இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி?

இந்திய நீதித்துறையில் மனு ஸ்மிருதி?

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 02)

    மு.சிவகுருநாதன்

       வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனு நீதியைப் பொது நீதியாக்கும் வழக்கம் நமது பாடமெழுதிகளுக்கு உண்டு. மனுநீதிச் சோழன் புராணக்கதையை வரலாறாகப் பாவிப்பது இவர்களது புலமைக்குச் சான்றாகும். நான்காம் வகுப்பு இரண்டாம் பருவத் தமிழ்ப் பாடநூலில் மனுநீதிச்சோழன் பாடம் உண்டு.

      நீதித்துறை என்று வரும்போது கூட மனுநீதியுடன் ஒப்பிட்டு எழுதுவதே வாடிக்கை.  எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் அலகு: 02 நீதித்துறை. இதில் ‘பண்டைய காலத்தில் நீதித்துறை’ எனும் தலைப்பில் மநுதர்மத்தின் பெருமை பேசப்படுகிறது. அப்பகுதி பின்வருமாறு:

      “பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து  சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.  அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.  பெரும்பாலான அரசர்களின் அவைகளில்  தர்மத்தின் அடிப்படையில் (நன்னடத்தை,  கடமை) நீதி வழங்கப்பட்டது. இவை மரபார்ந்த சட்டத் தொகுப்புகளாகும். தர்மத்தின் சட்டங்கள் தனிமனிதனை மட்டுமல்லாது சமூகத்தையும்  நிர்வகித்தது.

ஸ்மிருதி இலக்கியங்கள்

       பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தன. அவை மனுஸ்மிருதி,  நாரதஸ்மிருதி, யக்ஞவல்கிய ஸ்மிருதி  போன்றவையாகும்”. (பக்.259)

      பயிற்சி வினாக்களில் பொருத்துக பகுதியில் ஸ்மிருதியை  சமூகக் கடமைகளுடன் பொருத்தச் சொல்கிறார்கள். (பக்.267)

      வேத – இந்துமத சட்டத் தொகுப்புகளை தனிமனித, சமூகக் கடமைகளாக மாற்றி குழந்தைகளின் மனதில் இந்துத்துவாவை திணிக்கும் வெறித்தனம் வீழ்த்தப்பட வேண்டும். இதர சிறுபான்மை மதங்களின் சட்ட நடைமுறைகளை இவ்வாறு பொதுமையாக்குவார்களா?

     “ஸ்மிருதி – சமூக கடமைகள்” என்று எழுதும் ஆசிரியர்களும் அதைப் படிக்கும்  மாணவர்களும், இந்த ‘ஸ்மிருதி இலக்கியங்கள்’ என்ன பேசின, எத்தகைய கடமைகளையும் நன்னடத்தைகளையும் வலியுறுத்தின என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

        வருணாஸ்ரமத்தை உயர்த்திப் பிடிக்கும், கொண்டாடும் பாடநூல்களுக்கு தமிழகத்தில் என்ன வேலை? ஒட்டுமொத்த தமிழகத்தையும் காவிகளின் கூடாரமாக்க பள்ளிக் கல்வித்துறை எடுக்கும் முயற்சியை அனைவரும் கண்டிக்கவும் அவற்றை நீக்கவும் முன்வர வேண்டும்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published.