உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்!

 உடன்கட்டை ஏறுதல் என்னும் ‘சதி’யைப் போற்றும் தமிழகப்பாடநூல்!

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 07)

மு.சிவகுருநாதன்

                     எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்ற பாடம்‘சதி’யைப் பற்றிய இந்துத்துவப்  பார்வை எப்படித் திணிக்கப்படுகிறது என்று பாருங்கள்.

        “இந்திய சமூகத்தில் நிலவிய  மற்றொரு சமூகதீமை சதி ஆகும். குறிப்பாக ராஜபுத்திரர்களிடையே இப்பழக்கம்  காணப்பட்டது. அப்போதிருந்த நிலப்பிரபுத்துவ சமூகம் சதி எனும் சடங்கை ஆதரித்தது. இதன்  பொருள் ‘கணவனின் சிதையில் தானாக  முன்வந்து விதவைகள் எரித்துக்கொள்ளுதல்’  ஆகும். ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்துகொண்டனர் ஆனால்  பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால்  சிதையில் அமர்ந்தனர்”. (பக்.91)

       பெண்களது  இந்த பெருவிருப்பத்தை ஏன் ஆங்கிலேய அரசு தடை செய்ய வேண்டும்? ராஜாராம் மோகன் ராய் ஏன் ஒழிக்க முயற்சித்தார்? மொட்டையடித்து, விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தும் விதவைக்கொடுமைகள் பெண்களை இந்தத் தற்கொலைக்குத் தூண்டியது. யாரும் விரும்பி ஏற்கவில்லை; கட்டாயக் கொலை என்பதுதான் உண்மை. முதலில் விருப்பம், பிறகு வற்புறுத்துதல் என்கிற பாசிசச் சொல்லாடல் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது?

             “இடைக்கால சமூகத்தில் பெண்களின்  நிலை மேலும் மோசமடைந்தது. சதி, குழந்தை திருமணங்கள், பெண்சிசுக்கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற பல  சமூக தீமைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டனர்”. (பக்.89)

இதன் தொடர்ச்சியாக,

        “முஸ்ஸீம் படையெடுப்பின் விளைவாக பர்தா முறை பிரபலமானது. இடைக்காலத்தில்  விதவையின் நிலை பரிதாபமாக மாறியது”, (பக்.89) என்கின்றனர். ஆனால் ‘சதி’யில் தாங்களாகவே விரும்பித் தீவைத்துக் கொண்டனராம்!

         பர்தா முறையையும் விதவைக் கொடுமையையும் இணைக்க வேண்டிய அவசியமென்ன?  விதவைக் கொடுமைகளைவிடவா பர்தா முறை மோசமானது? முகத்தை மூடிக்கொள்ளும் வழக்கம் இஸ்லாம் மதத்திற்கு மட்டுமா உரியது?

          பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ளும் நடைமுறை பல வட இந்தியச் சமூகங்களில் உண்டு. ‘பர்தா முறை’ கொடுமையானது, உடன்கட்டை ஏறுதல் விரும்பிச் செய்தது என்பது எத்தகைய பார்வை? இதைப் படிக்கும் குழந்தைகளின் புரிதல், மனநிலை என்னவாக இருக்கும்?

         இடைக்காலத்தில்தான் விதவைக் கொடுமைகள் இருந்தனவா? அதற்கு முன்னாள் விதவைகள் எவ்வாறு நடத்தப்பட்டனர்? மறுமணங்கள் நடந்ததா? இது என்ன பித்தலாட்டம்?

       ‘சதி’யையும் இடைக்கால மற்றும் ராஜபுத்திரக் கொடுமையாகச் சுருக்கிவிட முடியுமா? பண்டைய தமிழகத்தில் நடைபெற்ற உடன்கட்டை ஏறிய நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன?

       ஏழாம் வகுப்பு முதல்பருவ சமூக அறிவியல் பாடத்தில் (டெல்லி சுல்தானியம்) சித்தூர் சூறையாடல் (1303) என்ற குறிப்பில், “ சித்தூரில் ராஜபுத்திரப் படைகளை அலாவுதீனின் படைகள் திணறடித்த நிலையில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும் பெண்டிரும் தங்களது பண்டைய மரபின்படி ‘ஜவ்ஹர்’ எனப்படும் சடங்கை நடத்தினர். இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீயில் புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்”. (பக்.147) என்று உள்ளது.

எட்டாம் வகுப்புப் பாடநூல் இதை “கூட்டு தன்னார்வ தற்கொலை நடைமுறை”, (பக்.89) என்கிறது.

        சதி, ஜவ்ஹர் எல்லாம் பண்டைய மரபு, சடங்கு என்று பாடநூல்கள் போற்றிப் பாடலாமா? அன்றைய சமூகத்தில் பலதார மணம் இருந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உயர்த்தப்பட்ட வர்க்கத்தினர் ஏற்று நடக்கவில்லை. அரண்மனை அந்தப்புரங்களில் எண்ணற்ற பெண்களும் தேவதாசிகளும் குவிக்கப்பட்டனர்.  இவற்றைப் புறந்தள்ளி மரபு, சடங்கு என இந்துத்துவப் பெருமிதங்களில் பாடநூல் மிதக்கிறது.  

         “சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள்”, (பக். 59, 10 சமூக அறிவியல்) என பாடநூல்கள் வரையறுப்பது மிக மோசமான நிலைப்பாடாகும்.

           இவற்றை மரபுப்பழக்கம் என்றே கருதுவோம். இவை யாருடைய மரபு? எவருடைய சாஸ்திரங்களும் ஸ்மிருதிகளும்  இவைகளை உற்பத்தி செய்தன? உயர்ந்தோராகத் தங்களைக் கற்பிதம் செய்து கொண்ட வேதப் பிராமணீயச் சமூகத்தின் விளைச்சல்கள் இவையென்று   சொல்ல வேண்டாமா? வருண அடுக்கில் இரண்டாம் நிலையிலிருந்த மன்னர்கள் (சத்திரியர்கள்) தங்களை பிராமணர்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டனர். எனவே இவர்களும் அவர்களது மரபுகளை அப்படியே பின்பற்றினர். இவற்றிற்கு எல்லாம் மாறுபட்ட ஜனநாயகத் தன்மைகள் கொண்டதாக வெகுமக்களின் நாட்டார் மரபு இருந்தது. இவையெல்லாம் நமது பாடமெழுதிகளின் கண்ணில் படுவதில்லை.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *