“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  

மு. சிவகுருநாதன்

நேர்காணல்: எஸ்.செந்தில்குமார்

மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி அபத்தங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அ.மார்க்ஸ் உடன் இணைந்து 2008இல் ‘சஞ்சாரம்’ காலாண்டிதழை நடத்தியுள்ளார். அதில் மண்டோவின் கடிதங்கள் ராமநுஜம் மொழிபெயர்ப்பில் முதன்முதலில் பிரசுரமாகியுள்ளன.

 • அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் உங்கள் அளவில் முயற்சி செய்திருக்கிறீர்களா?

பள்ளியை மேம்படுத்துவது தனியொருவர் நடத்தும் சாகசச் செயலாக இருக்க முடியாது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உள்ள ஒரே வாய்ப்பு ஆங்கில வழி மட்டுமே. பணியிடத்தைத் தக்கவைக்கும் சுயநலமும் இதில் உண்டு. இதனால் பல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தமிழ்வழி மூடுவிழா கண்டுள்ளது. நான் பணியாற்றும் நகரத்தை ஒட்டிய Semi Urban பகுதியில் மாணவர் சேர்க்கைக்குப் பல்வேறு தடைகள் இருக்கின்றன. 2015—2016இல் ஆங்கில வழியைத் தொடங்கினோம். ஆறாம் வகுப்பில் 26 மாணவர்கள் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டும் சேர்ந்ததால் ஆங்கிலவழி வகுப்புகள் மூடப்பட்டன. அந்த 26 பேரில் சிலர் வேறு பள்ளிக்கும் பலர் தமிழ்வழிக்கும் மாறிவிட 7 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பை ஆங்கில வழியில் பூர்த்தி செய்தனர்.

அரசுப்பள்ளிகளில் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் ஊழலால் மிக மோசமான தரத்தில் கட்டப்படும் அவை சில ஆண்டுகள்கூட தாக்குப்பிடிப்பதில்லை. இங்கு பயன்படுத்தப்படும் எந்தப் பொருள்களின் ஆயுளும் குறைவு. இதற்கான காரணம் வெளிப்படையானது. ஒப்பீட்டளவில் இதர அரசு அலுவலகங்கள் தரமாகவும் பள்ளிகள் தரமின்றி கட்டப்படுவதற்கும் யார் காரணம்? இதைத் தட்டிக் கேட்கும் நிலையில் தலைமையாசியரோ, ஆசிரியரோ, ஊர் மக்களோ இல்லை.

 • மாணவர்கள் ஆங்கில வழியான கல்வியை கற்பதற்கு அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து, தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமென்ன?

பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். தமிழ்வழியில் கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில வழியில் எப்படிச் சொல்லித்தருவாரோ என்கிற சந்தேகம் இருக்கலாம். பெரும்பாலான சுயநிதிப்பள்ளிகளிலும் ஆங்கிலவழி தமிழில்தான் நடக்கிறது. Spoken Englishக்கு தனியே பயிற்சி எடுத்தால் போதுமானது. ஹிந்தி படித்தால் வேலை என்பதைப்போல, ஆங்கில வழியில் படித்தால் ஆங்கில அறிவு கூடிவிடும் என்பது கற்பிதமே. இலவசங்கள் என்றால் தரமற்றவை என்பதும் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. மாறுபட்ட வண்ணச் சீருடைகள், ஹிந்தி மொழி, வாகனங்கள், இதர பயிற்சிகள் எனத் தங்களை வேறுபடுத்திக் காட்ட அரசுப்பள்ளிகளால் இயலுவதில்லை. பள்ளி வளாகத்தில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்க அரசுப்பள்ளிகளால் முடியாது. பெரும்பாலான சுயநிதிப்பள்ளிகளில் தமிழக அரசின் பாடநூல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எட்டாம் வகுப்பு முடிய தனியார் பாடநூல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. செயல்வழிக்கற்றல் அரசுப்பள்ளிக்கு மட்டுமே என அடுக்கிக்கொண்டே போகலாம். மொழி ஒரு கருவிதானே! அதை உணர்வு, உயிர், அறிவு என எல்லாமாகப் பார்க்கும்போது சிக்கல் தொடங்கிவிடுகிறது.

 • தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் பெருகி வருவதற்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இது பெரிய கதை. இதற்கு நாம் சற்றுப் பின்னோக்கிப் போக வேண்டும்.  சில பத்தாண்டுகளுக்கு முன்பு அரசுப்பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் மட்டுமே கல்விப்பணியில் இருந்தன. பள்ளிகளில் Teaching–ம் சில ஆசிரியர்கள் வியாபார நோக்கில் தொடங்கிய Tuition Centreகளில் Coaching-ம் தொடங்கின. ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் பணியிலிருக்கும் ஆசிரியர்களுடன் (பிநாமிகளாக) இணைந்து சுயநிதிப்பள்ளிகளைத் தொடங்கினர். அன்றைய காலத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்தன. அன்று நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து +2 மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. பல்வேறு பள்ளிகளில் 10ஆம் வகுப்புகளில் 400, 450 மதிப்பெண்கள் பெற்றவர்களைச் சேர்த்து +1 பாடங்களை நடத்தாமல் நுழைவுத்தேர்வுக்கும் +2 பாடங்களுக்கும் ஈராண்டுப் பயிற்சியளிக்கும் குறுக்குவழி கண்டறியப்பட்டது. இந்த கல்வி வணிகம் விரிவடையவே உண்டு, உறைவிட சுயநிதிப்பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருகியது. அரசியல்வாதிகள் பலர் இந்தத் தொழிலுக்குள் நுழைந்தனர். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வுகள் ரத்தானது. +2 வகுப்பை மட்டும் இரண்டாண்டுகள் நடத்தி மருத்துவப்படிப்பிற்கு அனுப்பத் தேவையான மதிப்பெண்களைப் பெற வைக்க, சில லட்சங்களை செலவு செய்ய நடுத்தரவர்க்கம் தயாராக இருந்ததும், அரசும் கல்வித்துறையும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் இன்று கல்வி முழுக்க வணிக மயமாகக் காரணமாயிற்று. இப்போது +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு வந்தாலும் அம்மதிப்பெண்கள் உயர்கல்விக்குத் தேவையில்லை என்றானது. +2 மதிப்பெண்கள் மருத்துவம் போன்றவற்றிற்குத் தேவைப்படாத நிலை ஏற்பட்டதும் மீண்டும் Coaching வடிவத்தைக் கைக் கொள்கிறார்கள். அன்று உதவிபெறும் பள்ளிகளில் படிப்பது சமூக அந்தஸ்து என்ற நிலைமாறி இன்று சுயநிதிப்பள்ளிகளில் படிப்பது மேட்டிமை சார்ந்த அடையாளமாக மாறிப் போய்விட்டது. நடுத்தரவர்க்க மனப்பான்மையும் ஒரு காரணம். பல லட்சங்களைச் செலவு செய்ய வாய்த்த அவர்களது பொருளாதார நிலை, ஆங்கில வழிக்கல்வி, பொதுத்தேர்வு – மதிப்பெண்கள் சார்ந்த கல்வி, அரசின் கொள்கைகள், அடிப்படை வசதிகளின்மை போன்றவை கூடுதல் காரணமாக இருக்கின்றன.

 • தனியார் கல்வி நிலையங்கள் மேம்பட்ட தரத்துடன் இயங்குகிறதா? அவர்களிடம் கல்வியில் சேவை நோக்கம் உண்டா?

ஒட்டுமொத்த அளவில் தனியார் சுயநிதிப்பள்ளிகளின் தரம் கேள்விக்குரியது. முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் பல பள்ளிகளில் இல்லை. அரசுப்பள்ளிகளின் நிலைமையும் இதுதான். போதுமான கழிப்பறை, தண்ணீர் வசதி, தூய்மைப் பணியாளர்கள் நியமனம் போன்றவை அரசுப்பள்ளிகளில் இல்லை. தனியார் பள்ளிகளில் பெரிய அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த வசதிகள் ஓரளவிற்கு இருக்கின்றன. அரசுப்பள்ளிகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட அனைத்தையும் தலைமையாசிரியரும் பிற ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. தனியார் பள்ளிகளில் இந்த நிலை இல்லை என்பதுதான் சிறிய வித்தியாசம். மற்றபடி தரம் என்பதெல்லாம் கானல்நீர்தான். விளம்பரங்கள், தனியார் மோகம், மதிப்பெண்கள் வேட்டை, வாகன வசதி, சமூக அந்தஸ்து, நடுத்தர மற்றும் உயர் வர்க்க ஆதரவு போன்றவற்றால் இந்த வணிகம் செழிக்கிறது. இதில் சேவைக்குத் துளியும் இடமில்லை.

 • அரசு ஊழியர்கள் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கத் தயங்கும் காரணம் என்ன?

 இது படித்தவர்கள்தான் அதிகமாக சூதும் வாதும் செய்வார்கள் என்பதை நிருபிக்கும் அறமற்ற நிலையாகும். 9, +1 வகுப்புகளைப் படிக்காமல் 10, +2 வகுப்புகளில் அதிக மதிபெண்கள் பெறவேண்டும் என்பது போன்ற பல்வேறு குறுக்குவழிகள் இதில் இருந்தன. பிறமாநிலங்களைப் போல பள்ளிக்குச் செல்லாமல் நீட் பயிற்சி மையங்களில் குடியிருக்கும் நிலை இங்கு இல்லை. தனியார் சுயநிதிப்பள்ளிகள் கோச்சிங் சென்டராகவும் இருக்கின்றன. எனவே கோச்சிங்கிற்காகவும் செல்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் 7.5% இடஒதுக்கீட்டைப் பெறவும் இதே குறுக்கு வழியைக் கடைபிடிக்கலாம். எனவே இவற்றில் பொருளாதார அளவுகோல்கள் இருப்பது அவசியம். பொருளாதார நிலை உயர்ந்ததும் தங்களை உயர்த்திக் காட்டிக்கொள்ளும் மனப்பான்மையும் ஒரு காரணம். எனவே CBSE, ICSE போன்ற பாடத்திட்டங்களில் படிக்க வைக்கும் பெருமிதங்களும் உண்டு.

 • அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள அரசை மட்டுமே நம்பியிருக்கிறார்களா?

அவர்களுக்கு வேறு வாய்ப்புகளும் தளங்களும் இல்லை. இடைநிலை ஆசிரியர் பயிற்சி, கல்வியியல் பட்டப் பயிற்சிக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.  இதில் அரசின் அனுமதியின்றி பிறர் நுழைய முடியாது. அரசியல் நோக்கங்களுக்காக வலதுசாரி அமைப்புகளால் நடத்தப்படும் அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் போன்ற சில நிறுவனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. ஆசிரியர் சங்கங்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுடைய எல்லைகள் மிகக் குறுகியவை. பிற துறையில் பணியாற்றுபவர்களைப்போல் அல்லாமல் ஆசிரியர்கள் பணி வித்தியாசமானது. இவர்கள் குழந்தைகளுடன் பணியாற்றுபவர்கள். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். அரசின் திட்டங்களைத் திணிக்கவும் அவர்கள் சொல்வதைச் செய்யவும் மட்டுமே பயிற்சிகள் தரப்படுகின்றன. 1—10 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பெரும்பாலும் இங்கு பயிற்சியளிக்கப்படுகின்றன. இவையெல்லாம் SSA, RMSA, ஒருங்கிணைந்த கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களை அமலாக்க மட்டுமே அளிக்கப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சியே கிடையாது. பாடக்குறிப்பு எழுதுதல் தொடங்கி பாடத்தை அறிமுகம் செய்தல், நடத்துதல் ஆகியவற்றில் தொடங்கி வகுப்பறைச் செயல்பாடுகள் எதிலும் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அறவே இல்லை. பொதுவாக கல்வியில் ஜனநாயகம் முற்றாக மறுக்கப்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் சொன்னதை அப்படியே செய்யும் வளர்ப்புப் பிராணிகளாக ஆசிரியர்கள் வைக்கப்பட்டுள்ளனர். மின்னணுக் கருவிகளின் பயன்பாடு, கார்ப்பரேட்கள் எதிர்பார்க்கும் திறன் மேம்பாடுகள் மட்டும் கல்வியில் பலன் தருவதாக இல்லை. சில ஆசிரியர்கள் விளம்பரத்திற்காக பல்வேறு பணிகளில் ஈடுபடுவதாக தம் மீது ஊடக வெளிச்சம் படுமாறு பார்த்துக்கொண்டு, அதனை விருதுகளுக்கான கச்சாப்பொருளாக மாற்றி விடுகிறார்கள். கல்வித் தொலைக்காட்சியும் இத்தகைய திசையில் பயணிக்கவில்லை. விரைவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இதழ்கள் வெளியாகயிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்த, உரையாட வாய்ப்புகள் இருக்குமா என்று பார்க்கலாம்.      

 • அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்கும் கல்விக்கு கற்கும் மனநிலைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதாக உணர்கிறீர்களா?

பசித்த வயிற்றுடன் கல்வி கற்க இயலாது. அதற்காகத்தான் மதிய உணவு, சத்துணவுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதை காலை, மாலை என நீட்டிப்பது சரியா என்று கேள்வி எழலாம். அரசு, அடித்தட்டு மக்களின் உழைப்பின் பெரும்பகுதியை டாஸ்மாக் மூலம் சுரண்டுகிறது. இதற்குப் பதிலுதவியாக இவ்வாறு செய்கிறது என்று கருதலாம். சிலருக்கு காலை உணவு தேவைப்படலாம். எல்லாருக்கும் தேவை என்று சொல்ல முடியாது. சத்துணவில் வழங்கப்படும் கலவைச் சோறுகள், அவித்த முட்டை போன்றவை பிடிக்காத குழந்தைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தையின் விருப்பத்தை நாம் கணக்கில் கொள்ள இயலாது. இதன் மூலம் தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கும் கூடுதல் பணிச்சுமைகள் ஏற்படும். இதனால் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படும். இப்பணிகளை சத்துணவுப் பணியாளர்களிடமே விடலாம்.

 • அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

அரசுப்பள்ளிகள் இன்று சமூகப் புறக்கணிப்புக்கு ஆட்பட்டுள்ளது.  ஓரளவு பொருளாதார வசதி பெற்ற சமூகங்கள் சுயநிதிப்பள்ளிகளை நாடியுள்ளன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தள மக்களின் குழந்தைகள் பயிலும் இடமாக அரசுப்பள்ளி உள்ளது. அவர்களது சமூகச் சிக்கல்கள் பள்ளிகளிலும் எதிரொலிக்கின்றன. மது மற்றும் போதைப்பொருள்கள் சமூகத்தைப் பெரிது ஆட்டுவிக்கிறது. இவைகளின் தடையற்ற புழக்கம் கல்வியில் பெருந்தடையாக உள்ளது. வேலைக்குச் செல்லும் மாணவர்கள் எப்போதாவது பள்ளிக்கு வருவதும் இத்தகைய பழக்கங்களுக்கு அடிமையாகி, பிறருக்குக் கற்றுத்தருவது நடக்கிறது. சிலரது இந்தச் செயல்பாட்டால் ஒட்டுமொத்தப் பள்ளியும் பாதிப்படைகிறது. இது அவர்களின் பெற்றோருக்கும் தெரியும். அவர்களில் பெரும்பாலானோர் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். ஆனால் அவர்கள் பிறர் மீது பழியைச் சுமத்தித் தப்பிக்க நினைக்கிறார்கள். மதுவை ஒழிக்காவிட்டால் வருங்கால தமிழகமே இருண்டு போகும். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே 9ஆம் வகுப்பு மாணவன் பீர் பாட்டில் வெடித்து உயிரிழந்தது இப்பகுதியில்தான் நடந்தது. அரசு நேரடியாக மது விற்பனையிலும் மறைமுகமாக பிற போதைப்பொருள்களை கண்டுகொள்ளாத நிலை நீடிக்கும்வரை சமூகப் பாதிப்பு தொடரும். அரசுப்பள்ளிகளில் நன்றாகப் படிக்கக்கூடிய குழந்தைகள் பலர் உண்டு. அவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் சுணக்கம் உள்ளது. பள்ளிகளில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதெல்லாம் இயலாத காரியம். கோச்சிங் வணிகத்திற்காகத் திட்டமிடப்பட்டவை இத்தேர்வுகள். அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதே போதுமானது என்ற நிலைப்பாடு அரசுப்பள்ளிகளின் எழுதாதச் சட்டமாகிவிட்டது. அரசு மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் (Schools of Excellence) மூலம் மாவட்டத்திற்கு ஒரு பள்ளிகளில் செய்தால் போதும் என்று கருதுகிறது. இது அனைவருக்குமான பொதுக்கல்வியையும் அருகாமைப்பள்ளி வாய்ப்புகளையும் அழிப்பதாகவே உள்ளது. ஒன்றிய அரசு PM SHRI (Prime Minister ScHools for Rising India) பள்ளிகளைக் கொண்டுவருவது தனது கல்விக்கொள்கையை திணிக்கும் நோக்கத்தைத்தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.   

 • மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து மீண்டு வர அரசு பள்ளிகளில் தனியாக மறுவாழ்வு மையம் அமைக்கலாமா?       

பள்ளிகளில் அவ்வாறு அமைக்க முடியாது. மருத்துவமனைகளில் சிறார் போதை மறுவாழ்வு மையம் அமைக்கலாம். பெற்றோர் மற்றும் தொடர்புடையவர்கள் ஒப்புதலின்றி இதைச் செயல்படுத்த இயலாது. அரசுகள் இதை மூடி மறைக்கவே விரும்புகிறது. மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்யலாம். அரசு இதற்கான கையேடுகளை மட்டும் தயாரிக்கிறது. இது ஆசிரியர்கள் மட்டும் செய்யும் பணி அல்ல. மனநல மருத்துவரின் உதவியும் தேவைப்படுகிறது. இதற்கென ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படவில்லை. வெறும் உறுதிமொழி ஏற்கும் சடங்குகள் உதவாது.

 • மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமாக ஆசிரியர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்?

விளையாட்டின் மூலம் மாணவர்களின் உடலையும் மனத்தையும் சீராக்கலாம். பொதுத்தேர்வு வகுப்பென்றால் விளையாட்டைக் களவாடி விடுகிறார்கள். விளையாட்டு என்பது அன்றாடச் செயல்பாடு. இதற்கு மூன்றாண்டுகள் ஓய்வளிக்கக்கூடாது. இசை, ஓவியம், சிற்பம், நடனம் போன்ற நுண்கலைகளில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஈடுபடுத்தலாம். இது தகைசால் பள்ளிகளுக்கு மட்டும் போதுமானது என்று முடிவெடுப்பது தவறு. பாடத்திட்ட இணைச்செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். சமூகப்பணிகளில் ஈடுபடுத்தலாம். அவர்களுக்குப் பல்வேறு பொறுப்புகள் வழங்கி அதன்மூலம் அவர்களது கவனச்சிதைவை ஒருங்குபடுத்தலாம்.  உரிய பாராட்டுதல்களும் அங்கீகாரமும் அவ்வப்போது வழங்கப்பட வேண்டும். 

 • கல்வி கற்பிக்கப்படுவதை வியாபாரமில்லாத வகையிலும் கல்வி கற்பது தொழில் புரிவதற்காகவும் என்கிற எண்ணத்தை ஆங்கிலேயர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோமா?

அப்படி சொல்ல முடியாது என்று கருதுகிறேன். குருகுலக்கல்வியில் தொழில்தானே அடிப்படை! அப்போதே கல்வி வியாபாரம் தொடங்கிவிட்டது. தன் மகன், ஆசான் மகன், மன்னன் மகன், பொருள் கொடுப்பவன், வழிபடுவன் ஆகியோருக்கே கல்வி என நன்னூல் இலக்கணம் வகுக்கிறது. எனவே இலவசக் கல்வி மறுக்கப்படுகிறது; பொதுக்கல்வியும்தான். அனைவருக்கும் வணிகமில்லாக் கல்வி நமது முந்தைய பாரம்பரியமாக இருந்திருக்கிறது. அவை சமண, பவுத்த அ-வைதீகக் கல்வி முறைகளில் கிடைக்கிறது. பழங்காலக் கல்வி என்றதும் குருகுலம் போன்ற வைதீகக் கல்வியைக் கொண்டாடும் போக்கு இருக்கிறது. ஆங்கில மெக்காலேக் கல்வியை தொடர்ந்து விமர்சிக்கும் பலர் குருகுலக்கல்வியிடம் சரணடைவது உண்டு. குறைகள் இருப்பினும் அனைவரையும் கல்விக்கூடத்திற்கு கொண்டு வந்த பெருமை இக்கல்விமுறைக்கு உண்டு. இதன் குறைகளைச் சரிசெய்வதென்பது மீண்டும் குருகுலங்களைத் தொடங்குவதல்ல. ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை 2020 இதைத்தான் செய்கிறது.          

 • அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகத்தைத் தொடங்கும் போது தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அடிப்படையில் மாற்றமடையுமா?

மாற்றங்கள் உள்ளிருந்தும் அடிப்படைக் கொள்கைகளிருந்தும் வரவேண்டும்.  பிறநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது கல்வி வணிகத்தை மேலும் அதிகரிக்கும். கல்வி மதிப்பெண்களை மட்டும் சார்ந்தது அல்ல. எனவே நுழைவுத்தேர்வுகளும் பொதுத்தேர்வுகளும் மட்டுமே கல்வியின் தரத்தை நிர்ணயிக்க முடியாது.  இவையிரண்டும் மாறிமாறி கல்வியின் இடத்தை ஆக்ரமிக்கின்றன. +2 மதிபெண்களுக்காக +1 வகுப்புப் பாடங்களைப் புறக்கணிப்பதும் நீட் தேர்வு மதிப்பெண்களுக்காக பள்ளி வகுப்புகளைப் புறந்தள்ளி கோச்சிங் சென்டர்களை நாடுவதும் மிகவும் ஆபத்தானவை. கோச்சிங் வணிகம் அதிகரிக்குமே தவிர கல்வித்தரம் மேம்பட வாய்ப்பில்லை. ஒரே நாடு – ஒரே கல்விமுறை இந்திய ஒன்றியத்திற்கு ஏற்றதல்ல. அனைத்துப் பள்ளிகளும் CBSE பள்ளிகளாகவும் NCERT பாடத்திட்டங்களை மட்டும் நாடெங்கும் பின்பற்ற வேண்டும் என்பது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு பேராபத்தாகும்.

 • ‘ஒரே இந்தியா ஒரே கல்வி’ திட்டத்தினால் பிராந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகியவை புறக்கணிப்படுவதற்கு வாய்ப்புள்ளதல்லவா? தாய்மொழிக்கல்வி என்பது இனி இல்லை என்பதுதானே இதற்கான அர்த்தம்?          

உண்மைதான். அவர்கள் கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கல்வி, உள்ளூர் மொழிகள், செம்மொழிகள் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஐந்தாம் வகுப்பு முடிய முடிந்தால் எட்டாம் வகுப்பு முடிய தாய்மொழி வழிக்கல்வி என்று சொல்லி கூடவே ஹிந்தியை நுழைக்க முயல்கிறார்கள். மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் தவிர வேறு மொழியைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லை. வருங்காலத்தில் ராஜஸ்தானி, பிகாரி, போஜ்புரி, மைதிலி போன்ற பல வடஇந்திய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் திராவிட மொழிகளுக்கும் ஏற்படும். பிற திராவிட மொழி பேசும் மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 • இச்சூழலை ஆசிரியராக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?       

கல்வியில் வணிகம், பாகுபாடு மேலும் அதிகரிக்கும். சாமானியர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகும். இடஒதுக்கீடு இருக்காது. அரசுப்பள்ளியில் படிப்போர் இங்கு உயர்கல்வி பெற இயலுமா? தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குவதைப்போல இவை கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குமா? இப்போது தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது நாம் அறிந்ததுதானே!

 • மாணவர்கள் இதனை எப்படி உணர்கிறார்கள்? இல்லை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு திரட்டி போராடியதுபோல் போராட முன்வருவார்கள் என எதிர்பார்க்கலாமா?

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்வுரீதியாக திரட்டப்பட்டது. கல்வியை வணிகமாக்கும் GATS ஒப்பந்தம் குறித்து வெகுசில அமைப்புகளும் கல்வியாளர்கள் மட்டுமே தொடர்ந்து எச்சரித்தும் போராடியும் வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் எதிர்ப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. பெருந்திரள் மாணவர்கள் போராட்டம் சாத்தியமில்லாத நிலைதான் இன்று உள்ளது. மேலும் மாணவர்களைப் போராடவிடாமல் சாதி, மதரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது.

 • அரசுப் பள்ளி வகுப்பறையில் முழுமையான இந்திய வரலாற்றையும் அரசியலையும் மாணவனுக்குக் கற்றுக்கொள்ள முடியுமென நம்புகிறீர்களா?

வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாடத்திட்டத்தில் இல்லாத எதுவும் வகுப்பறைக்குள் நுழைவதில்லை. சமகால வரலாற்றுக்குப் பாடநூலில் இடமில்லை. கடந்தகால வரலாறு நிகழ்வுத் தொகுப்பாக வரிசைக்கிரமாக அடுக்கப்படுகின்றன. அதில் மாணவர்களின் சிந்தனைகள், மதிப்பீடுகள் மற்றும் ஒப்பீடுகளுக்கு வேலையில்லை. உயர்கல்வியிலும் இதே நிலைதான். ஜே.என்.யூ. போன்ற விதிவிலக்குகள் மிகவும் குறைவு. அவையும் தற்போது வலதுசாரிகளால் சீரழிக்கப்பட்டுள்ளன. 

 • வரலாற்றை வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வழி வகைகள் என்னென்னவாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

கல்கியின் நாவல்களையும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களையும் பார்த்து வரலாற்றை அறிய இயலாது. ஆனால் அதுதான் நடக்கிறது. அதிலிருந்து வெளியேற வேண்டும்.  சந்த் பர்தை எழுதிய காவியத்தைக் கொண்டு பிருதிவிராஜ் சௌகானின் வரலாறு எழுதப்படுவது அபத்தமல்லவா! அறிவியல் அணுகுமுறையுடன் வரலாற்றை அணுகவேண்டும். அதற்குப் புறவயமான பார்வை அவசியம். இந்தியன், தமிழன் போன்ற பெருமித அடையாளங்கள் வரலாற்றுப் பார்வையை குலைப்பவை.   ஆழ்ந்த, தேர்ந்தெடுத்த வாசிப்பு தேவை. இங்கே வரலாறுகள் என்ற பெயரில் எண்ணற்ற குப்பைகளும் நோட்ஸ்களும் நிறைந்துள்ளன. அவற்றிலிருந்து தேடிக் கண்டுபிடிப்பது சற்று சவாலான பணிதான். பாடத்திட்டத்திற்கு வெளியே தொடர்ந்து வாசிக்கும்போது இது எளிதாகும்.  இருக்கிற வரலாற்று ஆய்வுகளின் போதாமையும் வெளிப்படும். அந்தத் திசையில் பயணிக்கத் தூண்டுகோலாகவும் அமையும்.

 • 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ஆர்வலர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள், சமூக சீர்த்திருத்த இயக்கங்களின் வழியாக தமிழக அரசியலுக்குள் நுழைந்தனர். தற்போது மாணவர்கள் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாதவர்களாக மாறியுள்ளதற்கு ஆசிரியர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையென்று கூறலாமா?

விழிப்புணர்வு மட்டுமல்ல; அரசியல், கருத்தியல் தெளிவு, புரிதல் எதுவும் இல்லை. இதற்கு நாம் அவர்களை மட்டும் குறைசொல்லி பயனில்லை. நமது பாடத்திட்டங்கள் அரசியலற்ற தன்மையை வளர்க்கின்றன. அதில் உருவாகும் தலைமுறைகள் இவ்வாறுதான் இருக்கும். வாசிப்பு, சிந்தனை எல்லாம் வகுப்பறைக்கு வெளியேதான் கிடைக்கிறது. சுயதேடலால் அதை அடைபவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. உலகமயத்திற்குப் பிறகு கல்வியில் மட்டுமல்லாது இலக்கியம், கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் இதேநிலைதான். தேர்தல் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிறகு மக்களை அரசியல்படுத்தும் முயற்சிகளை இயக்கங்கள் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டன. அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய “மனையில் மகிழ்ந்திரு”, வாசகங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரி இயக்கங்களுக்கு அந்தளவிற்கு நிறுவன பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லை. எனவே வலதுசாரிகள் தீவிரமாக இயங்கி மக்களைத் திரட்டியுள்ளனர். இனி வருங்காலம் அவர்களுடையதாகவே இருக்கும். இதை எதிர்கொள்வது குறித்த புரிதல் திராவிட, இடதுசாரி, தலித் இயக்கங்களுக்கு இன்னும் கைகூடவில்லை.  

 • தமிழ்நாட்டில் ஹிந்தி மொழியை தவிர்க்காமல் இருந்திருந்தால் இன்று நமக்கு மத்திய அரசிலும் அதுசார்ந்த துறைகளிலும் போதிய அளவிற்குப் பணி கிடைத்திருக்க வாய்ப்பாக அமைந்திருக்குமல்லவா?

இது திட்டமிட்ட மிகத்தவறான பரப்புரையாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கு வலுசேர்க்கும் புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. ஹிந்தி படிக்கும் மாநிலங்களிலும் வேலைவாய்ப்பின்மை உண்டு. ஒன்றியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் வெற்றிவாய்ப்பு இல்லை என்ற நிலையில் தமிழகத்திற்கு எதிரான போக்கு அன்றிலிருந்து தொடர்கிறது. வி.பி.சிங்கின் ஐக்கிய முன்னணி காலத்தில்தான் தமிழகத்திற்கு கேபினட் அமைச்சர் கிடைத்தார். காங்கிரசிடம் இருந்த மிதவாதப் போக்கு பா.ஜ.க.விடம் இல்லை. எனவே தமிழகம் போன்ற மாற்றுச் சிந்தனைப் போக்குகளை முற்றிலும் அழிக்க நினைக்கிறது. ஒன்றிய அரசின் அலுவல் மொழி ஹிந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும்தான். நாம் ஆங்கிலம் கற்பதால் இந்திய மற்றும் உலக அளவிலான வேலைவாய்ப்புகளைப் பெறுகிறோம். ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியோ பிற இந்திய மொழிகளோ இருக்க முடியாது என்பதே உண்மை.

 • மெக்காலே கல்வி முறையைத்தான் இப்போதும் பின் பற்றி வருகிறோம். சிறைகளைப்போல வகுப்பறையின் அமைப்பு, ஒழுங்கில்லாதவர்களை பிரம்பால் அடிப்பது, தண்டனை தருவது போன்றவற்றை மாற்றி புது வடிவத்தில் கல்வி கற்கும் சூழலை ஆசிரியராக நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?          

கடந்த சில பத்தாண்டுகளாக வகுப்பறை கொஞ்சம் மாறியிருக்கிறது. தண்டனைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அடிப்படைகள் எதுவும் மாறவில்லை. பொதுத்தேர்வு மையமான கல்வியை ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வு மையமான கல்வியாக மாற்றுகிறார்கள். மொத்தத்தில் தேர்வுகள் ஒழியப்போவதில்லை. தொடக்க வகுப்புகளையாவது விளையாட்டு, செயல்பாடுகள் மூலம் கற்றலை எளிமையாக்கலாம். இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றன. மறுபுறம் ஒன்றிய அரசு மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என முட்டுக்கட்டை போடுகிறது. பாவ்லோ ஃபிரெய்ரே போன்றோரின் சிந்தனைகளை வாசிக்கும்போது நமக்கும் ஏக்கம் உண்டாகிறது. அடிப்படைகளை மாற்றாமல் மாற்றுக்கல்வியை யோசிப்பது சாக்கடைக்கு ‘செண்ட்’ அடிப்பது போன்றதுதான்.

 • அரசுப் பள்ளிகளில் பெரிய அளவில் ஆசிரியர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவதில்லை. தனியார் பள்ளிகளில் அதிகமாக புகார்கள் வந்தபடி உள்ளன. இதற்குப் பிறகும் ஏன் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்பதை ஆசிரியராக எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

நடுத்தர வர்க்க மனோநிலையின் ஒரு வடிவம்தான் இது. தனியார் பேருந்துகளில்தான் ஒப்பீட்டளவில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இருப்பினும் அதன் மீதான ஈர்ப்பு குறையவில்லை. பெரிய கட்டடங்கள், நவீன வசதிகள், நிறைய புத்தகங்கள், வண்ணங்கள், ஒழுங்குக் கட்டுப்பாடு, ஆங்கிலம், இந்தி, விளம்பரங்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை எங்கோ கொண்டு செல்லும் என்று கனவு காண்கிறார்கள். பொதுப்புத்தியும் இதற்கு இசைவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மூளையை நிரப்புவதல்ல; மாறாக சிந்திக்கத் தூண்டுவதே கல்வி என்பதை உணரும் நிலை இல்லை. தகவல்களை நிரப்பும் ஹார்ட் டிரைவ்களாக (Hard Drive) குழந்தைகளின் மூளைகளை மாற்றுவதே கல்வியின் இலக்காக உள்ளது. இதன் விளைச்சலாகவும் இதனைக் காணலாம்.

 • சிறு நாடுகளில் கூட நேர்மையான வழியில் கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. ஜனநாயக இந்தியாவில் கல்வியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. கல்வியில் நேர்மை, எங்கிருந்து தொடங்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

கல்வியில் மட்டுமல்ல எங்கும் நேர்மைக்கு இடமில்லை. ஒட்டுமொத்த சமூகமும் சீரழிவிற்கு உள்ளாகியுள்ளது. கல்வி பெற்றவர்கள் செய்யும் குளறுபடிகள் அதிகமாக இருக்கும். கல்வி நேர்மையைக் கற்றுத்தர தவறியிருக்கிறது. இதைக் குழந்தைகளிடம்தான் தொடங்க வேண்டும்; தொடங்க முடியும்.  ஒழுக்கக்கல்வி என்பது அறக்கல்வியாக மலரவில்லை. நமது மதிப்பீடுகளும் சிந்தனைப் போக்குகளும் மாற வேண்டும். மாணவர்களுக்கான உறுதிமொழி ஒன்றில், “என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன்” என்கிறது. இதன் மறுதலை என்னைவிட வயதில் குறைந்தவர்களை மதிக்கத் தேவையில்லை என்பதே. இவ்வாறான அறமற்ற கூறுகளாலும் ஒழுக்க மதிப்பீடுகளாலும் கல்வி வழி நடத்தப்படுகிறது. அறம் சார் மதிப்பீடுகளை பௌத்தம், சமணம் போன்ற நமது வேர்களிலிருந்து பெறலாம். கல்வியில் அறம் சார்ந்த உரையாடல் தொடங்கப்படவே இல்லை. திருக்குறள்கூட வெறும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் வேதமாக மாறிவிட்டது.

 • நேர்மையை கற்றுத் தரும் இடமாக அரசு பள்ளிகளை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?

சமூகத்திலுள்ள அனைத்து நோய்மைகளும் அதன் அங்கங்களின் இருக்கவே செய்யும். அரசோ, தனியாரோ பள்ளிகள் மட்டும் நேர்மையைக் கற்றுத்தர முடியதல்லவா! எல்லாரும் எதோ ஒருவகையில் குறுக்குவழிகளுக்குப் பழகியுள்ளோம். அந்த வகையில் இதுவும் ஒன்று. இருப்பினும் 7.5% இடஒதுக்கீடு பெற சிலர் அரசுப்பள்ளிகளை நாடக்கூடும். என்னதான் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் கல்வி கற்றாலும் இந்தச் சமூகத்தில்தான் வாழ்ந்தாக வேண்டும். அரசுப்பள்ளி என்பது சமூகப் பன்மைத்துவத்தைக் காட்டும் சிறிய அலகாகும். இந்தச் சூழலில் குழந்தைகள் வளர்வது அவர்களது எதிர்காலத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது. எனவேதான் அருகாமைப் பள்ளிகள் பெருந்தீர்வாக முன்வைக்கப்படுகிறது.

               நன்றி: பேசும் புதிய சக்தி – நவம்பர் 2022

                                   ஜெ.ஜெயகாந்தன், எஸ்.செந்தில்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *