அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்

அறிவார்ந்த சிந்தனைகளுக்கான இதழ்

(புதுமலர் – சிற்றிதழ் அறிமுகம்)

மு.சிவகுருநாதன்

முதல் இதழ்:

          தோழர் கண.குறிஞ்சி ‘இடது’ என்ற மார்க்சியச் சிற்றேட்டை நடத்தி வந்தார். அது தனது முதற்சுற்றை முடித்துக்கொண்டது.  அதன் நீட்சியாகவும் இரண்டாம் சுற்றாகப் ‘புதுமலர்’ என்ற பெயரில் சமூக, அரசியல், கலை, இலக்கியக் காலாண்டிதழைத் தொடங்கியிருக்கிறார். பிரகடனங்கள் எவற்றையும் உரத்து முழங்கப் போவதில்லை, என்கிற அறிவிப்புடன் இதழ் வெளிவந்துள்ளது. ஆனால் இதழ் கருத்தியல் சார்ந்து இயங்கும் என்பதற்கு இதில் இடம்பெறும் படைப்புகளே சாட்சியாக உள்ளது. ‘புதுமலர்’ முதல் (ஜனவரி – மார்ச் 2023) இதழ் வள்ளலார் -200 ஆவணச் சிறப்பிதழாக வெளிவந்தது.

          புத்தருக்குப் பிறகு யாரும் சங்கம் அமைக்காத நிலையில் தனது கோட்பாடுகளைப் பரப்புவதற்கு சங்கம் (சமரச சுத்த சன்மார்க்க சங்கம்) அமைத்த வள்ளலாரின் பெருமையையும் உலகப் பற்றை துறந்த பின்பும் தமிழ் மொழி மீது பற்று கொண்டிருந்ததையும்  தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவும் பழ.நெடுமாறன் கட்டுரை இனம் காண்கிறது.

         இந்தியத் துணைக் கண்டத்தில் வேதங்கள், வேதமரபுகள், வருணாசிரமம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை அழித்தொழித்து சமத்துவ, அறிவார்ந்த சமூகத்தை படைக்க வேண்டும் என்று முதன்முதலில் போதித்தவர் புத்தர். அவரது மறைவிற்குப் பின் பார்ப்பனர்கள் சங்கத்தில் நுழைந்து திரிபுகளை உண்டாக்கினர். வள்ளலாரின் வேதமறுப்புச் சிந்தனைகளுக்கும் இதே நிலை ஏற்பட்டதை வள்ளலார் வழிவந்தோர் முறியடித்துள்ளனர். அவர்களுக்கு உதவுவதே வேதமறுப்புச் சிந்தனை (அவைதீகம்) கொண்ட அனைவரின் கடமை என கொளத்தூர் மணியின் கட்டுரை தெரிவிக்கிறது.

         வள்ளலார் குறித்த பல்வேறு தரப்புகளை ஒத்துறழ்ந்து ஆய்வு செய்யும் தோழர் பொதிகைச் சித்தரின் கட்டுரை (வடலூரும் ஈரோடும்) உண்மையில் தமிழ்த் தேசியத்தின் ஊற்றுக்கண் வள்ளலார் என்பதையும் பிறவற்றையும், உண்மைகளை நோக்கினால்தான், “ஆரியத்தை அதன் தங்குதளம் யாவினும் நின்றெதிர்க்கும் செல்நெறியில் வடலூரும் ஈரோடும் சங்கமிக்கும்  பெறுமதிகளும்; அவற்றிற்கு எதிரான அழிமதிகளும் எத்தகையன என்பதன் துல்லியம் பிடிபடும், என எடுத்துக் காட்டுகிறது.

           வள்ளலாரின் கருத்துகள் ஏதோ 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என எளிதில் கடந்து செல்ல முடியாது. இன்றைய ஆரிய, மத, சாதிப் பாசிசக் கருத்துகளை எதிர்க்கும் பொருத்தப்பாடு அதில் இருக்கிறது. அவரது கருத்துகளைக் கொண்டாவும் அவரைத் தெய்வமாக வழிபடாமல் அவரது லட்சியக்கனவுகளை நனவாக்கப் பாடுபட வேண்டும் என்று தோழர் கண.குறிஞ்சியின் கட்டுரை கேட்டுக் கொள்கிறது.

        விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண மடம் (1897), சங்கர மடம் போன்றவற்றிற்கு கிடைத்த அரசாதரவும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற இந்துத்துவப் பரிவாரங்களின் பேராதரவும் வள்ளலாரின் சிந்தனைகள், சபை, சங்கம், போன்றவற்றிற்கு இல்லை.  வள்ளலார் பெயரில் உண்டி கொடுப்பது மட்டும் போதாது. சாதி, சமயம், வேதம், சமஸ்கிருத அதிகாரம், மூடக்கருத்துகள் போன்றவைகளற்ற மெய்யறிவு (சத்ய ஞானம்), சமன்மை நன்னெறி (சமரச சன்மார்க்கம்) உணர்வை ஊட்டவும் பரப்பவும் வேண்டும் என பொழிலன் தனது கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கிறார்.

         வள்ளலாரின் ஆறு திருமுறைகளில் முதல் ஐந்திற்கும் கிடைக்கும் முக்கியத்துவம் ஆறாம் திருமுறைக்குத் தரப்படுவதில்லை. பலர் பண உதவி செய்தபோதும் ஆறாம் திருமுறையை அச்சிடாமல் தவிர்த்தனர். வள்ளலாரின் இறுதிக்காலத்தில் வேறு ஒருவரால் அது வெளியிடப்படுகிறது. அருட்பா x மருட்பா மோதல் குறித்த உண்மைக்கு மாறான தகவல்களை சுருக்கமாகப் பட்டியலிடும் விடுதலை இராசேந்திரனின் கட்டுரை, புலால், மது அருந்தாத எந்தச் சாதியும் நேரடியாக ஒளி வடிவக் கடவுளை வணங்கலாம், என்ற சமத்துவத்தை உருவாக்கி அர்ச்சகர் எனும் இடைத்தரகர்களை ஒழித்து வாழ்ந்து காட்டிய வள்ளலார் ஒரு புரட்சித் துறவி! பார்ப்பன எதிர்ப்பு மரபின் வரலாற்றுத் தொடர்ச்சி! என்றும் சொல்கிறது.

     “தத்துவத்தை செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக் குறி காவி”

“வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை”

        தமிழ் மரபில் சந்நியாசம் கிடையாது. அது ஆரிய மரபு. துறவு மட்டும் தமிழ் மரபில் உண்டு. தமிழ்த் துறவிகள் பலரும்  வெள்ளாடைத் தரித்தவர்களே. புறச் சமயத் தாக்கத்தால் காவி புகுந்தது, என ‘வெள்ளை வேட்டி மரபும் காவி வேட்டி மரபும், என்ற ரெங்கையா முருகனின் கட்டுரை வள்ளலாரின் உடையரசியலை வெளிப்படுத்துகிறது.

         சைவத்திற்குள் தங்களுக்கான இடத்தைத் தேடத் தொடங்கிய  இடைநிலைச் சாதியினர் இராமலிங்கரைத் துணைக் கொண்டனர் என்பதையும் பாடல்களை மட்டும் தொகுத்து வெளியிட ஆர்வம் காட்டிய இவர்கள் அவரது கொள்கைகள், நிறுவனங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. முதல் ஐந்து திருமுறைகளை வெளியிட உண்ணா நோன்பிருந்து வள்ளலாரிடம் அனுமதி வாங்கிய இறுக்கம் இரத்தின முதலியார் ஆறாம் திருமுறையை வெளியிடவில்லை என்கிற ‘திருஅருட்பா பதிப்பு அரசியலை’ முனைவர் வி.தேவேந்திரனின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

       சைவக் கொள்கையான அன்புநெறி, வள்ளலாரிடம் கருணையாகவும் இரக்கமாகவும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் அன்பு என்பதனை நேரடியாகக் கருணை, இரக்கம் என்று உணரமுடியவில்லை. திருவள்ளுவரை  64வது நாயன்மாராக திருவள்ளுவ நாயனார் உலா வருதல் போல வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை மட்டும் பரப்பி, ஆறாம் திருமுறையை முடக்கி சைவ மரபுச் சிமிழுக்குள் அடைக்க முயன்ற அரசியலை முனைவர் கு.கலைவாணன், முனைவர் சிவகுமார் ஆகியோரின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது. வள்ளலாரின் படைப்புகள் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

          எஸ்.வி.ஆரின் ‘அந்நியமாதல்’ (க்ரியா வெளியீடு), டாக்டர் சு.நரேந்திரனின் ‘தமிழ் பயிற்றுமொழி – கனவும் நனவும்’ (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு) போன்ற நூலறிமுகக் குறிப்புகளும் செ.நடேசன், க.நெடுஞ்செழியன், பா.செயப்பிரகாசம் போன்ற ஆளுமைகளுக்கான அஞ்சலிக் குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. ‘இடது’ இறுதி இதழான வ.உ.சி. சிறப்பிதழ் குறித்த கி.வீரமணி, சாவித்திரி கண்ணன், ரெங்கையா முருகன், பழ.நெடுமாறன் ஆகியோரின் வாசகப் பதிவுகளும் உள்ளன. 

இரண்டாவது இதழ்:

          இரண்டாவது இதழ் (ஏப்ரல் – ஜூன் 2023) மொழி மற்றும் கல்விச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. மொழி உரிமைப் போராளி ஜோகா சிங் (பஞ்சாப்) நேர்காணல் இவ்விதழில் வெளியாகியுள்ளது. CLEAR என்னும் மொழி நிகர்மை பரப்பியக்கம் (Campaign for Language Equality And Rights) என்ற அமைப்பின் வழியே மொழி உரிமைகளுக்காகப் போராடி வரும் இவரது இயக்கத்தில் ஆழி. செந்தில்நாதன், கண.குறிஞ்சி, மணி. மணிவண்ணன் போன்றோர் இணைந்து செய்லபடுகின்றனர். இவரது ‘மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துக்கள்’ எனும் ஆங்கில நூல் தோழர் கண.குறிஞ்சியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 2013, 2015, 2017, 2021 ஆகிய ஆன்டுகளில் நான்கு பதிப்புகளைக் கண்டு 3000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.

           கல்வியாளர் பேரா.பா.கல்யாணி தனது நேர்காணலிலும் பேச்சிலும் அடிக்கடி சொல்லும் பெயர் ஜோகா சிங் ஆகும். தோழர் கண.குறிஞ்சி மொழிபெயர்ப்பில் வெளியான ‘மொழிச்சிக்கல் குறித்த சர்வதேச கருத்துக்கள்’ என்ற நூலை இன்னும் எளிமையாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

            பேரா.பா.கல்யாணி தனது நேர்காணல் ஒன்றில், “தாய்மொழிக்கல்வி இயக்கம் என்பது தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை மட்டுமல்ல; அடித்தட்டு மக்களின் கல்வியில் அக்கறையுடையவர்கள் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதாகும். அதுவே ஜனநாயகமாகவும் அறிவியல்பூர்வமாகவும் இருக்க முடியும். தோழர் கண குறிஞ்சி மொழிபெயர்த்த (2013) ஜோகா சிங் என்பவரின் பயிற்றுமொழி குறித்த ஆய்வுக்கட்டுரை முக்கியமானது. எல்லா மொழியிலும் கல்வியை அளிக்க இயலும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் நூல் இது.  இந்நூலின் கருத்துகளைக் கொஞ்சம் எளிமைப்படுத்தி மாநிலம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும்”, (பேசும் புதியசக்தி, மாத இதழ் – ஜூலை 2022) என்று குறிப்பிடுகிறார்.

            ஜோகா சிங் நேர்காணலில், மொழி மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ்நாட்டு மக்களின் புகழ்மிக்க முயற்சிகளை பாராட்டுவதோடு, தமிழ்  மொழியின் எதிர்காலத்திற்குத் தேவையான போராட்டமாக அது இருக்கவில்லை என்கிற விமர்சனத்தையும் பதிவு செய்கிறார். கல்வியில் பயிற்றுமொழி தாய்மொழியின் அழிவிற்கு காரணமாக அமைகிறது. இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகளிலும் இதே நிலைதான். ஆங்கில ஆதிக்கத்தை  எதிர்த்து எந்தவொரு தீவிர இயக்கத்தையும் காண முடியவில்லை  என்ற வருத்தத்தையும் பதிவு செய்கிறார்.

       இந்தியாவில் மொழி வல்லாதிக்கத்தின் வேர் மிகப் பழங்காலத்திலேயே தொடங்கிவிட்டது. சமஸ்கிருதத்தைச் சுற்றி பொய்யான கதை உற்பத்தி செய்யப்பட்டு மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர்.  மூன்று வயதுக் குழந்தை மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்ற அறிவுக்குப் பொருத்தமில்லாத தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் தனியார் மயம், ஆங்கில ஆதிக்கம் போன்றவற்றை நிலைநிறுத்தும் ஓட்டைகள் உள்ளன. தாய்மொழிகளுக்கு ஆதரவான உறுதியான அழுத்தங்கள் இதில் இல்லை, என்றும் குறிப்பிடுகிறார். அவரது வாழ்வு, பணிகள், இந்திய மொழிச் சிக்கல்கள், கிளியர் இயக்கம் குறித்த விரிவாக நேர்காணலாக இது அமைந்துள்ளது.

        செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தமிழிலும் வந்துவிட்ட நிலையில் தொழில்நுட்பங்கள் சார்ந்தும் மொழிக் கொள்கைகள், உரிமைகள் சார்ந்தும் செயல்பட வேண்டிய தேவை ஆழி.செந்தில்நாதனின் கட்டுரை விளக்குகிறது. மிகப்பெரிய தமிழ்த் தரவுக் களஞ்சியங்களையும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த மொழி ஆய்வுகளையும் அரசு திட்டமிட்டு பெரிய நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களுடன் இணைந்து இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். உருவாகும் தரவுகளும் மென்பொருள்களும் சமூக உடைமையாக்கப்பட வேண்டும். அவை நமது சொந்த சர்வரில் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கவும், தரவுகளின் தனியுரிமை பேணவும் வேண்டும். செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் அதிக ஆற்றலை உறிஞ்சுவதால் வருங்காலத்தில் பசுமை செயற்கை நுட்பத்தையும் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்.

          இலக்கியவாதி ஜெயமோகனின் அறமற்ற அரசியலை விமர்சிக்கும் கட்டுரை ஒன்றை சுப.உதயகுமாரன் எழுதியிருக்கிறார். “அரம்போலும் கூர்மையர்”, “அறிவார்ந்த படைப்பாளர்”, என்றெல்லாம் அவர் ஜெயமோகனை மதிப்பீடுகிறார். இது மிகைப்படுத்தப்பட்ட பிம்பம், அவ்வளவுதான்! சுந்தர ராமசாமி, ‘காலச்சுவடு’ கண்ணன், ஜெயமோகன், சமஸ் போன்றவர்கள் இவ்வாறு ஏதோ ஒருவகையில் ஊதிப்பெருக்க வைக்கப்படுகின்றனர். “வெளுத்ததெல்லாம் பாலாக”, பலர் மயங்கிப் போய்விடுகின்றனர். ஜெயமோகன், “பாசிசக் கட்சிகளோடு, இயக்கங்களோடு, வீணர்களோடு கரம் கோர்த்துக் களமாடுபவரல்ல” என்றும் கணிக்கிறார். இந்துத்துவமும் ஆர்.எஸ்.எஸ்.ம் வெளிப்படையாக என்று களமாடியிருக்கிறது? தாங்கள் நட்த்திய காந்தியின் படுகொலையை ஒத்துக் கொண்டார்களா? பவுத்தத்தை உள்நுழைந்து அழித்தனர். “அவர்களையெல்லாம் நீக்கமற ஆட்கொண்டு, அவர்களின் மாண்பை, மனிதத்தன்மையை அழித்தொழிக்கும் தீநுண்மி”, என்ற பின்பகுதி மிகச்சரியானது.  

       செப்பேடு, கல்வெட்டு, அகழ்வாய்வு, முத்திரை, மோதிரம் நாணயம் ஆகிய சங்கச் சான்றுகளின் வழி “தொல்லியல் நோக்கில் தமிழ்ச் சங்கம்: இருப்பும் சிறப்பும்”, கட்டுரையில் புலவர் செ.ராசு விளக்குகிறார். பழங்கால வேளாண் சமூகத்தில் கால்நடைகளைக் கணக்கிடப் படலை எண்களைப் பயன்படுத்தினர். அதாவது ஐந்து ஐந்தாக கோடிட்டு எண்ணும் முறையே படலை எண்கள் ஆகும். படலை என்பது வேலி; ஈழத்தில் வடலி.  இது குறித்த தகவல்களை ஆ.கிருஷ்ணன் கட்டுரை தெரியப்படுத்துகிறது.

        சமஸ்கிருத நூல்களில் பிறமொழித் தாக்கம், தமிழ் மற்றும் உலகமொழிகளுடன் சமஸ்கிருதம்  கொண்டிருந்த உறவு, தமிழின் தொன்மை, இயற்கை, தமிழுக்கும் சமஸ்கிருத்த்திற்குமான  வேற்றுமைகள் போன்றவற்றை கணியன் பாலாவின் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.  சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005. கட்டுரையில் 2015 என்று தவறாக உள்ளது.   

       ‘திரை இசையில் தமிழிசை’ எனும் நிழல் ப.திருநாவுக்கரசு எழுதிய நூலுக்கு தோழர் பேரா.சே.கோச்சடை அழகான மதிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். நடிகை, புகைப்படக் கலைஞர், புரட்சியாளருமான டினா மொடாட்டியின் வாழ்வு, கலை, புரட்சியை யமுனா ராஜேந்திரனின் கட்டுரை பேசுகிறது.

     ஜி.யூ.போப் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு எழுதிய முன்னுரையை தோழர் கண.குறிஞ்சி மொழியாக்கம் செய்துள்ளார். “யாரிடம் சென்று வாழ்வும் பணியாற்றவும் போகிறார்களோ அம்மக்களின் மனதை நல்லமுறையில் புரிந்துகொள்ள இது உதவும்” என்று போப் எழுதிருப்பதை அறம் சார்ந்து புரிந்துகொள்ளலாம்.

        அறிவார்ந்த, கருத்தியல் சார்ந்த விவாதங்களையும் எழுத்துகளையும் சிற்றிதழ் சார்ந்த வெளிகளில் மட்டுமே நிகழக்கூடிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.  அந்தவகையில் புதுமலரின் வருகையால் தமிழ் அறிவுலகப் பார்வைகள்  இன்னும்  அகலிக்கும் என நம்பலாம்.  இம்மாதிரியான இதழ்களின் வருகை இன்றுள்ள ‘அரசியலற்ற தன்மை’ எனும் கருத்தியல் முடக்கத்தையும் போக்க உதவும்.

வெளியீடு:

புதுமலர் பதிப்பகம்

தனி இதழ்: ரூ.100

ஆண்டுக் கட்டணம்: ரூ. 400

ஆசிரியர்: கண.குறிஞ்சி

தொடர்பு முகவரி:

6, முதல் வீதி, சக்தி நகர் மேற்கு,

திண்டல் – அஞ்சல்,

ஈரோடு – 638012.

அலைபேசி: 9443307681

மின்னஞ்சல்: gana.kurinji@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *