மடங்களும் மடாலயங்களும்

மடங்களும் மடாலயங்களும்

 (தமிழகப் பாடநூல்களில் இந்துத்துவம் – 10)

மு.சிவகுருநாதன்

            தமிழ் இலக்கணத்தில் ‘விகாரம்’ என்பது இயல்பு மாற்றமாகும். செய்யுளில் எதுகை, மோனைகளுக்காகவும் ஓசை ஒத்திசைவுக்காகவும் சில சொற்கள் தன் இயல்பு மாற்றத்தோடு கையாளப்படுகின்றன. அவை, வலித்தல் விகாரம், மெலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், குறுக்கல் விகாரம், விரித்தல் விகாரம், தொகுத்தல் விகாரம் என வகைப்படுத்தப்படும்.

        மேலும் ‘விகாரம்’ என்பதற்கு கோரம், அவலட்சணம் என்றெல்லாம் பொருளுண்டல்லவா! பவுத்த வழிபாட்டிடமான விகார் (Vihar) என்பதை விகாரை என்று எழுதுவதே பொருத்தமானது. விகாரம், விகாரங்கள் (viharas) என்று எழுதுவது சரியாக இல்லை.

            எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் ‘இந்தியாவில் கல்வி வளர்ச்சி’பாடத்தின் இறுதியில் கலைச் சொற்கள் பட்டியலில் (பக்.63) “புத்த மடாலயங்கள் – monasteries – a building in which monks live and worship”, என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால் பாடத்தினுள் mutt ஐ மடம், மடாலயம் என்று மாற்றி மாற்றிச் சொல்கின்றனர்.

                    Monastery, mutt ஆகிய இரண்டும் எப்படி ஒன்றாகும்? பவுத்த அறிஞர்கள் மடங்களில் கல்விப்பணியாற்றியதை எவ்வாறு புரிந்துகொள்வது?  கீழக்கண்ட பத்தியில் மடம் (சைவம்/வைணவம்), மடாலாயம் (பவுத்தம்) என்று தொடங்கி வைணவ மடாலாயக் கல்வி என்று மாற்றுகின்றனர்.  மடம், மடாலயம் எனக் குழப்புவதை விட்டு முன்னதாக சமயத்தைக் குறித்தாவதுக் (பவுத்தம்/சமணம்/சைவம்/வைணவம்) காட்டலாம்.

         உங்களுக்குத் தெரியுமா? பகுதியில்,

               “இடைக்காலத்தில் பல சமய மடங்களும் மடாலயங்களும் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்பட்டன. ஸ்ரீரங்கத்தில் உள்ள அஹோபில மடம் அவற்றுள் ஒன்றாகும். அங்கு ஸ்ரீராமானுஜர் கல்விக்காக தன்னுடைய குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.  மடாலயக் கல்வி தவிர, சமணப் பள்ளிகளும் மற்றும் பௌத்த விகாரங்களும் மக்களுக்குக் கல்வி வழங்குவதில் முக்கிய பங்காற்றின. அனைத்துத் துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் கொண்ட நூலகத்தினை அவைகள் பெற்றிருந்தன.” (பக்.56)

        முதலில் அஹோபில வைணவ மடக்கல்வி, பிறகுதான் பவுத்த, சமணக்கல்வி என்பதாக கதைக்கும் இவர்களது வரலாற்றுணர்வைப் பாராட்டாமலிருக்க முடியாது! தமிழ்க்கல்விக்கு முதலில் பங்களித்த சமண, பவுத்த சமயங்களுடன் சைவமும் வைணவமும் செய்ததாகத் திரிப்பது இந்துத்துவமே.

                 “இந்த காலகட்டத்தில் துறவிகள் மற்றும் பெண் துறவிகள் தியானம் செய்வதற்கும், விவாதிப்பதற்கும், அவர்களின் அறிவு தேடலுக்காக கற்ற அறிஞர்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காகவும் பல மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் அமைக்கப்பட்டன.  இந்த விகாரங்களைச் சுற்றிலும் உயர்கல்வி கற்றுக் கொள்வதற்காக பிற கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய கல்வி மையங்கள் சீனா, கொரியா, திபெத், பர்மா, சிலோன், ஜாவா, நேபாளம் மற்றும் பிற தூரதேசத்து மாணவர்களையும் கவர்ந்திழுத்தது”. (பக்.54&55)

        “பல்லவர் காலத்தில் கல்வித்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. கல்வி நிறுவனங்கள் கடிகை எனப்பட்டன. இக்கல்வி நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி பல்லவ மன்னர்கள் ஆதரித்தனர். சைவ மற்றும் வைணவ மடங்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு உறைவிட வசதியை வழங்கின.” (பக்.61)

          பல்லவர் காலக் ‘கடிகைகள்’ எத்தகைய கல்வியை அளித்தன? சைவ மற்றும் வைணவ மடங்களில் கல்வியுடன் இவற்றை ஒப்பிட இயலுமா? இவை அனைத்து மாணவர்களுக்கும் இடமளித்தன என்பது எவ்வளவு பெரிய வன்முறை?           

            மடங்கள் (mutt) மற்றும் விகாரைகள் (viharas) ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் கொடுமை நடக்கிறது. இரண்டிலும் ஒரே மாதிரியான கல்வியா வழங்கப்பட்டது? 

         “Through monasteries and Viharas Buddhis scholars carried out the educational work. As a result, many famous educational centres came into existence”. (ஆங்கில வழியில்)

         “மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.  இதன் விளைவாக, பல புகழ்பெற்ற கல்வி மையங்கள் தோன்றின”. (பக்.55)

            வேதமதம் பெண் துறவிகளை அனுமதித்ததில்லை. திருமணம் செய்யாத துறவிற்கு இந்து மதத்தில் இடமில்லை. பெண்களை அர்ச்சகர்களாக கூட அனுமதிக்காமல் ‘தீட்டு’ என்று ஒதுக்கி வைக்கும் தீண்டாமையைக் கொண்டது வேதமதம். மடங்களில் அதாவது சைவ, வைணவ மடங்களில் பெண் துறவிகள் இருந்ததாக புனைவும் திருட்டும் உருவாவதெப்படி? பவுத்த சமயம் பெண் துறவிகளை அனுமதித்தது. அவர்கள் பிக்குணிகள் எனப்பட்டனர். இது வேத இந்து மதத்தில் இந்நடைமுறை இல்லை. சந்நியாசம் என்பது ஒரு நிலை; துறவல்ல. அதுவும் ஆண்களுக்கு மட்டுமே. சமயக் கருத்துகளை மட்டுமல்லாது அவைதீகக் கல்விமுறையைத் திருடும் அவலமும் நடைபெறுகிறது.  

     “ஜாதகக் கதைகள், யுவான் சுவாங் மற்றும் இட்சிங் (சீன அறிஞர்கள்) ஆகியோரின் குறிப்புகள் மற்றும் பிற ஆதாரங்களும் அரசர்களும், சமுதாயமும் கல்வியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் செலுத்தியதாக நமக்கு கூறுகின்றன. மடாலயங்கள் மற்றும் விகாரங்கள் மூலமாக பௌத்த சமய அறிஞர்கள் தங்கள் கல்விப் பணியை மேற்கொண்டனர்.  இதன் விளைவாக, பல புகழ்பெற்ற கல்வி மையங்கள் தோன்றின. அவைகளுள் தட்சசீலம், நாளந்தா, வல்லபி, விக்கிரமசீலா, ஓடண்டாபுரி மற்றும் ஜகத்தாலா ஆகிய இடங்களில் தோன்றிய பல்கலைக்கழகங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும்.  இந்தப் பல்கலைக்கழகங்கள் விகாரங்களின் தொடர்புடன் மேம்படுத்தப்பட்டன”. (பக்.55)

       வேதக்கல்வி என்றுமே பொதுக்கல்வியாக இருந்ததில்லை. மாறாக அவைதீகக் கல்விமுறையே (பவுத்த, சமண, ஆசீவக சமயங்கள்) இங்கு பொதுக்கல்வியாக இருந்தது. இவையிரண்டையும் இணைப்பது வன்முறையின்றி வேறில்லை. 

          நாளந்தா, காஞ்சி போன்ற பவுத்த மையங்களில் யார் கல்விபெற்றனர்? காசி போன்ற வேதக் கல்வி மையங்களில் யாருக்குக் கல்வி வழங்கப்பட்டது? என்பது இதனைத் தெளிவாக்கும். அக்கால அரசர்களின் ஆதரவு நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும்பொது இவற்றிலும் மாறுதல்கள் உண்டாகியிருக்கின்றன.  அவைதீக சமயங்கள்தான் இவற்றைச் சாத்தியப்படுத்தின.

         “பனாரஸ் மற்றும் காஞ்சி ஆகிய இடங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் கோயில்கள் தொடர்புடன் மேம்பாடு அடைந்தன. மேலும் அவைகள் அமைந்துள்ள இடங்கள் சமூக வாழ்க்கையின் மையங்களாக மாறின. அந்த நிறுவனங்கள் அறிவார்ந்த மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தன. அந்த மாணவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் இணைந்து, புகழ்பெற்ற அறிஞர்களிடம் பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், மன்னரால் கூட்டப்பட்ட சபையில் பல்வேறு விகாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த அறிஞர்கள் சந்தித்து, விவாதித்து தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்”. (பக்.55)

        கோயில்கல்வி என்பது முற்றிலும் உயர்த்தப்பட்ட வருணத்தாருக்கு மட்டும் வழங்கப்பட்டது. இதனுடன் விகாரைக் கல்வி இணைவு சாத்தியமற்றது. இவையிரண்டிற்குமிடையே விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம்; ஆனால் இரண்டும் ஒன்றல்ல. பாடம் முழுமையும் இரண்டையும் ஒன்றாக்கும் சூழ்ச்சிகளும் எத்தனங்களும் நிறைந்துள்ளன. 

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *