தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்

தகைசால் பள்ளிகளும் பிஎம் ஶ்ரீ பள்ளிகளும்

மு.சிவகுருநாதன்

             தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, அரசு, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும்  மாநகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மருத்துவ பரிசோதனை, தகைசால் பள்ளிகள், நகர்ப்புற மருத்துவ நிலையம், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட விரிவாக்கம்  உள்ளிட்ட ஐந்து  திட்டங்களை  மே 07, 2022 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

            “ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற நான், அந்த அரசால் நடத்தப்படும் மாதிரிப்பள்ளியை பார்வையிட்டேன். இதேபோல் தமிழகத்திலும் உருவாக்கப்படும் என்று சொல்லியிருந்தேன். அதன்படி, அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் (Schools of Excellence) உருவாக்கப்படும். முதல்கட்டமாக ரூ.150 கோடியில், 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்”, என்று முதல்வர் அறிவித்திருந்ததும் நினைவிருக்கலாம். 

           தமிழகத்தில் முதற்கட்டமாக (முன்னர் அறிவித்த 25 இடங்களைவிட ஓரிடம் கூடுதலாக) 26 இடங்களில் தகைசால் பள்ளிகளும் 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகளும் செப்டம்பர் 05 அன்று (05/09/2022) தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

          1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக பெயர் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் அடங்கிய ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளைக்   கொண்டும் கற்றல் திறன்கள் மேம்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.  ஆசிரியர்களுக்கு பல கட்டப் பயிற்சிகள் அளித்து   மாணவர்கள் முன்னேற்றத்திற்கும் அப்பள்ளியில் பயிலும் அரசுப் மாணவர்களின் கல்வித் தரம் உயர்கின்ற வகையில் இப்பள்ளிகள் செயல்படுமாம்! இதன்படி 26 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

      இப்பள்ளிகளின் கட்டிடங்கள் நவீன மயமாக்கப்படும். மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன் கலை, இலக்கியம், இசை, நடனம், செய்முறை அறிவியல், விளையாட்டு, கைவினைச் செயல்பாடுகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கட்டமைப்பு அந்தப் பள்ளிகளில் உருவாக்கப்படும். மாணவர்களின் பல்வேறு திறன்களையும் வெளிக்கொண்டு வந்து, படிப்புடன் அவர்களது தனித்திறன்கள் அனைத்தும் வளர்த்தெடுக்கப்படும். படிப்படியாக திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வி தரம் மேம்படுத்தப்படும் என்றெல்லாம் விரிவாகப் பேசப்படுகின்றன. சீர்மிகு காவல்நிலையம் என்று பெயரளவில் இருப்பதைப்போல இல்லாமல் செயலளவில் இருந்தால் பாராட்டலாம்.

          இத்துடன் 15 மாதிரிப்பள்ளிகளும் தொடங்கப்பட உள்ளன. உண்டு உறைவிடப் பள்ளிகளாக செயல்படும் இவற்றில்    பத்தாம் வகுப்பில் 400 மேல் மதிப்பெண்களுக்கு பெற்ற மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் தேசிய திறனறிவுத் தேர்வு (NTSE), தேசிய வருவாய் வழித்தேர்வு (NMMS), விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் இப்பள்ளிகளில் சேரத் தகுதிகளாகக்   கூறப்பட்டுள்ளது.

       உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் (STEAM) போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வுகளில் பங்குபெற இப்பள்ளிகள் உரிய பயிற்சிகளைத் தரும். இந்தக் கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 15 அரசு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.

        அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் படியும் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறனை அடிப்படையாகக் கொண்டும் இப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் வரும் ஆண்டுகளில் மாவட்டத்திற்கு ஒரு மாதிரிப்பள்ளி என்ற அளவில் இப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் சொல்கிறார்கள்.  

      தகைசால் பள்ளிகளுக்கு சொல்லப்படும் புதிய கட்டமைப்புகள் எல்லாம் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்க வேண்டிய அடிப்படைக் கட்டுமானங்களாகும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் என்பதிலிருந்து எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன என்பதை இந்த அறிவிப்பு மறைமுகமாகவேனும் ஒப்புக்கொள்வதை நாம் வரவேற்கலாம். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் ஒதுக்கப்படும் நிதி ஆசிரியர்களின் ஊதியத்திற்கே செல்கிறது என்று புலம்புவது இங்கு வாடிக்கை. கோத்தாரி கல்விக்குழு பரிந்துரையில் (6%) இன்னும் பாதியைக்கூட எட்டவில்லை. 

      1000 பேருக்கு மேல் மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகளில் பலநூறு தமிழகத்தில் உண்டு. அவற்றில் மாவட்டத்தில் ஒன்றைமட்டும் அனைத்து வசதிகளும் கொண்ட தகைசால் பள்ளியாக மாற்றிவிட்டால் ஒட்டுமொத்தக் கல்வித்தரம் உயர்ந்து விடுமா? பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைகளைபோல இத்தகைய தனியார் பள்ளிகளைப் போன்ற மேட்டுக்குடிப் பள்ளிகளும் (Elite Schools) செயல்படுவது உண்மையான சமூக நீதியாக இருக்குமா? 1000, 500 மாணவர்கள் என அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்தகைய வசதிகளை ஏற்படுத்துவதுதான் சரியாக இருக்க முடியும். ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை வரையறுப்பதுபோல கல்விக்கூடங்கள் பெரிய வளாகங்களாக அமைய வேண்டும் என்ற கருத்திற்கு இது வலு சேர்ப்பதாக உள்ளதையும் கவனிக்க வேண்டும். பொதுத்தேர்வு, போட்டித்தேர்வு ஆகியவற்றைச் சுற்றும் விட்டில் பூச்சிகளாக கல்வியையும் குழந்தைகளையும் மாற்றும் திட்டங்களே இங்கு செயல்படுகின்றன.

       மின்னணு, இணைய வசதிகள் மட்டும் கல்வித்தரத்தைத் தீர்மானிக்கப் போதுமான காரணிகள் அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். வெறும் மதிப்பெண்கள் பெறுவது நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு தயாராவது மட்டுமே கல்வி என்றும் வரையறுத்துவிட முடியாது. ஒருபுறம் அனைத்து வசதிகளும் மறுபுறம்   எவ்வித வசதிகள் இல்லாத பள்ளிகளாகவும் சமூகத்தைப் பிளவு படுத்தகூடாது. ஒரு காலக்கெடு நிர்ணயித்து அனைத்துப் பள்ளிகளும் இவ்வசதிகளை பெற வைப்பதே இலக்காக அமைய வேண்டும்.  அடிக்கடி திட்டங்களைப் பெயர்மாற்றி, ஏற்கனவே உள்ளவற்றை அழிக்கும் நிலையும் மாற வேண்டும்.

         இங்கு ஏற்கனவே மாவட்டந்தோறும் மாதிரிப்பள்ளிகள் செயல்படுகின்றன. அதனுடைய நிலை என்ன? அவற்றின் பங்களிப்புகள் குறித்து தரவுகள் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த மாதிரிப்பள்ளிகளில் அனைத்துவகையான குழந்தைகளும் படிப்பதால் உரிய அடைவை எட்ட முடியவில்லை என்று புதிய மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்படுகின்றனவா என்பதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது உண்மையென்றால் ஒருங்கிணைந்த கல்வி (Inclusive Education)   கருத்தாக்கம் என்னாவாயிற்று என்கிற வினாவும் தவிர்க்க இயலாததாகிறது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறுபவர்களை   தனியார் பள்ளிகளில் சேர்த்து மேம்பட்ட கல்வியைத் தரும் திட்டமும் இருந்தது. இதன்மூலம் பயனடைதோர் எவ்வளவு பேர் அடுத்த கட்டத்தைச் சிறப்பாக நிறைவு செய்தனர் என்பதையும் நாம் ஆராய வேண்டும்.

        மாதிரிப் பள்ளிகளில் பணியாற்ற பிறபள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அங்கு ஏற்படும் காலிப்பணியிடம் எப்போது நிரம்புவது? அப்பள்ளிக் குழந்தைகளுக்கு முறையான கல்வி எப்போது கிடைக்கும்?  மாதிரிப் பள்ளிகள், இல்லம் தேடிக்கல்வி போன்ற திட்டங்கள் எவ்வளவுதான் அருமையான, உலகப்புகழ்பெற்ற திட்டங்களாக இருந்தபோதிலும் அதற்காக இருக்கின்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மாற்றுப்பணிக்காக விடுவித்து ஓரளவு செயல்படும் பள்ளிகளையும் முடமாக்குவது நலமல்ல.  பல பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் புதிய திட்டங்களுக்காக பணிவிடுவிப்பு செய்வது நிறுத்தப்பட வேண்டும். அப்பணியிடத்தில் உரியவரை உடனே நியமிக்க வேண்டும்.  பாடநூல் பணிகள், கல்வித் தொலைக்காட்சி, இல்லம் தேடிக் கல்வி, மாதிரிப்பள்ளிகள் எல்லாவற்றிற்கும் மாற்றுப்பணிகளில் ஈடுபடுவோரால் பாதிக்கப்படும் பள்ளிகள் ஏராளம்.

      ஒன்றிரண்டு நன்றாகப் படிக்கும் மாணவர்களைக் கொண்டுதான் அரசுப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அன்றாடப் பணிகள் நடக்கின்றன. அவர்களை இழப்பது அப்பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் சோதனையானதுதான். இருப்பினும் அம்மாணவர்களின் எதிர்காலம் கருதி ஏற்றுக்கொண்டாலும் பிற பள்ளி ஆசிரியர்களை இங்கு மாற்றி அவ்விடத்தை வெறுமனே விடுவது கல்வியின் மீதான உண்மையான அக்கறையாக இருக்க முடியாது.

        அரசுப்பள்ளிகள் தரம் குறைந்ததற்கு ஆசிரியர்களை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு அரசு, கல்வித்துறை, சமூகம் என அதுவும் தப்பித்துவிடும் நிலை இங்கு காணப்படுகிறது. இது நேர்மையான அணுகுமுறை அல்ல. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தனியார் சுயநிதிப்பள்ளிகளுடன் ஒப்பிட்டு அரசுப்பள்ளிகளின் தரம் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படும் வாதங்களும் சரியானவை அல்ல.

         கடந்த சில பத்தாண்டுகளாக அரசுப்பள்ளிகள் என்பவை அனைவரையும் தேர்ச்சிபெற வைக்கவும் பொதுத்தேர்வுகளுக்கு மட்டும் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீத்திற மாணவர்களுக்கு உரிய கவனம் செலுத்தாமல் மெல்லக் கற்போருக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. பொதுத்தேர்வுகள் நடக்கும் வகுப்புகள் மட்டுமே உரிய கவனம் குவிக்கப்பட்டன. இதனாலே +1 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. பின்னர் உயர்கல்விக்கு இம்மதிப்பெண்கள் தேவையில்லை என்றானது. இவையெல்லாம் ஆசிரியர்கள் தாமாக எடுத்த முடிவுகள் அல்ல. அரசும் துறையும் ஆசிரியர்களுக்கு அளித்த நெருக்கடிகள். இம்மாதிரியான முடிவுகளை எடுக்க வைப்பதில் தனியார் சுயநிதிப்பள்ளிகளின் பங்கு பெருமளவு இருந்தது. அவர்களது ஆதிக்கத்தில்தான் தமிழகக் கல்வி முழுதும் சீரழிகிறது.

        தற்போதுகூட தொடக்கக்கல்விக்கு தனியே மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்துடன் கூடவே தனியார் பள்ளிகளுக்கும் தனி மாவட்டக்கல்வி அலுவலர் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதுவும் தமிழகக் கல்வியில் அவர்களது ஆக்ரமிப்பை உணர்த்தும் ஒன்றாகும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை அமலிலிருந்தும், இதன்பொருட்டு ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை 2020க்கு மாற்றாக தமிழகம் தனியே குழு ஒன்றை அமைத்திருக்கும் நிலையிலும் தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பிற பாடங்களுக்கான நேரத்தில் மூன்றாவது மொழியாக இந்தி சொல்லித் தரப்படுவதைத் தடுக்க தமிழக அரசால் எதையும் செய்ய இயலாத நிலையில் இருப்பதுதான் வேதனையான உண்மை.

       சமச்சீர்க் கல்வித்திட்டம் கொண்டுவரப்பட்டு மாநில அரசின் பாடத்திட்டம் பயன்பாட்டில் இருந்தாலும் பொதுத்தேர்வுகள் உள்ள 10, +1, +2 ஆகிய வகுப்புகளைத் தவிர்த்து பிறவகுப்புகளுக்கு இன்னும் தனியார் பாடநூல்களே பயன்படுத்தப்படுகின்றன என்பது இந்த அரசுக்குத் தெரியாத ஒன்றல்ல. மேலும் வெறுமனே அரசிடமிருந்து புத்தக்கங்களைப் பெற்று மாணவர்களுக்கு வழங்கிவிட்டு கற்பித்தலுக்கு வேறு தனியார் பாடநூல்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சமச்சீர்ப் பாடத்திட்டம் என்று சொல்லிவிட்டு தனி இயக்குநகரம், கல்வி அலுவலர்கள், தனியார் பாடநூல்கள் என்று அவர்களது ‘தனி ராஜ்யம்’ கொடிகட்டிப் பறக்கிறது. தமிழ்வழியில் மட்டும் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளைத் தவிர இதர பள்ளிகள் சுயநிதி வகுப்புகளைத் தொடங்கி லாபம் பார்க்கின்றன. அங்கு தமிழ் வழியில் படிப்போர் இரண்டாம்தர குடிகளாக நடத்தப்படுகின்றனர்.

      கடந்த சில பத்தாண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான தனியார் சுயநிதிப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி அரசுப்பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட மூடுவிழா நடத்த அரசுகள் மறைமுகமாக முடிவு செய்துவிட்டன. சமச்சீர்ப் பாடத்திட்டம் என்றதும் மத்தியக் கல்வி வாரியப் பள்ளிகளாக (CBSE) மாற்றவும் உடனே பள்ளிக்கல்வித்துறை தடையின்மைச் சான்று வழங்கிவிடுகிறது. தனியார் கல்வி மாஃபியாக்களால் அனுமதி பெற்றும் பெறாமலும் எதுவும் செய்யமுடியும் என்கிற நிலை உள்ளது அபாயகரமானது.

           தற்போது ஒன்றிய அரசு பிஎம் ஶ்ரீ பள்ளிகள் (PM SHRI – Prime Minister ScHools for Rising India) குறித்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது.  இப்பள்ளிகள் புதிய கல்விக்கொள்கை 2020 இன்படி உருவாக்கப்படுமாம். எனவே மும்மொழித் திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்படும். நாடெங்கும் 14,500 பள்ளிகள் தொடங்கப் போகிறார்களாம்.

      மாவட்டத்திற்கு ஒன்று எனத்தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகளைப் போன்றதல்ல இது. நமது மாநிலம் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் அப்பள்ளிகளை இங்கு தொடங்க மாநில அரசு மறுத்துவிட்டது. ஆனால் புதிய கல்விக்கொள்கையை உருவாக்கப்போகும் தமிழக அரசு பிஎம் ஶ்ரீ பள்ளிகளை நிராகரிக்க முடியுமா என்பது சற்று சிக்கலானது. அனைவருக்கும் தொடக்கக்கல்வி (SSA), அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (RMSA), ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்‌ஷா) போன்ற திட்டங்களைப்போலவே இப்பள்ளிகளும் தொடங்கவிருக்கின்றன.

           2022-2023 முதல் 2026-2027 முடிய ஐந்து கல்வியாண்டுகளுக்கான செலவீனம் ரூ. 27,360 கோடி எனவும் இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ. 18,128 கோடி மட்டுமே. முந்தைய திட்டங்களைப் போலவே இப்பள்ளிகளுக்கும் ஒன்றிய அரசின் பங்கு 60% மட்டுமே. எஞ்சிய 40% தொகையை மாநில, யூனியன் பிரதேச அரசுகள்தான் செலவிட வேண்டும். பெயரில் மட்டும் பிஎம்; உண்மையில் மாநில அரசும் செலவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.   எனவே பிஎம் & சிஎம் ஶ்ரீ பள்ளிகள் (PM & CM SHRI) என்று அழைப்பதே பொருத்தமாக இருக்க முடியும். நியாயவிலைக் கடைகளில்கூட மோடி படம் வேண்டும் என்பவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடுவார்களா?

      NEP 2020 இல் வாள் சுழற்றியதைப்போல அப்படியே இங்கும் கதைக்கிறார்கள். அதி நவீன மின்னணுக் கற்பித்தல், திறன்களை உள்ளடக்கிய கல்வி, பசுமைப்பள்ளிகள், திறன் வகுப்பறைகள், நூலகம், ஆயவக வசதிகள், தகவல் தொழிற்நுட்ப வசதிகள், தொழிற்கல்வி ஆய்வகங்கள், விளையாட்டு என பெருமிதச் சொல்லாடல்கள் நிறைந்துள்ளன. தனது காவிக்கொள்கையை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது திணிப்பதே இதன் நோக்கமாக இருக்கப்போகிறது.

      தமிழ்நாடு ஒன்றியக் கல்விக்கொள்கையை எதிர்க்கிறது.  புதிய கல்விக்கொள்கையை உருவாக்க குழுயொன்றை அமைத்துள்ளது. உருவாகும் புதிய கல்விக்கொள்கைக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் தேவை. அவர்கள் நமது கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை. ஒன்றிய அரசின் கல்வித் திட்டங்களை தமிழ்நாடு தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் ஒன்றாகவே பிஎம் ஶ்ரீ பள்ளிகள் வருகின்றன. இத்திட்டம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை எதிர்க்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்காகவே கொண்டுவரப்படுவதாகத் தோன்றுகிறது. இதை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?

       மும்மொழித்திட்டம், தகுதித்தேர்வுகள், திறந்த-விரும்பிய பாடத்திட்டம், தொழிற்கல்வி, வாழ்வனுபவம் என்பதாக ஒன்றிய அரசின் காவிக்கொள்கையை இப்பள்ளிகள் தலைமை தாங்கி வழிநடத்தப்போகின்றன. மதிப்பெண் பட்டியல் இல்லை, தாய்மொழிக்கல்வி, கூடவே தொழிற்கல்வி, எனவே மாணவர்களுக்கு ஜாலி என மகிழ்ச்சிக் கூத்தடிக்கிறது ஒரு காவி நாளிதழ்.

        கல்வி உரிமை என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் பொதுக்கல்வியை, அருகாமைப் பள்ளிகளை (Neighbourhood Schools) முற்றாக ஒழித்துவிட்டோம். ஒருங்கிணைந்த கல்வி என்று பெருமிதங்களுடன் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிட்டு மேட்டுக்குடிப் பள்ளிகளை உருவாக்கி சமூகத்தையும் கல்வியையும் பாகுபடுத்தி வருகிறோம். அனைவருக்குமான சமத்துவக் கல்வியை தொலைத்துவிட்டோம். ஒன்றிய, மாநில அரசின் திட்டங்கள், கொள்கைகள் அனைத்தும் சமத்துவத்தை நோக்கிய பாதையில் அமையாமல் பாகுபாட்டுடன் கல்வியை அணுகுவது மாறாமல் கல்வியில் மலர்ச்சியில்லை.  அதுவரையில் இத்தகைய கவர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *