மொழி அரசியல்: அன்றும் இன்றும்

    மொழி அரசியல்: அன்றும் இன்றும்

மு.சிவகுருநாதன்

            வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக உருமாற்றம் அடைகின்றன. இதுவே சிந்துவெளி சித்திர எழுத்துக் குறியீடுகளாக நமக்குக் கிடைத்துள்ளது. அவை ஓவியத்தைப் போலவே மறைபொருளைக் கொண்டதாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் இந்தப் புதிர்களை ஓரளவு விடுவித்துள்ளனர். எழுத்தும் வரி வடிவங்களும் உருவான பிறகு அனைவரும் அவற்றைப் பயன்படுத்தும் அளவிற்கு அவை பிறருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் பிறகு பூடகத்தன்மை ஓரளவு மறைந்து எளிமையானது. இந்த வரி வடிவம் காலத்திற்கேற்பவும் பயன்பாட்டுப் பொருள்களுக்கேற்பவும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. 

              தகவல் தொடர்பு ஊடகமான மொழியை அனைவரும் கற்க எந்தத் தடையும் இல்லாத காலத்தில் அவைகளின் வளர்ச்சியும் விரைவாக இருந்தது. தாய்வழிச் சமூகத்தில் அவள்தான் ஆசிரியராகவும் இருந்திருக்க முடியும். ஓவ்வொரு தலைமுறையும் அடுத்தத் தலைமுறைக்குத் தங்களது அறிவைக் கடத்த விரும்பியது. அதற்கு சரியான, சக்தி வாய்ந்த ஊடகமாக மொழி வாய்த்தது. மேலும் தாய்வழிச் சமூகம் ஓருவகையில் பொதுமைச் சமூகமாக மலர்ந்திருந்தது. இயற்கையுடன் இணைந்த வாழ்வும் இயல்பான மொழிகள் உருக்கொள்ள சாதகமான வெளியும் அமைந்தது.

      இனக்குழுச் சமூகத்திலும் போர்கள் நடந்தன. இருப்பினும் அவர்களின் தகவல் தொடர்பு ஊடகமாக மொழி பெருமளவில் பாதிப்படையவில்லை. எல்லாப் பரிமாற்றங்களுக்கான ஊடகமாகவும் மொழி அமைந்தது. தொடக்கத்தில் தகவல் பரிமாற்றக்கருவி என்பதைத்தவிர வேறு மொழிக்கு வேறு முக்கியத்துவம்  இருந்திருக்க வாய்ப்பில்லை. நவீன மொழியியல் சிந்தனைகள் மொழிகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகின்றன.

            மொழி ஒரு உடலின் ஆறாவது புலனாகவும் சமூகத்தையும் ஓர் உயிருள்ள உடலையும் இணைக்கும் பொதுப்புலனாக உள்ளது என்பார் ஜமாலன். மேலும் மொழி ஒரு கூட்டுச் செயலாக இருப்பதால் சமூகத்தையும் மனிதர்களையும் கட்டமைக்கிறது என்கிறார். (மொழியும் நிலமும்) கூடவே அதிகாரங்களைக் கட்டமைக்கும் ஒன்றாகவும் மொழி ஆகிப்போனது. மொழியியல்  அறிஞர் ஃபெர்டினண்ட் டி சசூர் எல்லாம் குறிகளால் ஆனது; எனவே மொழியும் ஒலிக்குறிகளால் ஆனது என்கிறார். இவர் குறியை (sign) குறிப்பான் (signifier) குறிப்பீடு (signified) என இரண்டாகப் பகுப்பார். பிரஞ்சு பேராசிரியர் ரோலான் பர்த் ரோஜாப் பூக்கள் செடியில் இருக்கும்போது வெறும் பூக்கள் தான். அந்தப் பூக்கள் காதலுக்கு அடையாளமாக ஒருவருக்குக் கொடுக்கும்போது அப்பூங்கொத்து ‘குறிப்பான்’ ஆகிறது. காதல் என்பது குறிப்பானால் அர்த்தப்படுத்தப்படும் ‘குறிப்பீடு’ ஆகிவிடுகிறது. இங்கு ரோஜாப் பூ வெறும் ‘குறி’ மட்டுமே. (பார்க்க: தமிழும் குறியியலும் – தமிழவன்)

      அந்நியர் வருகையும் அவர்கள் மொழியும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு சூழல் மாற்றமடைந்தது. முற்றிலும் புரியாத வேற்றுமொழி ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் கருவியாக மாறிப்போனது. மொழி வழியே இங்கே சமூக அதிகாரம் கட்டப்பட்டது. இது சமூக ஒழுங்கு, அதிகாரத்துவம், ஆதிக்கம் என்பதான வலைப்பின்னலில் உருவானது. 

       குறியீடுகளின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பிராமி போன்ற வரிவடிவங்கள் தோன்றுகின்றன. மௌரியர் கால பிராமி எழுத்துகள் இந்தியாவெங்கும் பரவுகின்றன. இந்த அசோகர் கால பிராமி எழுத்துகளிலிருந்து தமிழ் பிராமி உருவாக்கப்படுகிறது. இதுவே தமிழி என்றழைக்கப்பட்டது. இந்த எழுத்துமுறை சங்ககாலத்தின் இறுதியில் வட்டெழுத்தாக மாற்றம் கண்டது. அக்காலத்தில் எழுது கருவிகளாக இருந்த பனையோலை, எழுத்தாணி ஆகியவற்றால் இம்மாற்றம் நிகழ்ந்தது. களப்பிரர் காலத் தமிழகத்தில் வட்டெழுத்து முறையே நடைமுறையில் இருந்தது என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

        அவைதீக சமயத்தார் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் போன்ற வடமொழிகளை எழுத புதுவகைக் கிரந்த எழுத்துகளை உற்பத்தி செய்தனர். இந்த வடமொழிச் சொற்கள் தமிழிலும் ஊடுருவின. இருப்பினும் தமிழின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டது.

        சமஸ்கிருதம் மட்டும் இங்கு வடமொழி என்று சொல்லப்படுகிறது. அது தவறானதாகும். பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் போன்றவை வடமொழிகளாகும். இவற்றில் எது முதலில் தோன்றியது என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

     சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருளே செயற்கையானது, உருவாக்கப்பட்டது என்பதுதான். இதற்கு மாறாக இயற்கையானது, தொடக்கத்திலிருந்து இருப்பது என்ற பொருள்படும் பிராகிருதமே மக்கள் மொழியாக நீண்டகாலம் புழங்கியிருந்திருக்கிறது. பெருந்திரள் மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி முன்தோன்றிருப்பது சாத்தியமல்ல. சமஸ்கிருதத்தை தேவபாஷை எனவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வழிபாட்டு மொழியாகவும் கட்டமைத்தவர்கள் அம்மொழி பற்றிய புனைவுகளையும் உற்பத்தி செய்து கட்டாயத் திணிப்பை உண்டாக்கினர்.

        மொழியாதிக்கத்திற்கு புனிதக் கதையாடல்கள் தேவைப்பட்டன. எனவே சமஸ்கிருதம் தேவபாஷையானது; இதன் மறுபுறத்தில் தமிழ் எதிரிடையாக நீச பாஷையாக தூற்றப்பட்டது. எல்லாப் பரிமாற்றங்களுக்கும் ஒரே மொழி என்ற நிலை மாறி ஒரு புனித வழிபாட்டு மொழி இவ்வாறாகத் திணிக்கப்பட்டது.

       இந்தத் திணிப்புகளுக்கு நம்பிக்கைகள், புராணங்கள், வேள்விகள், புனைவுகள், அரசதிகாரம் போன்ற பல காரணிகள் படையணிகளாகச் செயல்பட்டன. மக்களின் நம்பிக்கை சார்ந்த உள்ளூர் புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருண மேலாண்மை நிறுவப்பட்டது. எ.கா. மநுநீதிச் சோழன். அரசதிகாரத்துடன் இணைந்த மொழி சமயங்களுடனும் பிணைக்கப்பட்டது. சமயங்களின் கருத்தியல்கள் ஒன்றாக இல்லை. அவை பெரும்பாலும் இரு கூறாகப் பிரிந்திருந்தன.

       வேதப் பிராமண மதங்கள் மனிதர்களை பிறப்பினடிப்படையில் பாகுபடுத்தின. பிராமணர்களையும் அவர்களது மொழியான சமஸ்கிருதத்தை மட்டும் உயர்த்தி பிற அனைத்தையும் இழிவு செய்தன. பிறப்பினடிப்படையில் இவை உயர்வு-தாழ்வைக் கட்டமைத்தன. தங்களது கதையாடல்கள் மூலம் மக்களையும் அரசதிகாரத்தையும் வென்று மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கின. புஷ்யமித்திர சுங்கனில் தொடங்கி பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் என நீண்ட வைதீக ஆட்சியதிகாரம் நெடிது வளர்ந்தது. இவர்கள் இந்து வேத மதங்களையும் சமஸ்கிருதத்தையும் பேணிக்காத்தனர்.

       அவைதீக அல்லது சிரமண சமயங்கள் (heterodox religions) இந்த இடங்களில் முதன்மைப் பங்காற்றின. கடவுள் (இறைவன்), வேதம் (மறை), வருணம் (சாதி), சடங்குகள் (வேள்விகள்) போன்றவற்றை மறுத்தவை அவைதீக மதங்களாகும். எனவே இவை சமூகத்தில் எவ்விதப் பாகுபாடுகளையும் காட்டாமல் அனைவரையும் ஏற்றுக்கொண்டன; அடித்தட்டு மக்களால் இக்கருத்தியல்கள் உள்வாங்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் அனைவரும் கல்வி கற்க இதன்மூலம் வாய்ப்பு உண்டானது. இவை பிராகிருதம், பாலி போன்ற மக்கள் மொழிகளில் தங்களது சமய, இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டன. தமிழ் போன்ற அன்றைய மொழிகளும் ஊக்கம் பெற்றன. பண்டையத் தமிழகத்தில் இந்த அவைதீக சமயங்களின் பரவல் தமிழ்ப் பௌத்தம், தமிழ்ச் சமணம், தமிழ் ஆசீவகம் என்று தனித்தக் கூறுகளாக செழித்தோங்கியது. அன்றைய சூழலில் செழித்திருந்த தமிழ்ச் சமூகமும் தமிழ் மொழியும் இந்த ஊடாட்டத்திற்கு பேரூதவியாக  அமைந்தன.

        இதனால்தான் நமக்குத் திருக்குறளும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் காப்பியங்களும் கிடைத்தன.  இடைக்காலத்தில் இதே உத்திகளைக் கையாண்ட சைவம், வைணவ மதப்பிரிவுகளினால் வெறும் பக்தி இலக்கியங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த பாரிய வேறுபாடுகள் இவற்றையும் அதன் அரசியலையும் ஒருங்கே வெளிப்படுத்துபவை.

       அவைதீக சமயங்களுக்கும் ஆட்சியதிகாரம் வாய்த்தது. வைதீகத்தை ஒப்பிடுகையில் அது குறைவான காலமே. அசோகர் உள்ளிட்ட மௌரிய அரசர்கள், கனிஷ்கர், சாதவாகனர்கள், களப்பிரர்கள், ஹர்ஷர், பாலர்கள், தொடக்க கால பல்லவ அரசர்கள் போன்றவர்களின் காலங்களில் அவைதீகம் சற்று உயர்நிலைக்கு வந்தது. வைதீகம் தனது சூழ்ச்சிகளால் இந்த வளர்ச்சியை அழித்துப் பின்னுக்குத் தள்ளுவதில் பெரிய வெற்றி பெற்றது. 

      வைதீக சமயங்களைத் தாக்கி அழிப்பது ஒருபுறமும் அதனுள் நுழைந்து அழிப்பது மறுபுறமும் என பல்முனைத் தாக்குதல்கள் தொடங்கின. மகாயான பௌத்தம் உருவானதையும் சமஸ்கிருத மொழியில் பௌத்த இலக்கியங்கள் படைக்கப்பட்டதையும் வரலாற்றில் இவ்வாறாகப் புரிந்துகொள்ள முடியும்.

          முகலாயர் ஆட்சியில் சமஸ்கிருத இலக்கியங்கள் பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகையினால் பாலி, பிராகிருத, சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கிலத்திற்கு சென்றன. அதன் வழியே சமஸ்கிருத நூல்களின் பூடகத்தன்மை விடுவிக்கப்பட்டது. இதன்மூலம் அவர்களது கருத்தியல் தாக்குதல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

          ஆட்சியதிகாரங்கள் மூலம் மக்களின் இயல்பு, விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்ட மொழிகளாக நாம் இரண்டைக் குறிப்பாக சுட்டலாம். அன்று சமஸ்கிருதம்; இன்று இந்தி. இந்த வகைமையில் நாம் பாரசீகம், ஆங்கிலம் ஆகியவற்றை இணைக்க இயலாது. அவை தேவையினடிப்படையில் ஏற்பட்டவை.  நீண்ட முடியாட்சிக் காலத்தில் தமிழகத்திலும் பிற்காலச் சோழர்கள் காலம் உள்பட சமஸ்கிருதம் அதிகார, ஆதிக்க மொழியாக கோலோச்சியது. பின்னர் பாரசீக மொழிக்கு ஆட்சியதிகாரம் கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் முதன்மை பெற்றது. பிந்தைய காலகட்டத்தின்  விளைச்சலாக சமஸ்கிருதமயமான இந்தியை தக்கவைப்பதில் இவர்கள் வெற்றி பெற்றனர். ராஜஸ்தானி, சட்டீஸ்கரி, போஜ்புரி, மகதி, மைதிலி, பிராஜ் பாஷா, ஆவதி போன்ற பல்வேறு வட்டார மொழிகள் அழித்தொழிக்கப்பட்டு இந்தி ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டது. தென்னிந்திய திராவிட மொழிகளின் எதிர்ப்பைப்போல் வடக்கில் பெரிய எதிர்ப்புகளின்றி இந்த சமஸ்கிருதமயமாக்கல் அரங்கேறியது.

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (26 டிசம்பர்,1925), பெரியாரின் சுயமரியாதை இயக்கம் (நவம்பர்,1925), அம்பேத்கரின் பஹிஷ்கரித் ஹிதகரிணி (20 ஜூலை,1924) சபா (கற்பி, ஒன்று சேர், போராடு என்ற முழக்கத்தை முன்னெடுத்த இயக்கம்), ஆர்.எஸ்.எஸ். (27 செப்டம்பர்,1925) ஆகிய இயக்கங்கள் சமகாலத்தில் உருவானவை. இவற்றில் ஆர்.எஸ்.எஸ். மட்டும் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளும் பிற அமைப்புகள் வெளியேயும் இயங்கின. காங்கிரசில் இணைந்திருந்த இந்த மத அடிப்படைவாதிகள் அன்றும் இன்றும் பல்வேறு சீர்குலைவிற்கு காரணமாக அமைந்தனர். காங்கிரசுக்குள் தீவிரவாத மற்றும் மிதவாதப் போக்குகள் இருந்ததாக மட்டும் வரலாறு எழுதப்படுகிறது. காங்கிரசுக்குள் இருந்த இந்து மத ஆதரவாளர்கள் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்றரது கருத்தியலுக்கும் செயல்பாடுகளுக்கு பெரிய இடையூறுகள் செய்தனர். இது விடுதலைக்கு முன்னும் பின்னும் தொடர்ந்தது.

        இன்னும் சரியாகச் சொன்னால் 1915 இல் தொடங்கப்பட்ட இந்து மகா சபையும் 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்திய தேசிய காங்கிரசுக்குள் இயங்கின. டிசம்பர் 1938 இல் கூடிய காங்கிரஸ் செயற்குழு வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர்கள் காங்கிரசில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கும் வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னும்  இந்த அமைப்புகளில் பங்கேற்காத இந்துத்துவச் சார்பாளர்கள் குழு தொடர்ந்து கட்சிக்குள் இருந்தது வெறுப்பரசியலுக்கு உறுதுணையாக அமைந்தது.

         விடுதலை இயக்கத்தை மக்கள் மயப்படுத்த ஒரு பொதுவான மொழி தேவையென்று மகாத்மா காந்தி கருதினார். இந்தி, உருது மற்றும் பாரசீகம் கலந்த பேச்சுமொழியான இந்துஸ்தானியே அவரது முதன்மைத் தேர்வாக இருந்தது. இம்மொழி இந்தி, உருது ஆகிய இருமொழிகள் பேசும் மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது. இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் குறியீடாகவும் அவர் கருதியிருக்கக் கூடும்.  இதனடிப்படையில் 1925 இல் காங்கிரஸ் கட்சி இப்பகுதிகளில்  கட்சி செயல்பாடுகள் இந்துஸ்தானி மொழியிலும் பிற இடங்களில் ஆங்கிலமோ அல்லது உள்ளூர் மொழிகளோ பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் விடுதலைக்குப் பின்னால் (1949) மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் நிலைப்பாட்டிற்கேற்ப இந்திக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் ஆளானது.

         நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியை முதன்மைப்படுத்தும் போக்கு தொடங்கியது. மறுபுறம் இந்த மேட்டுக்குடி இந்துக்கள் உருது மொழிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். தங்களது கருத்தியல் பரப்புரைக்கான வாகனமாக முற்றிலும் சமஸ்கிருதமயமான இந்தியை அவர்கள் தேர்தெடுத்தனர். இதன் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் பேராதரவு இருந்தது. எனவே அன்று பெருந்திரள் மக்களின் பேச்சு வழக்கிலிருந்த மக்கள் மொழியான இந்துஸ்தானி ஒதுக்கப்பட்டு, செயற்கையான சமஸ்கிருத அடிப்படைகள் கொண்ட இந்தி வளர்த்தெடுக்கப்பட்டது.

       நாட்டு விடுதலைப் பின்னும் இந்த நிலையே இன்றும் தொடர்கிறது. இந்தித் திணிப்பு என்பது ஒருவகையில் சமஸ்கிருதத் திணிப்பே. இரண்டு மொழிகளும் ஒரே வரிவடிவமான தேவநாகரியில் எழுதப்படுகின்றன. ஆதிக்க மனப்போக்காளர்கள் இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் ஒன்றுபோல் கருதுவதாகவே தெரிகிறது.

     மும்மொழிக் கொள்கை, அவற்றில் இரண்டு இந்திய மொழிகள், இந்திய மொழிகளில் சமஸ்கிருதத் தாக்கம், சமஸ்கிருத ஞான மரபு, முக்கிய நவீன மொழியான சமஸ்கிருதம்,  மும்மொழிகளில் ஒன்றாக  பள்ளி, கல்லூரிகளில் வளமூட்டக்கூடிய விருப்பப் பாடமாக சமஸ்கிருதம் என்றெல்லாம் தேசிய கல்விக்கொள்கை 2020 இல் உளறுவதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். 

        இந்த மொழியரசியல் முற்றிலும் அறிவியல்பூர்வமற்றது; வெறுமனே ஆதிக்க நோக்கங்களுக்கானது. இங்கு சமூகங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் போன்றவற்றில் சமத்துவம் நிலவ விரும்பாதவர்களின் ஆதிக்கப்போக்கின் விளைவாக இதனைக் காணலாம். குறைந்தபட்சம்   நமது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிடையே சமத்துவம் பேணப்பட வேண்டும். இன்றுள்ள நவீன மொழிபெயர்ப்பு வசதிகள் ஒன்றிய அரசு இவற்றில் தொடர்புகொள்வது மிக எளிய செயலாகும். இல்லாத கற்பனைகள் மூலம் மொழியாதிக்கத்தைக் கட்ட முனைவது பாசிசமே. இத்தகைய போலியான கட்டுமானங்கள் தகர்க்கப்பட வேண்டும். இந்த மொழிவழிப் பாசிசம் நாட்டின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல; நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானதாகும்.  

 நன்றி: நன்னூல் 02 – இருமாத இதழ் – ஜனவரி – பிப்ரவரி 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *