இந்து மதப் புனித இடங்கள் மட்டுமா?

இந்து மதப் புனித இடங்கள் மட்டுமா?

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 01)

நமது அரசியல் சட்டம் நாட்டை மதச்சார்பற்ற நாடாக வரையறுக்கிறது. இது வெறும் ஏட்டளவில் போய்விடும் அபாயம் நம்மை எதிர்நோக்கியுள்ளது. எங்கும் பெரும்பான்மை வாதம் தலை தூக்குகிறது. இது பிறர் (Others) மீதான வெறுப்பை வளர்க்கிறது. இந்த வெறுப்பரசியல் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவை. இத்தகைய கசடுகளை வெளியேற்ற வேண்டிய கல்வியே, மாறாக அவற்றைத் திணிக்க முயல்வது மிக மோசமானதாகும்.

பாடநூல்களை மிக விரிவாக எமது ‘கல்வி அபத்தங்கள்’ (600 பக்கங்கள், பன்மை வெளியீடு) என்ற பெருநூலில் மிக விரிவாகப் பேசியவிட்ட போதிலும் இங்கு சுருக்கமான சிலவற்றை இன்றைய சூழல் கருதி சுட்டுவது பொருத்தமானது என்று கருதுகிறேன்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் புவியியல் பகுதியில் “இந்தியா-அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு” என்றொரு பாடம் உள்ளது. இப்பாடத்தில் “இமயமலையின் முக்கியத்துவம்”, என்ற தலைப்பில் “பல கோடை வாழிடங்களும், புனிதத்தலங்களான அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணதேவி கோயில்களும் இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன”, (பக். 143, 10 சமூக அறிவியல், திருத்திய பதிப்பு 2022) என்று சொல்லப்படுகிறது.

உண்மையில் இமயமலையில் பவுத்த, சமண, சீக்கிய, இஸ்லாமிய புனித இடங்கள் பல உள்ளன. அவற்றை மறைத்து இந்துக் (சைவம் மற்றும் வைணவம்) கோயில்களை மட்டும் பட்டியலிடுவது இந்துத்துவம் அன்றி வேறில்லை. பாடநூல் எழுதுபவர்கள் இவ்வாறு ஒரு சார்பாக நிற்பதும் பிற சமய புனித இடங்களை மறைப்பதும் நியாயமில்லை.

இதே பாடத்தில் காவிரி, ” கர்நாடகாவில் இரண்டாகப் பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்குகிறதாம்”, (பக். 149). ஆறுகள் உருவாக்கும் இன்னபிற தீவுகள் புனிதமற்றுப் போவதேன்?

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *