சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்

சிறுகதை நுட்பம் செறிந்த நினைவோடைகள்

மு.சிவகுருநாதன்

           நினைவோடை எழுத்துகளில் பலவகை உண்டு. தங்களை மேம்படுத்திக் காட்டிக்கொள்வதற்காக பிறர் மீது அவதூறுகளையும் வசவுகளையும் அள்ளித் தெளிப்பது ஒருவகை. மயிலிறகால் வருடுவதுபோல் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்துவது இன்னொரு வகை. இந்த இரண்டாம் வகைக்கு எடுத்துக்காட்டாக விட்டல்ராவின் இந்த நூலைச் சொல்லலாம்.

       ‘மின்னற் பொழுதுகள்’ எனும் கவித்துவமான தலைப்பில் விட்டல்ராவின் நினைவோடைகளை ‘பேசும் புதியசக்தி’ நூலாக்கியுள்ளது. இவற்றில் 15 ‘பேசும் புதிய சக்தி’ இதழிலும் 3 ‘அம்ருதா’ இதழிலும் வெளியானவை.  இவை தேனுகா, அசோகமித்திரன், சாவி,  சா.கந்தசாமி, கலைஞன் மாசிலாமணி, திருமலை, பாவண்ணன், திலகவதி, மா.அரங்கநாதன், கோமல் சுவாமிநாதன், பாவை சந்திரன், தனுஷ்கோடி, மகரிஷி, ஃப்ராங்ளின் ஆஸாத் காந்தி  போன்ற பல ஆளுமைகளின் நினைவுகளின் ஊடாக நமக்கு சில சித்திரங்களை அளிக்கின்றன.

           இந்த ஆளுமைகளிடம் தாம் கண்டவற்றையும்,  இலக்கியம், அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டியும் தனிமனித விருப்பு, வெறுப்புகளை முதன்மைப்படுத்தாமலும் அவர்களுடனான நட்பு, அன்பு, உறவு, இலக்கியம், கலை என அனுபவ வீச்சுகளை இயல்பாக எழுதிச் செல்கிறார்.  இவர்களில் பலர் காலமான நிலையில் அவர்களின் நினைவுகள் சிலவற்றில் சிறுகதையாகவும் தோற்றம் கொள்கின்றன. அதற்குரிய நுட்பமும் வீச்சும் நிறைந்திருக்கின்றன.

      பதிப்பாளர் ஜெ.ஜெயகாந்தன் முன்னுரையில் குறிப்பிடுவதைப்போல மூத்த எழுத்தாளர்களின் சித்தாந்த மதிப்பீடுகள், அவர்கள் வாழ்ந்த காலத்தின் வரலாறு, சமூக, பொருளாதார, அரசியல் ஆகியவற்றை அறிய இந்நூல் வழிவகுக்கிறது. இவ்வகை எழுத்துகளில் சுயசரிதத் தன்மையும் உண்டு. பிரபல எழுத்தாளர்களின் வாழ்வை அறியும் கவர்ச்சியும் ஆர்வமும் வாசகர்களுக்கு உண்டாவதைத் தவிர்க்க இயலாது.

      எழுத்தாளர்கள் குறித்த பிம்பங்களைக் கட்டியமைக்காமல் மறைந்த எழுத்தாளர்கள் மீதான் எதிர்மறை அம்சங்களைப் பெரிதுபடுத்தாமல் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ‘முன்றில்’ மா.அரங்கநாதன் குறித்த தனது சிறுவருத்தத்தைப் பதிவு செய்கிறார். இருப்பினும் அவரது படைப்புகளைப் புறக்கணிக்கும் தன்மை இல்லை. இது இன்றைய தமிழ்ச்சூழலின் விதிவிலக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

       கோமல் சுவாமிநாதன் ஒருமுறை, “ஒரு மார்க்சிய தொழிற்சங்கவாதியாக இருந்து கொண்டும் உங்கள் இடதுசாரி மனதை உங்கள் எழுத்து வாயிலாகப் பார்க்க முடியவில்லை”. என்று கேட்க, “நான் மௌனமாக புன்சிரிப்பு காட்டினேன்” என்று எழுதுகிறார். தமது இலக்கிய உலக நிகழ்வுகளையும் நண்பர்களுடனான சந்திப்புகளையும் இதே புன்சிரிப்புடன் கடக்கிறார். மலரினும் மெல்லிய இந்தப் புன்சிரிப்பு  இந்நூல் கட்டுரைகள் அனைத்திலும் இழையோடுவதைக் காணமுடிகிறது.      

நூல் விவரங்கள்:

மின்னற் பொழுதுகள் (கட்டுரைகள்)

விட்டல்ராவ்

முதல் பதிப்பு: செப்டம்பர் 2021

பக்கங்கள்: 208  விலை: ரூ.180

வெளியீடு எண்: 04

பேசும் புதிய சக்தி,

29 H, ANR, காம்ப்ளக்ஸ்,

 தெற்கு வீதி,

திருவாரூர் – 610001.

அலைபேசி: 9489773671

மின்னஞ்சல்: pudiyasakthitvr@gmail.com

நன்றி: பேசும் புதிய சக்தி மார்ச் 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *