இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

மு.சிவகுருநாதன்

            ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி பாசிசவாதிகளுக்கு வரலாறு, அறிவியல், இலக்கியம் எல்லாம் என்றும் ஆகாது. அவற்றைத் தங்களுக்கேற்ப வளைப்பதையும் திணிப்பதையும் கருத்தியலாகக் கொண்டு செயலாற்றுபவர்கள் இவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் காலம் தொட்டு இத்தகைய மோசடித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி அமைப்புகள் போன்றவற்றைச் சிதைப்பதே இவர்களது வாடிக்கையாகும். நமது அரசியலமைப்பு மீது நம்பிக்கையற்ற இவர்கள் அதையும் சிதைக்க முற்படுகின்றனர்.

        நமது நாட்டின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான 1949 நவம்பர் 26 ஐ 2015 இல் அரசியமைப்பு நாளாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. வழக்கம்போல பலருக்குப் புரியாத இந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயரிடும் முறைப்படி இதற்கு ‘சம்விதான் திவாஸ்’ (Samvidhan Divas) என்று பெயரிட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீதோ சட்ட மாண்புகள் மீதோ துளியும் மதிப்பில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர்கள் அதை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பது தெரியும்தானே!

      2022 ஆகஸ்ட் 15 அன்று 76வது சுதந்திர தின உரையில் “இந்தியா மக்களாட்சியின் தாய்” என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசினார். “பிள்ளையாருக்குப் பிளாஸ்டிக் சர்ஜரி”, என்பது போன்ற இந்த அரிய கண்டுபிடிப்பை அப்படியே ஏற்று, இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) கருத்துரு ஒன்றை உருவாக்கி, பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மூலம் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கி விட்டது.

       பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜினீஷ் ஜெயின் இந்த விழா நடத்துவது தொடர்பான  சுற்றறிக்கையை பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் “இந்தியா மக்களாட்சியின் தாய்” (Bharat – Loktantraki Ki Janani) என்ற பிரதமர் மோடியின் அரசியல் சொல்லாடல் ஆய்வுக் கருத்துருவாக மாற்றப்பட்டு புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

       இந்தியாவுக்கு வேத காலத்திலிருந்தே மக்களாட்சிப் பாரம்பரியம் இருந்த ஆதாரம் இருக்கிறது எனவும் இது கிரீஸ் மற்றும் ரோம் போன்ற மாதிரிகளுடன் முற்றிலும் வேறுபட்டது எனவும் இந்து மதக் கோட்பாட்டில் எல்லாம் உள்ளதெனவும் சமத்துவ உணர்வுடன் வேத கால இந்திய மக்கள் மக்களாட்சிப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்ததாகவும் கதையளக்கிறது. எனவே மக்களாட்சியில் ‘இந்து வேத வேர்கள்’ மீது கவனம் செலுத்துமாறு கூவத்தொடங்கியுள்ளனர்.

     இந்த ஆண்டின் அரசியலமைப்பு நாளை மேற்கண்ட கருத்துரு தலைப்பில் உரைகள், கருத்தரங்குகள், இணையப் பயிலரங்கங்கள், நிகழ்ச்சிகள், பட்டறைகள் போன்றவற்றை நடத்தவும் கீழ்க்கண்ட துணைத் தலைப்புகளையும்  பட்டியலிட்டுள்ளனர்.

 1. தொல்லியல் சான்றுகளில் பாரத மக்களாட்சி வேர்கள் 
 2. இலக்கியத்தில்  மக்களாட்சிப் பாரம்பரியம்
 3. ரிக் வேதமும் பாரத மக்களாட்சிப் பாரம்பரியமும்
 4. சபாவும் சமிதியும்: பாரத மக்களாட்சிப் பாரம்பரியத்தை ஆராய்தல்
 5. தர்ம சாஸ்திரங்களும் மக்களாட்சியும்
 6. உபநிடதங்களும் பரிஷத்களும்
 7. பாரம்பரியமான  தர்மத்தை ஆராய்தல்
 8. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பாரத மக்களாட்சியும்
 9. பழங்கால கண-ஜன பதங்களும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
 10. கல்வெட்டு ஆதாரங்களும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
 11. பாரதீய கலை, கல்வெட்டுகளும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
 12. லிச்சாவி கண-ராஜ்யமும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
 13. பக்தி இயக்கமும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
 14. உள்ளூர் நிறுவனங்கள் / ‘காப்’ பஞ்சாயத்துகளும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
 15. மையக் கருத்தோடு தொடர்புடைய இதர தலைப்புகள்

      இவை ஒன்றிலும் நமது அரசியலைப்பு பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் ஏதுமில்லை. நாம் முன்பே சொன்னதுபோல நமது அரசியலமைப்பை வீழ்த்துவதையும் வேத இந்துமதப் பெருமைகளை உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இத்தகைய செயல்திட்டங்களில் திட்டமிட்டே ஈடுபடுகின்றனர்.

       நமது அரசிலமைப்பிற்கு எதிரான இந்தப் பாசிசச் சொல்லாடல்களை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பது பாராட்டிற்குரியது. இந்தியா முழுவதும் இந்நிலை இல்லை என்பது வருந்த வேண்டிய உண்மை. சிறிய அமைப்புகளின் எதிர்வினை எப்போதும் உண்டு. பெரிய கட்சிகளும் அமைப்புகளும் வேறுதிசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதையும் இது உணர்த்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போன்றோர் தங்களது காத்திரமான எதிர்வினைகளைப் பதிவு செய்துள்ளனர்.

       “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடந்த எட்டாண்டு காலச் செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்க வேண்டும்”, என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

     “அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? என்றும் இது அரசியல் சாசன நாளா? அல்லது கட்டப் பஞ்சாயத்து நாளா? ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும், யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

     அரசியலமைப்பிற்கு எதிராகவும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்கள் பெருந்தாக்குதல்களை தொடர்ந்து நடத்துகின்றனர். திருவள்ளுவர் மீது காவிச்சாயம் பூசியவர்கள் நமது அரசியலமைப்பு மீது அத்தகைய தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். நமது அரசியமைப்பை நீக்கி அவ்விடத்தில் இந்து சனாதன தருமத்தை நிறுவும் முயற்சியாக இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

      இந்தியாவில் இதுவரையில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வு முடிவுகள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வளமான மரபுகளைக் காட்டுகின்றன. அது கண்டிப்பாக இந்துத்துவ வேத மரபு அல்ல. ரிக் வேதம், உபநிடதங்கள், வேத இந்து சாஸ்திரங்கள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவை காலத்தால் பிந்தியவை. இவை இந்துத்துவ, சனாதன மரபை உயர்த்திப் பிடிப்பவை. இவற்றை அரசியலமைப்பின் மாண்பிற்குள் நுழைப்பதும் கொண்டாடுவதும் பாசிசமின்றி வேறில்லை.

      சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம். தொல்லினப் பழங்குடி மக்களின் ஒற்றுமை பேரரசு உருவாக்கத்திற்கு பெருந்தடையாக அமைகிறது. அவர்களைப் போரில் வென்றால் மட்டும் போதாது. தோற்ற அவர்கள் மீண்டும் ஒன்றுசேருவதைத் தடுக்க வேண்டும். அம்மக்களின் ஒற்றுமையை குலைத்த பிறகு அவர்களை ஒன்றுசேராமல் சிதறடிக்க வேண்டும்.

     அம்மக்களை கிராமத்திற்கு ஐந்து அல்லது பத்து குடும்பங்களைக் குடியமர்த்தி, வேளாண் பணிகளில் ஈடுபடுத்தி பிறருடன் தொடர்பு கொள்வதைத் தடுக்க சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இது நமது பழங்கால வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை என தேவிபிரசாத் சட்டோபாத்யாயா விளக்குகிறார்.

       மக்களாட்சி என்பது நவீன வடிவம். இதற்கென அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்பு பன்னாட்டுக் கூறுகளையும் இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமைகளை அகற்றி சமத்துவத்தை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளது. இதை இந்துத்துவ-வேதப்பெருமைக்குள் அடைப்பதும் ஒப்பிடும்வதும்கூட  சரியாக இருக்க முடியாது.

        இங்கு இன்னொன்றையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஒன்றிய அரசின் கல்வி அமைப்புகள் முழுதும் காவிமயமாகிவிட்டன. NCERT பழைய பாடநூல்களில் இருந்த மக்களாட்சி, சமத்துவம் போன்ற பாடங்களை கொரோனாவைக் காரணம் காட்டி நீக்கினார்கள். இனி அவர்கள் வெளியிடும் பாடநூல்கள் எவ்வாறு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. வரலாற்றைத் திரிக்கும் இவ்வாறான பாசிசச் சொல்லாடல்களுடன் அவை இருக்கப்போகின்றன.

      தமிழக அரசின் SCERT தயாரித்த பாடநூல்களில் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேய நடைமுறைகளில் ஒன்றான ‘குடவோலை முறை’ எனும் திருவுளச்சீட்டு முறையை மக்களாட்சி என்று வகுப்புகள் தோறும் புகழ் பாடுகின்றன. ஜனநாயகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுதான் உதாரணமாகக் காட்டப்படுகிறது. மேலும் மநுநீதிச் சோழன் புகழ்பாடும் பாடங்களும் நிறைந்துள்ளன. தற்கால நீதிமன்றங்கள் மநுநீதி, ஸ்மிருதிகள் சொல்லித்தான் அறிமுகமாகின்றன.  ஸ்மிருதிகளைப் பாடநூல்கள் சமூக் கடமைகளாக வரையறுக்கின்றன. வேதங்கள், வேத குருகுலக்கல்வி போன்றவற்றை தமிழகப்பாடநூல்கள் உயர்த்திப் பிடிக்கின்றன. இத்தகைய அபத்தங்களின் உச்சத்தை ஒன்றிய அரசின் செயல்பாடுகளில் காண முடிகிறது.

நன்றி: புதிய விடியல்டிசம்பர்01-15, 2022

2 comments

 1. இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது கல்வியாளர்கள் முற்போக்கு சிந்தனையாளர்கள் அரசியல் கட்சிகளின் தலையாய கடமை

  1. மிக்க நன்றி….
   ‘இடிப்பார் இல்லாத’ நிலை ஒன்றியத்திலும் மாநிலத்திலும் இருப்பது விரைவில் மக்களாட்சியை முடிவுக்குக் கொண்டு வரும்.
   வாக்களிக்கும் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
   தோழமையுடன்…
   மு.சிவகுருநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *