புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்

நூல் விமர்சனம்:

புராணங்கள் மீது கட்டமைக்கப்படும் தலித் வாழ்வியல்

மு.சிவகுருநாதன்

ஒன்று:

            துறவிநண்டு, திணைப்புனம் போன்ற கவிதை நூல்கள், நெற்குஞ்சம், கூனல்பிறை ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சில ஆய்வுநூல்கள் வழியே அறியப்பட்ட தேன்மொழியின் முதல் நாவல் ‘அணுக்கி’. ‘அணுக்கி’யை தோழி, காதலி என்று சொல்லலாம். இந்நாவலில் வரும்  மகிழ்நன் – மங்களம் ஆத்தா;  மங்களம் ஆத்தா – முல்லை; ஜக்கரியா  – முல்லை; ஆதன் – முல்லை; இனியன் – சித்திரப்பாவை;  சித்திரப்பாவை – கொற்றவை; சுந்தரர் –பரவை; முதலாம் ராஜேந்திரன் – பரவை நங்கை  என எல்லோரும் அணுக்கிகள்தான். மங்களம் ஆத்தா – சுக்கானாறு; முல்லை – காடு என இயற்கைகூட இவர்களுக்கு அணுக்கியாக உள்ளது. திருவாரூருக்கு அருகிலுள்ள    பிலாவடி மூலை (நன்னிலம் – வாழ்க்கை – பிலாவடி மூலை அல்ல) என்னும் சாலை, பேருந்து என எதையும் பார்த்திராத ஒரு குக்கிராமத்துப் பெண்களின் கதையாக ‘அணுக்கி’ உள்ளது. 

           மங்களம் ஆத்தா – முல்லை – சித்திரப்பாவை என்ற மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையும் அடுத்த தலைமுறையான கொற்றவையின் போராட்டப் பிறப்புடன் நிறைவடைகிறது. 1000, 2000 பக்கங்கள் என வாசகனை மிரட்டாமல், துன்பத்திற்குள்ளாக்காத 143 பக்க ‘அணுக்கி’ நாவலைப் பாராட்டலாம். இளம்வயதில் விதவையான மங்களம் ஆத்தா – அடுத்தடுத்த தலைமுறைகளின் போராட்ட வாழ்வியலுடன் திருவாரூர் கோயில், தலபுராணங்கள், நாயன்மார்கள், பண்பாட்டு ஆய்வுகள் என புனைவுவெளியை விட்டு வேறுதிசையில் பயணித்தாலும் பெண்களின் வாழ்வியல் நாவலில் பதிவாகிறது.

      “ஆத்தா நீரை மட்டும் இறைக்காமல், தனது சோகம், தனிமை, இயலாமை, வறுமை என எல்லாவற்றையும் வாரி இறைப்பார்கள்”, (பக்.22) “தனக்கு வேண்டாத எல்லா நினைவுகளையும் அங்கேயே கரைத்து விடும்” (பக்.22) மங்களம் ஆத்தா “அந்த ஊரில் கோயில் இல்லை என்ற போதும், கம்பீரமாய் நடந்து போகும் ஆத்தாவைப் பார்க்கும்போது, ஓ இதுதான் இந்த ஊரின் காளியோ எனத் தோன்றும்”, (பக்.23) ஊரே பயப்படும் இரவில் மாடுகளைக் களவாடும் கோமரத்தான்களை எதிர்கொள்ளும் மங்களம் ஆத்தா, “காலையில யாரையாச்சும் அனுப்பு, நெல்லு கொடுத்து விடுறேன், இல்ல என்ன வேணும்னு புரவிகிட்ட சொல்லிவிடு” (பக்.18&19)  என்று கம்பீரமாக வாழும் மங்களம் ஆத்தா, “பொம்புள கிட்ட கொடுக்கற, அதுவும் பிலாவடி மூலையில இருக்கற பொம்புளைக்குன்னு குடியானத் தெருவுல பேசுவானுவோ”, என ஊருக்கு அச்சப்படும்  நத்தர்ஷாவின் (பக்.16) தயக்கத்தைத் தகர்த்துக் குத்தகை நிலத்தைப் போராடிப் பெறுகிறார். இங்குள்ள சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி விளிம்புநிலை மக்களுக்கு சாகுபடிக்கு நிலம் தருவதோடு, “கனன்று கொண்டிருந்த ஜாதி மதம் எதுவும் இல்லை ஹாஸ்பாவாவுக்கு”, (பக்.25) என்பதாக அவர்களுக்கு இதமளிக்கும் தர்காவும் சமூக நல்லிணக்கச் சான்றாக நாவல் எடுத்துக்காட்டுகிறது.

          நாவலில் பெண்ணின் வேதனைகள் பல இடங்களில் முழுமையாகப் பதிவாகின்றன. காடு, நிலம், நீர் – எல்லாம் பெண்களின் (பக்.123) மறு உருவமாக உள்ளன. “காடு, தனி காடு, சுடுகாடு, மனிதர்கள் இல்லாத காடு (பக்.29)  ஒளிந்து மறைந்தோடும் சுக்கானாறு (பக்.13)  தெப்பக்குளம் – கமலாயம் – அதனுள்ள கோயில், திருவாரூர் தனியார் மருத்துவமனையில் இருக்கும் சித்திரப்பாவை  கருப்பை – பனிக்குடம் – குழந்தை  என கவிதையாய் உருவகம் கொள்கின்றன. நாவலின் பல இடங்களில் கவித்துவம் விரவிக் கிடக்கிறது. பிரசவ வார்டு வேதனைகள், பெண்ணின் வலிகள், பாடுகள் அனைத்தும் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன. “என்ன ஜென்மம்? பெண் ஜென்மம் என வேதனையுடன் நினைத்துக் கொண்டாள்” (பக்.59) பெண் வலியை யார் பேசமுடியும், யார் எழுத முடியும்? (பக்.90) என்ற கேள்வியின் ஊடாக பெண்ணியப் பார்வையில் இவை பதிவாகின்றன.

              ஆதிரையின், “கண்ணீர் அங்கிருந்த ஆண்களின் அகங்காரத்தைக் குறைத்தது. ஒரு பெண்ணின் கண்ணீர் ஆணின் அகங்காரத்தைக் குறைக்கிறது. அதேசமயம் ஒரு பெண்ணின் மௌனம் ஆணின் படபடப்பைக் கூட்டுகிறது”, (பக்.34) என்ற வரிகள் சமூக உளவியலை வெளிப்படுத்தினாலும், பெண்களை கண்ணீருடன் இருத்தி வைக்க நினைக்கிறதோ! இருப்பினும் “இந்தப் பலகாரம் இருக்குல்ல, பொம்பள செய்றதுக்குன்னே, ஆம்பள திங்கறதுக்குன்னேன்னு சொல்லிச் சிரிப்போம்”, (பக்.139) என்பது போன்ற சொல்லாடல்களும் நாவலில் உண்டு. முல்லைக்கு ‘ஆதன் நூலகம்’ (பக்.132),   சித்திரப்பாவைக்கு கடை (பக்.137) வழியாக பெண்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. 

        தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே எல்லாமாக இருந்தாள். பெண் வர்க்கம் அடிமையாக்கப்பட்ட பிறகு  வேளாண்மை உள்ளிட்ட எதுவும் ஆண் சார்ந்ததாக மாற்றப்பட்டன. ஆனால் இங்கு நாவலில் பெண்கள் வேளாண் உற்பத்திச் சக்திகளாகக் காட்டப்படுகின்றனர். “நெல்ல தானியமாப் பாக்க கூடாது. நமக்குப் பாக்கத் தெரியாது. அது நம்ம குல சாமி. நம்ம வீடுகள்ல பூசை அறன்னு ஒண்ணு கெடையாது. ஆனா வீட்டு நடுவுல, பாதி எடத்த அடச்சிட்டு நிக்குமே குதிரு, அப்புற பத்தாயந்தா நமக்குச் சாமி”, (பக்.31) என்ற வரிகள் பெண் பேசுவதாக அமைந்தவை. வழமையான ஆண் எழுத்துக்கு மாற்றாக அமைந்தவை.

        இந்த விளிம்புநிலைப் பெண்களின் போராட்டங்கள் எண்ணற்றவை. அவை சாதி, மதம், வர்க்கம், சுயமரியாதை சார்ந்தவையாக இருக்கின்றன. உலகமயச் சூழலில் பெண்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும்  கூடுதல் சுமையாக பன்னாட்டு கம்பெனிகளையும் ஆளும் அரசுகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய நெருக்கடியும் சேர்கிறது. குளிர்பானக் கம்பெனி வருகிறது;  எரிவாயு, பெட்ரோலியக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. “குழாய்கள் பதிக்கப்போகும் வயல்களில் நீருக்கென்ன வேலை இருக்கப் போகிறது?”, (பக்.144) என்ற கேள்வி எழுகிறது. மங்களம் ஆத்தா, முல்லை, சித்திரப்பாவை, கொற்றவை, வள்ளுவன், மகேந்திரன், இனியன், மகிழ்நன் போன்றவர்கள் இந்த மண் மற்றும் நீருக்கான நெருக்கடியை முறியடிப்பார்கள் என மண் நம்புவதாக நாவல் முடிவடைகிறது.  இந்நாவலுக்குள் ஊடாடும் அரசியலை வேறு ஒரு தளத்தில் அணுக வேண்டியுள்ளது.

இரண்டு:

         சவுண்ட் தாத்தா என்றழைக்கப்படும் ஓடாச்சேரி கதைசொல்லி தாத்தா (பக்.50&51) நவீன நாடகக்கலைஞராக நாவலில் உருவெடுக்கிறார். அவரிடம் முல்லை காரைக்கால் அம்மையார், நீலி, காளி (பக்.52) குறித்து விளக்கி புத்தகங்களையும் அளித்து பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து நாடகம் போடுமாறு கேட்டுக் கொள்கிறாள்.

“பெண் உடல் மேல் அழகை ஏற்றியது யார்? ஆண் உடல், பெண் உடல் சமமான உடல்கள், இனப்பெருகத்திற்கான உடல்கள் உடல்களில் அழகேது? …. உடல் வேண்டாம், உடல் வேண்டாம்”. (பக்.57&58)

“பெண்ணுடலை அழகென்றவனே முதல் துரோகி, அழகு, பொய், கற்பிதம்”,

“சதை களையுங்கள்… சதை களையுங்கள்… சதை களையுங்கள்…

“தின்னுங்கள் சதைத் தின்னுங்கள், தின்னுங்கள், பிணந்தின்னிகள்”    (பக்.58)

           தாத்தா நடத்தும் இந்த நாடகங்களின் வழி பெண் மொழி வெளிப்படுகிறது. இது கதையோடு இயைந்து வரவில்லை என்றாலும் மாற்றுக்குரலைப் பதிய வைக்கும் புதிய முயற்சியாகக் கருதலாம்.

மூன்று: 

        பிலாவடி மூலை குறித்த விவரிப்பில் கதைசொல்லியின் குரல் இவ்வாறாக உள்ளது.  “ஆன்மீகமும் பகுத்தறிவும் கம்யூனிசமும் பரவிக் கிடக்கும் திருவாரூரிலிருந்து நோக்குபவருக்கு இவர்கள் தேவையே இல்லாத தேவையற்ற மனிதர்களாகவே தோன்றக்கூடும்”, (பக்.10) நாடு விடுதலையடைந்து திராவிட, பொதுவுடைமை இயக்கங்கள் செழித்து வளர்ந்த மண்ணின் மீதான விமர்சனமாக இதனை ஏற்கலாம். ஆனால் ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் ஆகிய மூன்றும் ஒரே புள்ளியில் நிறுத்தப்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

        முல்லை, “அப்பாவோடு அறிந்துகொண்ட கம்யூனிச மற்றும் திராவிடக் கருத்துகள் அவளது சிந்தனையைப் பலப்படுத்தியிருந்தன”, (பக்.69) “கீழத் தஞ்சைக்காரன்னா விவசாயியா மட்டுந்தா இருப்பான்னு கிடையாது. கண்டிப்பா கம்யூனிஸ்ட் காரனாவுந்தா இருப்பா” (பக்.41) என்று உறுதியாகச் சொல்லும் சித்திரப்பாவையின் அப்பா மகேந்திரன் என்று ஒருபுறமும், “மகிழ்நனுக்குக் கீழ்வெண்மணி செல்வதற்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை”, (பக்.46) என்று மறுபுறமும் காட்டப்படுகிறது. வேறுவழியின்றி எழுத்தாளருக்கு மொழிபெயர்க்க வேண்டி செல்கிறார். “கம்யூனிஸ்ட்காரரான மாமா வரலாற்றுக்கு அந்நியப்பட்டவராக இருப்பாரென்று நினைத்த மகிழ்நனுக்கு அவர் சொன்ன தகவல் வியப்பளித்தது”, (பக்.76) என்று கம்யூனிச எதிர்ப்பைப் பதிவு செய்வதும் மறுபுறம் புராணங்களைத் தூக்கிக் கொண்டாடும் மனநிலைக்கு பண்பாட்டு மூலதனம், பின்-காலனியம் என்று தாங்குவதும் நடக்கிறது. திருவாரூர் கோயில் தலபுராணங்களில் தனது ஆய்வு வெளிச்சத்தைப் பாய்ச்சும் திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறையின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மகிழ்நனின் கீழவெண்மணி பற்றிய பார்வை முரண்களையும் இத்துடன் அவதானிக்கலாம். மகிழ்நனின் குரலும் சைவ நாயன்மார்கள், புராணங்கள் பற்றிய ஆய்வுகளைச் செய்த கதைசொல்லியின் குரலும் ஒன்றாகவே ஒலிக்கக் காண்கிறோம்.

       “சொன்னா ஆச்சரியப்படுவீங்க, நீதிக்குப் பெயர்போன மனுநீதிச்சோழன் இங்குதான் ஆண்டிருக்கிறான். கல்தேர் இருக்கு. மனுநீதி நினைவு மண்டபம் கூட பெரிய கோயில் பக்கத்தில இருக்கு. (…) கன்றுகுட்டிய தன்னோட தேர்க்கால்ல ஏற்றிக் கொன்னுட்ட மகன, அதேபோல தேர்க்கால்ல வச்சக் கொன்னு பசுக்கு நீதிவழங்குன மனுநீதிச்சோழன் கதயும் இங்குதான் நடந்துருக்குன்னு சொல்லப்படுது” விரக்தியோடு சொல்லும் மகிழ்நன் (பக்.47)

      “கூலியாக ஒரு படிநெல் உயர்த்திக் கேட்டதற்காக நாற்பத்தி நான்கு உயிர்களை எரித்துக் கொன்றதும் நடந்துள்ளது”, (பக்.48)

          இது சி.பி.எம். மற்றும் இடதுசாரிகளின் பார்வை. அன்று களத்தில் நின்ற ஏஜிகே (ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்) போன்றோர் கூலி இங்கு பிரச்சினையே அல்ல; சாதிய மேலாதிக்கமும் அடித்தட்டு மக்கள் தன்மானத்தோடு வாழ்ந்ததும்தான் காரணம் என்கிறார்கள். வேறு பார்வைகளைக்கூட ஆய்வின் மூலம் கண்டடையலாம். ஆனால் மனுநீதியுடன் ஒப்பிடும் பார்வை மோசமானது.

       “ஓவியங்களில் குரங்கு முக அரசன் முசுகுந்தன், இந்திரன், தியாகராஜர் என இக்கோயிலின் தல புராணமும், மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன் கதையும், இவனையும் கதை கேட்க அழைத்தன”, (பக்.111) ஆனால் இந்த ஆய்வு மாணவர் புராணங்கள் மற்றும் தொன்மங்களுடன் வாழ்பவர். எனவே மனுநீதிச்சோழன் புராணத்துடன்தான் கீழவெண்மணிப் படுகொலையை ஒப்பிட முடிவது தமிழில் தலித் இலக்கியத்தின் இரண்டாவது அலையின் துயரமாகப் பார்க்க வேன்டியுள்ளது.

         முல்லையின் மகன் ஆதன் பற்றிய சித்தரிப்புகள் நாவலில் முன்னும் பின்னும் ஏதுமில்லாத நிலையில் நாவலிருந்து தொடர்பற்ற வகையில் வன்புணர்வுச் சம்பவம் இணைக்கப்படுகிறது. +2 தேர்வு எழுதி கோடை விடுமுறையில் இருக்கும் முல்லை – இளமாறன் மகன் ஆதன் ஓடம்போக்கி ஆற்றங்கரையில் இருக்கும் அம்மணசாமி மடத்தருகே 15 வயதுப் பெண் குழந்தையை வன்புணர்வுக்குள்ளாக்கும் கும்பலில் ஒருவனாகிப் போகிறான். அந்தப் பெண்குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு ஊசாலாடும் நிலையில் மிகுந்த முயற்சிக்குப்பின் மைனர் ஆதனை ஜக்கிரியா, சீனிவாசன் போன்றோர் பிணையில் அழைத்து வருகின்றனர். ஆதனுக்கு எப்படியும்  தண்டனை கிடைக்கும். அந்தத் தண்டனையை  எனக்கும் சேர்த்து வழங்கிக் கொள்கிறேன் என்கிற முடிவோடு முல்லை ஆதனுக்கு  நஞ்சு உணவூட்டித் தானும் உண்கிறாள். முடிவில் ஆதன் மட்டும் இறக்க முல்லை உயிர்பிழைக்கிறார். புராணத்தில் மனுநீதிச்சோழன் பசுவின் கன்றுக்காக இளவரசனைத் தேர்க்காலில் பலியிடுகிறான்.     நாவலில் வன்புணர்வுக்குள்ளான பெண் குழந்தைக்காக முல்லை  ஆதனை  நஞ்சு உணவூட்டிக் கொள்கிறார். இவ்வாறாக பல்வேறு புராணத் தொன்மங்கள் எவ்வித எதிர்ப்புமின்றி மீளுருவாக்கம் செய்யப்படுகின்றன.

  நான்கு:

           திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக ஆய்வு மாணவர் மகிழ்நன் “கற்பனையும் ஆராய்ச்சியும் தனக்குள் ஒருசேரப் புகுந்துவிட்டதை அறிந்து, இந்நிலை ஆய்வுக்கு உதவாது எனப் புத்தகங்களை மூடி எடுத்துக்கொண்டு எழுந்தான்”, (பக்.07)  என்ற வரி நாவலில் வருகிறது. அந்தக் கணத்தில் மூடினாலும் எப்போதும் புராணங்களின் மீதே ஆய்வு செலுத்துபவராக, அவற்றை அப்படியே ஏற்பவராகவே நாவல் முழுதும் வருகிறார். இவரது குரல் முற்றிலும் கதைசொல்லியின் குரலாகவே உள்ளதை நாவலின் போக்கில் உணரலாம்.

        மகிழ்நன் பற்றிய அறிமுகமாக, “அவன் வரலாறுகளை வாசிப்பவன் இல்லை. வரலாற்றுக்குள் இன்னொரு வரலாற்றைத் தேடுபவன். மண்ணுக்குள் உறங்கும் முதுமக்கள் தாழி போல வரலாற்றுக்குள் புதைந்து கிடக்கும் வரலாற்றைத் தேடுவான். மக்களின் வரலாறு, மறைக்கப்பட்ட வரலாறு, மறுக்கப்பட்ட வரலாறு, ஒடுக்கப்பட்ட வரலாறு, தீண்டப்படாத வரலாறு, என வரலாற்றைப் புதிது புதிதாய்க் கொண்டு வருவான்”, (பக்.73) மேலும் அவர், “புராண வரலாற்றுக்கு எதிர்திசையில் மக்கள் வரலாறு இருக்கிறது. உண்மைக்கும் கற்பனைக்கும் இடைவெளி அதிகம்தான். வரலாறு வாசிக்கப்பட வேண்டும். அது எந்தப் பக்கத்திலிருந்து வாசிக்கப்பட வேண்டும் என்பது இங்கு முக்கியம்”, (பக்.49) என்கிறார்.

       நாட்டார் தொன்மங்களும் சாதிய மனநிலையில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த கட்டமைக்கப்படுவதாக உள்ளதை காணமுடியும். வைதீகப் புராணங்கள் சைவம், வைணவம் சார்ந்த கருத்தியல்களை பொதுப்புத்தியில் திணிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றை எவ்வித புரிதலும் ஆய்வுமற்று ஏற்பது மீண்டும் நம்மை வைதீகப் புதைக்குழிக்குள் கொண்டு செல்லும் என்பதை உணரவேண்டும்.

        “இக்கோயிலில் உள்ள மூல தெய்வம் புராணங்களால், அரசர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல; மக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது, அது கதையாகக் கூட இருக்கலாம்”, (பக்.04&05) நாயன்மார்கள் அறுபத்துமூவரில் நிறைய பேர் இந்தக் கோயிலோட தொடர்புடையவங்களா இருக்காங்க.. (பக்.117) ஊரே கோயில் சார்ந்து இயங்கியத பார்க்க முடியுது (பக்.118) “கோயில் நிர்வாகம் என்பது ஒரு அரசனால் நாட்டில் மேற்கொள்ளப்படிருந்த நிர்வாகத்திற்கு இணையாக இருந்ததை மகிழ்நன் வியப்போடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தான்”, (பக்.05)

      “தஞ்சாவூரில் தளிச்சேரியை உருவாக்கியபோது இவ்வூரிலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்டிய நங்கைகளை ராஜராஜன் அழைத்துச் சென்றுள்ளான். ராஜராஜனின் தளிச்சேரி  குறித்த சிறப்புகளையும் இழுக்குகளையும் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரம் நாட்டியக் கலையில் தலைசிறந்து விளங்கிய அப்பெண்களை மனதால் வணங்கினான்”, (பக்.07)

        கோயில்கள், நிர்வாகம், நாயன்மார்கள், தளிச்சேரிகள், கலைகள், நடனம் என பெருமைகொள்ள ஏதுமில்லை. அடித்தட்டு மக்கள் நிலமற்று கூலிகளாக சுரண்டப்பட்டதும் கோயில்களும் கடவுள்களும்  நிலவுடைமையாளர்களாக இருந்த நிலையும் ஆய்வுக்குரியன. இறைகளும் இறையிலிகளும் எவ்வாறு கட்டமைப்பட்டன என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மங்களம் ஆத்தா ஏன் குத்தகைக்கு நிலம் தேடவேண்டும் என்ற கேள்விக்கான விடை இங்கு கிடைக்கும்.  

        “இக்கோயிலின் இறைவன் வீதிவிடங்கன் அமர்ந்து தலைக்கோலிகளின் நடனத்தைக் கண்டு தான் மகிழ்ந்ததாகத் தெரிவிக்கும் கல்வெட்டு, மகிழ்நனின் ஆராய்ச்சி அறிவை அடக்கி கற்பனையை உயர்த்தியது”, (பக்.06) “சுந்தரருக்கும் பரவைக்கும் விடங்கன் வேறுபாடு பார்க்கவில்லை  போலும், ஆணோ பெண்ணோ, உயர்ந்த குலமோ, தாழ்ந்த குலமோ, ஏழையோ, பணக்காரனோ விடங்கனுக்கு ஏதும் இல்லை போலும்”, (பக்.115) “திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாம் என்னுடைய கணங்கள், சாதி சமய வேறுபாடு இல்ல” (பக்.118) சுந்தரனுக்காக பரவை நங்கையிடம் தூதுபோகும், தலைக்கோலிகளின் நடனத்தைக் கண்டு ரசிக்கும், திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவரோட மனைவி மதங்க சூளாமணியையும் வடக்கு வாசல் திறந்து கருவறைக்கு அழைத்துப் பண் இசைத்துக் கேட்கும்  சிவன், நந்தனை மட்டும் ஏன் தீக்குளிக்க வைத்துத் தீட்டு நீக்கிச் சேர்த்துக் கொள்கிறார்.  இந்த நுட்பமான வேறுபாட்டை உணர்வதும் புராணங்களை அப்படியே ஒப்பிக்காமல் மீள்வாசிப்பு செய்வதும் அவசியம். 

       “அது வாய்வழி  புராணம் மட்டுமில்ல, மக்களோட புராணம், எனக்கு அதுல எப்பவுமே நம்பிக்க உண்டு”  (பக்.74) சாமிதந்தான் பாளையம் – சாமந்தான் பாளையம் (பக்.75) யானையேறும் பெரும்பறையர் (பக்.76) & (பக்.116)  யானை என்பது அதிகாரத்தின், வீரத்தின் குறியீடு. அது இங்கு சாமானியனோடு இணைக்கப்பட்டுள்ளது. (பக்.77)

     “திருவாரூர் முக்திதலம், இங்கு பிறந்தாலே முக்தி என்கிறது சைவம், இந்த மண்ணில் சாமானியன் ஒருவன் யானையேற முடியுமென்றால் சாமிக்குக் குடைபிடிக்க முடியுமென்றால், உண்மைதான். திருவாரூரில் பிறந்தாலே முக்திதான்”, (பக்.77)

       “அந்தக் கதையை, நிலைநிறுத்தி இன்றுவரை பாதுகாத்து, யானை மீது ஏறும் அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அந்த மனிதர்கள் எப்படி சாமானியர்கள், எவ்வளவு பெரிய புரட்சி, வெளியில் தெரியாத புரட்சி, கத்தியின்றி ரத்தமின்றி, சூது இன்றிம் வாது இன்றி ஒரு புரட்சி நடந்தேறியிருக்கிறது”, (பக்.77)

          வைதீக, பக்தி இலக்கியச் சமரசங்களைப் புரட்சி என்பது அவரவர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது. கூலி அல்லது சாதிப் பிரச்சினையில் 44 உயிர்கள் பலிகொடுத்து, இழந்து வெல்வது புரட்சியாக இருக்கலாமல்லவா? கத்தியின்றி, ரத்தமின்றி எந்தப் புரட்சியும் நடைபெற்றதில்லை. கவிதைச் சொல்லாடலை இங்கு இணைப்பது அபத்தம்.   இன்னொரு புறம் யானை பவுத்தத்தின் குறியீடு.  அறிவு, புலனடக்கம், தனிமை போன்றவற்றின் குறியீடாக சொல்லப்படுகிறது. இங்கு வைதீகப் பார்வையே மேலெழுகிறது. இதை மறுவாசிப்பு அல்லது கட்டுடைப்பு செய்தால்  சமண, பவுத்த, ஆசீவக மரபின் கூறுகள் கிடைக்கலாம்.  இரட்டைமலை சீனிவாசன் சைவத்தின்பால் நின்றவரல்ல; சைவப் பெருமையாக இந்த புராணத்தையும் அவர் எடுத்துக்காட்டவில்லை.  ஆனால் நாவல் வைதீகத்தை அதாவது சைவத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

              முசுகுந்த சக்கரவர்த்தி – குரங்குமுக மனித அரசன், சுந்தரன், பரவை இருவருக்கும் தோழன் வீதி விடங்கன் (பக்.115), முதலாம் ராஜராஜன் – பரவை நங்கை-  வீதிவிடங்கன் (பக்.114), தளிச்சேரிப் பெண்டுகள், கோயில் பணியாளர்கள் (பக்.118&119),  அஜபா நடனம் (பக்.112 & 119), புள்ளத் தண்டு, விழுப்பறையர் (பக்.119), நமிநந்தியடிகள் – நீரால் விளக்கு எரித்தல் (பக்.117) என புராணம், வரலாறு எல்லாம் கலந்த நாவலில் இவையெல்லாம் பெருமிதம் கலந்து பேசப்படுகிறது. கீழக்கோபுர வாயில் அணுக்கி வாயில் என்று பெருமையுடையதாகிறது.  தளிச்சேரி பெண்கள், கலை, கலாச்சாரம் என்று பேசுபவர்கள் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் தேவதாசி தடைச் சட்ட மசோதா தொடர்பான சட்ட மேலவை உரைகளை கொஞ்சம் படிக்க வேண்டும்.   

       “எல்லாத்துலயும் சூப்பர் என்னன்னா, மூக்கறுத்த செருத்துணையாரும், கையை வெட்டிய கழற்சிங்கரும் அறுபத்தி மூன்று நாயன்மார்கள்ள ஒருத்தரா ஆயிட்டாங்க. அறுபட்டுநின்ன அந்தப் பொண்ணு இன்னும் நியாயம் கிடைக்காம நம்ம கோயில்ல அலஞ்சிட்டு இருப்பாங்கன்னு நெனக்கிறேன்”, (பக். 79)  என்று ஓரிடத்திலாவது புராணக் கதையை விமர்சனத்துடன் அணுகுவதை வரவேற்கலாம்.

      “நம்ம சாமின்னா நம்மள உள்ளவிடாம இருக்குமா, உள்ளவிடாத சாமியோட எதுக்குப் பஞ்சாயத்து, நம்ம கோயில், நம்ம சாமிய உருவாக்கி, கும்புட்டுக்க வேண்டியதுதான்” (பக்.79) என்ற மங்களம் ஆத்தாவின் யதார்த்த நிலையை தவிர்த்து புராணக் குப்பைகளை நாவல் கிளறுகிறது.

ஐந்து:

      சமணம், பவுத்தம் குறித்த செய்திகள், அதாவது நமிநந்தியடிகள் சமணர்களால் கேலி செய்யப்படுதல், சமணநல்லூர் – சன்னாநல்லூராகத் திரிதல், பழையவலம், பள்ளிவாரமங்கலம் போன்ற இடங்களில் பவுத்தச் செல்வாக்கு (பக்.78) பற்றி ஒரு பத்தி மட்டும் சொல்லப்படுகிறது.  கமலாலயக் குளம் – மொஹஞ்சதாரோ பெருங்குளம் (122) ஒப்பீடு மிக விரிந்த அளவில் உள்ளது.  தண்டியடிகள் காலத்தில் திருவாரூரில் நடந்த சைவ – சமண கலகம் பற்றி அவரது பெரியபுராணப் பாடல் வழியே அறிய முடிகிறது. அப்போது  திருவாரூரில் சமணர் செல்வாக்கு மிகுந்திருந்தது.  கமலாலயம் எனப்படும் திருக்குளம் மிகச் சிறியதாகவும் அதனைச் சுற்றி நான்கு பக்கமும் சமணர்களின் சொத்துக்கள், பள்ளிகள், பாழிகள், மடங்கள் நிறைந்திருந்தன.  குளத்தைப் பெரிதாக்க தண்டியடிகள் விரும்புகிறார். வழக்கம் போலவே சிவபெருமான் அரசன் கனவில் வந்து தனது விருப்பத்தை வெளிப்படுத்த சமணர்களை ஓடத் துரத்திய பிறகு சமணப் பள்ளிகள், மடங்கள், பாழிகள் ஆகியவற்றை இடித்து குளத்தை விரிவுப்படுத்திய செய்தியை கீழ்க்கண்ட பெரியபுராணப் பாடல் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

    “அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர்தம்  

    சொன்ன வண்ண மேஅவரை ஓடத் தொடர்ந்து துரந்தற்பின்

    பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து

    மன்னவனும் மனமகிழ்ந்து வந்து தொண்டர் அடிபடிந்தான்”.

ஆறு:

       ‘மத்தியானப் பறையர்’ புராணம் குறித்து நாவல் சிலாகிப்பதைக் கொஞ்சம் கவனியுங்கள். “மத்தியானத்துல ஒரு மணி நேர மட்டும் இங்கு இருக்கற பிராமணர்கள் பறையர்களாக தங்கள உணரணும் அப்படிங்கறது கதை மட்டுமல்ல. (…) வெளிப்படையா பாத்தா இது தண்டனை மாதிரி தெரியலாம். (…) ஆதிக்க சாதியில இருக்கிற அந்த மனச ஒரே ஒரு மணி நேரம் கீழே இறக்கி வச்சுப் பாக்கும்போது, தங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட அந்த மனிதர்கள நெனச்சுப் பாக்கும்போது, ஒரு சில நல்ல மாற்றங்கள் மனசுக்குள்ள உருவாக வாய்ப்பு இருக்கும், சிறு முயற்சி மாதிரியா தெரியுது. சாதிய மறுப்புல பகுத்தறிவு எந்த அளவு பங்கு வகிக்கிதோ அதே அளவு மனிதர்களோட புரிதலும் பங்கு வகிக்கிது”, (பக்.117) என்று நீண்ட வியாக்கியானம் சொல்லப்படுகிறது. வைதீக புராணத்தைத் தூக்கிச் சுமக்கும் பெரும் சுமையாக இது இருக்கிறது.

       ஆனால் பிராமணிய, வைதீக நடைமுறைகள் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிதல் அவசியம். விலங்குத் தோல்கள் தீட்டு; மான், புலித் தோல்கள் மட்டும் தீட்டல்ல. எனவே அது சிவனுக்கும் அவனைப்போன்றே பிற சாமியார்கள் அமரும் இருக்கையாக உள்ளது. மாட்டின் வாய் தீட்டு; அதன் பின்புறம் சாணி, மூத்திரம் என எதுவும் தீட்டமல்ல; மாறாக அவை தீட்டை நீக்கப்பயன்படும் பொருளாகும். தீ, பசு மாட்டின் மூத்திரம், நெய், பட்டுத்துணி, சடங்குகள் (யாகம், வேள்விகள்), மந்திரங்கள் (சமஸ்கிருதம்) போன்றவற்றை வைதீகம் தீட்டைக் நீக்கப் பயன்படுத்தும் பொருள்களாக உள்ளன. நீர் எந்த ஒரு தீட்டையும் போக்காது. தொட்டால் மட்டும் தீட்டல்ல; வருணத்திற்கேற்ப 8, 16, 32, 64 அடி எல்லைக்குள் வந்தாலே  தீட்டு என வரையறுப்பது உண்டு.

        ‘வர்ணங்கள் – சாதிகள் – தீண்டாமைகள்’ என்ற கண்ணியை ‘பார்ப்பனர் – சந்நியாசம் – தீண்டாமை’ என்ற வேறொரு புனைவை நிகழ்த்துவதன் மூலம் பார்ப்பனர்களைப் பாதிக்கப்பட்டோராகவும்   பரிதாபத்திற்குரியவர்களாகவும் நிறுத்தும் வேலையை சீனிவாச ராமாநுஜம் எழுதிய, மொழிபெயர்த்த சந்நியாசமும் தீண்டாமையும், இந்துமதம்: ஒரு விசாரணை, விரிசல் கண்ணாடி (மொ) ஆகிய மூன்று நூல்களும் செய்கின்றன. சந்நியாசியும் தீண்டப்படாதவரும் ஒன்று எனக் கட்டமைப்பதன் வாயிலாக தீண்டாமைக் கொடுமைகள் புனிதமாக்கப்படுகின்றன. பார்ப்பனியப் புராணங்கள் மற்றும் சொல்லாடல்களைக் கொண்டே இவற்றை நிறுவிக்கொள்ள முயல்வது ஆய்வின் ஆபத்தான போக்காகும்.

         பார்ப்பனர்கள் எதிரில் வரக்கூடாது என்றொரு சகுனம் (நிமித்தம்) தமிழகக் கிராமங்களில் உண்டு. இதனால், கண்டால் தீட்டு என்ற நிலையில் பகலில் நடமாட முடியாமல், இரவாடிகளாக வாழ்ந்த புதிரை வண்ணார்கள், புலையர்கள் போன்றவர்களைப் போலப் பார்ப்பனர்களும் தீண்டாமையின் கோரப்பிடியில் இருந்தனர் என்று தத்துவார்த்தச் சொல்லாடல்கள் உருவாவது எப்படி இருக்கும்? இந்த ஆய்வின் பாதையிலேயே நாவலும் பயணிக்கிறது என்பதே உண்மை.

       இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாளின் ‘நஞ்சை மனிதர்கள்’ வெள்ளாளர்களின் வாழ்வியலைப் பேசும் இனவரைவியல் நாவலாக அமைந்தது. அதன் பின்னால் அவர் எழுதிய ‘மரக்கால்’ (நந்தன் கதை), தாண்டவபுரம் (திருஞானசம்மந்தர் கதை) அனைத்து சைவத்தை எதோ ஒருவகையில் உயர்த்திப் பிடிக்கச் செய்தன. இந்நாவலும் சைவப் புராணங்களின் வழி தலித் வாழ்வியலை எழுதிச் செல்கிறது. பண்பாட்டு மூலதனம் என்ற பெயரில் பண்பாட்டு மேலாதிக்கச் சொல்லாடல்கள், கட்டமைக்கப்பட்ட புராணங்களைக் கட்டுடைக்காமல் அவற்றை அப்படியே மீளுருவாக்கம் செய்வது எவ்வித விடுதலையையும் தராது என்று சொல்லி வைக்கலாம். தலித் இலக்கியத்தின் இரண்டாம் அலை நம்மை பின்னோக்கி இழுப்பதாக அமைய வேண்டியதில்லை.

நூல் விவரங்கள்:

அணுக்கி – நாவல்     ஆசிரியர்: தேன்மொழி

முதல் பதிப்பு: டிசம்பர் 2022    பக்கங்கள்: 146   விலை: ₹200

வெளியீடு:

மணற்கேணி பதிப்பகம், எண்: 56, பிளாட் எண்: 6 எஃப், கீழ்தளம், அரவிந்தர் நகர், கிழக்கு பாண்டி ரோடு, விழுப்புரம் – 605602

அலைபேசி: 6382794478 மின்னஞ்சல்: manarkeni@gmail.com

பின்குறிப்பு:

பக்க வரையறை காரணமாக தலைப்பு நான்கின் இறுதியில் 5 பத்திகள் நீக்கப்பட்டு வெளியானது.   

நன்றி: பேசும் புதியசக்தி – மாத இதழ் மே 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *