இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி

இந்தியாவில் பாரிஸ்டர் காந்தி

(மகாத்மாவின் கதை தொடரின் ஐந்தாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்

            தாயகம் திரும்பிய காந்திக்குப் பெரும்  அதிர்ச்சி காத்திருந்தது. யாரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாரோ,  யாரைக் கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்த நினைத்தாரோ அவர் உயிருடன் இல்லை என்பதே அது. காந்தி இங்கிலாந்தில் இருக்கும்போதே தாயார் புத்லிபாய் கரம்சந்த் காந்தி (1844-1891) மரணமடைந்து விட்டார். காந்தியால் ஊருக்கு வர இயலாது என்பதால் அச்செய்தியை சொல்லாமல் மறைத்துவிட்டனர். வீடு திரும்பியது அவருக்குச் சொல்லப்பட்ட இச்செய்தியால் உருக்குலைந்துபோன காந்தி காலதாமதமாக அவர் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களைச் செய்தார்.

       காந்தியின் குடும்ப நண்பரான டாக்டர் மேத்தா மேலும் பல நண்பர்களை அறிமுகம் செய்தார். ஏற்கனவே காந்தியின் மூத்த சகோதரர் டாக்டர் மேத்தாவுடன் நெருங்கமாகியிருந்தார். டாக்டர் மேத்தா மூலம் காந்திக்கு மேலும் இரு நண்பர்கள் கிடைத்தனர். அவருடைய சகோதரர் ஶ்ரீ ரேவா சங்கர் ஜகஜீவன் ஒருவர். இவரது நட்பு காந்தியின் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தது. மேத்தாவின் மூத்த சகோதரரின் மருமகன் ராய்ச்சந்திரர் என்ற கவிஞர் மற்றொருவர். இவர் மேத்தாவின் மூத்த சகோதரரின் நகை வியாபாரத்தில் பங்குதாராகவும் இருந்தார்.

        அவரைப் பார்த்தவுடன் காந்திக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஒழுக்கமும் புலமையும் மிக்க இளைஞராக அவர் இருந்தார். மேலும் அவர் அவதானியாகவும் இருந்தார். ஒரே நேரத்தில் பலவற்றை கவனிக்கும் இக்கலைக்குத் தமிழில் கவனகம் என்றுபெயர்; சமஸ்கிருதத்தில் அவதானி என்பர்.  அவருடைய நினைவாற்றலைச் சோதிக்குமாறு காந்தியை மேத்தா கேட்டுக்கொண்டார். ஐரோப்பிய மொழிகளில் தனக்குத் தெரிந்த சொற்கள் பலவற்றைக் காந்தி கூற அவற்றை வரிசைக்கிரமமாக அப்படியே ஒப்பித்தார்.  

         அவரைப்பற்றிப் பின்னால் தெரியவந்த செய்திகள் காந்தியை கொஞ்சம் மயங்க வைத்தன. சமய நூல்களில் இருந்த அவரது அபார அறிவு, ஒழுக்கம், ஆன்மீக பூரணத்துவம் (Spiritual perfection)  அடைய அவருக்கிருந்த ஆர்வம் ஆகியன காந்தியைக் கவர்ந்தன. சுவாமி முக்தானந்தரின் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். பல லட்சங்கள் கொண்ட வியாபாரம் அவருடையது. வைரம், முத்து போன்றவற்றைச் சோதித்துப் பார்ப்பதில் கைதேர்ந்தவர். இருப்பினும் சமய நூல்களும் அவர் எழுதும் நாள்குறிப்புகளும் அவரது மேசையை நிறைக்கும். வியாபாரத்தினிடையே இவற்றில் மூழ்கிவிடுவது அவரது விருப்பம்.

        வழக்கே இல்லாத பாரிஸ்டராக இருந்த காந்தியிடம் சமயம் தொடர்பான நுணுக்கமாக செய்திகளைப் பகிர்ந்து கொள்வார். பிற்காலங்களில் பல மதக் குருக்களையும் சமயத் தலைவர்களையும் சந்தித்திருந்தாலும்  ராய்ச்சந்தரைப் போல யாரும் தன் மனத்தைக் கவர்ந்ததில்லை என்பதையும் காந்தி பதிவு செய்கிறார். அவர்மீது பெரிய மதிப்பு இருந்தாலும் அவரை குருநாதராக ஏற்றுக்கொள்ளவில்லை.

        காந்தியின் மூத்த சகோதரருக்கும் பணம், பெயர், புகழ் ஆகியவற்றில் விருப்பம் அதிகம். அளவுக்கதிமான தாராள குணம் படைத்தவர். அவருக்கு நிறைய நண்பர்கள். எனவே வழக்கறிஞர் தொழிலில் காந்திக்கு நிறைய கட்சிக்கார்கள் கிடைத்து வருமானமும் அதிகம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருந்தார். காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து அவரது உறவினர்களிடையே எழுந்த புயல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவரது சாதிக்காரர்கள் இதன்பொருட்டு இரு பிரிவுகளாக நேரிட்டது. ஒரு பிரிவினர் கட்டுப்பாட்டை நீக்கவும் மற்றொரு பிரிவினர் கட்டுப்பாட்டைத் தொடரவும் முடிவு செய்தனர். முதல் கட்சியினரை திருப்தி செய்வதற்காக மூத்த சகோதரர் காந்தியை ராஜ்கோட் போகும் முன் நாசிக் அழைத்துச் சென்று புனித நீராடலுக்கு ஏற்பாடு செய்தார். பிறகு ராஜ்கோட்டில் ஒரு விருந்தும் நடத்தினார். இவை காந்திக்குச் சிறிதும் பிடிக்கவில்லை என்றாலும் சகோதரரிடமிருந்த அன்பு மற்றும் பக்தியால் எந்திரம் போல அவர் சொன்னதையெல்லாம் செய்தார்.

        காந்தியைச் சேர்த்துக் கொள்ள மறுத்த மற்றொரு கட்சியினரிடம் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அவர்களில் சிலர் காந்தியை வெறுத்தபோதிலும் அவர்களிடம் வெறுப்பு காந்திக்குத் தோன்றவில்லை. இருப்பினும் அவர்கள் மனம் புண்படக்கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வு காந்திக்கு நிரம்பியிருந்தது. சாதிக்கட்டுப்பாடு குறித்த விதிகளை மதித்து நடந்தார். காந்தியின் மாமனார், மாமியார், மைத்துனர், தமக்கை என யாரும் காந்திக்கு உணவு, தண்ணீர் என எதுவும் கொடுக்கக் கூடாது என்பது அவ்விதிகளுள் ஒன்று. இவற்றை மீற அவர்கள் தயாராக இருந்தபோதிலும் காந்தி துளியும் அசைந்து கொடுக்கவில்லை. இவ்விதிகளை ரகசியமாக மீற காந்தியின் மனம் இடம்தரவில்லை. இதன் பயனாக அவர்களில் பலர் காந்தியிடம் அன்பாகவும் தாராளமாகவும் நடந்து கொண்டனர். தனது எதிர்ப்பின்மையே அவர்களது மனத்தை மாற்றியது என்று காந்தி திடமாக நம்பிக்கை. இதுவே அவரது பிற்காலப் போராட்டங்களுக்கு அடிநாதமாக விளங்கியது.

         காந்தி – கஸ்தூரிபா உறவில் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஏற்பட்டன. காந்தியின் முன்கோபத்தால் கஸ்தூரிபாவிடம் அடிக்கடி சினங்கொள்ள நேரிட்டது.  அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தரவேண்டும் என்பது காந்தியின் பெருவிருப்பமாகும். குடும்பச்சூழல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஒரு சமயம் கஸ்தூரிபாவை அவரது தந்தையார் இல்லம் அனுப்பும் அளவிற்கு சண்டை முற்றியது. அவருக்கு கொடுந்துயரமளித்துப் பின்னர் திரும்ப அழைத்துக் கொண்ட நிகழ்வும் நடந்தது. தன்னுடைய குறைபாடுகளுக்காக அவரைத் துன்புறுத்தியதாகவும் இது பெருந்தவறுகள் எனவும்  காந்தி பிற்காலங்களில் வருந்தவும் செய்தார்.

          குழந்தைகள் வளர்ப்பு குறித்து காந்தியின் மனத்திற்குள் பெரிய செயல்திட்டங்கள் இருந்தன. காந்தி இங்கிலாந்து செல்லுமுன் பிறந்த ஹரிலாலுக்கு (1888-1948) நான்கு வயதாகியிருந்தது. காந்தியின் அண்ணனுக்கும் குழந்தைகள் உண்டு. இவர்களுக்கு உடற்யிற்சிகள் சொல்லித்தந்து அவர்களது உடலை வலுப்பெறச் செய்யவேண்டும் என்பது காந்தியின் கனவு. குழந்தைகளை தனது நேரடிப் பார்வையில் வளர்க்க வேண்டும், அவர்களுக்கு சிறந்த ஆசிரியராகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்பினார். குழந்தைகளிடம் விளையாடுவதும் அவர்களின் விளையாட்டுகளை  வேடிக்கைப் பார்ப்பதும்  காந்திக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்தன.

         உணவுச் சீர்திருத்தம் பற்றிய கொள்கைகள் இருந்தாலும் காபியும் தேநீரும் ஏற்கனவே வீட்டிற்குள் நுழைந்துவிட்டன. காந்தி இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் வீட்டில் ஆங்கிலச் சூழலை ஏற்படுத்துவதே சரி என அவரது சகோதரரின் முடிவாக இருந்தது. விழாக்களில் மட்டும் பயன்படுத்தப்படும் பீங்கான்  பாத்திரங்கள் தினசரிப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. காந்தி காப்பிக்கும் தேநீருக்கும் பதிலாக ஓட்ஸ் கஞ்சியையும் கோக்கோவையும் புகுத்தினார். கூடவே ஐரோப்பிய உடைகளும் ஐரோப்பியமயமாதலை நிறைவு செய்தன.

         இவ்வாறு காந்தியின் குடும்பத்திற்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே சென்றன. ஒவ்வொரு நாளும் புதிய பொருள்கள் என செலவு  யானையைக் கட்டித் தீனிபோடும் கதையானது. இதற்கு வருவாய்க்கு எங்கே போவது? ராஜ்கோட்டில் பாரிஸ்டர் பணி செய்வது கேலிக்குரிய ஒன்றானது. தகுதியுள்ள வழக்கறிஞருக்குத் தெரிந்தது கூட காந்திக்கு தெரியாது என்றாலும் அவர்களைவிட பத்துமடங்கு அதிகக் கட்டணம் எதிர்பார்த்தால் கட்சிக்காரர்கள் எப்படிக் கிடைப்பார்கள்? அப்படி ஒரு முட்டாள் கிடைத்தாலும் என்னுடைய அறியாமையையுடன் ஆணவம், மோசடி என புதிதாகச் சேர்ந்து உலகிற்கு நான் பட்ட கடன்களை இன்னும் அதிகமாக்கிக் கொள்வதா என காந்தியின் மனம் சிந்தித்தது. காந்தியின் சகோதரர் கட்சிக்காரர்களைப் பிடிப்பதற்கு தம்மாலான முயற்சிகளைச் செய்துகொண்டிருந்தார். 

       உயர்நீதிமன்ற அனுபவம் பெறவும் இந்தியச் சட்டங்களை முழுமையாக அறியவும் வழக்குகள்  அதிகம் கிடைக்கவும் பம்பாய் போவதுதான் நல்லது என்கிற நண்பர்களின் ஆலோசனைப்படி காந்தி பம்பாய் பயணமானார். அங்கு தன்னைப்போலவே தகுதியற்ற ரவிசங்கர் என்ற சமையற்காரரை வைத்துக் கொண்டு வசிக்கத் தொடங்கினார். அந்த பிராமணச் சமையல்கார்ருக்கு மந்திரங்களும் சுத்தமும் ஆகாது. அவருடன் சேர்ந்து ஒன்றாக சமைத்து உண்டார். காந்திக்கு போதிய அவகாசம் இருந்த காரணத்தால் ரவிசங்கருக்கு ஆசானாகவும் இருக்க வேண்டியதாயிற்று.  சுவையில்லாத உணவும் அவரின் சுத்தமில்லாத தன்மையும் காந்திக்கு ஒத்துவரவில்லை. மேலும் செலவு அதிகமானது; வருமானம் இல்லை. ஐந்து மாதங்களுக்கு மேல் காலம்தள்ள முடியவில்லை. பாரிஸ்டர் தொழில் கொஞ்சம் அறிவும் அதிக ஆடம்பரமும் உள்ள மோசமான தொழில் என்கிற முடிவுக்குக் காந்தி வந்திருந்தார். அவருக்கிருந்த பொறுப்புகள் கவலையை மேலும் அதிகமாக்கின.

         இருப்பினும் பாம்பாயில் இருந்தபோது காந்தி இந்தியச் சட்டங்களைப் படிக்கத் தொடங்கினார். அரசு வழக்கறிஞர் (Solicitor) தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த வீரசந்திர காந்தி என்ற நண்பர் காந்திக்குக் கிடைத்தார். இந்தியச் சட்டங்களைப் படிப்பது சங்கடமாக இருந்தது. உரிமையியல் நடைமுறைச் சட்டத்தைக் காந்தியால் படிக்க இயலவில்லை. சாட்சிகள் தொடர்பான சட்டம் அப்படியல்ல. இருப்பினும் பெரிய வழக்கறிஞர்களின் சட்ட அறிவைக் கேட்ட காந்திக்கு மனச்சோர்வு அதிகமானதுதான் மிச்சம்.

      “ஒரு பாரிஸ்டர் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகள் வருமானமின்றி காத்திருப்பது அசாதாரணம் அல்ல;. அதனால்தான் நான் அரசு வழக்கறிஞர் தேர்வுக்குப் போகிறேன். ஒரு மூன்றாண்டுகள் உனது வாழ்க்கையை ஓட்டிவிட்டால் நீ பெரிய அதிஷ்டசாலிதான்”, என்று  வீரசந்திர காந்தி காந்திக்கு அறிவுரை தந்தார்.  மாதாமாதம் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாரிஸ்டர் தொழிலுக்கு தயாராகிவரும்போதே விளம்பரப்பலகை தொங்க விடுவதற்கும் காந்தியின் மனம் ஒப்பவில்லை.

       அந்த நேரத்தில் மமிபாய் வழக்கொன்று காந்தியிடம் வந்தது. வழக்கைக் கொண்டுவந்த தரகருக்கு பணம் கொடுக்க காந்தி மறுத்துவிட்டார். இருப்பினும் இந்த சிறு காரண வழக்கு (Small Cause Case) காந்தியிடமே வந்தது. மிகச் சுலபமான வழக்கு. காந்திக்கு ரூ.30 கட்டணம் என்று பேசப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஒரு நாளுக்கு மேல் நடக்காது என்பதை காந்தி உணர்ந்திருந்தார்.  முதன்முதலாக நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார். காந்தி பிரதிவாதியின் வழக்கறிஞர். எனவே வாதியின் சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும். அதற்காக எழுந்த காந்தியின் தலைசுற்றியது; முழு நீதிமன்றமே சுழல்வதாகக் காந்திக்குத் தோன்றியது. ஒரு வார்த்தைகூட பேசாமல் அப்படியே அமர்ந்துவிட்டார். வெட்கமும் அவமானமுமாக நீதிமன்றத்தைவிட்டு காந்தி வெளியேறினார்.

        அந்த வழக்கை நடத்த பட்டேல் என்ற வேறு ஒரு வழக்கறிஞர் ரூ.51 கட்டணத்தில் அமர்த்தப்பட்டார். காந்தி தாம் வாங்கிய தொகை திரும்ப அளித்தார். வழக்கை நடத்தும் துணிச்சல் ஏற்படும் வரை எந்த வழக்கையும் எடுத்துக் கொள்வதில்லை என்று உறுதியேற்றார். காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும் வரையில் நீதிமன்றம் செல்லாத நிலைதான் நீடித்தது. போர்பந்தரில் ஏழை முஸ்லிம் ஒருவரின் நிலத்தைப் பறிமுதல் செய்த வழக்கில் விண்ணப்பம் (suit / Petition) தயாரித்தளித்தார். வாதத்திறமை இல்லாவிடினும் வழக்கு விண்ணப்பம் (suit) தயாரிக்கும் ஆற்றல் அவருக்கு தன்னம்பிக்கை அளித்தது என்றே சொல்ல வேண்டும். கட்டணம் வாங்கிக் கொள்ளாமல் விண்ணப்பம் தயாரித்துக் கொடுத்தால் தொழில் நன்றாக நடக்கும். ஆனால் வயிற்றுக்கு என்ன செய்வது?

      ஆங்கில அறிவு இருந்ததால் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சென்றுவிடலாம் என்று காந்தி எண்ணினார். ஆங்கில ஆசிரியர் தேவை என்கிற விளம்பரம் பார்த்து மனுபோட்டு நேர்காணலுக்கும் சென்றார். லத்தீனை இரண்டாம் மொழியாகக் கொண்டு லண்டன் பதின்மத் தேர்வில் தேறியிருந்தாலும் பி.ஏ. பட்டமில்லாததால் ஆசிரியர் பணி அளிக்க இயலாது என்று தலைமையாசிரியர் மறுத்துவிட்டார். காந்தியின் கவலைகள் அவரது சகோதரருக்கும் தொற்றிக் கொண்டன. பம்பாயில் இவ்வாறு காலத்தை வீணாக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு இருவரும் வந்தனர்.

    காந்தியின் சகோதரர்களில் ஒருவர் ராஜ்கோட்டில் சிறிய வழக்கறிஞராக இருந்தார். அங்கே சென்று அவருடன் இருந்து மனுக்கள், விண்ணப்பங்கள் எழுதிக் கொடுக்கலாம் என்றும் பம்பாய் குடித்தனத்தை மாற்றினால் பணம் மிச்சமாகும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இப்படியாக ஆறுமாத கால பம்பாய் பாரிஸ்டர் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.  பம்பாய் வாழ்க்கையிலும் காந்தி நடைபயிற்சி வழக்கத்தை மட்டும் விடவில்லை. தான் தங்கியிருந்த இடத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு 45 நிமிடங்கள் நடந்தே சென்றார். இதனால்தான் நான் நோய்வாய்படவில்லை; இப்பழக்கத்தின் நன்மைகளை நான் தொடர்ந்து அனுபவிக்கிறேன் என்று காந்தி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். 

         பம்பாயில் ஏற்பட்ட ஏமாற்றம் ராஜ்கோட்டில் இல்லை. விண்ணப்பம் எழுதுவதன் வாயிலாக மாதம் சராசரியாக ரூ.300 வருமானம் கிடைத்தது. ஆனால் தரகுப்பணம் கொடுக்கக் கூடாது என்கிற  உறுதியை மட்டும் விட்டுவிட வேண்டியதாயிற்று. ஆனால் இங்கு தரகுப்பணம் தங்களைப் பணிக்கு அமர்த்தும், வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டும் என்பது சற்று ஆறுதலளித்தது. எப்படியோ வாழ்க்கை நடத்துவதற்கு போதுமான பணத்தை சம்பாதித்த காந்திக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

        பிரிட்டிஷ் அதிகாரிகள் எப்படியிருப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளார். அதை நேரில் காணும் வாய்ப்பு காந்திக்குக் கிட்டியது. காந்தியின் சகோதரர் போர்பந்தர் ராணா  சாகிப் அவர்களுக்கு தவறான ஆலோசனை வழங்கியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பிரிட்டிஷ் அரசதிகாரி அவர்மீது தப்பெண்ணம் கொண்டிருந்தார். அந்த அதிகாரியை காந்திக்கு முன்னரே தெரியும் என்பதால் அவரைச் சந்தித்துத் தப்பெண்ணத்தைப் போக்க காந்தியின் சகோதரர் விரும்பினார். ஆனால் காந்தி அவ்வாறு செய்ய விரும்பவில்லை. எனினும் தனது சகோதரர் விருப்பத்தை மறுக்க இயலாமல் அவரைச் சந்திக்கச் சென்றார்.

        அந்த அதிகாரி காந்தி சொல்வதை முழுமையாகக் கேட்கத் தயாராக இல்லை. “வெளியே செல்லுங்கள்”, என்று அந்த அதிகாரி சொல்ல, “தான் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள்”, என காந்தி வேண்ட, பணியாளரை அழைத்து காந்தியின் தோளில் கைவைத்துத் தள்ளி வெளியேற்றப்பட்டார். காந்திக்கு கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்தன. “நீங்கள் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். இதற்கு தக்க நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்குத் தொடர நேரிடும்”, என்று அவருக்குக் குறிப்பெழுதி அனுப்பினார். “நீங்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டீர்கள். உங்கள் விருப்பம் போல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்”, என்ற பதிலும் கிடைத்தது.

        பதிலுடன்  வீடுதிரும்பிய காந்தி அண்ணனிடம் தகவலைச் சொன்னார். அவர் மிகவும் வருந்தினார். காந்திக்கு எப்படி வழக்குத் தொடர்வது என்றும் தெரியவில்லை. தனது நண்பர்களை கலந்தாலோசித்தார். அப்போது காங்கிரஸ் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான சர் பெரோஷா மேத்தா (1845-1915) ராஜ்கோட்டிற்கு வழக்கிற்காக வந்திருந்தார். ஒரு சிறிய பாரிஸ்டர் அவரை எப்படி நேரில் சந்திப்பது என்றெண்ணிய காந்தி, மற்றொரு வழக்கறிஞர் மூலம் ஆவணங்களை இணைத்து, உரிய ஆலோசனைகளை வேண்டினார். அவரோ, “இது பல வழக்கறிஞர்களுக்கு நடக்கும் சாதாரண அனுபவம். பிரிட்டிஷ் அதிகாரிகள் இப்படித்தான் இருப்பார்கள். துரை மீது வழக்கு தொடர்ந்து அடையபோவது ஏதுமில்லை”, என்று சமாதானத்தை காந்தியிடம் தெரிவிக்கச் சொல்லியுள்ளார். இந்த அறிவுரை நஞ்சு போல் கசப்பாக இருந்தாலும் விழுங்க வேண்டிய கட்டாயம். எனவே அவமானத்தைச் சகித்துக் கொண்டார். இனி வாழ்நாளில் நட்பை இவ்வாறு பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதி பூண்டார். போர்பந்தரின் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மன்னர் ராணாவிற்கு அதிக அதிகாரம் கிடைக்கவும் காந்தி சில வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இதில் அவர் வெற்றி பெற்றாலும்கூட விவசாயிகளிடம் அதிக நிலவரி வசூலில் மாற்றம் ஏற்படவில்லை. இதிலும் காந்தி ஏமாற்றமடைய நேரிட்டது.

        இந்நிலையில் போர்பந்தர் மேமன் கம்பெனி காந்தி அண்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தது. இக்கப்பல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. அக்கடிதத்தில், அங்கு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடக்கிறது. அங்குள்ள வழக்கறிஞர்களுக்கு உதவியாக இருக்க காந்தியை அனுப்ப வேண்டினர். தாதா அப்துல்லா கம்பெனி அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, சேத் அப்துல் கரீம் ஜவேரி என்ற சகோதரர்களால் நடத்தப்பட்ட  கப்பல் கம்பெனி. இக்கம்பெனி பல்வேறு சரக்கு மற்றும் பயணிகள் கப்பல்களை இயக்கி ஆங்கிலேயரின் எதிர்ப்பை சம்பாதித்த நிறுவனமாகும்.   இக்கம்பெனியின் பங்குதாரர் சேத் அப்துல் கரீம் ஜவேரியை காந்திக்கு சகோதரர் அறிமுகப்படுத்தினார். அவர், “இந்த வேலை சிரமமாக இருக்காது. கடிதப் போகுவரத்து ஆங்கிலத்தில்தான் நடக்கும். அதிலும் நீங்கள் உதவலாம். நீங்கள் எங்கள் விருந்தினர்; எனவே உங்களுக்கு செலவு ஏதும் இருக்காது”, என்றார். “ஓராண்டு அங்கு இருக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு முதல் வகுப்புக் கப்பல் கட்டணமும் பிற செலவுகள் போக 105 பவுன் தருகிறோம்”, என்றும் உறுதியளித்தார்.

         காந்தி தென்னாப்பிரிக்கா செல்வது பாரிஸ்டர் என்ற முறையில் அல்ல. தாதா அப்துல்லா கம்பெனி ஊழியராகவே செல்கிறார். எப்படியாவது இந்தியாவிலிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று நினைத்தார். புதிய நாடு மற்றும் புதிய அனுபவம் கிடைக்கும். 105 பவுனை குடும்பச் செலவிற்கு அண்ணனிடம் கொடுத்துவிடலாம். எனவே அவர்களிடம் எவ்வித பேரமும் பேசாமல் காந்தி தென்னாப்பிரிக்கா கிளம்பத் தயாரானார்.

 (தொடரும்…)

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மே 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *