வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? 

வேத, குருகுலக் கல்வியை எப்படிக் கொண்டாட முடியும்? 

(தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 08)

மு.சிவகுருநாதன்

                 எட்டாம் வகுப்பு  சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியின் அலகு 05 இல் ‘இந்தியாவில்  கல்வி வளர்ச்சி’ என்றொரு பாடம் உள்ளது. இதில் இந்தியக் கல்வி என்று வேதக் கல்வியையும் குருகுலக் கல்வியையும் முன்னிறுத்துவதோடு அதன் பெருமைகளை விண்டுரைக்கவும் செய்கிறது. ‘இஸ்ரோ’ கஸ்தூரிரங்கன் குழுவினரை அடியொற்றி பாடநூல்கள் வேத, குருகுலக் கல்வியைப் பரப்புரை செய்வது மிக மோசமானது. கல்வியாளர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மேலும் குருகுலம், பவுத்தம், சமணக் கல்வி குறித்த எவ்விதப் புரிதல்களும் இல்லாது அனைத்தையும்ம் ஒன்றாக்கி இந்துத்துவப் பெருமை பேசுவதும் நடக்கிறது. 

           அந்தக் காலத்தில் கல்வி எப்படி இருந்தது தெரியுமா? என்று பீடிகை போட்டுப் பேசும் பெரும்பாலான ஆசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள். போகிறபோக்கில் குருகுலக் கல்வியின் பெருமையைப் பேசுபவர்கள் இவர்கள். இதைத்தான் பாடநூல் அதிகாரப்பூர்வ மொழியில் சொல்லியிருக்கிறது.       

    “அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்” (பக்.53) என்ற மேற்கோளுடன் பாடம் தொடங்குகிறது. ‘அறிவு’ கண்ணாக இருக்க வேண்டுமா, என்ன? இது சிவனின் நெற்றிக் கண்ணோ, என்னவோ! கண்பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்த வேண்டாம்! வழக்கொழிந்த, சிந்தனையும் புரிதலுமற்ற இவ்வாறான சொற்றொடர்களை ஒழித்துக் கட்டுவது யாவர்க்கும் நலம். பழமொழிகள், பொன்மொழிகள் என்கிற பெயரிலுள்ள பழங்குப்பைகளை கல்விப்புலங்களிலிருந்து முதலில் அகற்றியாக வேண்டும். 

        இந்து மதப் புனித நூல்களிலிருந்து அன்றைய கல்விமுறையை விளக்க சில எடுத்துக்காட்டுகள்:

“பிருஹஸ்பதி ஸ்மிருதியின்படி:

“ஒரு சூத்திரன் மதபோதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முணுமுணுத்தாலோ அல்லது ஒரு பிராமணனைத் தூஷித்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திட வேண்டும்”,

கௌதம தர்ம சூத்திரத்தின்படி:

         “ஒரு  சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால், அவனது இரு காதுகளிலும் ஈயத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்ப வேண்டும்.

       அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால், அவன் உடல் இரு துண்டுகளாகப் பிளந்து விட வேண்டும். (பக்.68 & 69)

“சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்”.  (பக். 80 – அம்பேத்கர் – சூத்திரர்கள் யார்? தொகுதி – 13)

          “தொடக்க காலத்திலிருந்தே பாரம்பரியமாக கற்றல் மற்றும் கற்பித்தல் இந்தியாவில் நடைமுறையில் இருந்ததாக, வரலாற்று ஆதாரங்கள் நமக்கு தகவல்களை வழங்குகின்றன. வேதம் (Veda) என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அறிவு என்று பொருள். (…) இக்கல்வியானது பணிவு, உண்மை, ஒழுக்கம், சுயச்சார்பு  மற்றும் அனைத்து படைப்புகளின் மீதும்  மரியாதையுடன் இருத்தல் ஆகிய மதிப்புகளை வலியுறுத்தியது”. (பக்.53)

        வேதக் கல்வியும் குருகுலக் கல்வியும் வருணாஸ்மரத்தை நிலைநிறுத்தவும் அவற்றைக் கடைபிடிக்கவும் அமைந்த நிறுவனங்கள். இதை இன்றைய பொதுக்கல்வி போன்று கற்பிதம் செய்வது மடத்தனம். 

         பணிவு யாருக்கு? வருணப் படிநிலையில் உயர்த்தப்பட்ட பிராமணர்களுக்கு. எது உண்மை? நால் வேதங்கள், மநு தர்மம் போன்றவை உரைப்பவை. யார் கட்டமைத்த ஒழுக்கம்? குரு தட்சணையாக கட்டைவிரல் கேட்கப்படினும் எதிர்க்காத ஒழுக்கம். சுயசார்பு? வருண அடுக்குகளில் ஒதுக்கப்பட்ட தொண்டூழியம் செய்வது (குலக்கல்வி). பசுவை மட்டும் பேணிக்காத்தல்; பிறகெப்படி, அனைத்து படைப்புகளின் மீதும் மரியாதையுடன் இருக்க முடியும்?  வேதகாலத்திற்கு முன்பே செழித்திருந்த சிந்துவெளி மக்களது நாகரிகம் கல்வியின்றி சாத்தியப்பட்டிருக்குமா? அதுதான் நமது பண்டைய கல்விமுறை. அதைப் பற்றிய ஆதாரங்கள் சித்திர வடிவ எழுத்துகளைத் தாண்டி இல்லை என்பதாலும் அவற்றை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதாலும் அந்த இடத்தில் வேத, குருகுலக் கல்வியை வைத்திட முடியாது; வைக்கவும் கூடாது. 

            ‘கற்றலுக்கான ஆதாரங்கள்’ என்னும் தலைப்பில், சொல்லப்படுவன: 

     “பாணினி, ஆர்யபட்டா, காத்யாயனா, மற்றும் பதாஞ்சலி ஆகிய பெயர்களை நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருத்தல்  வேண்டும். இவர்களின் எழுத்துக்களும் சரகர் மற்றும் சுஸ்ருதர் ஆகியோரின் மருத்துவ  குறிப்புகளும் கற்றலுக்கான ஆதாரங்களாக இருந்தன”. (பக்.54)

    என்ன வன்முறை பாருங்கள்! “நீங்கள் அறிந்திருக்கலாம் அல்லது நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்”, என்று சொல்வதுண்டு. ஆனால் இங்கு “நீங்கள் கட்டாயம் கேள்விப்பட்டிருத்தல் வேண்டும்”, என்று திணிப்பதைப் பாருங்கள். சரகர், சுஸ்ருதர் போன்றோரின் மருத்துவ அறிவு அவர்களின் பிறப்பை ஒட்டி இழிவு செய்யப்பட்டதையும் ஒதுக்கப்பட்டதையும்  நாடறியும். (எ.கா.) ‘அம்பட்டம் சிகிஸ்தனம்’

        “வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு மற்றும் வில்வித்தை போன்ற பல்வேறு துறைகள் கற்பிக்கப்பட்டன. உடற்கல்வியும் ஒரு முக்கியமான பாடத்திட்டமாக இருந்தது. மாணவர்கள் குழு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளில் பங்கேற்றனர். கற்றலின் அனைத்து அம்சங்களிலும் வல்லுநராவதற்கு குருக்களும், அவரது மாணவர்களும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இணைந்து பணியாற்றினர். மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்வதற்காக இலக்கிய விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கற்றலில் மேம்பட்ட நிலையிலுள்ள மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு வழிகாட்டினர். சக மாணவர்களுடனான குழுக் கற்றல் முறை நடைமுறையில் இருந்தது”. (பக்.54)

       இன்றைய பொதுக்கல்வி முறை போன்று அக்காலத்திலும் வேத, குருகுலக் கல்வி இருந்ததாகச் சொல்லும் அபத்தத்தை என்ன செய்வது? நால் வர்ணத்தாருக்கும், “வரலாறு, தர்க்கம், பொருள் விளக்கம், கட்டிடக்கலை, அரசியல், விவசாயம், வர்த்தகம், வணிகம், கால்நடை வளர்ப்பு மற்றும் வில்வித்தை, ஆகியன போதிக்கப்பட்டதா? இதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா? குருவின் மனச்சாட்சிக்கு, துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை வெட்டிப் பெற்றதைக் குறிப்பிடலாமல்லவா! 

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *