட இயலுவதில்லை என்பதே இதைத் தெளிவாக்கும் காரணியாகும். தனியார் சுயநிதிப்பள்ளிகளைக் கண்காணிக்க, முறைப்படுத்த உரிய சட்டங்கள் இதுவரை இல்லை.

       கல்வித் தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலராக (CEO) தினமலரில் பணியாற்றிய, ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட, ‘சாணக்யா’ ரங்கராஜ் பாண்டேவின் நெருங்கிய நண்பர் மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகங்களில் பலர் சுட்டியதையடுத்து இந்த நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வருகின்றது.

      கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் ஆர்.எஸ்.எஸ். மனநிலையில் செயல்படுகின்றன. புதியப் பாடநூல் உருவாக்கத்திலும் அவர்களது பல்வேறு செயல்பாடுகளிலும் இதைக் காண முடிந்தது. தற்போது கல்வித் தொலைக்காட்சியும் முற்றிலும் காவியாக மாறுவது இந்த அரசு முழுக்க, முழுக்க ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்கிற அய்யத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.  

          மோடியின் சென்ற ஆட்சிக்காலத்தில் மனிதவள மேம்ப்பாட்டுத்துறைக்கு ஸ்மிருதி ரானி அமைச்சராக்கப்பட்டார். தற்போது அத்துறையின் பெயர்கூட கல்வித்துறை என மாற்றப்பட்டது. அதைப்போலவே தமிழகத்திலும் நடப்பது சரியல்ல. மிகவும் முதன்மையான துறைக்கு நன்றாகச் செயல்படக்கூடிய அமைச்சர் தேவை என்பதைக்கூட தமிழக முதல்வர் விரும்பவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.

       ஆர்.எஸ்.எஸ். சார்புடைய மாலன், ரங்கராஜ் பாண்டே, சமஸ் போன்றவர்களுக்கு சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சி, முரசொலி, சன் குழும இதழ்கள் போன்றவற்றில்  பொறுப்புகள் அளிப்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மக்கள் வரிப்பணத்தில் அரசு மற்றும் கல்வித்துறைகளில் இத்தகைய காவிகளை உள்நுழைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்துத்துவா கும்பல்களை இங்கு வளர்த்தெடுப்பது தமிழகத்திற்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை உரியவர்கள் உணரவில்லை என்பது வருந்தத்தக்கது.

      துணைவேந்தர்கள் நியமனம், கூட்டம் என ஆளுநர் ரவி உயர்கல்வியை தனது கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். பள்ளிக்கல்வியும் நேரடியாகக் காவிகள் மற்றும் மாஃபியாக்கள் கைகளில் இருப்பது தமிழகத்தைச் சீர்குலைத்துவிடும். இதற்கு மாநில அரசே உதவி செய்வதும் கண்டுகொள்ளாமலிருப்பதும் மிகவும்  அபாயகரமானதாகும்.     

நன்றி: படம் – புதிய விடியல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *