பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்-  நூலக வாசிப்பு

பள்ளிக் கல்வித்துறை – இதழ்கள்-  நூலக வாசிப்பு

மு.சிவகுருநாதன்

          வெறும் புள்ளிவிவரங்களையும் EMIS ஐ மட்டும் பிடித்துத் தொங்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மருந்திற்கு சில நல்ல செயல்களையும் செய்ய முனைகிறது.  இவை பாதியில் நின்றுபோகாமல் தொடர்ந்தால் நல்லது. மேலும் இம்முயற்சிகள் எந்தத் திசைநோக்கில் பயணிக்கிறது என்பதில்தான் இதன் தாக்கமும் வெற்றியும் அடங்கியிருக்கிறது.

   1-5 வகுப்புக் குழந்தைகளுக்கு ‘ஊஞ்சல்’ இதழும் 6-9 வகுப்புக் குழந்தைகளுக்கு  ‘தேன்சிட்டு’ இதழும் ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ என்ற மாத இதழும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சிறார் இதழ்கள் tabloid  வடிவில் தனித்தனியே 6 பேர் படிக்கும் வண்ணம் 24 பக்க அளவில் உள்ளது.  ‘கனவு ஆசிரியர்’ 52 பக்கத்தில் A4 அளவில் உள்ளது. 7வது இதழ் முதல் பள்ளிகளுக்கு அஞ்சலில் அனுப்பப்படுகிறது.

         மேலும் இளந்தளிர் இலக்கியத் திட்டம் என்ற தலைப்பில் சிறுவர் நூல்களைப் பதிப்பிக்கும் பணியும் நடந்துவருகிறது. பல்வேறு தலைப்புகளில் சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆவணப் பதிப்புகள், தொல்லியல் துறையுடன் இணைந்த வெளியீடுகள், திசைதோறும் திராவிடம், நூற்றாண்டு படைப்பாளிகளின் திரட்டு,  உயர்கல்வி – நுழைவுத்தேர்வு வினா வங்கிகள் போன்ற பல்வேறு வெளியீட்டுத் திட்டங்களும் உண்டு.        

     ‘கனவு ஆசிரியர்’ ஜனவரி 2023 இதழில் தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர் என்கிற பெரிய அறிமுகத்துடன் மாலனின் சிறுகதை (தப்புக் கணக்கு) ஒன்று இடம்பெறுகிறது. தனியார் பள்ளி நடைமுறைகளைக் கிண்டல் செய்யும் கதை. அரசுப் பள்ளி ஆசிரியருக்கான இதழில் இக்கதை இடம்பெறும் நோக்கம் என்ன? தனியார் பள்ளிகளை அல்லது அதன் ஆசிரியர்களை விமர்சிப்பதுதான் இதன் நோக்கமா? அப்படியெனில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து அவர்களது வணிகத்திற்கு அரசுதானே வழிவகை செய்துவருகின்றது. 

       பள்ளிகளை, ஆசிரியர்களை, கல்வியமைப்பை விமர்சிக்கக் கூடாது என்பதில்லை. அவை தர்க்க எல்லைக்கு உட்பட்டதாக அமைவது நல்லது. ஒருவாரத்திற்கு 7 நாள்கள் எனில் இருவாரத்திற்கு எத்தனை நாள்கள்? என்ற 2X7=14 விடையெழுதுவதற்குப் பதிலாக 7X2=14 என்று எழுதும் குழந்தை ஜனனிக்கு 0 மதிப்பெண் அளிக்கிறார் ஆசிரியை. அதை அக்குழந்தையின் தாத்தா தட்டிக்கேட்க, அந்த ஆசிரியையும் அப்பள்ளி முதல்வரும் வகுப்பில் சொல்லிக் கொடுத்தபடிதான் எழுத வேண்டும். எனவே அதுவே சரியானது என்று வாதிடுகின்றனர். அந்த சுயநிதிப்பள்ளியின் அதிகார எல்லைக்குள் வராது என்ற நிலையிலும் கல்வி அலுவலர் விடை பகுதி சரியென்று மழுப்பி அனுப்புகிறார். அமைச்சர் அளவிற்கு  பிரச்சினையைக் கொண்டுசெல்ல நினைக்கும் தாத்தாவை அத்துடன் விடுமாறு சொல்லும் குழந்தையின் தந்தை அதை வேறுவிதமாக அணுகுகிறார். இதுவே கதைசொல்லியின் அணுகுமுறையாக உள்ளது.

        “இது பெண் குழந்தை. ஞாபகம் வைச்சுகுங்க. சொல்லிக் கொடுத்த மாதிரியில்லாம வேறு மாதிரி யோசிக்கிற குழந்தை. பின்னால பெரியவளானா நிறைய கேள்வி கேப்பா. இதுநாள் வரைக்கும் நடைமுறையில இருக்கிற சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் இதையெல்லாம் கேள்வி கேட்பாள். வித்தியாசமா சிந்திக்கிறதினாலேயே காயம் படுவா. ஊரோடு உலகத்தோட, ஒத்து வாழாம இருந்தா அவளுக்கும் அவஸ்தை. மற்றவர்களுக்கும் இம்சை.”

“அதனால?”

“ஏய், டீச்சர் எப்படிச் சொல்லிக் கொடுக்கிறாளோ அப்படியே கணக்குப் போடு. அதிகப் பிரசங்கித் தனமெல்லாம் பண்ணாதே” என்று சொல்லிக்கொண்டே எழுந்தார் அப்பா.

       இதெல்லாம் கதையில் நடக்கும் உரையாடல்தானே! இதில் கதைசொல்லிக்குப் பங்கில்லை என்று வாதிடமுடியுமா? இறுதியில் இது ஏற்கப்பட்டு கதைசொல்லியின் சனாதன விருப்பம்தான் நிறைவேறுகிறது.

       கணித அடிப்படைச் செயல்களில் கூட்டல், பெருக்கல் ஆகிய இரண்டிற்கும் பரிமாற்றுப் பண்பு  (Commutativity) உண்டு. கூட்டலில்    a + b = b + a; பெருக்கலில்   a X b = b X a என்பது அனைவரும் அறிந்த எளிய உண்மை. கழித்தல், வகுத்தல் போன்ற செயல்களில் இப்பண்பு கிடையாது. இதுகூட புரியாமல் கல்வியமைப்பைக் கிண்டலடிப்பதாக நினைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்குகிறார் மாலன். இக்கதையின் ஊடாக சனாதனக் கருத்துகளை வலியுறுத்த பள்ளிக் கல்வித்துறை இடமளிப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது.

       மேலும் இச்சிறுகதை முன்பே ‘தாய்’ இதழில் வெளியாகி இதே தலைப்பிலான அவரது சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது; இணையப்பக்கத்திலும் கிடைக்கிறது. இது மறுபிரசுரம் என்பதைக்கூடக் குறிப்பிடாமல் வெளியிடுவது இதழியல் அறமல்ல. இந்த அறமற்ற செயல் ஒருபுறமும், முற்றிலும் பழமைவாத, அடிப்படைவாத அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் கருத்துகளை கல்விப்புலத்தில் உலவச்செய்வதும் மிகுந்த  அதிர்ச்சியை அளிக்கிறது.

         பாடநூலில் இடம்பெறும் பிழைகள் தேர்வுகளில் சரிவர கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் போட்டித் தேர்வு விடைகள் தொடர்பாக பல நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. மேலும் கல்வி நடைமுறைகள், கொள்கைகள் மீது பல தர்க்கப்பூர்வமான விமர்சனத்தை எழுப்ப முடியும். கணிதத்தில் யாரும் செய்யத்துணியாத பிழையான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு தர்க்கமற்ற கூறுகளால் நமது கல்விமுறையை விமர்சிப்பதான பாவனையில் இச்சிறுகதை இயங்குகிறது.

      இதைக் கல்விமுறை மீதான விமர்சனம் என்றே வைத்துக்கொண்டாலுகூட இம்முறைக்கு மாற்றாக மாலன்கள் முன்வைப்பது எதை? இதை மெக்காலே கல்வியின் சீரழிவு என்றும் குருகுலக்கல்வியே மாற்று எனவும் இவர்கள் எப்போதும் புலம்பித் தீர்க்கின்றனர். தங்களது பெருவிருப்பமான சனாதன தருமத்தை நிலைநாட்ட அதுவே உதவும் என்பது இவர்களின் நம்பிக்கை. சனாதனம் சூத்திரர், பஞ்சமர், பெண்கள் ஆகியோரை ஒன்றாகத்தானே கருதுகிறது! “ஊரோடு ஒத்து வாழ்”, என்று பெண் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தும் இக்கதை ஆசிரியர்களுக்காக கல்வித்துறை வெளியிடும் இதழில் வெளியாவது காலக்கொடுமை மட்டுமல்ல; வன்முறையும்கூட.

           மாலன்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை வெளியிடும் இதழில் ஏன் இடமளிக்கிறார்கள். இவரது அபாரத் திறமைகளுக்கு (!?) சன் டிவி, குங்குமம் போன்றவற்றில் பதவிகளும் பொறுப்புகளும் வழங்கியாகிவிட்டது. கலைஞர் தொலைக்காட்சி, தினகரன், முரசொலி போன்றவற்றில் இடம், பதவியளித்துப் பெருமைப்ப்படுத்தலாம். மாலன் நாராயணன்களும் மணிகண்ட பூபதிகளும் இருக்க வேண்டிய இடம் அதுதான். பள்ளிக்கல்வித்துறையின் தொலைக்காட்சி, இதழ்களில் இவர்களுக்கு ஏன் இடம் என்று நாம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம். ஆனால் அதுதான் நடக்கிறது.  

     ‘தேன்சிட்டு’ இதழில்  ‘படி, விருப்பப்படி’ என்ற தலைப்பில் கீழக்கண்ட வாசகங்கள் இடம்பெறுகின்றன.

     “அரசுப் பள்ளி நூலகங்களில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றும் வாசிக்கலாம்.  காலையிலும் படிக்கலாம்… மாலையிலும் படிக்கலாம்… இடைவேளையிலும் படிக்கலாம்… கதைகள் சொல்லி, எழுதி, வரைந்து, நடித்து, ஆடிப் பாடி மகிழ்வோம்.

நூலக வகுப்புகளில் நூலகங்களைப் பயன்படுத்துவோம்!

மதிய இடைவேளை வாசிப்பு நேரத்தில் நூலகப் புத்தகங்களை வாசிப்போம்!”

     ஆனால் நடைமுறை என்னவாக உள்ளது என்பதை அறிவது மிக அவசியம். மாணவர்கள் நேரடியாக நூலகம் சென்று தனது விருப்பமான நூலைத் தேர்வு செய்து வாசிக்கும் நடைமுறை வழக்கில் இல்லை. பாடநூல்களைத்தான் நாம் அவர்களது தலையில் கட்டுகிறோம். நூலகத்திலுமா இப்படி இருக்க வேண்டும்? இவை ‘குளிர்பதன அறைகளின் முடிவாக’ இருக்கிறதே தவிர மாணவர்கள், ஆசிரியர்களின் முடிவாக இருப்பதில்லை.

       EMISம், செயலிகளும் வகிக்கும் இடத்தில் சிறுதுளி கூட  வேறு எந்தக் கல்விச் செயல்பாடுகளுக்கும் அறவே கிடையாது. மாணவர் வருகைப்பதிவை TNSED Attendence என்ற செயலியில் குறிக்க வேண்டும். எண்ணும் எழுத்தும், நூலகம், விளையாட்டு, உடல்நலம், நலத்திட்டங்கள் போன்றவற்றை   TN SED Schools என்ற வேறொரு செயலியில் பதிவிட வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்களை www.emis.tnschool.gov.in என்ற இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதில் பல இடங்களில் மதிப்பெண்கள் இருக்கும். எந்த இடத்தில் பதிவிடுவது என்பது யாருக்கும் தெரியாது.

         நாம் அலைபேசிகளில் நூற்றுக்கணக்கான செயலிகளைப் பயன்படுத்தியிருப்போம். எல்லா செயலிகளும் பயன்படுத்துவதற்கு எளிமையாக user friendly ஆக இருக்கும். நாம் ஒரு செயலை முடித்த பிறகும் இன்னும் செய்யவில்லை என்று தகவல் வரும். இதைச் செய்யுங்கள், அதைச்செய்யுங்கள், logout செய்துவிட்டு  மீண்டும் login செய்யுங்கள் என்பார்கள். அப்படிச் செய்தாலும் சுற்றிக்கொண்டே இருக்கும். வாரத்திற்கு இரண்டு மூன்று verison update ஆகும். அப்படியும் பலனிருக்காது. காலை வீட்டில் கிளம்பும்போதே இந்த செயலியை முடுக்கிவிட வேண்டும் என்றும் விடுமுறை நாள்களில் வருகைப்பதிவு ஒத்திகை நடத்த வேண்டும் என்றும் புலனத்தில் (whatsapp) அறிவுரைகள் வந்த வண்ணமிருக்கும். இப்படியொரு உலக மகா அலைபேசி செயலியை வடிவமைத்தவர்களுக்கு நோபல்பரிசை விட பெரிய பரிசு வழங்கலாம். ‘சர்வர்’ அளவு பற்றி யாரும் கவலைகொள்வதில்லை. நாங்கள் சொல்வதைச் செய்யுங்கள் என்று மிரட்டுவதுதான் நடக்கிறது.

       TN SED Schools செயலிக்குச் சென்று வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புத்தக அலமாரியில் புத்தகங்களைச் சேர்க்க வேண்டும். பிறகு அவற்றை குழந்தைகளின் தலைக்கு ஒன்றாக கட்ட வேண்டும். பிறகு நூலகத்தில் தேடினால் அந்தப் புத்தகம் இருக்காது. குழந்தைகள் அவர்களாகவே தேடித் தேர்தெடுத்த நூலை அவர்களுக்கு வழங்கி அவற்றைப் பதிவிடுவதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கண்ணை மறைக்கும்போது பிடிக்கும் முயற்சிக்கும் கதைபோல இருக்கிறது.

      நூலக வாசிப்பு, விளையாட்டு என்றெல்லாம் பேசுகிற வேளையில் இந்தத் ‘தேன்சிட்டு’ மாணவர் இதழ் ஏன் 10, +1, +2  ஆகிய வகுப்புகளுக்கு இல்லை என்று கேட்கத் தோன்றுகிறது? +1, +2 வகுப்புகள் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் இல்லை என்பார்கள். அங்கும் இதே நிலைதான். இதைப்போல பள்ளிகளில் பெயருக்கு நடத்தப்படும் ஓவியம், விளையாட்டு போன்ற தேர்வுகள் 10 ஆம் வகுப்பிற்கு இல்லை. காரணம் மிகவும் வெளிப்படையானது, இவை பொதுத்தேர்வு வகுப்புகள் அவ்வளவுதான்.  வேறு எதற்கும் இங்கு இடமில்லை. இந்தச் சூழலில் அவ்வகுப்பில் ஓவியம், விளையாட்டு, நூலக வகுப்புகள் எவ்வாறு செயல்படும்? இணைச் செயல்பாடுகள் மட்டுமல்ல; பாட்த்திட்டமே இவ்வாறுதான் வடிவமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக 6-8 மாணவர்கள் 7 கண்டங்களின் புவியியலைக் கற்றபின் முதன்முதலாக தமிழ்நாடு புவியியலை அறிவதோ 10 ஆம் வகுப்பில்தான். இதற்குப் பொதுத்தேர்வை விட வேறு காரணம் இருக்கும் என்று நம்புகிறீர்களா?

       அறிவிற்கும் கல்விக்கும் தொடர்பற்ற நிலைமைகளை கல்வித்துறை உருவாக்குவது சரியல்ல. நன்றாக யோசித்து, பிறரைக் கலந்தாலோசித்து இம்முடிவுகள் எடுக்கப்படவேண்டும். வெறும் விளம்பரங்கள் கதைக்கு ஆகாது. ஆதிக்க, ஆணவ முடிவுகள் குறிப்பிட்ட நல்ல விளைவுகளைத் தராது. பொறுப்பிலுள்ளவர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் கல்வித்துறையை சீரழிவிலிருந்து காப்பாற்றலாம்.

நன்றி: புதிய விடியல் (மாதமிருமுறை) – பிப்ரவரி 1-15, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *